Published:Updated:

"சிம்புவை கை காட்டிய விஜய் சேதுபதி, 'யுவன் யார்?' என்ற ரைசா..." - 'பியார் பிரேமா காதல்' நோட்ஸ்

"சிம்புவை கை காட்டிய விஜய் சேதுபதி, 'யுவன் யார்?' என்ற ரைசா..." - 'பியார் பிரேமா காதல்' நோட்ஸ்
"சிம்புவை கை காட்டிய விஜய் சேதுபதி, 'யுவன் யார்?' என்ற ரைசா..." - 'பியார் பிரேமா காதல்' நோட்ஸ்

'பியார் பிரேமா காதல்' படத்தின் இசை வெளியீட்டு விழா.

ஹார்ட்டின்களும் ஆர்ட்டிஸ்டுகளும் அந்த அரங்கத்தை நிறைக்க, சென்னை ஏவிஎம் ஸ்டுடியோ நான்காவது தளத்தில் நடந்தது, 'பியார் பிரேமா காதல்' படத்தின் இசை வெளியீட்டு விழா. இசை ராஜாவின் இளைய ராஜா, யுவன் ஷங்கர் ராஜாவுக்கு தயாரிப்பாளராக இது முதல் படம். நிகழ்வின் நெகிழ்வான மற்றும் சுவாரஸ்ய நிமிடங்கள் இங்கே...

* இயக்குநர்கள் அமீர், சீனு ராமசாமி, அகமது, ராம் ஆகிய நான்குபேரும் ஒன்றாக மேடை ஏற, 'படத்தின் டைட்டிலே காதல்.. காதல்.. காதல். அதனால, எல்லோரும் உங்களோட முதல் காதலைப் பத்தி கட்டாயம் சொல்லியாகணும்' என்றார்கள், நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய அர்ச்சனாவும் மகேஸ்வரியும். 'நான் ஒரு புள்ளகிட்ட காதல் கடிதம் கொண்டுபோய் கொடுத்தேன். அடுத்த நிமிடம் கிழிச்சுப் போட்டுட்டா. மேற்கொண்டு அங்கே இருந்தா, என்ன நடக்குமோனு வயலுக்குள்ள விழுந்து எந்திரிச்சு ஓடியவன்தான். அதுக்குப் பிறகு அந்தப் பொண்ணைப் பார்க்க்வே இல்லை!' என்றார், சீனு ராமசாமி.

'என் மனைவியை லவ் பண்ற நான், இன்னொருத்தரையும் லவ் பண்றேன். 'யார் அந்த இன்னொருத்தர்'னு உடனே கிளம்பிடாதீங்க. சம்பந்தப்பட்டவங்களுக்கும், ஏன் என் மனைவிக்கும்கூட அது யார்னு தெரியும். அதனால, கொளுத்திப் போடலாம்னு யாரும் நினைக்க வேண்டாம்' என்றார், அமீர். (ஆங்கர், இனி இந்தமாதிரி கேள்வி கேப்பீங்க?!)

'பனிரெண்டு வயசுல நான் காதலிச்சவளுக எல்லாம் இன்னைக்குப் பாதி கிழவி ஆகியிருப்பாக; இப்போ அதைப் பேசி என்ன ஆகப்போகுது?!' என நழுவினார், ராம்.

* தனுஷிடமும் இதே 'முதல் காதல்' கேள்வி கேட்கப்பட்டது. "மனைவி உட்காந்திருக்காங்க..' என நெளிந்தபடியே, கேள்விக்குப் பதிலளிக்காமல் கடந்து போனார்.

* விஜய் சேதுபதி அருகே சென்ற மகேஸ்வரி, 'இப்போ நான்தான் நீங்க புரப்போஸ் பண்ற பொண்ணு. எங்கே... ப்ரபோஸ் பண்ணுங்க?' எனக் கெஞ்ச, 'அங்கே உட்கார்ந்திருக்கான் பாருங்க என் தலைவன், உங்களோட இந்த வம்பு தும்புக்கெல்லாம் அவன்தான் சரியான ஆளு; அவன்கிட்ட வெச்சுக்கோங்க!' என சிம்புவைக் கை காட்டினார், மக்கள் செல்வன்.

* 'நான் படம் தயாரிச்சா, நீதான் ஹீரோ'னு எங்கிட்ட சொல்லியிருந்தார். நானும் அந்த அழைப்பு வரும்னு காத்துக்கிட்டு இருந்தேன். 'நாளைக்கு ஆடியோ லான்ச் வந்திடு'ங்கிற போன் கால்தான் வந்துச்சு. 'பரவால்லடா... சிவா; எவ்ளோ பார்த்திருக்கோம்'னு நினைச்சபடியே கிளம்பி வந்தேன்!' என யுவனைப் பார்த்துக் கண்ணடித்தபடியே கலாய்த்தார், மிர்ச்சி சிவா.

* 'எத்தனையோ தயாரிப்பாளர்களை பார்த்திருப்பீங்க. மகனைத் தயாரிப்பாளரா பார்க்கிறப்போ எப்படி இருக்கு டாடி?' என யுவன் கேட்க, 'அவங்கெல்லாம் எங்கிட்ட வந்தாங்க; நீ எங்கிட்ட வரலை. நீயே மியூசிக் பண்ணிட்ட!' என்றார், இசைஞானி. 'இல்ல டாடி இது சின்ன படம். அடுத்து பெரிய பட்ஜெட்ல பண்றப்போ உங்க மியூசிக்ல பண்ணலாம்னு இருக்கேன்' என யுவன் சொல்ல, 'அப்போ நான் சான்ஸ் கேட்கிறேனா?' என்றபடி மகன் மீது செல்லக் கோபம் காட்டினார், இளையராஜா.

* முதல்முதலாக யுவனைச் சந்தித்தது பற்றி படத்தின் ஹீரோயின் ரைசாவிடம் கேட்டபோது, ''தமிழ் சினிமா பத்தி அவ்ளவா எனக்குத் தெரியாது. அதனால, 'தயாரிப்பாளர் யுவன் சார்னு சொல்றாங்களே... யார் அவர், எப்படி இருப்பார்?'னுதான் நினைச்சுக்கிட்டு இருப்பேன். ஆனா, பேசினா மனுஷன் அவ்வளவு அமைதி!' என வியந்தது, ரைசா பொண்ணு.

* படத்தின் ஹீரோ ஹரிஷ் கல்யாண், இயக்குநர் இளன், ஜெயம் ரவி, ஆர்யா, கிருஷ்ணா, சாந்தனு, வசந்த் ரவி, நடிகைகள் ரேகா, பிந்து மாதவி, இசையமைப்பாளர்கள் சந்தோஷ் நாராயணன், இமான், சாம் சி.எஸ் எனத் திரளாகக் கலந்துகொண்ட நிகழ்வில் படத்தின் ஆடியோ வெளியிடப்பட்டது.

*ஹீரோ ஹரிஷ் கல்யாண் பேசியபோது, ''ஏற்கெனவே சினிமாவுல இருந்தவன் நான். ஆனா, ஒரு ரியாலிட்டி ஷோவுக்குப் பிறகே இப்படியெல்லாம் வாய்ப்பு அமையணும்னு இருந்திருக்கு!" என்றார்.

தன்னுடைய தயாரிப்பு என்பதால் செலவைப் பற்றிக் கவலைப்படாமல் ஜெர்மன் சென்றெல்லாம் இசையமைத்திருக்கிற யுவன், "காதல் ததும்பி வழியப்போகிற இந்தப் படம், என்னுடைய ரசிகர்களுக்காகவே!" என்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு