Published:Updated:

"சிங்கிளா இருக்கிறதே பெஸ்ட்!" - ப்ரியா ஆனந்த்

"சிங்கிளா இருக்கிறதே பெஸ்ட்!" - ப்ரியா ஆனந்த்
"சிங்கிளா இருக்கிறதே பெஸ்ட்!" - ப்ரியா ஆனந்த்

'வாமனன்' படத்தில் தமிழுக்கு அறிமுகமானவர் ப்ரியா ஆனந்த். இவர் கேரியரில் அமைந்த படங்களில் சிவகார்த்திகேயனுடன் நடித்த 'எதிர்நீச்சல்' மாபெரும் ஹிட். அதன்பின் ஒருசில தமிழ் படங்களில் தலைகாட்டியிருந்தாலும், மலையாளம் மற்றும் கன்னடப் படங்களில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வந்தார். தற்போது, மலையாள சினிமாவே அதிக எதிர்பார்ப்போடு பார்த்துக்கொண்டிருக்கும் 'காயம்குளம் கொச்சுண்ணி' மற்றும் தமிழில் 'எல்.கே.ஜி' ஆகிய படங்களில் நடித்துவரும் ப்ரியா ஆனந்துடன் ஒரு நேர்காணல். 

" 'காயம்குளம் கொச்சுண்ணி' படத்துல அமலா பால் நடிக்கவிருந்த கதாபாத்திரத்துல நீங்க கமிட் ஆனீங்க. படத்துல உங்களுக்கு என்ன மாதிரியான ரோல்?" 

"இந்தப் படத்துல வர்ற கதாபாத்திரங்கள் எல்லாமே உண்மை கதாபாத்திரங்கள். இதற்காக இயக்குநர் ரோஷன் அன்ட்ரூசும், அவரோட குழுவும் சேர்ந்து ஒன்றரை வருடங்கள் வேலை பார்த்து ஸ்க்ரிப்ட் ரெடி பண்ணிருக்காங்க. இந்த மாதிரியான ஒரு கதாபாத்திரத்துல நடிக்கணும்னு ரொம்பநாள் ஆசைப்பட்டேன். மலையாளத்துல நான் நடிக்கிற ரெண்டாவது படம் இது. இதுவரை, நான் நடிச்சதெல்லாம் மாடர்ன் கதாபாத்திரங்கள்தாம். வரலாறு சார்ந்த கதைகள் எனக்கு வந்ததே கிடையாது. முதல்முறையா அச்சு அசல் கிராமத்து கதாபாத்திரத்துல நடிச்சிருக்கேன். கதாபாத்திரத்தின் பெயர் 'ஜானகி'. தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூணு மொழிகளிலேயும் இந்தப் படம் ரிலீஸ் ஆகப்போகுது. இதுல தமிழ், தெலுங்கு ரெண்டுலயுமே நான் டப்பிங் பண்ணிருக்கேன். படத்துல என்னோட மேக்அப், டிரெஸ்ஸிங், லுக் அண்ட் ஸ்டைல் எல்லாமே மொத்தமா மாறியிருக்கு. 35 கோடி பட்ஜெட்ல உருவாகியிருக்கு."

"நிவின் பாலி மற்றும் மோகன்லால் பற்றி..."

"நிவின் பாலி மலையாளம் மட்டும் இல்லை, தமிழ்லேயும் ரொம்ப ஃபேமஸ். இவர் நடிச்ச 'நேரம்', 'பெங்களூர் டேஸ்' படங்கள் பார்த்திருக்கேன். மலையாளத்துல எல்லோருமே யதார்த்தமான நடிகர்கள். ஹீரோயிஸம், பந்தா, கெத்து இதெல்லாம் காட்டவே மாட்டாங்க. அவங்ககிட்ட இருந்து கத்துக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு. மோகன்லால் சார் டாப் 5 இந்திய நடிகர்களில்  ஒருவர். இவரைப் பற்றியும், இவர் நடிப்பைப் பற்றியும் விமர்சிக்கிற இடத்துல நான் இல்லை." 

