Published:Updated:

`இருட்டு அறை’ இயக்குநர் பழசை மறந்திருக்கிறாரா?’ - ‘கஜினிகாந்த்’ விமர்சனம்

விகடன் விமர்சனக்குழு
`இருட்டு அறை’ இயக்குநர் பழசை மறந்திருக்கிறாரா?’ - ‘கஜினிகாந்த்’ விமர்சனம்
`இருட்டு அறை’ இயக்குநர் பழசை மறந்திருக்கிறாரா?’ - ‘கஜினிகாந்த்’ விமர்சனம்

`ஹர ஹர மகாதேவகி', `இருட்டு அறையில் முரட்டுக்குத்து' என இரண்டு அடல்ட் படங்களை கொடுத்த இயக்குநர் சன்தோஷ், இதில் ஃபேமிலி ஆடியன்ஸை திருப்தி செய்ய முயற்சி செய்திருக்கிறார்.

ந்திர தேசத்தில் நானியின் நடிப்பில் வெளியாகி முரட்டு ஹிட் அடித்த `பலே பலே மஹாதிவோய்' படத்தின் கோலிவுட் கலர் ஜெராக்ஸ்தான் இந்த `கஜினிகாந்த்'. ஜெராக்ஸ் கச்சிதமாய் விழுந்ததா, கரை அடித்ததான்னு சீக்கிரம் சொல்லிடுறோம். இல்லனா மறந்துவிடுவோம்...

ரஜினிகாந்தின் வெறித்தன ரசிகர் `ஆடுகளம்' நரேன். தன் மனைவியோடு `தர்மத்தின் தலைவன்' முதல்நாள் முதல் காட்சி பார்த்துக்கொண்டிருக்கையில், மனைவிக்கு பிரசவ வலி எடுக்கிறது. திரையில் ஞாபகமறதி ரஜினி குத்துப்பட்டு இறக்க, இங்கே `குவாகுவா' சத்தத்தோடு ஆர்யா பிறக்கிறார். ஆர்யாவுக்கு ரஜினிகாந்த் எனப் பெயர் வைக்க, கிட்டதட்ட தர்மத்தின் தலைவன் ரஜினியின் மறுபிறவியாகவே ஞாபகமறதி குறைபாட்டோடு வளர்கிறார். ஆறடி உயரம், அழகிய உருவம், ஆப்பிள் போல இருந்தாலும் ஞாபகமறதி பிரச்னையால் வரும் வரன்கள் மிரண்டு ஓடுகிறார்கள். ‘இனிமேல் எனக்கு நீங்க பெண்ணே பார்க்க வேண்டாம். நானும் யாரையும் பார்க்க மாட்டேன்’ என அப்பாவின் தலையில் அடித்து சத்தியம் செய்துவிட்டு, அந்தச் சத்தியத்தையும் மறந்துவிட்டு சாயீஷாவைக் கண்டதும் காதலில் விழுகிறார். சாயிஷாவிடமிருந்து தன் குறையை மறைத்து, சமாளித்து, நண்பர்கள், பெற்றோரையும் சேர்த்துக்கொண்டு `தில்லுமுல்லு' செய்கிறார். கடைசியில், சாயிஷாவை கரம் பிடித்தாரா என்பதுதான் இந்த `கஜினிகாந்த்' மறக்காமல் சொல்லும் கதை.

நீண்ட நாள்களுக்குப் பிறகு, சாக்லேட் பாய் ஆர்யா 'கம்பேக்' என்று சொல்லிக்கொள்ளும் அளவுக்கு படத்தில் `நடித்திருக்கிறார்'. அப்பாவித்தனமான கதாபாத்திரங்கள் ஆர்யாவுக்கு அல்வா சாப்பிடுவதுபோல் அசால்ட்டாகச் செய்துவிடுவார். அதிலும் இந்தக் கதாபாத்திரம் பால் அல்வா, ஜஸ்ட் லைக் தட் நடித்துக் கொடுத்திருக்கிறார். மறதியால் அவர் மொக்கை வாங்கும் இடங்களிலும் அதைச் சமாளிக்கும் இடங்களிலும் தியேட்டரே குலுங்கி அடங்குகிறது. 

