Published:Updated:

வாடகை வீட்டில் இருப்பவர்கள் மற்றும் வீட்டு ஓனர்கள் கவனத்துக்கு..! - ‘கடிகார மனிதர்கள்’ விமர்சனம்

விகடன் விமர்சனக்குழு
வாடகை வீட்டில் இருப்பவர்கள் மற்றும் வீட்டு ஓனர்கள் கவனத்துக்கு..! - ‘கடிகார மனிதர்கள்’ விமர்சனம்
வாடகை வீட்டில் இருப்பவர்கள் மற்றும் வீட்டு ஓனர்கள் கவனத்துக்கு..! - ‘கடிகார மனிதர்கள்’ விமர்சனம்

‘இந்த உலகத்துல இரண்டே இரண்டு சாதிதான், ஒண்ணு வாடகை கொடுக்குற சாதி, இன்னொண்ணு வாடகை வாங்குற சாதி.’ இது இந்தப் படத்தில் வரும் ஒரு வசனம். அப்படி வாடகை கொடுக்கும் தொழிலாளிதான் இந்தக் ‘கடிகார மனிதர்க’ளில் ஒருவன். 

பிழைப்புத் தேடி கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்து, கடைகளுக்கு ரொட்டி சப்ளை செய்யும் தொழிலாளி கிஷோர். அவரின் மனைவி லதாராவ். இவர்களுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் என மூன்று பிள்ளைகள். குடியிருந்த வீட்டிலிருந்து திடுதிப்பென வெளியேற்றப்படுகிறார்கள். மினி லாரியில் பொருள்களையும் குடும்பத்தையும் அள்ளிப்போட்டுக்கொண்டு வாடகைக்கு வீடு தேடி சென்னையின் தெருக்களில் சுற்றத் தொடங்குகிறார் கிஷார். அவருக்கு ‘வீடு’ கிடைத்ததா இல்லையா என்பதே கதை.

சென்னையில் வாடகை வீட்டில் குடியிருப்பவர்களின் வாழ்க்கையை ஒரு சோறு பதமாகச் சொல்லியிருக்கும் இயக்குநர் வைகறை பாலனுக்கு முதலில் வாழ்த்துகள். எப்படியாவது முன்னேறிவிடலாம் என்ற எண்ணத்தில் சொந்த ஊர்களிலிருந்து நகரத்துக்கு வருபவர்களில் சிலருக்கு அந்தக் கனவு நனவாகிறது. ஆனால், நகரத்தின் வேகத்தில் தங்களின் இளமையைத் தொலைத்துவிட்டு சொந்தக் கிராமத்துக்கும் செல்ல முடியாமல் நகரத்திலும் வாழ முடியாமல் திகைத்து நிற்பவர்கள்தான் அதிகம். அவர்களின் அவஸ்தைகளைக் கிஷோர் குடும்பத்தின் வழியே உணர்த்தியிருக்கிறார் வைகறை பாலன். 

‘நீங்க கிறிஸ்டியனா, இந்துவா இருந்தா மட்டும்தான் வீடு’, 'நான்-வெஜ் சாப்பிடுறவங்களுக்கு வீடு கிடையாது...’ இப்படி வீடு தேடும்போது கிஷோருக்குக் கிடைக்கும் பதில்களின் வழியே சென்னையின் வாடகை வீடு தேடலில் உள்ள வலியை நமக்கு கடத்துகிறார் இயக்குநர். பல வீடுகளில் ஏறி இறங்கியபின், ‘நாலு பேருக்கு மேல ஓர் ஆள் இருந்தாகூட வீடு கிடையாது’ என்கிறார் வீட்டு ஓனர் பாலாசிங். ‘ஒரு பொண்ணு, ஒரு பையன், அப்புறம் இவங்க ரெண்டு பேர்னு மொத்தமே நாலு பேர்தான்’ என்று போகிறபோக்கில் புரோக்கர் சொல்லும் பொய்க்குத் தலையாட்டித் தொலைக்கிறார் கிஷோர். அந்தப் பொய்யைக் காப்பாற்ற, பாலாசிங்குக்குத் தெரியாமல் தன் கடைசி மகனை அந்த வீட்டுக்குள்ளேயே மறைத்து வைக்கிறார். ஒரு கட்டத்தில் இந்த உண்மை பாலாசிங்குக்கு தெரிந்ததும் அவர்களின் குடும்பம் என்ன ஆகிறது... என்று செல்கிறது மீதிக் கதை. 

கிஷோருக்கென்றே அளவெடுத்துத் தைத்தது போன்ற கதாபாத்திரம். ‘வீடு கிடைக்காமதான் பொருளை ஏத்திக்கிட்டு சுத்துறீங்களா’ என்று கேட்கும் மினிலாரி டிரைவரை சமாளிப்பது, தன் மகனை வீட்டு ஓனருக்குத் தெரியாமல் மறைக்கத் திண்டாடுவது, பள்ளியில் பரிசு வாங்கும் மகனுக்கு அருகில் இருக்க முடியவில்லையே என்று மருகுவது, காணாமல் போன மகனைத் தேடித் தவிப்பது, ‘நம்ம ஊருக்கே போயிடலாம்ங்க’ என்கிற மனைவியிடம், ‘அங்கப்போய் நான் என்ன பண்றது’ என விரக்தியில் கலங்குவது... என்று ‘பன்னு கடை மாறன்’ஆக மனிதர் வாழ்ந்திருக்கிறார். 

குறைந்த ஊதியத்தில் குடும்பத்தை நடத்தவும் முடியாமல் அதற்காகக் கணவனைத் திட்டவும் முடியாமல் கையறு நிலையில் தவிக்கும் ஏழைக் குடும்பத் தலைவியாக லதாராவ். இப்படி நடிக்கிற மனுஷியை ஏன் நிறைய படங்கள்ல பார்க்க முடியறதில்லை என்று நமக்குத் தோன்றவைக்கும் அளவுக்கு இயல்பாக நடித்திருக்கிறார். ‘சில வீட்டு ஓனர்கள் இப்படித்தான் இருப்பாங்க’ என்ற பிம்பத்தைக் கண்முன் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார் கடுகடு முகமும் சிடுசிடு பேச்சுமாக வரும் பாலாசிங். 

மற்றபடி கருணாகரன், பிரதீப் ஜோஸ், சிசர் மனோகர், ஷெரின், வாசு விக்ரம் எனப் பலர் இருக்கிறார்கள். சென்னையில் தங்கி சினிமாவில் நடிக்க முயற்சி செய்யும் கதாபாத்திரத்தில் பிரதீப் ஜோஸ். இதிலும் அவர் நடிக்க முயற்சி மட்டுமே செய்திருக்கிறார். ‘இவர் கண்டிப்பா தயாரிப்பாளராதான் இருப்பார். அவரோட ஆசைக்காக நடிக்க வெச்சிருக்காங்க’ என்று ரசிகர்கள் பேசிக்கொள்வதை திரையரங்கிலேயே கேட்க முடிகிறது. உங்களுக்கான கேரக்டர் இருந்தா நடிங்க பாஸ், நீங்களே உருவாக்கிக்காதீங்க.

நம் கைப்பிடித்து கதைக்குள் கூட்டிச்செல்கிறது சாம் சி.எஸ்ஸின் பின்னணி இசை. ஒரே டெம்ப்ளேட்டில் படத்தில் ஆங்காங்கே வரும் பாடல்கள் ஓகே ரகங்களே. நடுத்தர வர்க்க குடும்பங்களின் வீடுகள், தெருக்கள் என நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது உமா சங்கரின் ஒளிப்பதிவு. ஆனால், சென்னையின் பரபரப்பை லாங் ஷாட்டில் காட்டுகிறார்களே தவிர வேகம், கூட்டம்... எனச் சென்னையின் இயல்பை நெருங்கிச் சென்று உணர்த்துவது போன்ற காட்சிகள் வெகு குறைவு. அதனால் கதையுடன் ஒன்ற சிரமப்பட வேண்டியதாக உள்ளது. மற்றபடி உமா சங்கரின் ஒளிப்பதிவு கதைக்கு நியாயம் செய்துள்ளது. ஹரிசங்கர் இன்னும் ஷார்ப்பாக எடிட் செய்து படத்தின் வேகத்தை இன்னும் கூட்டியிருக்கலாம். ரியலா, செட்டா என்று தெரியாத அளவுக்கு அடுக்குமாடி குடியிருப்பு, பேக்கரி என்று உண்மைக்கு நெருக்கமான செட்களை வடிவமைத்துள்ளார் ஆர்ட் டைரக்டர் ராஜா. 

வாடகை வீட்டில் குடியிருக்கும் ஒரு குடும்பத்தின் வழியாக ஒட்டுமொத்த நகரவாசிகளின் வலியையும் சொல்ல முற்பட்டு இருக்கிறார் இயக்குநர். ஆனால், அதை இயல்பான காட்சிகளாகக் கடத்துவதில் தவறியிருக்கிறார். தவிர பழைய 500 ரூபாய் நோட்டுகள், ‘சைக்கிள் பந்தயம்-2014’ என்று வரும் பேனர்... இதன் மூலம் தாமதமாக ரிலீஸ் செய்யப்பட்ட படம் என்று வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. இயல்பான கதையோட்டத்தில் ‘சைக்கிள் பந்தயத்தில் வென்றால் வீடு’ என்று வரும் திடீர் அழைப்பு, பிரதீப் ஜோஸின் கேரக்டர்... போன்றவை கதையிலிருந்து விலகித் துருத்திக்கொண்டு தெரிகின்றன. ‘சென்னையில் உள்ள வீட்டு உரிமையாளர்கள் அனைவருமே இப்படித்தான்’ என்கிற பொத்தாம் பொதுவான விமர்சனமும் ஏற்றுக்கொள்ள முடியாதது. 

குடும்பத் தேவைகளுக்காக உழைத்துக்கொண்டே இருக்கும் மனிதர்களையும் அவர்களின் சொந்த வீட்டுக் கனவையும் சொன்ன விதத்தில் இந்தக் ‘கடிகார மனிதர்கள்’ நம் அனைவருக்குமான சினிமா. வாழ்த்துகள்! 

அடுத்த கட்டுரைக்கு