Published:Updated:

கே.பி.சுந்தராம்பாள் மறுத்தார்; கருணாநிதி எழுதினார்... ‘பூம்புகார்’ படத்தில் என்ன நடந்தது?

பகுதிநேர சினிமாக்காரர் ஒருவர் இன்றளவும் சினிமாத்துறையில் அவர்செய்த சாதனைகளுக்காகப் போற்றப்படுகிறார் என்றால் அவர் `கலைஞர் கருணாநிதி'யாக மட்டுமே இருக்கமுடியும். தொண்டர்கள், திமுகவில் ஆழமாகக் காலூன்ற கருணாநிதியின் வசனங்களும் ஒரு காரணம்.

கே.பி.சுந்தராம்பாள் மறுத்தார்; கருணாநிதி எழுதினார்... ‘பூம்புகார்’ படத்தில் என்ன நடந்தது?
கே.பி.சுந்தராம்பாள் மறுத்தார்; கருணாநிதி எழுதினார்... ‘பூம்புகார்’ படத்தில் என்ன நடந்தது?

``பொறுத்ததுபோதும்... பொங்கி எழு" என்று அவர் மனோகராவில் எழுதிய வரிகளால் பொங்கி எழுந்த ரசிகர்கள் பலர். இன்று பெரிய நடிகர்களின் கால்ஷீட்டுக்காகத் தயாரிப்பாளர்கள் காத்திருக்கிறார்கள். ஆனால் அன்றோ, பெரிய நடிகர்களே வசனகர்த்தாவான கருணாநிதியின் கால்ஷீட்டுக்குக் காத்திருந்தார்கள் என்பது வரலாறு. அவரின் வசனங்களுக்காகவே படங்கள் ஓடின. தமிழகமெங்கும் அவர் வசனங்களே பேசப்பட்டன. பாடல்களைப்போலவே, இவரின் தீப்பொறி பறக்கும் வசனங்கள், இசைத்தட்டுகளாக வெளியாயின. கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் என 75-க்கும் மேற்பட்ட படங்களில் எழுதியுள்ளார் கருணாநிதி. சட்டமன்ற உறுப்பினராக அவரின் வயது 60 தான். ஆனால், சினிமாவில் அவருக்கு வயது 64. 

``கலைஞர் அவர்கள் வசனம் எழுதும் காகிதங்களிலேயே, எப்படியெல்லாம் ஷாட் வைக்க வேண்டும் என்பதைக்கூட எழுதியிருப்பார். இதைவைத்து அவருக்குள் இருக்கும் இயக்குநரைப் பற்றி நான் தெரிந்துகொண்டேன்" என்று நடிகர் கமல்ஹாசன் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். கலைஞர் முதன்முதலில் எழுதிய நாடகம் `பழனியப்பன்'. 1944-ம் ஆண்டு திருவாரூர் பேபி டாக்கீஸில் அரங்கேற்றம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து பல நாடகங்களை அனல்பறக்கும் அரசியல் வசனங்களோடு அரங்கேற்றினார் கருணாநிதி. அவர் எழுதிய `தூக்குமேடை' என்ற நாடகத்தைப் பார்த்த பின்பு அவருக்கு `கலைஞர்' என்ற பட்டத்தை வழங்கினார் எம்.ஆர்.ராதா. 1947-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் முன்னணி வேடத்தில் நடித்த `ராஜ குமாரி’ படத்தில்தான் கருணாநிதி முதன்முதலில் வசனம் எழுதினார். அவர் கடைசியாக வசனம் எழுதிய திரைப்படம் 2011-ம் ஆண்டு வெளிவந்த `பொன்னர் சங்கர்’. அதன்பிறகும், 2016-ம் ஆண்டு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான `இராமானுஜர்' தொடருக்கு தொடர்ந்து வசனம் எழுதினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. எம்.ஜி.ஆருக்கு `மந்திரி குமாரி’, `மலைக்கள்ளன்’ சிவாஜிக்கு `பராசக்தி’, `மனோகரா’ என இருவருக்கும் பல வெற்றிப் படங்களை அளித்தவர் கருணாநிதி. 

`பராசக்தி’யில் ``கல்யாணியைக் கஞ்சிக்கில்லாமல் அலையவிட்டது யார் குற்றம்? விதியின் குற்றமா? அல்லது விதியின் பெயரைச் சொல்லி வயிறு வளர்க்கும் வீணர்களின் குற்றமா? பணம் பறிக்கும் கொள்ளைக் கூட்டத்தை வளரவிட்டது யார் குற்றம்? பஞ்சத்தின் குற்றமா? அல்லது பஞ்சத்தை மஞ்சத்திற்கு வரவழைக்கும் வஞ்சகர்களின் குற்றமா? கடவுள் பெயரால் காம லீலைகள் நடத்தும் போலிப் பூசாரிகளை நாட்டிலே நடமாட விட்டது யார் குற்றம்? கடவுளின் குற்றமா? அல்லது கடவுளின் பெயரைச் சொல்லி காலட்சேபம் நடத்தும் கயவர்களின் குற்றமா? இக்குற்றங்கள் களையப்படும் வரை குணசேகரன்களும் கல்யாணிகளும் குறையப்போவதில்லை" என்று அவர் அடுக்கிய பகுத்தறிவு கேள்விகளை எழுதியபோது அவருக்கு வயது 28. அந்த வசனங்களின் தற்போதைய வயது 66. ஆனால், கருணாநிதி எழுதி, சிவாஜி கணேசன் பேசி நடித்த அந்த ஒரு நீதிமன்றக் காட்சிக்கு இன்றுள்ள இளைஞர்களும் ரசிகர்களே! 

