Published:Updated:

"சிவகார்த்திகேயனுக்கு இருக்கிற பிசினஸ் எனக்கு இல்லை!" - விஜய் சேதுபதி

"சிவகார்த்திகேயனுக்கு இருக்கிற பிசினஸ் எனக்கு இல்லை!" - விஜய் சேதுபதி
"சிவகார்த்திகேயனுக்கு இருக்கிற பிசினஸ் எனக்கு இல்லை!" - விஜய் சேதுபதி

விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தில், மாணவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார், நடிகர் விஜய் சேதுபதி.

டந்த வாரம் விகடன் மாணவர் பத்திரிகையாளர் பயிற்சித்திட்டம் மூன்று நாள்கள் நடந்தது. இரண்டாவது நாளில் 'ஜுங்கா' திரைப்படம் திரையிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, கடைசி நாளில் கலந்துகொண்டு பேசிய நடிகர் விஜய் சேதுபதி மாணவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். அவர் பேசியதிலிருந்து...

"'ஜுங்கா' படத்துல மொத்தமா உங்க கெட்டப் மாறியிருக்கே... என்ன காரணம்?"

"இந்தத் தொழில்ல இது சாதாரணம். சினிமாவுல அதிகமான வேலை அழுத்தம் இருக்கும். நடிச்சு முடித்ததுக்கு அப்புறம் 'நாம சரியா நடிச்சோமா?'ங்கிற கேள்வி மனசுல இருந்துகிட்டே இருக்கும். அது ஏன்னு தெரியாது. மன நிம்மதிக்கும், நிம்மதியற்ற நிலைக்கும் இடைப்பட்டதாகதான் சினிமா பயணம் இருக்கும். நான் வேறு சில கதாபாத்திரங்களுக்கு தயாராகிட்டு இருந்த சமயத்துல உடல் எடை கூடிப்போச்சு. இப்போ நான் நடிக்கிற படங்களுக்கு உடல் எடையை குறைத்தாகணும்ங்கிற கட்டாயம். சில சமயங்கள்ல நான் எந்த மாதிரி நடிக்கணும்னு விருப்பப்படுறேனோ, அதை என்னால சரியா பண்ண முடியலை. காரணம், இந்த உடல் எடைதான். இப்போ இரண்டு மாசத்துல கடுமையா பயிற்சிகள் செய்து எடையைக் குறைச்சிருக்கேன்." 

"ஒரு நடிகரா நீங்க பெரிய இடத்துல இருக்கீங்க. அதை எப்படிப் பார்க்குறீங்க?"

"நாம இது பெரிய இடம்னு நினைச்சுக்கிட்டு இருக்கோம். அது, உண்மையில்லை. ஒரு மலையைப் பார்க்கும்போது, அது பெருசா தெரியும். அதுமேல ஏறி நின்னதுக்குப் பிறகு, பக்கத்துல இருக்கிற மலை அதைவிடப் பெருசா தெரியும். அதனால, பெரிய இடம்னு எதுவுமே கிடையாது. நான் பெருசா நினைக்கிறது மக்கள் என்மீது வெச்சிருக்கிற அன்பை மட்டும்தான். ஒரே சமயத்துல இத்தனை பேரோட அன்பை இனி நம்மளால பெற முடியுமாங்கிறது சந்தேகம்தான்."

"சமூகத்துல நடக்கிற பிரச்னைகளுக்கு நீங்க குரல் கொடுக்கலைனா, 'ஏன் விஜய் சேதுபதி இது குறித்து எதுவும் பேசுறதில்லை'னு கேட்கிறாங்க. இதை நீங்க எப்படிப் பார்க்குறீங்க?"

