Published:Updated:

கன்னட சினிமாவில் முழுமையற்ற காதல்களின் முழுமையான தொகுப்பு! #KatheyonduShuruvagide

கார்த்தி
கன்னட சினிமாவில் முழுமையற்ற காதல்களின் முழுமையான தொகுப்பு! #KatheyonduShuruvagide
கன்னட சினிமாவில் முழுமையற்ற காதல்களின் முழுமையான தொகுப்பு! #KatheyonduShuruvagide

நாம் நம் வாழ்வில் எத்தனை கதைகள் கேட்டிருப்போம். நம் வாழ்க்கை சூழலில் நாம் எத்தனை கதைகளைக் கண்டிருப்போம். எல்லாக் கதைகளும் அதன் தன்மைக்கு ஏற்ப நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டேதான் இருக்கின்றன. சில கதைகள் முடிவுறாமல், திக்கற்று அப்படியே முறிந்த கிளையாய் நின்றுவிடுவதும் உண்டு. முடிவற்ற ஒவ்வொரு கதையும், நமக்கே தெரியாமல் நாம் அறியாத ஒரு தருணத்தில் ஏதோவொரு புள்ளியில் வேறொரு கதையின் ஆரம்பப் புள்ளியாகிவிடுகிறது. முழுமையற்ற காதல் கதைகளை வைத்து முழுமையான அனுபவத்தைத் தர முடியும் என நிரூபிக்கிறது கன்னட சினிமாவான கதெயொண்டு ஷுருவகிடே. #KatheyonduShuruvagide

கன்னட சினிமாவில் முழுமையற்ற காதல்களின் முழுமையான தொகுப்பு! #KatheyonduShuruvagideசொல்லிக்கொள்ளும்படியான எந்த சுவாரஸ்யமும் இல்லாமல், ரிசார்ட் ஒன்றை நடத்தி வருகிறார் தருண் (திக்னாத்). போதிய விருந்தினர்கள் இல்லாத சூழலில், இவரது ரிசார்ட்டை வாங்க சில கார்ப்பரேட்டுகள் காய் நகர்த்துகிறார்கள். ரிசார்ட்டைக் காப்பாற்ற வேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளாகிறார் தருண். இத்தகைய சூழலில் தான்யா (பூஜா தேவரியா ) என்னும் நபரை தன் ரிசார்ட்டுக்கு அழைத்து வர பயணப்படுகிறார். 

எல்லாவற்றையும் இழந்து, வாழ்வின் மீதான பிடிப்பின்றி ரிசார்ட்டுக்கு வரும் தான்யா; பிடித்த வேலைக்காக, காதலை இழந்த தருண். இவர்கள் இருவருக்குள்ளும் நடக்கும் உரையாடல்களும், இவர்கள் சார்ந்திருக்கும் மனிதர்கள் மூலம் வெளிப்படும் நேசமும்தான் படத்தின் கதை. கதெயொண்டு ஷுருவகிடே என்றால் கன்னடத்தில் ஒரு கதை ஆரம்பமாகிறது என்று அர்த்தமாம். ஓர் ஓடாத ரிசார்ட் அங்கு வரும் ஒரு பெண், அவர்களுக்குள் ஏற்படும் காதல் எனச் சில மாதங்களுக்கு முன்னர் வெளியான வினித்தின் அரவிந்தன்டே அதிதிகள் படம் நினைவுக்கு வந்தாலும், இந்தப் படம் பல விஷயங்களில் தனித்துத் தெரிகிறது. 

வாழ்க்கைல எப்பவும் ஒண்ண விட ஒண்ணு பெட்டராத்தான் இருக்கும். அதை நோக்கி போய்க்கிட்டே இருந்தா, நிம்மதியே இருக்காது என்பதுதான் இயக்குநர் மகேந்திரனின் ஜானி சொல்லும் பாடம். உங்களை விட்டு ஒண்ணு போயிடுச்சுன்னா, அடுத்து வர்றது அதைவிட பெட்டராத்தான் இருக்கும்னு, அதை நம்பி ஏத்துக்கோ என்கிறது சென்னா ஹெக்டே இயக்கியிருக்கும் கதெயொண்டு ஷுருவகிடே.

அமெரிக்க இயக்குநர் ரிச்சர்டு லிங்க்லேட்டரின் பிஃபோர் சன்ரைஸ் Before Sunrise டிரையாலஜி படங்களில், இருவருக்குள்ளே நிகழும் காதலும், அது சார்ந்த நிகழ்வுகளும், அதை நகர்த்தும் பயணமும் அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். கன்னட மொழி சினிமாவில் இப்படியான காட்சிகளைப் பார்ப்பது நெகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு சண்டைக்காட்சி இல்லை, எந்தவிதமான கமெர்ஷியல் பாடல்களோ பஞ்ச் வசனங்களோ இல்லை சிறிய நீரோடையில் அழகாய் நகரும் இலை போல், பயணிக்கிறது திரைக்கதை.

கன்னட சினிமாவில் முழுமையற்ற காதல்களின் முழுமையான தொகுப்பு! #KatheyonduShuruvagideபடத்தில் வரும் ஒவ்வொரு துணைக் கதாபாத்திரமும் Heartsஐ அள்ளுகிறது. ஹோட்டல் ரிசப்ஷனிஷ்ட் ஸ்வர்னாவை, ஒன் சைடு ஆக காதலிக்கும் பெட்ரோ (அஷ்வின்). துபாய்க்கு வேலைக்குச் சென்று பெரிய Janitor ஆவேன் என தவறுதலாக ஆங்கிலம் பேசி படம் முழுக்க சிரிக்க வைக்கிறார். ஒருவனுக்கு ஆங்கிலம் தெரியாமல் இருப்பது அவ்வளவு பெரிய பிழை இல்லை என்பது வேறு. ஏனெனில் மற்றொரு காட்சியில் வட இந்தியாவில் வரும் தான்யா, கன்னடம் பேசுவதற்கான லாஜிக்கையும் சேர்த்திருப்பார்கள். துபாய் மோகம் கேரளக் கரையோரங்களிலிருந்து கன்னடக் கரைகளுக்கும் வந்துவிட்டது என்பதை ஞாபகப்படுத்துகிறது இத்திரைப்படம்.

புதுப்புது அர்த்தங்கள் படத்தில் சில நிமிடங்களே வந்தாலும் பூர்ணம் விஸ்வநாதனும், சௌக்கார் ஜானகியும் வயதான ஜோடியாக அசத்தியிருப்பார்கள். அவ்வளவு வயதான ஜோடி இல்லை, அதே போல் பண்ணையாரும் பத்மினியும் படத்தில் வருவது போல் படம் முழுக்க வரும் கதாபாத்திரமும் இல்லை. ஆனால், அவை இரண்டைவிடவும் அழகாகவும் யதார்த்தமாகவும் இருக்கிறது ஷங்கர் ராதா தம்பதியாக வரும் பாபு ஹிரன்னையா, அருணா பாலாராஜின் காட்சிகள். முறிந்த காதல், மென்சோகம் என எல்லாவற்றையும் தன்னகத்தே கொண்ட ஒரு பாத்திரப் படைப்பு. அதிலும் அருணா பாலாராஜ் சொல்லும் அந்த முதல் காதல் கதை வேற லெவல்!!! 

கன்னட சினிமாவில் முழுமையற்ற காதல்களின் முழுமையான தொகுப்பு! #KatheyonduShuruvagide``அது ஏன், ஒவ்வொரு முறையும் ஆண்கள் செய்யும் தவறுகளுக்கு நாங்கள் பொறுப்பேற்க வேண்டும். உங்களை நல்வழிப்படுத்தி, திருந்த வாய்ப்பு கொடுத்து நீங்கள் செய்யும் எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்ளதான் எங்களை உருவாக்கியிருக்கிறார்களா? என பூஜா தேவரியா கேட்கும் கேள்வி ஆண்களின் கைத்தட்டல்களையும் பெறுகிறது. அதுவும் பூஜாவுக்கு இது முதல் கன்னடத் திரைப்படம். வாழ்த்துகள்!
 

காதலும் காதல் நிமித்தமுமாக இருக்கும் படத்துக்குத் தேவையான இடங்கள், லைட்டிங், செட் எனப் பார்த்துப் பார்த்து எடுத்திருக்கிறார்கள். ஸ்ரீராஜ் ரவீந்திரனின் ஒளிப்பதிவுக்கு மெலடிகளால் இனிமை சேர்க்கிறார் இசையமைப்பாளர் சச்சின் வாரியர்.

பவன் குமாரின் லூசியா (2013), ராம் ரெட்டியின் திதி (2016) என அறிமுக இயக்குநர்களின் வரிசையில் கதெயொண்டு ஷுருவகிடே படத்தின் இயக்குநர் சென்னா ஹெக்டேவும் தனெக்கென ஓர் இடத்தைப் பதிவு செய்கிறார்.

உங்கள் அன்புக்குரியவர் ஏதோவொரு வேலையில் மூழ்கி இருக்கும் போது, அவரை பின்னாலிருந்து கட்டிப்பிடித்து ஆச்சர்யப்படுத்தி இருக்கிறீர்களா?. அப்படி ஆச்சர்யபடுத்துகிறது இந்தக் கதெயொண்டு ஷுருவகிடே.