Published:Updated:

"ஆமா...நான் பிக்பாஸ்ல கலந்துக்கலை... ஏன் தெரியுமா?" பிரியாமணி

"ஆமா...நான் பிக்பாஸ்ல கலந்துக்கலை... ஏன் தெரியுமா?" பிரியாமணி
"ஆமா...நான் பிக்பாஸ்ல கலந்துக்கலை... ஏன் தெரியுமா?" பிரியாமணி

திருமணம் செய்துகொண்டு மும்பையில் செட்டில் ஆகியிருக்கும் நடிகை பிரியாமணியிடம் பேசினோம்.

மிழகத்தில் பிரியாமணி என்று சொன்னாலே 'முத்தழகு' கேரக்டர்தான் நினைவுக்கு வரும். அப்படியொரு நடிப்பைப் 'பருத்திவீரன்' படத்தில் காட்டியவர் பிரியாமணி. தற்போது முஸ்தபா ராஜை திருமணம் செய்துகொண்டு மும்பையில் செட்டில் ஆகியிருக்கிறார். ஒரு மதிய வேளையில் அவரிடம் பேசினோம். 

''எப்படியிருக்கீங்க... காதல் திருமணத்திற்குப் பிறகான வாழ்க்கை எப்படியிருக்கிறது?''

''ரொம்ப நல்லா இருக்கேன். ஐந்து வருடக் காதல். ஆர்பாட்டம் இல்லாத திருமணம். ஆடம்பரம் ஏதுமில்லாத மாமனார், மாமியார். வாழ்க்கை அர்த்தமுள்ளதாக நினைக்கிறேன். நானே படபடனு பேசிக்கிட்டே இருப்பேன். என்னைவிட அதிகமாக பேசக்கூடியவர் அவர். அன்பான கணவர்.''

''உங்கள் குடும்பம் பற்றி சொல்லுங்களேன்..?''

''அன்பான மாமியார், அப்பா மாதிரி மாமனார். இரண்டு பேரும் சத்தம்போட்டுகூட பேசாதவங்க. நான் முஸ்தஃபா ராஜை காதலிக்கத் தொடங்கினப்போ எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது, என் மாமியாரைத்தான். அப்போதெல்லாம் அவங்ககிட்ட அடிக்கடி பேசியிருக்கேன். எங்க இரண்டு பேருக்குள்ளேயும் நல்ல புரிதல் இருந்தது. ராஜுக்கும் எங்க புரிந்துணர்வு ரொம்பப் பிடிச்சிருந்தது. அப்புறம் என்ன.. இன்னும் டீப்பா நாங்க இரண்டு பேரும் காதல்ல இறங்கிட்டோம். திருமணத்திற்குப் பிறகு நாங்க இப்போ கூட்டுக் குடும்பமாகத்தான் இருக்கோம். அவருக்கு தம்பி, தங்கச்சி இருக்காங்க. இரண்டு பேருக்கும் திருமணம் ஆகிடுச்சி. என் கணவர் முஸ்தஃபா என்னை அப்படித் தாங்கிக்கிறார். நிறைய சுதந்திரம் கொடுத்திருக்கார். அதை சரியான வழியில பயன்படுத்திட்டு இருக்கேன்னு நினைக்கிறேன்.'' 

''திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிக்கவில்லையே ஏன்?''

''நடிக்கிறேனே... சமீபத்தில்தான் மலையாளத்துல ஒரு படம் முடிச்சிருக்கேன். அந்தப் படத்துக்கான ரிசல்ட் பற்றித் தெரியல. நல்ல ஃபீட் பேக் வந்திருப்பதாகச் சொன்னாங்க. 'உனக்கு என்ன பிடிக்குமோ அதை செய். திருமணம் ஆகிடுச்சேனு எதற்கும் தடை போட்டுக்க வேண்டாம்'னு அடிக்கடி என் கணவர் சொல்வார். அதனாலதான் ஜி தமிழ் சேனலில் 'டான்ஸ் ஜோடி டான்ஸ்' நிகழ்ச்சியின் நடுவராக இருந்தேன். அதேபோல, தெலுங்கில் ரியாலிட்டி ஷோ பண்ணிக்கிட்டு இருக்கேன். இந்தியில் 'The Family Man' என்கிற வெப் சீரிஸ் பண்ணேன். இப்போதும் பட வாய்ப்பு வந்துட்டேதான் இருக்கு. என் மனசுக்குப் பிடிச்ச மாதிரியான கதை அமைஞ்சா நடிக்கிறேன்."  

'''பருத்திவீரன்' படத்திற்குப் பிறகு ஏன் அந்த மாதிரியான கதையில் நடிக்கவில்லை?''

"'பருத்திவீரன்' முத்தழகு என்றால் எல்லோருக்குமே என் பெயர் சட்டென ஞாபத்துக்கு வரும். சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் கிடைச்சது. அதற்கு, இயக்குநர் அமீருக்குத்தான் நன்றி சொல்லணும். அந்தப் படத்துக்குப் பிறகு அதே மாதிரியான ரோல் வந்துக்கிட்டே இருந்தது. 'மலைக்கோட்டை' படத்திற்குப் பிறகு கொஞ்சம் வெரைட்டியா நடிக்கலாம்னு நினைச்சேன். அதேசமயம், கன்னடம், மலையாளம் எனப் பிற மொழிப் படங்களில் கவனம் செலுத்த ஆரம்பிச்சேன். ஆனாலும், மக்கள் இன்னும் அந்த முத்தழகை மனதில் வெச்சிருக்கிறது, சந்தோஷம்." 

''மீண்டும் முத்தழகு மாதிரியான கதாபாத்திரத்தில் நடிப்பீர்களா?''

''கண்டிப்பாக! அந்தமாதிரி கதை அமைந்தால், நடிக்கத் தயார். இப்போது என் முதல் சாய்ஸ் அந்த மாதிரியான கதைதான்!''

''கேரளாவில் ஆரம்பித்த 'அம்மா ' அமைப்பில் உறுப்பினராக இருக்கிறீர்களா?''

''ஆமாம். நான் அதுல ஆயுட்கால உறுப்பினர். ஆனால் இதுவரை எந்த மீட்டிங்கிலும் கலந்துக்கிட்டதில்லை. அந்த நேரத்தில் ஏதாவது ஒரு கமிட்மென்ட் இருக்கும். அதனால, கலந்துக்கலை. இனி அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் கலந்துகொள்ள முயற்சி செய்வேன்.''

''பாவனாவும், நீங்களும் நீண்ட நாள் தோழிகளாமே?''

''ஆமாம். எனக்கு ஒருத்தரைப் பிடிச்சிட்டா போதும். எதுவாக இருந்தாலும் அவங்களுக்கு உறுதுணையாக இருப்பேன். பாவனாவும், நானும்  க்ளோஸ் பிரெண்ட்ஸ். அதுக்காக, அடிக்கடி மணிக் கணக்கா பேசிக்கிட்டதில்லை. அப்பப்போ மெசேஜ்ல பேசிப்போம். நிகழ்ச்சிகளில் கலந்துக்கும்போது நிறைய பேசிப்போம். அதேபோல விமலாராமன், மம்தா மோகன்தாஸ் இருவரும் என் நண்பர்கள்தான். மம்தா மோகன்தாஸ்கூட நிறைய மலையாள நிகழ்ச்சிகள் பண்ணியிருக்கேன். இரண்டு பேரும் சேர்ந்து நடிச்சிருக்கோம்.'' 

'' 'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்கு உங்களைக் கூப்பிட்டாங்களாமே?''

''தமிழ், கன்னடம் இரண்டு மொழிகளிலும் கூப்பிட்டாங்க. எனக்கு வர இஷ்டம் இல்லைனு சொல்லிட்டேன். இருபத்து நான்கு மணி நேரமும் நம்மைச் சுற்றி இருக்கும் கேமராக்கள் கண்காணிக்கிறதை நினைச்சாலே ஒரு மாதிரி இருக்கு. என்னால அப்படியெல்லாம் இருக்க முடியாது. எனக்குனு சுதந்திரம் தேவை. அந்த நிகழ்ச்சியில் அது கிடையாது. நூறு நாள்கள் அப்படியே இருக்கணும். சத்தியமா இருக்க முடியாது. என் ஒரிஜினாலிட்டியை ஏன் மத்தவங்களுக்கு நான் காட்டணும்?! இரண்டு, மூன்று மணிநேரம் கெஸ்ட் மாதிரி உள்ளே போய் இருந்துட்டு வாங்கனு சொன்னா, அதுக்கு நான் ஓகே சொல்வேன். மத்தபடி, இதையெல்லாம் ஏத்துக்கிட்டு உள்ளே போய் இருக்கிறவங்களுக்குப் பெரிய சல்யூட். அது ரொம்பப் பெரிய விஷயம். அதுக்காகவே, அவங்களைப் பாராட்டணும்!" 

அடுத்த கட்டுரைக்கு