வந்தனா எனும் க்யூட் பெண்ணாக, யாருமே கண்டதும் காதலில் விழும் அழகோடு சாயீஷா செம! அலட்டிக்கொள்ளாத நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். வழக்கமாக நடனத்தில் ஸ்கோர் செய்யும் சாயீஷா, இந்தப் படத்தில் நடிப்பிலும் ஸ்கோர் செய்திருக்கிறார்.  இனி சாயிஷாவின் கால்ஷீட் டைரி நிரம்பி வழியும். இனி வாரத்துக்கு ஒரு படம் வெளியாகி `லேடி விமல்' எனப் பெயரெடுக்க வாழ்த்துகிறோம்.

`ஹர ஹர மகாதேவகி', `இருட்டு அறையில் முரட்டுக்குத்து' என இரண்டு அடல்ட் படங்களை கொடுத்த இயக்குநர் சன்தோஷ், இதில் ஃபேமிலி ஆடியன்ஸை திருப்தி செய்ய முயற்சி செய்திருக்கிறார். அதை ஓரளவுக்கு சரியாகவும் செய்திருக்கிறார். என்ன, சில இடங்களில் வரும் இரட்டை அர்த்த வசனங்களையும் உருவகேலிகளையும் தவிர்த்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். இருட்டு அறையிலிருந்து வெளியே வாங்க பாஸ்!

சதீஷ், கருணாகரன், ராஜேந்திரன் என தனது முந்தைய படங்களில் நடித்த காமெடி நடிகர்களை இதிலும் நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர். சீனியர்கள் சம்பத், ஆடுகளம் நரேன், உமா பத்மநாபன், காளி வெங்கட்டும் கொடுக்கப்பட்ட ரோல்களில் கிச்சுக்கிச்சு மூட்டிச் செல்கிறார்கள். சில இடங்களில் அவர்கள் அடிக்கும் ஒன்லைன் காமெடிகள் நன்றாகவே இருக்கிறது. சதீஷ் தனது வழக்கமான பாடி லாங்வேஜ் மற்றும் ஒரே மாதிரியான கவுன்ட்டர்களால் சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். `நேத்து நைட், விஜயகாந்த் படம் பார்த்தியா', 'சுதாகர் படம் பார்த்தியா' வகை காமெடிகளை கொஞ்சம் ஓரமாகத் தூக்கிவைத்தால் நன்றாகயிருக்கும். முக்கியமாக, சினேகனை விட்ருங்க ப்ரோ பாவம்!

கலர்ஃபுல்லான ஒளிப்பதிவு, கச்சிதமான படத்தொகுப்பு எனப் படம் பளிச். ஆனால், இசைதான் கொஞ்சம்கூட ஈர்க்கவில்லை. பாடல் வரும்போதெல்லாம் எழுந்து பாப்கார்ன் வாங்க கிளம்பிவிடுகிறார்கள். ஆர்யாவின் ஜஸ்ட் லைக் தட் நடிப்பு இந்தப் படத்துக்கு உதவியிருந்தாலும், அதே ஜஸ்ட் லைக் தட் நடிப்புதான் படத்தின் மிக முக்கியமான எமோஷனல் காட்சிகளில் `கேட்'டைப் போடுகிறது. அந்த ப்ரீ க்ளைமேக்ஸ் காட்சியில் இன்னும் மெனக்கெட்டிருக்கலாமே ஆர்யா.

இரண்டாம் பாதியில் வரும் ஆள்மாறாட்ட பகுதி, நான் கடவுள் ராஜேந்திரன் சொல்லும் மெளனராகம் கதை, `A' ஃப்லிம் பை சன்தோஷ் என்ற எண்ட் கார்டு அப்படியே  U ஃப்லிம் பை சன்தோஷ்' என மாறுவது போன்ற குட்டி குட்டி விஷயங்களில் கவனம் செலுத்தியிருக்கும் இயக்குநர், தமிழுக்குத் தகுந்தாற்போல திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி, திரைக்கதையைக் கலகலப்பாக்கியிருக்கலாம். அதேபோல, ஆர்யா இன்னும் கொஞ்சம் இறங்கி ந(அ)டித்திருந்தால் ஆந்திராவில் அடித்த ஹிட்டை இங்கே சொல்லி அடித்திருக்கலாம். தமிழ் இளைஞர்களுக்கு இந்தக் காமெடியெல்லாம் பத்தாது கஜினிகாந்த். சிரிக்க மறந்துடுவாங்க...

மொத்தத்தில், மறதியை மையமாக வைத்த படமென்றாலும், ஃபேமிலி ஆடியன்ஸை மறக்காமல் நன்றாகவே சிரிக்க வைத்து அனுப்புகிறான் இந்த `கஜினிகாந்த்!’

அடுத்த கட்டுரைக்கு