Published:Updated:

``எல்லோருக்கும் உதவினேன்; எனக்கு யாரும் உதவலை!" - கே.டி.குஞ்சுமோன் `அப்போ இப்போ' பகுதி 19

``எல்லோருக்கும் உதவினேன்; எனக்கு யாரும் உதவலை!" - கே.டி.குஞ்சுமோன் `அப்போ இப்போ' பகுதி 19
``எல்லோருக்கும் உதவினேன்; எனக்கு யாரும் உதவலை!" - கே.டி.குஞ்சுமோன் `அப்போ இப்போ' பகுதி 19

இயக்குநர் ஷங்கரை சினிமா உலகுக்கு அறிமுகப்படுத்தியவர், தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன். தனது `அப்போ இப்போ' பயணத்தைப் பகிர்ந்துகொள்கிறார்.

``என்னோட சொந்த ஊர் கேரளா. அப்பா பிசினஸ் பண்ணிக்கிட்டு இருந்தார். என்கூடப் பிறந்தவங்க ரெண்டு பேர். பத்தாவது வரைக்கும் படிச்சேன். அதுக்குமேல படிப்பு மண்டையில ஏறலை. சின்ன வயசுலேயே ஹோட்டல், டிராவல்ஸ்னு பிசினஸ்ல இறங்கிட்டேன்!" என்று தனது 'அப்போ இப்போ' கதையைச் சொல்லத் தொடங்குகிறார், தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன். 

``தமிழில் ரிலீஸான படங்களைக் கேரளாவுல விநியோகம் பண்ணிக்கிட்டு இருந்தேன். அந்த சமயத்துல படங்களைத் தயாரிக்கலாம்னு தோணுச்சு. மலையாளத்துல நிறைய படங்கள் தயாரிக்க ஆரம்பிச்சேன். தமிழில் `வசந்தகால பறவை' என் முதல் படம். ரெண்டாவது படம், `சூரியன்'. மூணாவது படம், `ஜென்டில் மேன்'. இது, இயக்குநர் ஷங்கரோட முதல் படம். `சூரியன்' படத்தின் இயக்குநர் பவித்ரன் பெயரில் நான் ஒரு தயாரிப்பு நிறுவனம் வெச்சிருந்தேன். என்னை ஏமாற்றி அதை அவர் எடுத்துக்கொண்டார். அந்த மனஉளைச்சலில் நான் இருந்த நேரத்தில்தான், ஷங்கர் எனக்கு அறிமுகம் ஆனார். நான் தயாரித்த இரண்டு படங்களில் ஷங்கர் உதவி இயக்குநரா வொர்க் பண்ணிக்கிட்டு இருந்தார். ஆனால், அவரை நான் சந்திச்சதில்லை.   

ஒருநாள் ஸ்டில்ஸ் ரவி, இயக்குநர் ஷங்கரை என்னிடம் அழைத்து வந்து அறிமுகப்படுத்தி வைத்தார். உடன், எடிட்டர் விஜயனும் வந்திருந்தார். `ரொம்ப நல்ல பையன். கதை ஒண்ணு வெச்சிருக்கார். கேட்டுப் பாருங்க'னு சொன்னாங்க. எனக்கு முன்னாடி, `ஜென்டில்மேன்' கதையை பல தயாரிப்பாளர்கள்கிட்ட சொல்லியிருக்கார், ஷங்கர். யாரும் அதைப் படமா எடுக்க முன்வரலை. ஸ்டில்ஸ் ரவி மேல இருந்த நம்பிக்கையில ஷங்கரிடம் பேசினேன். ``எஸ்.ஏ.சந்திரசேகர் சார்கிட்ட உதவி இயக்குநரா இருக்கேன். அம்மா மட்டும் இருக்காங்க. அப்பா இல்லை'னு சொன்னார். முழு கதையையும் கேட்டேன். கேட்டதும் பிடிச்சிருந்தது. ரொம்ப திறமையான பையன்னு மனசுல பட்டுச்சு. `இதைப் படமா எடுக்கிறதுல எந்தப் பிரச்னையும் இல்ல; ஆனா, எனக்குச் சில நிபந்தனைகள் இருக்கு'னு சொல்லி, ஸ்டன்ட் காட்சிகள் இப்படி இருக்கணும், சில காட்சிகளை அப்படி வைக்கணும்னு ஷங்கர்கிட்ட சொன்னேன். ஷங்கரும் என் நிபந்தனைகளுக்கு ஓகே சொன்னார். 

