Published:Updated:

``இனி அசைவம் சாப்பிடமாட்டேன்னு கலைஞர் சொன்ன காரணம் கேட்டு, நெகிழ்ந்தேன்!" - செளகார் ஜானகி

``இனி அசைவம் சாப்பிடமாட்டேன்னு கலைஞர் சொன்ன காரணம் கேட்டு, நெகிழ்ந்தேன்!" - செளகார் ஜானகி
``இனி அசைவம் சாப்பிடமாட்டேன்னு கலைஞர் சொன்ன காரணம் கேட்டு, நெகிழ்ந்தேன்!" - செளகார் ஜானகி

திமுக தலைவர் கருணாநிதிக்கும் தனக்குமான நட்பையும், சில சுவாரஸ்யமான நினைவுகளையும் பகிர்ந்துகொள்கிறார், நடிகை செளகார் ஜானகி.

``ஒரு கலைஞராக மட்டுமல்ல... அவருடைய நல்ல தோழியாக இருந்தவள் நான். அது நான் செய்த பாக்கியம். அவருடைய நிலையை எண்ணி கடந்த சில நாள்களாக மனம் சரியில்லாமல் இருக்கிறேன்" - வருத்தத்துடன் பேச ஆரம்பித்தார், நடிகை `செளகார்' ஜானகி. 

``எனக்கும், கலைஞருக்குமான பழக்கம் 1949-ம் ஆண்டே தொடங்கிவிட்டது. அப்போது எனக்கு 19 வயது. `செளகார்' எனும் தெலுங்குப் படத்தில் நடித்து முடித்துவிட்டு, தமிழில் `வளையாபதி' என்கிற படத்தில் நடித்திருந்தேன். பாவேந்தர் பாரதிதாசனின் வரிகளை மனப்பாடம் செய்து, அப்படியே சுத்தமான தமிழில் பேசினேன். அப்போதெல்லாம் டப்பிங் கிடையாது. மூன்று நிமிடங்களுக்கும் மேலான அந்த வசனத்தைப் படத்தில் பார்த்துவிட்டு என்னைப் பற்றி கேட்டிருக்கிறார், கலைஞர். `இந்தப் பொண்ணு தெலுங்கு, இவங்க பேர் ஜானகி, தமிழில் இதுதான் இவருக்கு முதல் படம்'னு சொல்லி அறிமுகப்படுத்தினாங்க. `நல்லா தமிழ் பேசுறீங்க'னு என்னைப் பாராட்டினார். கலைஞர் அவர்கள் வசனம் எழுதிய `பராசக்தி'யும், `வளையாபதி' படமும் ஒரே சமயத்தில் வெளியானது. போட்டிக்காகவே திரையிடப்பட்டது. நன்றாக ஓடியது என்னவோ, `பராசக்தி' படம்தான். அதில் இடம்பெற்ற அத்தனை வசனங்களும் அர்த்தமுள்ள வசனங்கள். அவரைப் பார்த்ததும் திகைத்துப் போனேன். எங்கே மறுபேச்சு பேசுறது. குட்டுப் பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்படணும்னு சொல்லுவாங்க. அந்த விதத்தில் நாங்களெல்லாம் புண்ணியம் செய்தவங்க.

`உயர்ந்த மனிதன்', `இரு கோடுகள்', `பாமா விஜயம்' என நிறைய தமிழ் படங்களில் அடுத்தடுத்து நடிக்க ஆரம்பிச்சேன். சிறந்த நடிகைக்காக `கலைமாமணி' விருதும் வாங்கியிருக்கேன். `எதிர் நீச்சல்' படத்திற்காக அறிஞர் அண்ணாவின் கரங்களால் விருது பெற்றிருக்கிறேன். வசனகர்த்தாவில் தொடங்கி, கலைஞரின் அத்தனை வளர்ச்சியையும் நான் வியந்து பார்ப்பதுண்டு. பிறகு நல்ல நண்பர்களாகப் பழகினோம். அவர் குடும்பத்தாருடனும் நல்ல பழக்கம் உண்டு. வெளியில் அதிகம் அதைப் பகிர்ந்து கொள்வதில்லை. வறுமையிலிருந்து வளர்ந்து வந்த அவர், வறுமையில் வாடும் ஏழைகளை வாழ வைப்பதில் தீவிரமாக இருந்தார். சமத்துவபுரம் போன்று மக்கள் பயன்பெறும் பல திட்டங்களைக் கொண்டுவந்தார்.

ஒரு நல்ல ஆத்மா அவர். ஒருமுறை கலைஞர் அவர்களை சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தபோது, `இப்போதெல்லாம் அசைவம் சாப்பிடுவதில்லை' என்றார். `ஏன்?' என்று கேட்டேன். `நான் ஆசையாக வளர்த்த நாய்க்குட்டி இறந்துவிட்டது. அந்நாளிலிருந்து வெஜிடேரியனுக்கு மாறிட்டேன்' என்றார். எனக்கு ஒரு நிமிடம் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. கண்கள் கலங்கிவிட்டன. எப்படியொரு மனிதர் அவர். என்னுடைய 75-வது பிறந்த நாளுக்கு கலைஞர் அனுப்பியிருந்த வாழ்த்து கடித்தத்தை பத்திரமாக வைத்திருக்கிறேன். கலைஞர் ஒவ்வொரு முறை பேசும்போதும் இசையை மீட்டுவதுபோல இருக்கும். கண்கள் மூடி கவனித்தால், தாலாட்டு பாடுவது மாதிரி இருக்கும் எனக்கு. அவருடைய பேச்சு ரேடியோ, டிவி என எதில் கேட்டாலும், எந்த வேலையாக இருந்தாலும் அதை விட்டுவிட்டு கேட்டுக் கொண்டிருப்பேன்.

