Published:Updated:

``கலைஞர் என்னைப் பாராட்டின வார்த்தைகளை மறந்துட்டேன்!" `நெஞ்சம் மறப்பதில்லை' ஜே.லலிதா

``என் நடனத்தை ரசிச்சுப் பார்த்த கலைஞரிடம் ஆசீர்வாதம் வாங்கினேன். அவர் என் காது பக்கத்துல சில வார்த்தைகள் பாராட்டிப் பேசினார்."

``கலைஞர் என்னைப் பாராட்டின வார்த்தைகளை மறந்துட்டேன்!"  `நெஞ்சம் மறப்பதில்லை' ஜே.லலிதா
``கலைஞர் என்னைப் பாராட்டின வார்த்தைகளை மறந்துட்டேன்!" `நெஞ்சம் மறப்பதில்லை' ஜே.லலிதா

``இந்தக் கால இளைய தலைமுறையினர் பலரும், என்னை சீரியல் ஆர்டிஸ்டுனு மட்டுமே நினைக்கிறாங்க. சினிமாவுக்குப் பிறகான ரீ-என்ட்ரிதான் சின்னத்திரை" என முன்னுரை கொடுத்துப் பேசத் தொடங்குகிறார், நடிகை ஜே.லலிதா. விஜய் டிவி `நெஞ்சம் மறப்பதில்லை' சீரியலில் நடித்துவருபவர்.

``நான் நடிகையா ஆகணும்னு என் அம்மா ஆசைப்பட்டாங்க. டான்ஸ் கிளாஸுக்கு அனுப்பினாங்க. என் அப்பா போலீஸ் டிபார்ட்மென்ட்ல வொர்க் பண்ணினார். 1972-ம் வருஷம் நடந்த என்

அரங்கேற்றத்துக்குச் சிறப்பு விருந்தினரா, அப்போதைய முதல்வர் கருணாநிதியை அப்பா வரவெச்சார். என் நடனத்தை ரசிச்சுப் பார்த்தவரிடம் ஆசீர்வாதம் வாங்கினேன். அவர் என் காது பக்கத்துல சில வார்த்தைகள் பாராட்டிப் பேசினார். அது சின்ன வயசு. அதனால், அவர் பாராட்டினது மட்டும்தான் நினைவில் இருக்கு. ஆனால், அந்த வாழ்த்து வார்த்தைகளை மறந்துட்டேன்.

ஒரு வருஷம் கழிச்சு, உடல்நிலை சரியில்லாமல் அப்பா திடீர்னு இறந்துட்டார். குடும்பப் பொருளாதார தேவைக்காக, 13 வயசுல நடிக்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டேன். ப்ளஸ் டூ படிப்பை பாதியில் நிறுத்திட்டேன். சில சினிமா கம்பெனிகளில் வாய்ப்பு தேடினேன். என் முதல் படம், `காஞ்சி காமாட்சி'. தொடர்ந்து பல படங்களில் நடிச்சாலும், `ராணுவ வீரன்' பெரிய பிரேக் கொடுத்துச்சு. அப்போ, ரஜினி ஃபேமஸ் ஹீரோ. என் ஜோடியா நடிச்ச சிரஞ்சீவி, அப் கம்மிங் ஹீரோ. பிற்காலத்தில் தெலுங்கில் அவர் மெகா ஸ்டாராக உயர்ந்தார். `ராணுவ வீரன்' ஷூட்டிங் ஒகேனக்கல் பகுதியில் நடந்துச்சு. ஒருநாள் ஷூட்டிங் முடிஞ்சு ரூமுக்குப் போயிட்டோம். தூக்கத்துல பேய் கனவு வந்து, பயந்து அழுது கூச்சல் போட்டேன். என் அம்மா துணையோடு வேற ரூம் மாறினேன். அதெல்லாம் சுவாரஸ்யமான கதை" எனச் சிரிக்கிறார் லலிதா.

`` `ரயில் பயணங்களில்', `கவரிமான்', `வரவு நல்ல உறவு' உட்பட தென்னிந்திய மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடிச்சேன். ரெண்டு படங்களில் ஹீரோயினா நடிச்சும் ரிலீஸாகலை. 1996-ம் வருஷம் கல்யாணம். அப்புறம், சினிமா வாய்ப்பு வரலை. சின்ன இடைவெளிக்குப் பிறகு, தூர்தர்ஷன் சீரியல்களில் நடிக்க ஆரம்பிச்சேன். தினமும் ஆபீஸ் வேலைக்குப் போற மாதிரிதான். எந்தச் சிரமமும் இல்லாம நடிச்சேன். தனியார் சேனல்கள் வந்ததும் எல்லா சேனல் சீரியல்களிலும் நடிக்க ஆரம்பிச்சு, சின்னத்திரையே பிரதானமாக, அப்பப்போ சினிமாவில் நடிச்சுட்டிருந்தேன். கடைசியா, `ஜூட்' படத்தில் மீரா ஜாஸ்மீன் அம்மாவா நடிச்சு 14 வருஷம் ஆகுது. அதனால், சின்னத்திரை நடிகை முத்திரை வந்திடுச்சு. அதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை.

`நெஞ்சம் மறப்பதில்லை' சீரியலில் பாசிட்டிவ் மாமியார் ரோல். `உங்களை மாதிரி ஒரு மாமியார் கிடைச்சா பல குடும்பங்களில் பிரச்னையே வராது'னு பலரும் பாராட்டுறாங்க. 20 வருஷ சின்னத்திரை அனுபவத்துல, சீரியல் ஷூட்டிங்கிலும் ஆடியன்ஸ் ரசனையிலும் ரொம்பவே மாற்றம் வந்துடுச்சு. புதுப் புது ஆர்டிஸ்டுகள் வந்துட்டே இருக்காங்க. ஆனாலும், ஒருத்தர் வாய்ப்பை இன்னொருத்தர் தட்டிப் பறிக்கமுடியாது. காலச்சூழலுக்கு ஏற்ப, நம்மை அப்டேட் பண்ணிகிட்டால், எல்லோருக்கும் குறிப்பிட்ட வாய்ப்பு வரும். அப்படி எனக்கும் வாய்ப்புகள் வருது. நானா யாரையும் தேடிப்போய் கேட்டதில்லை. நடிப்பு தவிர, நல்லா சமைப்பேன். ஷூட்டிங் இல்லாத நேரத்தில், குடும்பத்தினருக்குச் சமைச்சுப் போடுவேன். விஜய் டிவி, `கிச்சன் சூப்பர் ஸ்டார்' நிகழ்ச்சியிலும் கலந்துகிட்டேன். குடும்பம், நடிப்புனு பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாம சந்தோஷமா இருக்கேன்" என்கிறார் ஜே.லலிதா.