Published:Updated:

கடற்கரை சொல்லுமே கதை கதையாக..! - மெரினா குறித்து கருணாநிதி கைப்பட எழுதிய கடிதம்

கடற்கரை சொல்லுமே கதை கதையாக..! - மெரினா குறித்து கருணாநிதி கைப்பட எழுதிய கடிதம்
News
கடற்கரை சொல்லுமே கதை கதையாக..! - மெரினா குறித்து கருணாநிதி கைப்பட எழுதிய கடிதம்

கவிஞர் கண்ணதாசனின் அண்ணன் மருமகள் ஜெயந்தி கண்ணப்பன் தன் மாமனாருக்கும் கலைஞருக்குமான நட்பு குறித்துப் பேசுகிறார்.

கடற்கரையில் துயில்கொள்ள, கருணாநிதி மரணித்த பின்னும் போராடியது வரலாறாகிவிட்டது. இந்ந நேரத்தில் 'கடற்கரை சொல்லுமே கதை கதையாக! என அவர் தன் கைப்பட தன் நண்பரும் திரைப்படத் தயாரிப்பாளருமான ஏ.எல்.சீனிவாசனின் மகனுக்கு எழுதிய கடிதம் நமக்குக் கிடைத்தது.

கடிதம் குறித்து ஏ.எல்.சீனிவாசனின் மருமகள் ஜெயந்தி கண்ணப்பனிடம் பேசினோம்.

'' 'பராசக்தி' வெளியாகி 'மு.கருணாநிதி'ங்கிற அந்தப் பேரு பட்டி தொட்டியெங்கும் பிரபலமான 31வது நாள். மாமாவும் 'பணம்'ங்கிற தன் முதல் படத்தை தயாரித்து வெளியிடுகிறார். அதில் சிவாஜி, பத்மினி நடிக்க என்.எஸ்.கிருஷ்ணன் இயக்க, கதை வசனம் கலைஞர். மாமா- கலைஞர் இடையே அப்ப தொடங்கியது நட்பு. ரெண்டு பேருக்குமிடையான வயசு வித்தியாசம் ஆறே மாசம்தான். அதனால தயாரிப்பாளர் வசனகர்த்தா என்பதெல்லாம் அந்த முதல் படத்தோட சரி. பிறகு ரெண்டு பேருமே ரொம்பவே நெருக்கமான நண்பர்களாகிட்டாங்க. எந்தளவுக்குன்னா மாமா, கலைஞர் தோள்ல கை போட்டுப்பேசற அளவுக்கு!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

`கோபாலபுரத்துல இருக்கிற எங்க வீட்டுக்கு கலைஞர் வந்துட்டா மாமாவும் அவரும் மணிக்கணக்குல பேசிட்டிருப்பாங்க'ன்னு என் மாமியார் சொல்வாங்க. சில சமயங்கள்ல வீட்டுல பேசறது பத்தாதுன்னு'அப்படியே பீச்சுக்குப் போலாம்'னு கிளம்பிப் போயிடுவாங்களாம். கலைஞரும் மாமாவும் பீச்சுக்குப் போனா, பின்னாடியே எங்க வீட்டுல இருந்து செட்டிநாட்டுப் பலகாரமும் அவங்களுக்குப் போயிடும். சாப்பிட்டுகிட்டே ராத்திரி வரைக்கும் பேசிட்டு வந்திருக்காங்க.

கலைஞர் முதலமைச்சரான பிறகும்கூட இந்தக் கடற்கரைச் சந்திப்புகள் நடந்திருக்கு. ரெண்டு பேரும் மனம் விட்டுப் பேசிக்கிடுவாங்களாம். `கடற்கரையில போய் மணிக்கணக்குல என்ன பேசுவாங்க'ன்னு என் மாமியார்கிட்ட பின்னாடி நான் பலதடவை கேட்டிருக்கேன். `ஒரு வயசுக்காரங்க; வீட்டுல எல்லாத்தையும் பேச முடியுமா, அதான் அங்க போறாங்க'ன்னு சொல்வாங்க மாமியார்.

அதேபோல அப்ப என்னோட சின்ன மாமனார் கவிஞர் கண்ணதாசன் கலைஞரை விமர்சித்து மேடைகள்ல பேசிட்டிருந்த காலம். சமயங்கள்ல அவர் கொஞ்சம் கடுமையாப் பேசிட்டா, அதுபத்தி மாமாகிட்ட கலைஞர் குறிப்பிடுவாராம். மாமாவும் தம்பியைக் கூப்பிட்டு, 'கொஞ்சம் பார்த்துப் பேசுப்பா'ன்னு சொல்லியிருக்கார். அதேபோல எங்கள் தயாரிப்பு நிறுவனம் எம்.ஜி.ஆர் அவர்களை வச்சு 'திருடாதே', 'சக்ரவர்த்தித் திருமகன்' ரெண்டு படம் மட்டுமே தயாரிச்சது. கலைஞருடன் மாமாவுக்கு இருந்த தொடர்பாலேயே எம்.ஜி.ஆரை வச்சு தொடர்ந்து படமெடுக்கலைங்கிற ஒரு பேச்சும் அப்ப பரவலா பேசப்பட்டிருக்கு.

இன்னொரு முக்கியமான விஷயம், கலைஞரை விசாரிக்க அமைக்கப்பட்ட சர்க்காரியா கமிஷன் அறிக்கையிலயும் மாமா பேர் இருந்திச்சு. ஆனா, குற்றச்சாட்டு எதுவும் நிரூபிக்கப்படலை. என்னோட கணவரும்கூட அவங்க ரெண்டு பேர் நட்பு பற்றி எங்கிட்ட நிறையவே சொல்லியிருக்கார்.

மாமியார், கணவர் மூலமா மட்டுமே இவங்க நட்பு பத்திக் கேள்விப்பட்டிருந்த எனக்கு 'கடற்கரை சொல்லுமே கதை கதையாக'ன்னு அவர் கைப்பட எழுதிய கடிதம் கிடைச்ச விஷயத்துக்கு வர்றேன். எங்க வீட்டுல கவிஞர், அண்ணனுக்கு எழுதிய கடிதங்கள் நிறைய இன்னைக்கும் இருக்கு. அந்தக் கடிதங்களைப் ப்த்திரப்படுத்தி மாணவர்கள் பயன்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கக் கேட்டு ஒரு வாரப் பத்திரிக்கையில பேசியிருந்தேன்.

அதைப் படிச்சுட்டு அது பத்தி 'முரசொலி'யில உடன்பிறப்புகளுக்கு எழுதற கடிதத்துல குறிப்பிட்டிருந்தார். அதுக்கு நன்றி சொல்லி என்னோட கணவர் அவருக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்துக்கு வந்த பதில் கடிதத்துலதான் அந்த வரிகளைக் குறிப்பிட்டிருந்தார்.

கடிதத்தைப் பிரிச்சுப் பார்த்த அந்த நிமிஷத்துலதான் மாமாவுக்கும் கலைஞருக்குமான நட்பின் ஆழத்தை என்னால 100 சதவிகிதம் உணர முடிஞ்சது'' என்கிறார் ஜெயந்தி கண்ணப்பன்.