மனோரமா, நம்பியார், வினித்... இவங்களையெல்லாம் கமிட் பண்ணலாம்னு பேசினோம். இசையமைப்பாளரா ஏ.ஆர்.ரஹ்மான் சார் இருந்தா நல்லாயிருக்கும்னு ஷங்கர் சொன்னார், சரினு சொன்னேன். படத்துல ஹீரோவா நடிக்க சரத்குமார் சார்கிட்ட கேட்டோம். அவர் முடியாதுனு சொல்லிட்டார். பிறகு, தெலுங்கு ஹீரோ டாக்டர் ராஜசேகர்கிட்ட கேட்டோம். அவருக்குக் கதை பிடிச்சிருந்துச்சு. ஆனா, கால்ஷீட் பிரச்னையால பண்ணலை. அதற்குப் பிறகுதான், அர்ஜூன் இந்தப் படத்துக்குள்ள வந்தார். ஷங்கர் படத்துக்காக யார் யாரெல்லாம் வேணும்னு சொன்னாரோ, எல்லோரையும் கமிட் பண்ணிக் கொடுத்தேன். `உனக்கு எவ்வளவு சம்பளம் வேணும்?'னு ஷங்கர்கிட்ட கேட்டேன். `உங்க விருப்பம்'னு சொல்லிட்டார். 50,000 ரூபாய் தரட்டுமானு சொன்னதுக்கு, ஷங்கர் ரொம்ப ஆச்சர்யப்பட்டார். ஏன்னா, அப்போ, ஒரு அறிமுக இயக்குநருக்கு யாரும் இந்தளவுக்குச் சம்பளம் கொடுக்கமாட்டாங்க. உடனடியா, 5,000 ரூபாயை அட்வான்ஸா கொடுத்து, `நல்ல இயக்குநரா வருவ!'னு ஆசிர்வாதம் பண்ணேன். 

படத்துக்கு நாங்க பிளான் பண்ண பட்ஜெட்டை விட அதிகம் ஆயிடுச்சு. எல்லாத்துக்கும் ஓகே சொன்னேன். `ஜென்டில்மேன்' படத்துக்காக என் வீட்டையே அடமானம் வெச்சேன். படம் ரெடி ஆனதுக்குப் பிறகு, விநியோகஸ்தர்கள்கிட்ட போட்டுக் காட்டினேன். `படத்துல அர்ஜூன் நடிச்சிருக்கார். டப்பிங் படம் மாதிரி இருக்கு. ஓடாது'னு சொல்லி, யாரும் வாங்க முன்வரலை. அந்தச் சமயத்தில் எனக்கு உதவியா வந்தவர், தயாரிப்பாளர் ஜி.வி.வெங்கடேஷ்வரன் சார். அவரை ரொம்ப மதிக்கிறேன். படம் ரிலீஸாகி பெரிய ஹிட் ஆனது. எங்கே பார்த்தாலும் `ஜென்டில்மேன்' பற்றிய பேச்சாவே இருந்தது. எல்லா மொழிகளிலும் படத்தை டப்பிங், ரீமேக் பண்ணாங்க. உடனே, ஷங்கருக்குச் சொந்தமா ஒரு பிளாட், கார் வாங்கிக் கொடுத்தேன். என்னை மாதிரி எந்தத் தயாரிப்பாளரும் செஞ்சிருக்க மாட்டாங்க. தவிர, படத்துல வொர்க் பண்ண எல்லோருக்கும் ஸ்கூட்டர், செயின் கொடுத்தேன். எனக்குக் கிடைச்ச லாபத்தை, சந்தோஷத்தை எல்லோரிடமும் பகிர்ந்துக்கிட்டேன். பிறகு, ஷங்கர் `காதலன்' கதையைச் சொன்னார். 