" 'எல்.கே.ஜி' படம் என்ன நிலையில இருக்கு?"

"இந்தப் படத்தைப் பற்றி எது பேசுனாலும், அது விளம்பரத்துக்காகதான்னு நினைக்கிறாங்க. அரசியல் சார்ந்த படத்தை சிலரால்தான் புரிஞ்சுக்க முடியும். ஆனா, இது அந்த மாதிரியான படம் இல்லை. படத்தோட கதை எல்லோருக்கும் புரியுமளவுக்கு எளிமையானது. இந்தப் படத்தை குடும்பத்தோட வந்து பார்க்கலாம். அடுத்த மாசம்தான் ஷூட்டிங் ஆரம்பிக்கப்போகுது."

"இப்போவும் பாலிவுட் வாய்ப்புகளுக்காகக் காத்துகிட்டு இருக்கீங்களா?"

"என் வாழ்க்கையில எந்தவொரு வாய்ப்பையும் நான் தேடிப்போனதில்லை. பாலிவுட் வாய்ப்புகளும் தானா அமைந்ததுதான். எனக்கு வர்ற கதைகளை நான்தான் தேர்ந்தெடுப்பேன். சினிமாவுல எனக்குனு தனி மேனேஜர் கிடையாது.  பாலிவுட்ல ஒருசில நல்ல படங்கள் பண்ணியிருந்தாலும், என் ஆல் டைம் ஃபேவரைட் தென்னிந்திய படங்கள்தாம். நான் எந்த மொழியில இயங்கினாலும், அதுல வெற்றிகரமா செயல்படுவேன் என்ற நம்பிக்கை இருக்கு. ஏன்னா, மராத்தி, இந்தி தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகள் அனைத்துமே நான் பேசுவேன். மொழி ஒரு தடையா இருந்ததில்லை. நான் சந்தோஷமா இருக்கணும், மத்தவங்களையும் சந்தோஷப்படுத்தணும். அது எங்கே இருந்தாலும் பண்ணலாம் இல்லையா..?!"

"பல கலாசாரங்களைப் பார்த்து வளர்ந்த நீங்க, அதுல உள்ள வேறுபாடுகளை எப்படிப் பார்க்குறீங்க?"

"பாட்டி மராத்தி, அம்மா தமிழ், அப்பா தெலுங்கு. நான் வளர்த்தது அமெரிக்காவுல!. 'இதுதான் என்னோட கலாசாரம்'னு சொல்லிக்கிற மாதிரி எந்த சாயலும் கிடையாது. அதுதான் என் பலம்னு நினைக்கிறேன். நகரத்துல எந்த அளவுக்கு  நேரத்தை செலவழித்திருக்கிறேனோ, அந்த அளவுக்கு கிராமத்திலும் வாழ்ந்திருக்கேன். அமெரிக்கா கலாசாரத்தையும், இந்தியக் கலாசாரத்தையும் ஒரேமாதிரிதான் பார்க்கிறேன். பல கலாசாரங்களைப் பின்பற்றுவதை வசதியா உணர்றேன். ஒரு நாளில் பலவிதமான மனிதர்களைச் சந்திக்கிறேன். அவங்களோட கதைகளைக் கேட்கிறேன். அவங்களோட அனுபவங்கள்ல இருந்து நிறைய பாடங்களைக் கத்துக்கிறேன். அதனால, எப்படிப்பட்ட சவால்கள் நிறைந்த கதாபாத்திரங்கள்லேயும் நான் நடிச்சிருவேன்னு நம்பிக்கை இருக்கு."

"குடும்பம் பற்றி..?"  

"அம்மா, அப்பா ரெண்டு பேருமே அமெரிக்காவுல இருக்காங்க. பாட்டி மட்டும்தான் சென்னையில இருக்காங்க. நிறைய குடும்பங்கள்ல சினிமாவுல நடிக்க அனுமதி கொடுக்கமாட்டாங்க. என் குடும்பம் அப்படியில்லை. நான் என்னவெல்லாம் செய்ய நினைக்கிறேனோ, அதற்கான எல்லாவிதமான சுதந்திரத்தையும் எனக்குக் கொடுத்திருக்காங்க. எந்தவொரு துறையிலேயும் சாதிக்கிறதுக்கு முன்னாடி நிறைய தடைகளை சந்திக்க வேண்டி வரும். அப்போ மனம் தளர்ந்து போகாம இருக்கிறதுக்கு நம்ம குடும்பம்தான் உறுதுணையா இருக்கும். அவங்களை எதிர்த்து எந்தவொரு முடிவு எடுத்தாலும், அது நம்ம மன அமைதியைக் கெடுக்கும். 'பணத்தை வாழ்க்கையில பெரிய விஷயமா எடுத்துகிறது இல்லை. வாழ்றதுக்கு பணம் முக்கியமில்லை. அனுபவமும், மனிதர்களும்தான் முக்கியம்'. இதை உணர்த்தியது என் குடும்பம்தான்."

" 'Save Children Campaign' அமைப்போட தூதர் நீங்க. அந்த அமைப்போட செயல்பாடுகள் குறித்து சொல்லுங்க..."

"அயனாவரம் சம்பவம் மாதிரி இனியொரு சம்பவம் நடக்கக்கூடாது. அந்த குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை கொடுக்கணும். அந்தப் குட்டிப் பொண்ணோட வாழ்க்கை இனி நல்லவிதமா மாறவே மாறாது. அவங்களால இந்த சம்பவத்தை மறக்கவே முடியாது. அந்த குற்றவாளி மிருகங்களைத் தூக்குல போட்டாதான், மத்தவங்களுக்கும் பயம் வரும். பாலியல் வன்கொடுமை சார்ந்த குற்றங்களுக்கு உடனடியா தீர்ப்பு கொடுக்கப்படணும். தீர்ப்பு வழங்குறதுக்கு நிறைய நேரம் எடுத்துக்கிறதுனாலதான், யாருக்குமே பயமில்லாம போயிடுது. வயது முதிர்ந்தவர்களுக்கும், குழந்தைகளுக்கும் சமூகத்துல பாதுகாப்பு அதிகரிக்கணும். நான் வட இந்திய நகரங்கள்ல வாழ்ந்திருக்கேன். டெல்லியில இருக்கிறதைவிட சென்னையிலதான் பாதுகாப்பா உணர்றேன். ஆனா, அப்படிப்பட்ட சென்னையிலேயே இப்படியொரு சம்பவம் நடத்திருக்கிறதை என்னால தாங்கிக்கவே முடியலை. Save Children Campaign குழைந்தைகளுக்கான பாதுகாப்புத் திட்டங்களை மேம்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்துக்கிட்டிருக்கோம். குழந்தைகள்கிட்ட அதிகநேரம் செலவழித்து பிரச்னைகளைக் காதுகொடுத்து கேட்கத் தொடங்கியிருக்கோம்."

"கல்யாணம்..?" 

"கல்யாணம் பண்ணிக்கணும்ங்கிற கட்டாயத்தின் பெயர்ல கல்யாணம் பண்ணிக்கத் தேவையில்லை. பாட்டி காலத்துலதான் ஒரு பொண்ணுனா கட்டாயம் கல்யாணம் பண்ணிக்கணும்னு சொல்வாங்க. ஆனா, இப்போ கல்யாணம் பண்ணாமலும் சில பெண்கள் இருக்காங்க. நான் என்ன படிக்கணும், எந்த வேலைக்குப் போகணும், எப்படி இருக்கணும்னு முடிவு பண்ற பெண்களுக்கு யாரைக் கல்யாணம் பண்ணிக்கணும்ங்கிற பக்குவமும் இருக்கு. சரியான ஒரு நபர் கிடைச்சா, தாராளமா கல்யாணம் பண்ணிக்கலாம். இல்லைனா சிங்கிளா இருக்கிறதே பெஸ்ட்!."

அடுத்த கட்டுரைக்கு