Published:Updated:

``ஆட்டோகிராப்ல, `இப்படிக்கு சுந்தரி'னு எழுதுவேன். ஏன்?" - விஜி சந்திரசேகர்

``ஆட்டோகிராப்ல, `இப்படிக்கு சுந்தரி'னு எழுதுவேன். ஏன்?" - விஜி சந்திரசேகர்
``ஆட்டோகிராப்ல, `இப்படிக்கு சுந்தரி'னு எழுதுவேன். ஏன்?" - விஜி சந்திரசேகர்

நடிகை விஜி சந்திரசேகர் பேட்டி. விவசாயம், சினிமா, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் குறித்து பேசியிருக்கிறார்.

``சின்னத்திரை, வெள்ளித்திரை இரண்டையுமே என்னால விட்டுக்கொடுக்க முடியாது. வெள்ளித்திரையில் ஒரு வருடத்துக்கு ஒரு படம் நடிப்போம். அதுவே, சின்னத்திரையில 300 நாளுக்கு 300 படங்கள் நடிப்போம். கிராமங்களோட மூலை முடுக்கெல்லாம் நம்ம கதாபாத்திரத்தைக் கொண்டுபோய் சேர்க்கிறது சீரியல்கள்தாம். நிறைய பேருக்கு அதோட முக்கியத்துவம் புரியமாட்டேங்குது. சீரியல் ஆர்ட்டிஸ்ட்தானேனு எளக்காரமா பார்க்கிறதை முதல்ல நிறுத்துங்க" எனப் படபடக்கிறார் விஜி சந்திரசேகர். கிட்டத்தட்ட 38 வருடங்களாக சினிமாவில் பயணிக்கிறார். மனநலம் குன்றியவராக, சிறந்த தாயாக, வில்லியாக, காமெடி கதாபாத்திரமாக இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் அப்ளாஸ் அள்ளும். தன் மகளையும் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார். மிகச் சொற்பமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து விஜியிடம் பேசினோம்.  

``ஒரு விவசாயினு அடையாளப்படுத்திக்கிறதுல பெருமைப்படுற நடிகை நீங்க, அதைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்க..." 

"விவசாயம்தான் என் முதன்மை வேலை. அதுபோக மீதி நேரத்தைதான் நடிக்கிறதுக்கு ஒதுக்குவேன். அரிசி, எள்ளு, வேர்க்கடலை, காய்கறி, தக்காளி, கீரை, பிரண்டை, மிளகாய் இது எல்லாத்தையும் பயிரிட்டு விவசாயம் பண்றேன். நமக்கு வேண்டியதை நாம பயிர் செய்து சாப்பிட்டாலே போதும், உடம்புக்கு வர்ற நோய்கள்ல பாதி குறைந்திடும். இப்போ விவசாயத்துலகூட நிறைய தொழில்நுட்பம் வந்துருச்சு. நாம குடியிருக்கிற வீட்டுக்கு ஏத்தமாதிரி மாடித்தோட்டம் அமைத்துத் தர்றாங்க. நம்ம குழந்தைகளை டாக்டர், இன்ஜினீயருக்கு படிக்க வைக்கிற மாதிரி அக்ரிக்குப் படிக்க வைக்கத் தயங்குறோம். படிக்காதவங்க பண்றதுதான் விவசாயம்னு நினைக்கிறோம். இந்த மைண்ட் செட்டை மாத்தணும்."

"சவாலான கதாபாத்திரங்கள்ல நடிக்கிறீங்களே... உங்க கதைத் தேர்வு யுக்திகளைப் பற்றி சொல்லுங்க..." 

"என் காஸ்டியூம்ஸ் 70% நடிப்பை வெளிப்படுத்திடும். நான் நடிக்கிறது வெறும் 30% மட்டும்தான். நான் நடிக்கிற கதாபாத்திரத்துக்கு எப்படியான காஸ்டியூம்ஸ் வேணுமோ, அதுக்கு ஏத்தமாதிரி என் உடல்மொழியை மாத்திக்குவேன். நல்லா டிரெஸ் பண்ணிக்கணும், மேக்அப் போட்டு 'பளிச்'னு இருக்கணும்னு எதிர்ப்பார்க்க மாட்டேன். 'அழகி' சீரியல்ல சுந்தரி, 'ஆரோகணம்' படத்துல நிர்மலா இது இரண்டும்தான் என் மனசுக்கு ரொம்ப நெருக்கமான கதாபாத்திரங்கள். இன்னமும் கிராமங்கள்ல என்னை 'சுந்தரி அம்மா'னுதான் கூப்பிடுறாங்க. அந்தக் கதாபாத்திரமாவே என்னை அடையாளப்படுத்திக்கிறாங்க. நானும் ஆட்டோகிராப் போடுறப்போ, 'இப்படிக்கு சுந்தரி'னுதான் போட்டுத்தருவேன். என் வாழ்க்கையில கிடைச்ச மிகப்பெரிய அங்கீகாரம் இந்தக் கதாபாத்திரத்தின் வெற்றி. 

`ஆரோகணம்' கதையைப் படிச்சு ஓகே பண்ணது என் அக்கா சரிதாதான். `நடிச்சா இந்த மாதிரியான கதைகள்ல நடிக்கணும்'னு சொன்னாங்க. அவங்க பேச்சை மீறி நான் எதுவுமே பண்ணது கிடையாது. ஆனாலும், சினிமா சம்பந்தமா பேசுறது, ஒருவருக்கொருவர் அட்வைஸ் பண்ணிக்கிறது மாதிரியான விஷயங்கள் எங்களுக்குள்ள நடக்கவே நடக்காது. `நீங்க 'ஆரோகணம்' படத்துக்காக எப்படியெல்லாம் தயாரானீங்க, மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்கிட்ட பேசுனீங்களா’னு பலபேர் கேட்டாங்க. ஆனா, நான் ஒருபோதும் ஹோம் வொர்க் பண்றதில்லை. இயக்குநர்கள் நமக்கு எல்லாம் சொல்லிக்கொடுப்பாங்கங்கிற நம்பிக்கை இருக்கணும். நம்ம மனசு வெற்றுத் தாள்போல இருந்தாதான், இயக்குநர்கள் அவங்களுக்கு ஏத்தமாதிரி வடிவமைச்சுக்க முடியும். இப்போ, 'சீமதுரை'ங்கிற படத்துல கருவாடு விற்கிற பெண்ணா நடிச்சிருக்கேன். உண்மையா கருவாடு விற்கிற லேடிகூட என்னை மாதிரி இருக்கமாட்டாங்க. அந்த அளவுக்கு அந்தக் கதாபாத்திரமாவே வாழத் தொடங்கிட்டேன்!"

"முதல் நாள் ஷூட்டிங் உங்களுக்கு ஞாபகம் இருக்கா?"

``முதல் வாய்ப்பே, கே.பாலசந்தர் சாரோட `தில்லு முல்லு' படம். அதுல ரஜினிக்குத் தங்கச்சியா நடிச்சேன். அதுக்காகப் பாவாடை தாவணியெல்லாம் போட்டுக்கிட்டு 'இந்திரண்ணே... சந்திரண்ணே' காட்சியில் நடிச்சது இன்னும் நல்லா ஞாபகம் இருக்கு. மணிரத்னம் சார், பாலசந்தர் சார், பாரதிராஜா சார் மாதிரியான பெரிய இயக்குநர்களோட படம் பண்ணிட்டேன். பாலுமகேந்திரா சார் படத்துல நடிக்கிறதுக்கு வாய்ப்பு கிடைக்கலையேங்கிற வருத்தம் மட்டும் எனக்கு அதிகமாவே இருக்கு."

``பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைப் பற்றி என்ன நினைக்கிறீங்க?"

``அப்படிப் பண்றவங்களுக்கு மரண தண்டனை கொடுக்கிறத்தைத் தவிர வேற வழியே இல்லை. சட்டம் இவ்ளோ தளர்ச்சியா இருக்கிறதுனால மக்கள் தப்பு பண்றதுக்கு பயப்படவே மாட்டேங்கிறாங்க. 10 வருடம் ஜெயில்ல அவங்களை உட்கார வெச்சு சோறு போடுறதெல்லாம் வீண். பெண்களை யாராவது இழிவுபடுத்த நினைச்சாலே அவங்களுக்கு சட்டம் கொடுக்கிற கடுமையான தண்டனைதான் ஞாபகத்துக்கு வரணும்" காட்டமாகப் பேசி முடிக்கிறார் விஜி சந்திரசேகர்.

அடுத்த கட்டுரைக்கு