உடனே படத்துக்கான பூஜையைப் போட்டோம். ஹீரோ, பிரபுதேவா. பிரபுதேவாவை ஹீரோவா போட யாரும் முதலில் சம்மதம் தெரிவிக்கலை. விநியோகஸ்தர்கள் பலரும், `அவரோட டான்ஸை ரசிப்பாங்க. ரெண்டு மணிநேரம் அவர் முகத்தைப் பார்ப்பாங்களானு தெரியலை'னு சொன்னாங்க. ஆனா, இவர்தான் ஹீரோனு நான் பிடிவாதமா இருந்தேன். ஏன்னா, என் ஆபீஸூக்கு தினமும் சுந்தரம் மாஸ்டர் வருவார். `என் பையனுக்கு ஒரு நல்ல வாய்ப்பு கொடுங்க'னு கேட்டுக்கிட்டே இருப்பார். `காதலன்' படமும் ஹிட். ஆனா, ரிலீஸூக்குப் பிறகு அவர் என்னைப் பார்க்கக்கூட வரலை. 

`காதலன்' படத்துல வந்த `முக்காலா...' பாட்டுக்கு மட்டும் பல கோடிகள் செலவு பண்ணினேன். அந்தப் பணத்தை வெச்சு நாலு படம் எடுத்திருக்கலாம். சிஜி வொர்க்ஸ் பயன்படுத்தி வெளியான முதல் தமிழ்ப் படம், `காதலன்'. நான் நினைச்ச மாதிரியே, படம் பெரிய ஹிட் ஆச்சு. தொடர்ந்து ஷங்கருடைய அடுத்த படத்தையும் தயாரிக்க ஆசைப்பட்டேன். ஷங்கரும் ஓகே சொன்னார். ஆனா, அக்ரிமென்ட் எதுவும் போடலை. மூணாவது படமும் என்கூட பண்ணுவார்னு நினைச்சேன். ஆனா, ஷங்கர் ஏ.எம்.ரத்னம் சார்கிட்ட அட்வான்ஸ் வாங்கிட்டார். `இந்தியன்' படமெடுத்தார். அதுவும் பெரிய ஹிட். அதற்குப் பிறகு என்கூட அவர் படம் பண்ணவே இல்லை. எனக்கு இது வருத்தமா இருந்தாலும், இன்னைக்கு அவர் இந்தியாவின் மிக முக்கியமான இயக்குநரா இருக்கிறதைப் பார்க்கும்போது, சந்தோஷமா இருக்கு.

பிறகு, நான் தொடர்ந்து படங்கள் தயாரிச்சேன். இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், `விஜயை வைத்துப் படம் எடுக்கணும். நீங்க ஃபைனான்ஸ் பண்ணுங்க, சேர்ந்து தயாரிப்போம்!'னு சொன்னார். விஜய் நடிச்ச `நிலாவே வா', `என்றென்றும் காதல்'னு ரெண்டு படங்கள் எடுத்தேன். ரெண்டுமே தோல்வி. இந்தப் படங்களோட தோல்வியால, என் மகன் நடிச்ச `கோடீஸ்வரன்' படத்தை ரிலீஸ் பண்ணமுடியாமப் போயிடுச்சு. இதுல இருந்து நான் மீண்டுவர பல வருடங்கள் ஆச்சு. பிறகு நான் படங்களைத் தயாரிக்கவே இல்லை. பலருக்கும் நான் உதவிகள் செஞ்சிருக்கேன். ஆனா, எனக்கு உதவி செய்யத்தான் யாரும் வரல. அதுக்காக நான் என்னைக்கும் வருத்தப்பட்டதில்லை. சினிமாவுல பெரிய இடத்தைப் பிடிச்ச பிறகு, என்னை மறந்துட்டாங்க. ஒவ்வொரு சினிமாவுக்கும் தயாரிப்பாளர்கள் ரொம்ப முக்கியம். அவங்க எல்லோரும் அம்மா, அப்பா மாதிரி! 

இந்தியாவின் தலைசிறந்த இயக்குநரா ஷங்கரும், பெரிய நடிகரா விஜய்யும் இருக்கிறதே எனக்கு சந்தோஷம்தான். இப்போ நான் படங்கள் தயாரிக்கிறதில்லை. இனியும் தயாரிக்கப் போறதில்லை. சென்னையிலதான் இருக்கேன். பேரன், பேத்திகளோட சந்தோஷமா நேரத்தைச் செலவழிக்கிறேன். தவிர, பிசினஸ் கன்சல்டிங் பண்றேன். உலகம் முழுக்க இருக்கக்கூடிய என் நண்பர்கள் இந்த பிசினஸுக்கு எனக்கு உதவிகள் பண்றாங்க!'' மனநிறைவோடு முடிக்கிறார், தயாரிப்பாளர் குஞ்சுமோன். 

 
 

அடுத்த கட்டுரைக்கு