எங்கள் வீட்டில் கலைஞரை எல்லோரும் `பெரியவர்' என்றுதான் சொல்வார்கள். தெலுங்கில் `பெத்தாயினா'னு சொல்வாங்க. நான் அவரை மரியாதை நிமித்தமாக `கருணாநிதி' சார்' என்றே கூப்பிடுவேன். `எதிர் நீச்சல்' படம் வெளியான நேரத்தில் ஒருமுறை அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. பேசிக்கொண்டிருக்கும்போது, `ஜப்பான் பொம்மை மாதிரி இருக்கீங்க'னு கமென்ட் அடிச்சார். அவரைப் போன்று கற்பனை வளம் எனக்கு இல்லை. ரசித்துப் பார்ப்பேன். அவ்வளவே! கலைஞருக்கு ரொம்பப் பிடிச்சது `ஆம்லேட்'னு சொல்வாங்க. அவர் சாப்பாட்டில் கண்டிப்பாக ஆம்லேட் இருக்குமாம். சரியோ, தவறோ எதையும் மறக்காமல் பேசிவிடுவார். மற்றவர் மனதைப் புண்படுத்த நினைக்கமாட்டார், பண்படுத்த நினைப்பார். என்னால் சில விஷயங்கள் மறக்கவே முடியாது. 

கலைஞர் ஒரு `காரண ஜென்மா' என்று சொல்வேன். பல கோடி மக்களால் நேசிக்கப்பட வேண்டும் என்ற காரணத்துக்காகப் படைக்கப்பட்டவராக இருந்திருக்கலாம், கலைஞர். அவருடைய எறும்பு போன்ற சுறுசுறுப்பு யாருக்கு வரும்? இளம் வயதில் பட்ட கஷ்டமெல்லாம் இப்போது வயோதிகத்தில் தெரிந்திருக்கிறது. அந்தக் கறுப்பு கண்ணாடிக்குப் பின்னாலேயே தன் துக்கம், சோகம், சந்தோஷம் எல்லாவற்றையும் மறைத்துவிட்டாரே என எண்ணத் தோன்றும். அந்த இரண்டு கண்களையும் தாண்டி மூன்றாவது கண் அவரிடம் இருக்கிறது. தன் முன் நிற்பவர்களைப் பற்றி அறிந்துகொள்ளும் அந்த சக்தி சில பேருக்குத்தான் வாய்க்கும். அது அவருக்கு வாய்த்திருக்கிறது. கலைஞரும் ஆரம்பத்தில் தெய்விக வழிபாட்டில், கடவுள் நம்பிக்கையில் இருந்தவர்தான். அதன் பிறகான காலத்தில் பல விஷயங்கள் அவரை நாத்திகராக மாற்றியிருக்கலாம். `தன்னைத்தானே அறிந்தவர்' கலைஞர். அதனால், அவரும் என்னைப் பொறுத்தவரை ஞானிதான்! இவரைப் போன்று இன்னொரு பிறவி இந்த உலகத்தில் இருக்கா என்றால், கண்டிப்பாக இருக்க முடியாது என்றுதான் சொல்வேன்." என்றவர், அந்தச் சிலிர்ப்பான அனுபவத்தையும் பகிர்ந்தார். 

``2007... அப்போது நான் சென்னையில் இருந்தேன். 1965-ல் இருந்து நான் சாய்பாபா பக்தை என்பதை அறிந்திருப்பீர்கள். அப்போது சத்ய சாய்பாபா சென்னைக்கு வந்திருந்தார். கார் போய்க்கொண்டே  இருக்கும்போது, 'கலைஞர் வீட்டுக்குப் போங்க' என்று கார் ஓட்டுபவரிடம் சொன்னாராம், பாபா. அருகில் இருந்தவர், `அவர் நாத்திகராச்சே.. அவர் வீட்டுக்கு எப்படி?' என இழுத்தாராம். `நான் சொல்வதைச் செய்யுங்கள்' எனச் சொல்ல, கலைஞர் வீட்டின் முன்பு கார் நின்றிருக்கிறது. சத்ய சாய்பாபா கலைஞரிடம் சில நிமிடங்கள் பேசிவிட்டுச் சென்றிருக்கிறார். அந்தச் செய்தி வெளியானபோது, நடிகர் ரஜினி `கடவுளைத் தேடி இவர் போகவில்லை என்றாலும், கடவுள் இவரைத் தேடி வந்துவிடுவார்' எனச் சொன்னதாக ஞாபகம். ' உண்மையில் கடவுள் அவருக்குள்ளும் இருக்கிறார் என்றே நினைக்கிறேன்!'' என முடிக்கிறார், செளகார் ஜானகி.   

அடுத்த கட்டுரைக்கு