அனல் பறக்கும் வசனங்கள் ஒருபுறம் இருக்க நகைச்சுவை வசனங்களிலும் சொல்லி அடித்திருக்கிறார் கருணாநிதி. உதாரணமாகப் `பராசக்தி’ படத்தில் வரும் ஒரு காட்சி...

சாலையோரமாகப் படுத்திருப்பார் சிவாஜி கணேசன் அவரை எழுப்பி போலீஸ் விசாரிப்பதுபோல ஒரு காட்சி...

போலீஸ்: சோமாறி எழுந்திரிடா... (சிவாஜி எழுந்த பின்பு) ஏய் என்ன முழிக்கிற?

சிவாஜி கணேசன்: தூங்குனவன எழுப்பினா முழிக்காம என்ன பண்றது...

போலீஸ்: நீ பிக்பாக்கெட்டு தானே?

சிவாஜி கணேசன்: இல்ல... எம்ட்டி பாக்கெட் ... என்று பேன்ட்டிலிருந்த பாக்கெட்டுகளை வெளியில் எடுத்துக்காட்டுவார்.

வசனங்களைத் தாண்டி 20க்கும் மேற்பட்ட திரையிசை பாடல்களையும் எழுதியுள்ளார் கருணாநிதி. `பராசக்தி’யில் ``கா... கா... கா...", ’மறக்க முடியுமா’ படத்தில் ``காகித ஓடம்...", `மந்திரி குமாரி’யில் ``வாராய் நீ வாராய்", `காவலுக்குக் கெட்டிக்காரன்’ படத்தில் ``காவலுக்குக் கெட்டிக்காரன் இந்தக் காக்கிச் சட்டைக்காரன்" ஆகிய பாடல்கள் குறிப்பிடத்தக்கவை. `பூம்புகார்’ படத்தில் கருணாநிதி எழுதிய பாடல் வரி ஒன்றை, கே.பி.சுந்தராம்பாள் பாட மாட்டேன் எனச் சொல்லிவிட்டார். அந்த வரி...

`அன்று கொல்லும் அரசின் ஆணை வென்றுவிட்டது,

நின்று கொல்லும் தெய்வம் எங்கே சென்றுவிட்டது?’

 ``தெய்வம் எங்கே சென்றுவிட்டது எனக் கடவுளையே கேள்வி கேட்கும் பாடலை நான் பாட மாட்டேன்'' எனச் சொல்லிவிட்டார் கே.பி.சுந்தராம்பாள். உடனே அந்த வரியை ``நின்று கொல்லும் தெய்வம் இங்கே வந்துவிட்டது’’ என மாற்றினார் கருணாநிதி. `தெய்வம் வந்துவிட்டது' எனச் சொன்னதில் சுந்தராம்பாளுக்கு மகிழ்ச்சி. கண்ணகியை `தெய்வம்' எனச் சொல்லிவிட்டதில் கலைஞருக்கும் மகிழ்ச்சி. இவ்வாறு வார்த்தைகளில் நொடியில் மாற்றம் செய்யும் ஆற்றல் பெற்றவர் கருணாநிதி.

கருணாநிதி ஒரு முழுநேர சினிமாக்காரர் அல்லர். கட்சிப் பணி, இலக்கியப் பணி, அரசுப் பணி எனத் தன் வாழ்க்கையைப் பல பகுதிகளாகப் பிரித்துக்கொண்டவர், அதில் ஒரு பகுதியை சினிமாவுக்காக ஒதுக்கினார். ஒதுக்கிய ஒரு பகுதியிலேயே, பெரும்பகுதி ரசிகர்களைக் கூரிய வசனங்களால் தன் வசப்படுத்தினார். பகுதிநேர சினிமாக்காரர் ஒருவர் இன்றளவும் சினிமாத்துறையில் அவர்செய்த சாதனைகளுக்காகப் போற்றப்படுகிறார் என்றால் அவர் `கலைஞர் கருணாநிதி'யாக மட்டுமே இருக்கமுடியும். தொண்டர்கள், தி.மு.க-வில் ஆழமாகக் காலூன்ற கருணாநிதியின் வசனங்களும் ஒரு காரணம். சமூக நீதிகளைச் சாட்டையாய் சுழற்றின இந்தச் சாணக்கியனின் வரிகள். கலைஞரின் பேனாவுக்கு பயந்தவர்கள் பலருண்டு. இவர் எழுதினால் சமூகம் சீராகும். இவர் எழுதியதே இன்னும் பல ஆண்டுகளுக்கு இந்தச் சமூகத்தை சீர்திருத்தும்.