Published:Updated:

டி.ராஜேந்தர் - சிம்புவுக்கு தம்பி ராமையா - உமாபதியின் சவால்! - 'மணியார் குடும்பம்' விமர்சனம்

விகடன் விமர்சனக்குழு
டி.ராஜேந்தர் - சிம்புவுக்கு தம்பி ராமையா - உமாபதியின் சவால்! - 'மணியார் குடும்பம்' விமர்சனம்
டி.ராஜேந்தர் - சிம்புவுக்கு தம்பி ராமையா - உமாபதியின் சவால்! - 'மணியார் குடும்பம்' விமர்சனம்

டி.ராஜேந்தர் - சிம்புவுக்கு தம்பி ராமையா - உமாபதியின் சவால்! - 'மணியார் குடும்பம்' விமர்சனம்

பரம்பரைச் சொத்து கரைந்தாலும் மரியாதை  குறையாமல் வாழ்கிறது `மணியார் குடும்பம்'. தாங்கள் இழந்த சொத்தை மீண்டும் சம்பாதிக்க ஒரு முயற்சி எடுக்கிறார்கள். முயற்சி கைகூடியதா, கைநழுவிப்போனதா என்பதுதான் படத்தின் ஒன்-லைன்.

குடும்பச் சொத்தை குதிரை ரேஸில் அழித்த நார்த்தங்காய் சாமி (தம்பி ராமையா) . மணியார் குடும்பத்தை வெகுளி குடும்பம் எனக் கூப்பிடும் அளவுக்கு வெகுளி. அவரது ஒரே மகன் குட்டி மணியார். வேலை வெட்டி இல்லாமல் கலர்கலராய் சொக்காய் போட்டுத் திரியும் வழக்கமான கிராமத்து ஹீரோ. அவருக்கு அந்த கிராமத்திலேயே வெளீரென இருக்கும் ஒரு முறைப்பெண். முறைப்பெண்ணின் கரம்பிடிக்க, பண அந்தஸ்தைக் காட்டி குறுக்கே நிற்கும் மாமா. `இந்தநாள் உன் டைரியில் குறிச்சு வெச்சிக்கோ' டைப்பில் மாமாவிடம் ஒரு சபதத்தைப் போட்டு சம்பாதிக்க புறப்படும் குட்டி மணி. டைரியில் குறித்துவைக்க சொன்னதுபோல் சாதித்துக் காட்டினாரா, இல்லையா. சாதனைக்கு முன் என்னனென்ன வேதனைகளை சந்தித்தாரென செல்கிறது திரைக்கதை. `பொன்ராம் ஜானர்' படங்களை ராப்பகலாய் பார்த்து ட்யூனாகி, `மணியார் குடும்ப'த்தை இறக்கி இயக்கியிருக்கிறார் தம்பி ராமையா. 

நாயகன் குட்டி மணியாராக உமாபதி ராமையா.  அட்டகாசமாய் நடனமாடுகிறார், ஆக்ரோஷமாய் சண்டை போடுகிறார், நடிப்பிலும் கவனம் செலுத்தினால், நல்ல எதிர்காலம் இருக்கிறது தம்பி மகன் ராமையா! எழுத்து, பாடல்கள், இசை, இயக்கம், நடிப்பு என இழுத்துப்போட்டு உழைத்திருக்கிறார் தம்பி ராமையா. சில இடங்களில் `எனக்கு நடிக்கத்தெரியும்' என்பது தெரிய நடித்திருப்பது மட்டும் நம்மை சோதிக்கிறது. நாயகியாக மிருதுளா முரளி. நடிக்க இடமே கொடுக்கவில்லை. பாடல்களுக்கும் ஒரு கிளாமர் காட்சிக்கும் மட்டும் வந்து தன் இருப்பை பதிவு செய்கிறார். ஜெயப்பிரகாஷ், விவேக் பிரசன்னா, பவன், `நான் கடவுள்' ராஜேந்திரன், சமுத்திரகனி, ராதாரவி, சிங்கம்புலி, சிங்கமுத்து, ராமர், டைகர் கார்டன் தங்கதுரை  என நட்சத்திரபட்டாளம் நீள்கிறது.

எளிமையான கதை, வண்ணமயமான ஃப்ளேவர், அரைவாசி காமெடி, கால்வாசி காதல், கால்வாசி ஆக்‌ஷன் என கலவையாக இருக்கிறது திரைக்கதை. அதேநேரம் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பது கணிக்ககூடிய அளவிலும் இருப்பதுதான் படத்தின் மிகப்பெரும் குறை. அரை மணி நேரத்திலேயே க்ளைமாக்ஸே இதுதான் என தெரிந்துவிடுகிறது. `பாட்டி சொல்லும் ஞாயிற்றுக்கிழமை கதையெல்லாம் இந்த கதைக்கு தேவைதானா' என சிந்திக்கவைத்துவிடுகிறது. முதல் பாதியில், ஒரு இயக்குநராக ‘அட பரவாயில்லையே’ என்று நிமிர்ந்து உட்காரவைக்கிற தம்பி ராமையா, இரண்டாம் பாதியில் ஏமாற்றிவிடுகிறார்.  

தம்பி ராமையாவின் இசையில் முதல் பாடல் ஓகே ரகம். மற்றவை பரவாயில்லை. பெண் கேட்டுப் போகும் காட்சியில் பின்னணி இசையில் கவனிக்க வைத்து, அதன்பிறகு காதுவலிக்க வைக்கிறார். பாடல் வரிகளில் `ஸ்லீப் ஸ்லீப் ஸ்லீப்... சீம சீம சீம'வை தவிர்த்திருக்கலாம். கேட்கும்போதே குபீர் சிரிப்பு வருகிறது. பி.கே.வர்மாவின் ஒளிப்பதிவுக்கு மணியார் குடும்பம் கடன்பட்டிருக்க வேண்டும். படத்தின் மிகப்பெரும் பலம் ஒளிப்பதிவு. முதற்பாதியில், படத்தொகுப்பில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். 

இசை முதல் இயக்கம் வரை எல்லா வேலைகளையும் டி.ஆர் செய்து, தன் மகன் சிம்புவை நடிக்க வைத்து ஒரு வெற்றி காம்போவை உருவாக்கினார். அதே போல் தம்பி ராமையாவும் தன் குடும்பத்திலிருந்து ஒரு மாஸ் ஹீரோவை உருவாக்க பல முயற்சிகளை செய்ய, அது ஓரளவு ஒர்க்-அவுட்டும் ஆகியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு