Published:Updated:

``தன் ஆயுளைத் தமிழுக்காக, தமிழருக்காகத் தாங்கிநின்ற தலைவர்!’’ - ராஜேஷ்

``தன் ஆயுளைத் தமிழுக்காக, தமிழருக்காகத் தாங்கிநின்ற தலைவர்!’’ - ராஜேஷ்
``தன் ஆயுளைத் தமிழுக்காக, தமிழருக்காகத் தாங்கிநின்ற தலைவர்!’’ - ராஜேஷ்

முன்னாள் முதல்வரும் தி.மு.க தலைவருமான மு.கருணாநிதி உடனான தன் நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார் நடிகர் ராஜேஷ்.

``கலைஞரின் குடும்பத்தினரைப் பொறுத்தவரை எல்லோருக்குமே ஆயுள் கெட்டி எனச் சொல்லலாம். கலைஞர் அவர்களுடைய சகோதரி இறக்கும்போது 97 வயது. தன் தவறை உடனே திருத்திக்கொள்ளும் தட்சிணாமூர்த்தி பற்றிப் பேச எவ்வளவோ இருக்கிறது!'' - நிறுத்தி நிதானமாகப் பேசுகிறார் நடிகர் ராஜேஷ்.

``எங்க மாமனார் குடும்பம் முழுக்க திராவிடர் கழகத்தைச் சார்ந்தவர்கள். 1944-லிருந்து கலைஞர் எங்க குடும்பத்துக்கு நெருக்கமானார். நான் அவரை முதன்முதலில் பார்த்தது, 1962-ம் ஆண்டு தேர்தல் முடிந்த பிறகுதான். மதுரை மாவட்டம் சின்னமனூருக்கு அவரும் எஸ்.எஸ்.ராஜேந்திரனும் மலைச்சாமி தேவர் வீட்டுக்கு வந்திருந்தாங்க. மலைச்சாமி வீட்டில் இல்லை. அவர் வருவதற்கு அரைமணி நேரம் ஆனது. அந்த அரைமணி நேரமும் கலைஞரையே பார்த்துக்கிட்டு இருந்தேன். அப்போ அவருக்கு வயசு 37 இருக்கும். எனக்கு 12 வயது.

1971-ம் ஆண்டு அவர் முதல்வர் ஆனதும் எனக்கு வாடகைக்கு வீடு வேணும்னு கேட்டு போய் நின்னேன். சென்னை, புரசைவாக்கத்தில் இரண்டு மாடிக்கட்டடத்தில் ஒரு வீட்டை 85 ரூபாய்க்கு வாடகைக்கு ஒதுக்கிக்கொடுத்தார். அப்போது, 'ஒரு மாலை வாங்கிட்டுப் போய் கலைஞரைப் பார்'னு என் மாமா சொன்னார். இப்போ இருக்கிற மாதிரியெல்லாம் கோபாலபுரத்தில் அப்போது கூட்டம் ஆர்டராக இருக்காது. சினிமா நடிகரைப் பார்க்கணும்னா, கூட்டத்தில் நுழைந்துபோய் பார்ப்போம் இல்லையா... அது மாதிரிதான் அவரைப் பார்ப்பாங்க. அவர் படிக்கட்டில் இறங்கிக்கொண்டிருக்கும்போதே பேசிக்கிட்டே வருவார். நான் வீட்டுக்கான லெட்டரைக் கொண்டுப்போய் அவர்கிட்ட கொடுத்தேன். வாங்கிக்கிட்டார். 'கண்டிப்பா அந்த லெட்டர் குப்பைத்தொட்டிக்குத்தான் போகும்'னு சொன்னார் என் மாமா. ஆனால், கலைஞர் எனக்கு 15 நாள்களில் வீடு ஒதுக்கிக் கொடுத்துட்டார். நான் நடிகர் ஆனதும் மறுபடியும் அவருக்கு என்னை ஞாபகப்படுத்தினேன். பிறகு, அவர் முதல்வர் ஆனதும் ஞாபகப்படுத்தினேன். அடுத்து ஒருமுறை என்னைப் பற்றிச் சொல்லப்போகும்போது, `நீங்க முன்ன ஒருமுறை சொல்லியிருக்கீங்க'னு சொன்னார். அது அவருடைய நினைவாற்றலுக்கான சான்றாக நினைக்கிறேன்!'' 

நல்ல நட்பில் இருக்கும் எல்லோருடைய கல்யாணத்திலும் முதல் ஆளா கலந்துக்குவார். என் மாமனாருடைய கல்யாணத்துக்கு அவரால் வர முடியல. என் கல்யாணத்தில் கலந்துக்கிட்டார். என்னுடைய மகளுடைய கல்யாணத்திலும் கலந்துக்கிட்டார். தன் பதினாறு வயதில் வீட்டைவிட்டு வெளியில் வந்தவர். முதலில் புரட்சி செய்தது அவருடைய குடும்பத்தில்தான். நாதஸ்வரம் வாசிக்கும் குடும்பத் தொழிலைத் தூக்கியெறிந்தார். அதற்குப் பிறகான அவரின் வாழ்க்கைதான் பெரும் போராட்டமாக இருந்தது. அப்போதே, பத்திரிகை, அரசியல், மேடைப் பேச்சு, புத்தகம் எழுதுவது, சினிமா... என ஐந்து பவர்ஃபுல் மீடியாவைக் கையில் வைத்திருந்தார். தி.மு.க-வில் யாரும் அப்படி இல்லை. அப்படிப்பட்ட ஆள்களையும் பார்க்க முடியாது. 1944-ல் கையெழுத்துப் பத்திரிகை ஆரம்பித்தது முதல் இப்போது வரையான இந்த 70 ஆண்டுகளில் அவர் ஓய்வெடுத்து நாங்கள் அறியவில்லை. 1944-ல் புதுக்கவிதை எழுத ஆரம்பித்தவர் கலைஞர். அதில் சிலவற்றை மறக்கவே முடியாது.

 "கால்கள் ஓடுகின்றன - ஆனால் 

பரிசு வாங்குவதோ கைகள்.

கைகள் விளையாடுது - ஆனால் 

கழுத்து மெடல் வாங்குது." - இப்படிப் பல! 

ஒருமுறை எம்.ஆர்.ராதாவிடம் கம்யூனிஸ்ட் தோழர்கள், `கலைஞருக்கும் அண்ணாவுக்கும் என்ன வித்தியாசம்'னு கேட்டாங்களாம். அதற்கு எம்.ஆர்.ராதா, `கலைஞர் புத்திசாலிடா, அண்ணா அறிவாளிடா'னு சொன்னாராம்'' என்றவர் தொடர்கிறார். 

''அவர் முதல்வராக இருந்தாலும் சரி, இல்லைனாலும் சரி... மூன்றே ரிங் தொலைபேசி அழைப்பில் அவரைப் பார்க்க அப்பாயின்மென்ட் வாங்க முடியும். சீனா போயிட்டு திரும்பி வரும்போது மாசே துங் எம்பளம் ஒண்ணு கலைஞருக்காக வாங்கிட்டு வந்தேன். அதை தன்னுடைய சேருக்குப் பக்கத்துல இரண்டு, மூன்று மாதங்கள் வைத்திருந்தார். யாராவது கேட்டால், 'ராஜேஷ் வாங்கிட்டு வந்தார்'னு சொல்லிக்கிட்டே இருப்பார். ஒரு பெரியவர் அமெரிக்காவிலிருந்து வரும்போது முழுக்கை வெள்ளை சட்டையைக் கலைஞருக்காக வாங்கிட்டு வந்தார். அப்போ அவர் முதல்வர். அப்புறமா போட்டுப் பார்த்துக்கலாம்னு நினைக்கலை கலைஞர். அந்தச் சட்டையைக் கையோட வாங்கி, போட்டுப் பார்த்து 'நல்லா இருக்குய்யா!'னு சொன்னார். எழுத்தாளர் ஒருவர் கலைஞரின் மூட்டு வலிக்காகத் தைலம் வாங்கிட்டு வந்தாராம். கையில கொடுத்ததுமே, அவருக்கு முன்னாடியே அதைத் தடவிக்கிட்டார் கலைஞர். 

`போர்கால அடிப்படையில் நடவடிக்கை' என்பது ஜூலியர் சீசர் சொன்னது. மரப்பாலம் கட்டுவதற்காக அப்படிச் சொல்வார். இந்த வார்த்தைகளை அடிக்கடி சொல்வார் கலைஞர். ஒருமுறை நான் அவரை சந்திக்க நினைத்தபோது, அவருக்கு உடல்நிலை சரியில்லை. முதல் நாள் இரவு எனக்கு போன் வந்தது. 'கலைஞருக்கு உடல்நலம் சரியில்லை. உங்களுக்குப் பிறகு யாருக்கும் அப்பாயின்மென்ட் கொடுக்கலை'னு சொல்லச் சொல்லியிருக்கார். இப்படி என்னை அழைத்துச் சொல்ல வேண்டிய அவசியம் என்ன... ஆனாலும், மற்றவர்களுக்கு மரியாதை கொடுத்தார். 1947-லிருந்து அவர் பள்ளிக்கூடத்தில் வாங்கிய பரிசு முதல் அதற்குப் பிறகான பரிசுகள் வரை... அத்தனையையும் பத்திரமாக வைத்திருக்கிறார். அவரைப் பார்த்துதான் நானே பழசையெல்லாம் பாதுகாக்க ஆரம்பிச்சேன்.

1991-ல் முரசொலி ஆபீஸ் தாக்கப்பட்டதை அடுத்து, அவரைச் சந்திக்கப்போனேன். 'நிறைய சேதாரம் ஆகியிருக்குமே!'னு கேட்டேன். 'மைக்ரோ ஃபைல் எடுத்து வெச்சிருக்கேன்'னு சொன்னார். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எப்படியிருக்க வேண்டும் என்பதை அவரிடம் கற்றுக்கொண்டேன். ஜெயலலிதா அவர்கள் முதல்வர் ஆன பிறகு, செய்தித்தாளில் அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்து சொல்லியிருந்தேன். ஒரு நிகழ்ச்சியில் கலைஞரைச் சந்தித்தபோது, 'பாசப் பயணம் தொடருதோ'னு கமென்ட் அடித்தார். சிறிய கட்டத்துக்குள்ள இருந்த செய்தியைக்கூட படிச்சிருக்காருனு தெரிந்து ஆச்சர்யப்பட்டேன். என் 15 வயது வரை எனக்குத் திக்குவாய். அப்போது கலைஞரின் 'மனோகரா', 'பராசக்தி' படங்களின் வசனங்களைத்தான் சத்தமாகப் பேசிப் பார்ப்பேன். பிறகுதான் எனக்கு திக்குவாய் சரியானது. அந்த வகையில் கலைஞருக்கும் சிவாஜிக்கும் எப்போதுமே நான் நன்றிக்கடன் பட்டிருக்கேன். 

அவருடைய நகைச்சுவை உணர்வை யாராலும் அடிச்சுக்க முடியது. முதன்முதலில் காவேரி மருத்துவமனைக்குப் போனபோதுகூட, 'இங்கே தண்ணி கிடைக்குமாயா?'னு கேட்டிருக்கார்.

பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு, இத்தனை வருடங்கள் தொடர்ந்து எழுதியது வரலாற்றில் யாருமே இல்லை. பணம், புகழ், அதிகாரம், சமூக அங்கீகாரம் இந்த நான்கையும் அனுபவித்து, குடும்பத்தையும் அரவணைத்து... யாரால் இப்படி இருக்க முடியும்? 'வாழ்க்கையே போராட்டம். போராட்டமே என் வாழ்க்கை' என்றவர் அவர். எதையும் தாங்கும் இதயம் அவருடையது. தன் ஆயுளை தமிழுக்காகவும் தமிழர்களுக்காகவும் தாங்கி நின்றவர் தட்சிணாமூர்த்தி எனும் கலைஞர் கருணாநிதி. அந்தத் தட்சிணாமூர்த்தியின் தரிசனம் பெற்றவர்கள் எல்லாம் பாக்கியசாலிகள்!'' என்று முடிக்கிறார் ராஜேஷ். 

அடுத்த கட்டுரைக்கு