Published:Updated:

''உங்கள் உப்பு என் உழைப்புக்குத்தானே தவிர என் உடலுக்கில்லை' - கருணாநிதியின் பெண் கதாபாத்திர வசனங்கள் #MissUKarunanidhi

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
''உங்கள் உப்பு என் உழைப்புக்குத்தானே தவிர என் உடலுக்கில்லை' -  கருணாநிதியின் பெண் கதாபாத்திர வசனங்கள் #MissUKarunanidhi
''உங்கள் உப்பு என் உழைப்புக்குத்தானே தவிர என் உடலுக்கில்லை' - கருணாநிதியின் பெண் கதாபாத்திர வசனங்கள் #MissUKarunanidhi

ஆனால், கலைஞரின் இந்தக் கதாநாயகி, கணவனை அதே மலையுச்சியிலிருந்து தள்ளிவிட்டு, நாட்டையும் மன்னனையும் காப்பாற்றுகிறாள்.

திரைத்துறைக்குக் கலைஞரின் பேனா தந்த கொடைகள், ராஜகுமாரி (1947) முதல் பொன்னர் சங்கர் (2011) வரை நீண்ட வரலாறு உண்டு. `பூம்புகார்' நாயகி கண்ணகியில் தொடங்கி, `பொன்னர் சங்கர்' நாயகிகள் முத்தாயி - பவளாயி வரை பெண் கதாபாத்திரங்களை, கலைஞர் கருணாநிதியின் பேனா தைரியச் சித்திரங்களாகவே தீட்டியிருக்கும். `யாகாவாராயினும் நா காக்க' என மன்னனையும் எதிர்த்து நிற்கும்; குற்றம் செய்தது உடன்பிறந்த அண்ணன் என்றாலும் கூண்டில் ஏற்றும். இதோ, அவர் படைத்த சில பெண் கதாபாத்திரங்கள் உங்கள் முன் உலா வருகிறார்கள்.

`கண்ணகி' விஜயகுமாரி

 ``நீ யார் நம்புவதற்கு 

உன்னை யார் நம்பச் சொன்னது,  உன் மீது வழக்குரைக்க வந்தவள் நான்.

குற்றவாளி நீ.

தீர்ப்பு அளிக்கும் உரிமை உன் கையில் இல்லை'' என நெடுஞ்செழியன் பாண்டியனை நோக்கிச் சீறும் கண்ணகி, பாண்டிய மன்னன் தலைகவிழ்ந்து நிற்கையில் ``தமிழகம் சிரிக்கிறது பாண்டியா நீ தலைகுனிந்து நிற்பதைப் பார்த்து. தமிழ்நாட்டு மறைநூல் திருக்குறள் கேலி பேசுகிறது பாண்டியா நீ வழங்கிய நீதி கேட்டு'' என்கிறபோது, கணவனை இழந்த துக்கத்திலும் கண்ணகியைக் கண்ணீராக அல்ல, கனலாகக் காட்சிப்படுத்துகிறது கலைஞரின் வசனங்கள். 

`பராசக்தி' கல்யாணி

தான் வேலைப் பார்க்கும் வீட்டு முதலாளி, கல்யாணியை ஆசை நாயகியாக்க முயல்வார். அதற்குக் கல்யாணி உடன்படாததால், `என் உப்பைச் சாப்பிட்டுவிட்டு' என்று வீட்டு முதலாளி கோபமாகச் சொல்வார். அதற்கு நாயகியோ, ``உங்கள் உப்பு என் உழைப்புக்குத்தானே தவிர என் உடலுக்கில்லை'' என்று கல்யாணி கொடுக்கும் பதில், பணிபுரிய வெளியே வரும் பெண்களைப் பாலியல் கருவியாகப் பார்க்கும் வக்கிரக்காரர்களுக்கு எதிரான உலகக் குரல்.

இதே படத்தில் வீட்டு முதலாளியின் மனைவியாக வரும் பெண் கதாபாத்திரம், கணவனின் பெண் பித்து புத்தியை நன்கு அறிந்திருக்கும். அதனால், `கல்யாணி கதவை நல்லா தாழ்ப்பாள் போட்டுக்க. ஏதாவது நாய், கீய் நுழையும்' என்று கணவனை வார்த்தைகளாலேயே கிழிக்கும். பெண் பித்துப் பிடித்த கணவனை நாய் என்று சொன்னதில் ஹிலாரிக்கும் முன்மாதிரி கலைஞரின் பேனா உருவாக்கிய இந்தப் பெண்மணி.

`மந்திரிகுமாரி' மாதுரிதேவி

கணவன்தான் வில்லன், மன்னனைக் கொல்லப்போகிறான், தன் ஆருயிர் தோழியின் வாழ்க்கையையும் அழிக்கப்போகிறான், தன்னையும் மலையுச்சியிலிருந்து தள்ளிவிட்டு கொல்லப்போகிறான் என்பது தெரிந்தால், ஒரு மனைவி என்ன செய்வாள், கணவன் கால்கள் பிடித்துக் கெஞ்சுவாள். அல்லது, பயத்திலேயே தன் உயிரை விட்டுவிடுவாள். ஆனால், கலைஞரின் இந்தக் கதாநாயகி, கணவனை அதே மலையுச்சியிலிருந்து தள்ளிவிட்டு, நாட்டையும் மன்னனையும் காப்பாற்றுகிறாள்.

`மலைக்கள்ளன்' பூங்கோதை

தன்னிடம் அத்துமீற நினைக்கும் வில்லனிடம் பூங்கோதை, ``ஏய் என்ன திட்டம் போடுகிறாய் சொல்'', ``ச்சீ... பெண்ணை வைத்துப் பெண்ணை ஏமாற்றியிருக்கிறாய்'' என்று வசைபாடும் இடம் தைரியத்தின் உச்சம்.

`மனோகரா' - கண்ணாம்பாள் 

``பொறுத்தது போதும் பொங்கி எழு. கண்ணீர்த் துளிகள் சாதித்ததைக் கத்தி முனைகளும் சாதிக்கவில்லை என்பதை மறந்துவிட்டீர்களா'' என்று பேசும்போது, மகன் மனோகரனுக்கு மட்டுமன்றி, படம் பார்த்துக்கொண்டிருக்கும் அத்தனை பேருக்கும் தைரியத்தைக் கடத்துவார் மனோகரனின் தாய். மு.க.வின் கதாநாயகிகளில் மிக முக்கியமானவர் இவர்.

`பாலைவன ரோஜாக்கள்' சூர்யா

மாவட்ட ஆட்சியர் கதாபாத்திரத்தில் வரும் லட்சுமிதான் இந்தப் படத்தில், கலைஞரின் கதைநாயகி. ஏழைகளுக்குப் பட்டா தரமுடியாது என அமைச்சர் மறுக்கையில், ``அவர்களும் இந்த நாட்டுப் பிரஜைகள்தானே'' என்று பேசும் இடத்தில், நாயகி மறைந்து கலைஞர்தான் நம் கண்களுக்குத் தெரிவார். 

`பாசப்பறவைகள்'  உமா

``மார்பிலும் தோளிலும் மடியிலும் விளையாடிய மழலைச் செல்வம், தந்தையைக் காணாமல் வாசலைப் பார்த்து கண்ணீர் வடிக்கிறதே அந்தக் குழந்தைக்காக நீதி கேட்கவில்லை. தழையத் தழைய அணிந்த தாலியை இழந்த எனக்காக நீதி கேட்கவில்லை. உண்மைக்கு மதிப்பளிக்க நீதி கேட்கிறேன்'' என்று உமா பேசுகையில், வேலையில் தன் சொந்த துக்கங்களைப் பெண்கள் இணைத்துப் பார்க்க மாட்டார்கள் என்பதை அழுத்தமாகச் சொல்லியிருப்பார். 

பொன்னர் சங்கர் - முத்தாயி, பவளாயி

இந்தப் படத்தின் நாயகிகளான முத்தாயியும் பவளாயியும் திருமணம் முடித்தும், கணவர்களின் சபதம் நிறைவேறும் வரை இல்லற வாழ்க்கையைத் துறந்து வாழ்வார்கள். 

கலைஞர் படைத்த பெண் கதாபாத்திரங்கள், பெண்கள் மீதான மரியாதையைச் சமூகத்துக்குத் தன் பேனா மூலமாகக் கடத்தியிருப்பது நமக்கு நன்கு புலப்படும். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு