Published:Updated:

“சசி சார் அப்புறம் ஏன் கூப்பிடலைனு தெரியலை!”  ‘சொல்லாமலே’ சொல்லும் லிவிங்ஸ்டன் #20YearsOfSollaamale

“சசி சார் அப்புறம் ஏன் கூப்பிடலைனு தெரியலை!”  ‘சொல்லாமலே’ சொல்லும் லிவிங்ஸ்டன் #20YearsOfSollaamale
“சசி சார் அப்புறம் ஏன் கூப்பிடலைனு தெரியலை!”  ‘சொல்லாமலே’ சொல்லும் லிவிங்ஸ்டன் #20YearsOfSollaamale

'சொல்லாமலே' படம் வெளியாகி இருபது ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து நடிகர் லிவிங்ஸ்டன் தனது நாஸ்டால்ஜிக் நினைவுகளை பகிர்ந்துகொள்கிறார்.

மிழ் சினிமாவில் எத்தனையோ காதல் படங்கள் வெளிவந்திருந்தாலும் அதில் ஒரு சில கதைகள் மட்டுமே எவர்க்ரீன் சினிமாவாக நிலைத்து நிற்கின்றன. அந்தப் பட்டியலில் 'சொல்லாமலே' படத்துக்கு ஓர் இடமுண்டு. தான் ஒரு வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளி இல்லை என்கிற உண்மையை சொன்னால் எங்கே காதலி தன்னைவிட்டு பிரிந்துவிடுவாளோ என்ற பயத்தில் தன் நாக்கை அறுத்துக்கொண்டு வாய் பேச முடியாதவானாகும் இளைஞனைப் பற்றிய படமே ‘சொல்லாமலே’.வ்‘காதலிக்காக நாக்கை அறுத்துக்கொள்கிறான்’ என்ற யாரும் நம்ப மறுக்கும் ஒன்லைனை நம்ப வைத்ததில் இருக்கிறது இயக்குநர் சசியின் திரை ஆளுமை. இந்தத் திரைப்படம் வெளிவந்து இன்றுடன் இருபது ஆண்டுகள் நிறைவடைகிறது. ‘சொல்லாமலே’ நினைவுகள் பற்றி சொல்கிறார் அதன் நாயகன் லிவிங்ஸ்டன். 

"படம் வெளியாகி இருபது வருஷம் ஆச்சுனு நீங்க சொல்லித்தான் எனக்கேத் தெரியும். ரொம்ப சந்தோஷமா இருக்கு. நான் இதுவரை எத்தனையோ கேரக்டர்கள்ல நடிச்சிருந்தாலும் 'சொல்லாமலே' நட்ராஜ் என் மனசுக்கு ரொம்பவே நெருக்கமானவன். அந்தளவுக்கு ஒவ்வொரு சீன்லயும் ரசிச்சு நடிச்சேன். ஆர்.பி.செளத்ரி சார் சொல்லித்தான் இந்தப் படத்துக்குள்ள வந்தேன். முதல்ல இந்தக் கதையில பிரபுதேவாதான் நடிக்க வேண்டியதா இருந்தது. அந்தச் சமயத்தில் நான் முதன்முதல்ல ஹீரோவா நடிச்ச 'சுந்தர புருஷன்' படம் வெளியாகி மக்கள்கிட்ட நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதனால, இதுல நான் நடிச்சா சரியா இருக்கும்னு நினைச்சு செளத்ரி சார் அந்த வாய்ப்பை எனக்குக் கொடுத்தார். 

இந்தப் படத்தை இப்பவரைக்கும் பேசுறோம்னா அதுக்கு முழுக் காரணம் இயக்குநர் சசி சார்தான். ‘பிரபுதேவா நடிக்கவேண்டிய இந்தக் கேரக்டரை எனக்கு கொடுத்திருக்காங்கன்னா நாம நல்லா பண்ணணும், சொதப்பிடக்கூடாது’னு ரொம்ப கவனமா இருந்தேன். க்ளைமேக்ஸ் காட்சிகள்ல நான் ரொம்ப சோர்வோட இருக்கணும், ஃப்ரஷா இருக்கக்கூடாதுனு ஷூட் முடியுறவரை எதுவுமே சாப்பிடாமல் பட்டினி இருந்து நடிச்சேன். எனக்கு சீரியஸான ரோல்லயும் நடிக்கத் தெரியும்னு அடையாளம் காட்டியதே இந்தப் படம்தான். 

சாரம் மேல ஏறி நின்னு பேனர்ல பெயின்ட் அடிக்கிற சீன்ல நடிக்கும்போது ரொம்பவே சவாலா இருந்தது. காலையில சாரம்ல ஏறினேன்னா  ஷூட் முடிஞ்சு பேக்அப் சொன்னப்பிறகுதான் கீழ இறங்குவேன். எனக்கு சாப்பாடுகூட கயித்துல கட்டி மேல அனுப்பிவிடுவாங்கன்னா பார்த்துக்கோங்க. மூணு நாள் பேனர்ல பெயின்ட் அடிக்கிற மாதிரி நடிக்கிறதுக்கே இவ்வளவு கஷ்டமா இருக்குனா, இதையே தொழிலா பண்றவங்களோட நிலைமை எப்படி இருக்கும்னு என்னால புரிஞ்சுக்க முடிஞ்சது. அந்த நாள்ல இருந்து அந்தமாதிரி வேலை செய்றவங்களைப் பார்த்தா தனி மரியாதை வரும். பேனர் சீன் எடுத்த ஒவ்வொரு நாளும் எனக்குள்ள எவ்வளவு பயமா இருந்ததுனு எனக்கு மட்டும்தான் தெரியும்.

அதேபோல, ஊட்டியில பள்ளமான பகுதியில ஒரு சீன் எடுத்தோம். அப்போ கால் தடுக்கி விழுந்த கெளசல்யாவைப் பிடிக்கப்போய் கீழே விழுந்து மயக்க நிலையில கிடந்திருக்கேன். பிறகு கண் விழிச்சுப் பார்த்தா, எங்கேயோ உயரத்துல இருந்து, ‘வாங்க அடுத்த ஷாட்டுக்கு போகலாம்’னு கத்திட்டு இருக்காங்க. அவ்வளவு பள்ளத்துல சறுக்கி விழுந்திருக்கேன்னு பிறகுதான் புரிஞ்சுது. பிறகு, 'நீங்க பள்ளத்துல சும்மா விளையாடுறீங்கனு நினைச்சோம்'னு ஒரு வார்த்தை சொன்னாங்க பாருங்க, நொந்துட்டேன். கொஞ்சம் மிஸ்ஸாகியிருந்தா என்ன  அசம்பாவிதம் வேணாம்னாலும் நடந்திருக்கலாம். என்னதான் காதல் கதையா இருந்தாலும் இந்த மாதிரியான அட்வெஞ்சர்களும் நடந்தது.

‘சொல்லாமலே’வுல என்னை அப்படியே இயக்குநர் சசிகிட்ட ஒப்படைச்சிட்டேன்னுதான் சொல்லணும். அவர் என்ன சொன்னாரோ அதை என்னால முடிஞ்சவரை நடிச்சுக்கொடுத்தேன். அவ்வளவுதான் என் வேலை. மத்தபடி, அந்தப் பட வெற்றிக்கான முழு அங்கீகாரமும் எங்க டைரக்டர் சசி சாருக்குத்தான் போகணும். அந்தப் படத்துக்குப்பிறகு சசி சார் ஏன் என்னை நடிக்கக் கூப்பிடலைனு தெரியலை. எந்த மாதிரி ரோலாக இருந்தாலும் அவர் கூப்பிட்டா நான் நடிக்க எப்பவும் தயார்" என்று பரவசத்துடன் முடித்தார்.

அடுத்த கட்டுரைக்கு