"அக்கறைங்கிறது தன்னால வரணும், கட்டாயப்படுத்தி வரக்கூடாது. என் குழந்தைக்கு அடிபட்டா மத்தவங்க சொல்லி அக்கறை செலுத்தணுமா, இல்லை நானே பார்த்துக்கணுமானு எனக்குத் தெரியும். ஒரு பிரச்னை குறித்து குரல் கொடுத்தா என்ன, கொடுக்கலைனா என்ன... அது அவங்களோட தனிப்பட்ட உரிமை. ஒரு தொலைக்காட்சி சேனல்ல இரவு 9 மணிக்கு நாலு பேர் ஒரு பிரச்னை பத்திப் பேசுறாங்க. ஆனா, தீர்வைப் பத்தி அவங்க பேசவே மாட்டாங்க. ஒருத்தர் பேசுறதுக்கு முன்னாடியே இன்னொருத்தர் பேச ஆரம்பிச்சு சண்டை போட்டுக்குவாங்க. அப்பட்டமா பொய் சொல்வாங்க. இப்படி பேசிக்கிட்டும், மத்தவங்க மேல பழி போட்டுக்கிட்டும் இருப்பாங்க. அதனால, கருத்து சொல்றதுல எனக்கு உடன்பாடு கிடையாது. இப்போல்லாம் போராட்டத்துக்குகூட மதிப்பிலாம போச்சு. சமூகப் பிரச்னைகளுக்கு நடிகர்கள் குரல் கொடுக்கணும்னு நினைக்கிறது தவறு, அவசியமற்றது."

"சினிமாவுக்கு வர முயற்சி பண்ணிக்கிட்டு இருந்த காலகட்டத்துல, நண்பர்கள்தாம் உங்களுக்கு உதவியா இருந்ததா சொல்லியிருக்கீங்க. ஃபிரென்ட்ஷிப் பத்தி படம் பண்ணனும்னு உங்களுக்குத் தோணியிருக்கா?"

"'நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்' படம் நண்பர்கள் பற்றிய படம்தான். சினிமாவுக்கு வர முயற்சி பண்ணிட்டு இருந்தப்போதான் எனக்குக் கல்யாணம் ஆச்சு. இன்டீரியர் டெக்கரேஷன், சிவில் இன்ஜினியரிங் மாதிரியான வேலைகளுக்கு முயற்சி பண்ணிட்டு இருந்தப்போ, எதுவுமே வொர்க்-அவுட் ஆகலை. சினிமாவுக்கு முயற்சி பண்ணிக்கிட்டு இருந்த விஷயம் ஒருநாள் என் மனைவிக்குத் தெரிய வந்துருச்சு. அவங்களுக்கு அது பிடிக்கலை. ஐந்து மாசம் கர்ப்பமா இருந்த என் மனைவி மீது, 'இனிமேல் சினிமா வாய்ப்புத் தேடி போகமாட்டேன்'னு சத்தியம் பண்ணேன். என் மனைவி மீதும், குழந்தைகள் மீதும் என்னைவிட அதிகமா பாசம் வேற யாராலும் வெச்சிட முடியாது. அதனால, என் பொய் சத்தியம் அவங்களை ஒன்னும் பண்ணாதுனு முடிவு பண்ணேன். மறுபடியும் வாய்ப்புகளைத் தேடிப்போக ஆரம்பிச்சேன். அப்போ ஜோசியர், 'எனக்கு ஏழரை சனி பிடிச்சிருக்கு. சினிமாவுல பத்து வருடத்துக்குப் பிறகுதான் கொடிகட்டிப் பறக்க முடியும்'னு சொன்னார். அப்போ, என் மனைவிகிட்ட, 'ஏழரை சனி பிடிச்சா ரொம்ப நல்லது. பத்து வருடத்துக்குப் பிறகு வந்தா மட்டும் என்னை சினிமாவுல தூக்கி வெச்சுக் கொண்டாடமாட்டாங்க. சனி நமக்கு கஷ்டத்தை மட்டும் கொடுக்க வரலை. கத்துக் கொடுக்கவும் வந்திருக்கார்'னு சொன்னேன். அதாவது, கத்துக்கிட்டுதான் சினிமாவுக்கு நான் வந்துருக்கேன்னு சொல்ல வர்றேன்."

"பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடுத்ததால் குற்றங்கள் குறையும்னு நீங்க நினைக்கிறீங்களா?" 

"பாலியல் வன்கொடுமை மன்னிக்க முடியாதது. ஒரு பெண்ணை சிதைத்தவனை கொடூரமான தண்டனைக்கு உள்ளாக்கணும்னு நினைக்கிறதுல எனக்கு எந்தவித மாற்றுக்கருத்தும் கிடையாது. மரணம் என்பது வரம். கொடுக்கப்படும் தண்டனை வரமா மாறிடக்கூடாது. அதனால, இந்தக் குற்றவாளிகள் கொடூரமாதான் தண்டிக்கப்படணும்."

"'எம்ஜிஆர் - சிவாஜி', 'ரஜினி - கமல்', 'விஜய் - அஜித்'னு எப்போவுமே சினிமாவுல ஒரு காம்போ இருக்கும். அதுமாதிரி 'சிவகார்த்திகேயன் - விஜய் சேதுபதி' கம்போவை எப்படிப் பார்க்குறீங்க?"

"நான் சிவாவோட நெருங்கிப் பழகுனது இல்லை. அவரும் நானும் வெளிய எங்கேயாவது சந்தித்தா, நல்லா பேசிக்குவோம். அன்பைப் பறிமாறிக்குவோம். அவருக்கு சினிமா பெரிய பிசினஸ். என்னைவிட வேகமா முன்னேறிக்கிட்டு இருக்கிற ஒரு மனிதர். எல்லா முன்னணி நடிகர்களையும் இதுவரை கம்போவா பார்த்துக்கிட்டு இருந்த மக்களுக்கு இப்போவும் ஒரு காம்போ தேவைப்படுது. தன்னால உருவானதுதான் இந்த கம்போ, நாங்க உருவாக்கியது கிடையாது." 

"அரியலூர் மாவட்டப் பள்ளிகளுக்கு சமூக அக்கறையோடு நீங்க செய்த உதவிகளுக்கு நன்றி. இந்த மாதிரியான சமூகம் சார்ந்த விஷயங்களில் பங்களிக்கணும்ங்கிற எண்ணம் எப்படி வந்துச்சு?"

"இங்கே சாதாரணமா கிடைக்க வேண்டியதெல்லாம் ரொம்ப கஷ்டப்பட்டு கிடைக்குது. இன்னைக்கு பேண்ட் - சட்டை போட்டுட்டுப் போனா அவரை வேறு மாதிரியாகவும், வேட்டி - சட்டை போட்டா அவரை வேறு மாதிரியாகவும் பார்க்கிறோம். லுங்கி கட்டிட்டுப் போனா தியேட்டருக்குள்ள விடமாட்டோம்னு சொல்றதுகூட தவறுதான். அது என் ஊர்ல சாதாரண மக்களுக்கான ஆடை. மக்களுக்கு படிப்பு, சாலை வசதி, சாப்பாட்டு வசதி மாதிரியான தேவைகள் எல்லாம் சாதாரணமா கிடைக்கணும்னு நினைக்கிறேன்."

"உங்களுக்கு பெண் ரசிகைகள் அதிகமா இருக்காங்க. என்ன காரணம்னு நினைக்கிறீங்க?"

"முன்னாடியெல்லாம் உங்க சொந்த ஊர் எதுனு கேட்டா 'ராஜபாளையம்'னு சொல்வேன். இப்போல்லாம் 'தமிழ்நாடு'னு சொல்றேன். யாரையும் பாரபட்சம் பார்க்காம நேசிக்கணும்னு நினைக்கிறேன். பெண்கள் அன்பானவர்கள். பெண் என்பவள் தன்னை அழகுபடுத்துறதோட நின்றுவிடாமல், தன் குடும்பத்தையும் சேர்த்து அழகுபடுத்துபவர்கள். நான் வெளிய போகும்போது எந்தச் சட்டை போட்டுட்டு போகணும்னு முதற்கொண்டு என் வீட்ல சொல்றாங்க. அந்தளவுக்கு அக்கறை மிக்கவர்கள் பெண்கள். அதனால, அந்த மாதிரி அன்பு பரப்புற வேலைகளை கொஞ்சமா பார்த்தாலே போதும். பெண்களுக்கு நம்மளை ரொம்ப பிடிச்சுப் போயிடும். அதைத்தான் நான் 'சேதுபதி', 'கருப்பன்' மாதிரியான படங்கள்ல பண்ணேன். அதனாலதான் பெண்களுக்கு என்னை ரொம்பப் பிடிக்குதுனு நினைக்கிறேன்". 

அடுத்த கட்டுரைக்கு