Published:Updated:

"வெங்கட் பிரபு குறும்படம், 'வேம்பயர்' சுனைனா, சினிமா ரசிகர்களுக்கான ஸ்பெஷல்!" - 'வியு ஆப்' அறிமுக நிகழ்ச்சி

"வெங்கட் பிரபு குறும்படம், 'வேம்பயர்' சுனைனா, சினிமா ரசிகர்களுக்கான ஸ்பெஷல்!" - 'வியு ஆப்' அறிமுக நிகழ்ச்சி
"வெங்கட் பிரபு குறும்படம், 'வேம்பயர்' சுனைனா, சினிமா ரசிகர்களுக்கான ஸ்பெஷல்!" - 'வியு ஆப்' அறிமுக நிகழ்ச்சி

`வியு ஆப்' அறிமுக நிகழ்ச்சியில் என்ன ஸ்பெஷல்?

ஹாட் ஸ்டார், நெட்ஃபிளிக்ஸ், அமேசான் ப்ரைம் போன்ற பல வீடியோ ஸ்ட்ரீமிங் தளங்களில் அடுத்ததாகத் தடம் பதிக்க வருகிறது, `வியு ஆப் (Viu App)'. இந்தியா, தென்கிழக்கு ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் மத்தியக் கிழக்கு நாடுகளில் ஆன்லைன் பொழுதுபோக்கு சேவையை இலவசமாக வழங்கிவரும் நிறுவனமான Vuclip-க்குச் சொந்தமானதுதான், இந்தச் செயலி. அமெரிக்காவின் சிலிக்கான் பள்ளத்தாக்கில் தனது தலைமையகத்தைக் கொண்டுள்ள இந்த நிறுவனம், டெல்லி, மும்பை, புனே, துபாய் ஆகிய இடங்களிலும் செயல்பட்டு வருகிறது. இதுவரை, பல அந்நிய மொழிகளிலும், இந்திய மொழிகளிலும் செயல்பட்டுக்கொண்டிருந்த `வியூ ஆப்' நேற்று முதல் தமிழிலும் தனது சேவையைத் தொடங்கியுள்ளது. இதன் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. சினிமா பிரபலங்கள் வெங்கட் பிரபு, பிரேம்ஜி, சுனைனா, புஷ்கர் - காயத்ரி, பூஜா தேவரியா, அஷ்வின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

இந்தச் செயலியில் குறும்படங்கள், வெப் சீரிஸ், திரைப்படங்கள் மற்றும் கொரியன் சீரியல்களைத் தமிழில் காணலாம். இதுகுறித்து, Vuclip நிறுவனத்தின் CEO அருண் கூறியதாவது, ``தமிழ் ரசிகர்கள் நவீன நடைமுறைகள் மற்றும் கலாசாரங்கள் பற்றி நல்ல ரசனை உடையவர்கள். நடுநிலையான பார்வை உடையவர்கள். அவர்கள் உள்ளூர் பாணியில் சொல்லப்படும் சிறந்த கதைகளை விரும்புவார்கள். அப்படியான சிறந்த பொழுதுபோக்கினை இலவசமாக வழங்குவதில் பெருமையடைகிறோம்!" என்று கூறினார். இவ்விழாவில், இந்தச் செயலி மூலம் ஒளிபரப்பப்படவிருக்கும் குறும்படங்கள் பற்றிய அறிமுகம் கொடுக்கப்பட்டது. 

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கியுள்ள `மாஷா அல்லா... கணேசா' எனும் குறும்படம் மும்பை தாராவியில் நடந்த இந்து -இஸ்லாம் கலவரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. மும்பையில் பல ஆண்டுகளாக அமைதியாக வாழ்ந்து வந்த ஓர் இஸ்லாமிய குடும்பம் கலவரத்தில் சிக்கிய நிலையில், இந்துக் கோயிலில் தஞ்சமடைகிறது. அவர்களுக்கு என்ன நடக்கிறது என்பதைச் சொல்கிறது, இக்குறும்படம். 

`கல்யாணமும் கடந்து போகும்' திரைப்படம் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் நடக்கும் பத்து சமகால திருமணக் கதைகளைப் பற்றி கூறுகிறது. 

`மெட்ராஸ் மேன்சன்' எனும் படம் சென்னை ராயப்பேட்டையில் ஒரு பழைய மேன்க்ஷனில் பல்வேறு பகுதியிலிருந்து வந்து குடியேறிய பேச்சிலர் பாய்ஸ் மற்றும் அவர்களின் கனவுகளைப் பற்றி கூறுகிறது.

`டோர் நம்பர் 403' எனும் படம், முதல் படத்தில் வெற்றி பெற்ற ஒரு நடிகர், தான் கேட்கப்படும் அடுத்தடுத்த பத்துத் திரைக்கதைகள் எப்படி இருந்தன, அக்கதைகள் அவரது வாழ்வில் எப்படிப்பட்ட திருப்பங்களைக் கொண்டுவந்தன என்பது பற்றிய கதை. 

`நிலா நிலா ஓடி வா' எனும் படத்தில், ஒருவன் தான் காதலிக்கும் காதலி வேம்பயராக மாறிய பின்பு வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதைக் கூறும் ரொமான்டிக் திரில்லர் படம். இதில், சுனைனா மற்றும் அஷ்வின் நடித்துள்ளனர்.

மேலும், விஜய் சேதுபதி நடித்த `விண்ட்' குறும்படத்தையும் இந்தச் செயலியில் பதிவேற்றம் செய்துள்ளனர். இக்குறும்படம், `காக்கா முட்டை' இயக்குநர் மணிகண்டன் இயக்கியது. தவிர, இந்தச் செயலியில் `காதல் கண்கட்டுதே', `கோ 2', `ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்', `கவலை வேண்டாம்' போன்ற கமர்ஷியல் சினிமாக்களையும் காணலாம். 

இதுகுறித்து இயக்குநர் மோகன்ராஜா கூறியதாவது, ``மற்ற மொழிகளைவிட தமிழ் மொழியில் பொழுதுபோக்கு அம்சங்கள் அதிகம். தமிழ்நாட்டு ரசிகர்களை நம்பி ஒரு காரியத்தில் தைரியமாக இறங்கலாம். என் நண்பர்கள் பலர் தற்போது வலைத்தொடர்கள் இயக்குவதில் ஆர்வமாக இருக்கிறார்கள். அவர்களைத் தொடர்ந்து சப்போர்ட் செய்யுங்கள். நான் சினிமாவுக்குள் நுழைந்து பல வருடங்களாகியும் இன்னும் சொல்வதுமாதிரி எந்த விஷயங்களையும் செய்யவில்லை. நான் இந்நிகழ்ச்சிக்கு வருவதற்கு முக்கியக் காரணம், இயக்குநர் யாஸ்மின். அவர் இயக்கத்தில் `டோர் நம்பர் 403' படத்தின் சில காட்சிகளைப் பார்த்தேன். அவர் என் உதவியாளர் என்று சொல்வதில் பெருமையடைகிறேன்!" என்றார்.

வெங்கட் பிரபு பேசும்போது, ``மாஷா அல்லா... கணேசா' கதையைக் கேட்டவுடன் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இக்கதையை என்னிடம் கூறியது நடிகர் சம்பத் ராஜ்தான். இதைத் திரைப்படமா எடுத்தால் நிறைய சென்சார் பிரச்னைகள் வரும். அதனால்தான், இப்படியொரு முடிவை எடுத்திருக்கிறேன். இது என் முதல் குறும்படம். பிரேம்ஜி இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்" என்றார். 

அடுத்த கட்டுரைக்கு