Published:Updated:

மக்கா... நாய் ஒன் பாத்ரூம் போறதெல்லாம் ஒன்லைனா...!? - ‘எங்க காட்டுல மழை’ விமர்சனம்

விகடன் விமர்சனக்குழு
மக்கா... நாய் ஒன் பாத்ரூம் போறதெல்லாம் ஒன்லைனா...!? - ‘எங்க காட்டுல மழை’ விமர்சனம்
மக்கா... நாய் ஒன் பாத்ரூம் போறதெல்லாம் ஒன்லைனா...!? - ‘எங்க காட்டுல மழை’ விமர்சனம்

மக்கா... நாய் ஒன் பாத்ரூம் போறதெல்லாம் ஒன்லைனா...!? - ‘எங்க காட்டுல மழை’ விமர்சனம்

ஹிட்டான ஹாரர் படங்களைப் பார்த்து, 'இதுதான் சக்ஸஸ் ஃபார்முலா போல' என பயமுறுத்த நினைத்து சூடுபட்ட படங்கள் தமிழ்சினிமாவில் நிறைய உண்டு. அதுபோல ஹிட்டான த்ரில்லர் படங்களைப் பார்த்து சூடுபட்டிருக்கும், நமக்கும் சூடுபோட்டிருக்கும் படம் இந்த 'எங்க காட்ல மழை'.

வேலை வெட்டி இல்லாமல், இதற்கு முன்னால் தமிழ் சினிமா ஹீரோக்கள் என்ன செய்தார்களோ அதேபோல ஊர் சுற்றிக்கொண்டிருக்கிறார் ஹீரோ. இதற்கு முன்னால் தமிழ் சினிமா ஹீரோயின்கள் என்ன செய்தார்களோ அதேபோல ஹீரோவின் தலையில் எதேச்சையாக முட்டி 'சாரி' சொல்லி அறிமுகமாகிறார் ஹீரோயின். இதற்கு முன்னால் வில்லன்கள் என்ன செய்தார்களோ அதேபோல வெறும் தீம் மியூசிக் மட்டும் போட்டுக்கொண்டு குறுக்கும்நெடுக்குமாக அலைகிறார் போலீஸ்கார வில்லன்.

ஒருநாள் ஹீரோவின் நாய் வில்லனின் போலீஸ் ஜீப் டயரில் ஒன் பாத்ரூம் போக, கோபத்தில் அதை எட்டி மிதிக்கிறார் வில்லன். உடனே அதற்கு பழிவாங்க வில்லன் ஜீப்பில் இருக்கும் பெட்டியை திருடிவிடுகிறார் ஹீரோ. பெட்டியில் இருந்தது என்ன? அதனால் ஹீரோவுக்கு என்னென்ன பிரச்னைகள் வருகின்றன என்பதுதான் மீதிக்கதை. நாய் ஒன் பாத்ரூம் போவதை வைத்து த்ரில்லர் கதை பின்னிய இயக்குநரின் க்ரியேட்டிவிட்டிக்கு என்ன அவார்ட் தரலாம் என்பதை உங்களின் கணிப்புக்கே விட்டுவிடுகிறோம்.

ஹீரோவாக மிதுன் மகேஸ்வரன்... ம்ஹூம் ஹீரோவாக ஆக அவர் இன்னும் நிறைய உழைக்கவேண்டும். மொழுமொழு முகத்தில் எக்ஸ்பிரஷன்களைத் தேடிக் கண்டுபிடிக்கவேண்டியதிருக்கிறது. ஒரேமாதிரியான வாய்ஸ் மாடுலேஷன் சலிப்பைக் கொடுக்கிறது. மறுபக்கம் ஹீரோவின் நண்பராக வரும் அப்புக்குட்டி 'மாப்ள இந்தக் காலத்துல...' என அக்பர் காலத்து ஜோக்குகளை சொல்லி சிரிக்க வைக்க முயற்சிக்கிறார். ஹீரோவுக்கே வேலை இல்லாத படத்தில் ஹீரோயின் ஸ்ருதி ராமகிருஷ்ணன் மட்டும் என்ன செய்வார்? 'ஏங்க... ஏங்க..' என்கிறார். டூயட் பாடுகிறார். அவ்வளவுதான்.

அருள்தாஸ்தான் போலீஸ் வில்லன். அருள்தாஸைப் பார்த்தாலே நடுக்கம் ஏற்படும் காட்சிகள் எல்லாம் இதற்கு முன்னால் வந்திருக்கின்றன. ஆனால் இந்தப் படத்தில் நடுக்கமென்ன, நமுட்டுச்சிரிப்பு கூட வரவில்லை. 'தேமே' என்றிருக்கும் திரைக்கதையில் பின்னணி இசை துணையோடு அந்தப் பக்கமும் இந்தப் பக்கமுமாக நடக்கிறார். சாம்ஸ், மதுமிதா, செளகார்பேட்டை சேட், அட்மாஸ்பியரில் நிற்கும் ஜுனியர் ஆர்ட்டிஸ்ட் என ஒருவருக்கும் படத்தில் வேலை இல்லை.

ஏ.ஆர்.சூர்யாவின் ஒளிப்பதிவு ஓகே ரகமாக இருந்தாலும் ஒரே ஃப்ரேமை டைட்டில் கார்ட் முடியும்வரை வைப்பதெல்லாம் கண்வலியைக் கொடுக்கிறது. ஸ்ரீவிஜயின் இசை சுமார் ரகம். முன்னும்பின்னும் இல்லாத காட்சிகளை அவசர அவசரமாக காப்பி பேஸ்ட் செய்திருப்பார் போல எடிட்டர் ஜஸ்டின் ராய்! 'மதுரக்காரய்ங்க எல்லாம்..' வசனத்தை அதிகம் பேசிய அழகிரியே அரசியலில் இருந்து விலகி அஞ்சாறு வருஷம் ஆகுது பாஸு! இன்னமுமா அதை ட்ரெண்டுனு நம்புறீங்க?

'குள்ளநரிக்கூட்டம்' எடுத்த ஸ்ரீபாலாஜி இந்தப் படத்தின் இயக்குநர். அந்த நம்பிக்கையில் போய் உட்கார்ந்தால், 'அதெப்படி நீங்க நம்பலாம்?' என வைத்து வைத்து செய்கிறார். ஒன்றுமே இல்லாத கதையில் ஓட்டை ஒடசல்களாலான திரைக்கதையை ஒட்டவைத்து 'படம்' என போர்டு ஒட்டி தந்திருக்கிறார். சரி, குறைந்தபட்சம் லாஜிக்கிலாவது கவனம் செலுத்தியிருக்கலாம். நாயை வைத்து வரும் க்ளைமேக்ஸ் காட்சி எல்லாம்.... முடியல சாரே! 

படம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ரிலீஸுக்கு தயாராகிவிட்டதாம். நியாயமாகப் பார்த்தால் இருபதாண்டுகளுக்கு முன்பாகவே தயாராகி இருக்கவேண்டும்!   

அடுத்த கட்டுரைக்கு