Published:Updated:

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 19

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 19
பிரீமியம் ஸ்டோரி
ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 19

தேடி வந்த வாய்ப்புஎஸ்.கிருபாகரன், படங்கள் உதவி: ஞானம்

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 19

தேடி வந்த வாய்ப்புஎஸ்.கிருபாகரன், படங்கள் உதவி: ஞானம்

Published:Updated:
ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 19
பிரீமியம் ஸ்டோரி
ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 19

எஸ்.ஜானகியின் பாடல் இடம்பெற்ற ஒரே காரணத்துக்காகக் கைம்பெண் வேடமாக இருந்தாலும், `நன்ன கர்த்தவ்யா’ என்கிற கன்னடப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் ஜெயலலிதா.

சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாள்களில் மட்டுமே `நன்ன கர்த்தவ்யா’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. ஜெயலலிதா முதன் முதலில் கதாநாயகியாக ஒப்பந்தமான படம் என்று இதைத்தான் சொல்ல வேண்டும். வாய்ப்பு எளிதில் கிடைத்துவிட்டாலும் அதைப் பயன்படுத்திக் கொள்வதில் பல சிரமங்கள் இருந்தன சந்தியாவுக்கு. அம்மு, சினிமாவில் நடிப்பது அரசல்புரசலாகத் தெரியவந்தபோது, மகள் சந்தியாவையும் பேத்தி அம்முவையும் திட்டித் தீர்த்தார் சந்தியாவின் தந்தை ரங்கஸ்வாமி.

உறவினர்கள், நண்பர்களிடமிருந்து வேறொரு பிரச்னையும் எழுந்தது. `முதன்முதலாக சினிமாவில் நடிக்க, கைம்பெண் வேடம்தான் கிடைச்சதா? எவ்வளவுதான் பணம் தந்தாலும் மகளின் வாழ்க்கையில் இப்படி விளையாடலாமா நீ?' என சந்தியாவை வறுத்தெடுத்தனர் அவர்கள்.

ஆனால், இத்தகைய நம்பிக்கைகளில் அவ்வளவாக ஆர்வமில்லாததால், சந்தியா எதையும் பொருட்படுத்தவில்லை.  `அது ஒரு தொழில்தானே? அவ என்ன நிஜமாகவா தாலி கட்டிக்கிறா? நடிப்புன்னு வந்தபிறகு இதையெல்லாம் பார்த்துக்கிட்டு இருக்க முடியாது’ என்று சொல்லி, கேட்டவர்களின் வாயை அடைத்தார்.

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 19

இதுகுறித்துப் பின்னாளில் ஒருமுறை பேசிய ஜெயலலிதா, ``ஆன்ட்டி சென்டிமென்ட் என்பார்களே... என்னைப் பொறுத்தவரை அது பொருளற்ற வார்த்தை. நெருங்கிய நண்பர்கள் எல்லோரும்  என் கதாபாத்திரத்தைக் கேள்விப் பட்டு ‘அமங்கலமாக உள்ளதே’ என என் தாயிடம் சொன்னார்கள். ‘நெருப்பென்றால் சுட்டுவிடாது’ எனப் பதில் சொல்லி அவர்களின் மூக்குடைத்தார் அம்மா. அந்தப் படம் வெளிவரவே இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகின. ஆனாலும், இன்று நான் உங்கள் முன் ஒரு பிரபல நடிகையாக இருக்கிறேன் அல்லவா?'' என்றார். இவ்வளவு பகுத்தறிவுடன் இருந்த ஒருவர்மீது அதற்கு நேர்மாறான பிம்பத்தையே காலம் அளித்தது.

1964-ம் வருடம் ஏப்ரல் மாதம் மெட்ரிக் தேர்வு எழுதினார் அம்மு. ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் சேர்ந்து ஆங்கில இலக்கியம் படித்து, ஆங்கிலப் பேராசிரியையாவதுதான் அவரது  வாழ்நாள் கனவு. இந்தக் காலகட்டத்தில், சந்தியா கொஞ்சம் பொருளாதாரச் சிக்கலில் இருந்தார்.

‘நன்ன கர்த்தவ்யா’ படம்மூலம் கன்னட உலகில் அம்முவுக்குக் கிடைத்த நல்ல அறிமுகத்தையும், குடும்பத்தின் பொருளாதாரச் சிக்கலையும் இணைத்துப்பார்த்த சந்தியாவின் மனதில் புதிய உற்சாகம் பிறந்தது. அம்முவுக்காக அவர் சத்தமில்லாமல் வாய்ப்பு தேடிக்கொண்டிருந்தார். கடைசித் தேர்வு முடிந்து இரு தினங்கள் கழிந்த நிலையில், ஆதுர்த்தி சுப்பாராவ் என்ற பிரபல கன்னட இயக்குநரிடமிருந்து அம்முவுக்கு மூவி டெஸ்ட் எடுக்க அழைப்பு வந்தது. அம்மா சந்தியாவின் வற்புறுத்தலுக்காகச் சென்றுவந்தார். படத்தில் வாய்ப்பு கிடைத்துவிடும் என்று நம்பிக்கையுடன் இருந்தார் சந்தியா. ஆனால், இயக்குநர் ஆதுர்த்தி சுப்பாராவ், அம்முவை நிராகரித்ததோடு அவர் சொன்ன சில வார்த்தைகள் அம்முவை அழ வைத்துவிட்டது.

என்ன சொன்னார் இயக்குநர்?

`சினிமாவுக்கேற்ற முகவெட்டோ, அழகோ துளியும் இந்தப் பெண்ணிடம் இல்லை!'

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 19

மகளைத் தேற்றிய சந்தியா, அவள் ஆசைப் படியே படித்துப் பேராசிரியை ஆகட்டும் என்று முடிவெடுத்தார். தேர்வு முடிவுவர இன்னும் சில நாள்கள் இருந்த நிலையில், உட்லண்ட்ஸ் ஹோட்டலில், ‘கர்ணன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் விழா நடைபெற்றது.  அப்படத்தில் நடித்திருந்ததால் சந்தியாவுக்கும் அழைப்பு வர, மகளையும் அழைத்துச் சென்றார். அம்முவின் வாழ்வில், அவர்  புடவை கட்டிக்கொண்டு ஒரு பொது நிகழ்ச்சிக்கு சென்றது அதுவே முதன்முறை.

நிகழ்ச்சியில் அனைவரின் பார்வையும் அம்முவின் மீதே இருந்தது. `சந்தியாவுக்கு இவ்வளவு பெரிய பெண்ணா' என வியந்து பேசினர் விழாவில். நிகழ்ச்சியினிடையே பி.ஆர்.பந்துலு சந்தியாவிடம் அம்முவைப்பற்றி விசாரித்தார். `ஃப்ராக் போட்டுட்டு, சிதார் வாசிப்பாளே... அந்தப் பெண்ணா இவ? சின்ன வயசுல பார்த்தது... மடமடன்னு வளர்ந்து நிற்கிறாளே...' என ஆச்சர்யப்பட்டவர், சந்தியாவுக்கு இன்ப அதிர்ச்சி ஒன்றைத் தந்தார். கன்னடத்தில் தான் எடுக்கப்போகும் ‘சின்னத கொம்பே’ (தமிழில் பின்னர் சிவாஜி - தேவிகா நடித்து ‘முரடன் முத்து’ என்ற பெய0ரில் வெளியானது) படத்தில்  அம்முவைக் கதாநாயகியாக நடிக்கவைக்க அனுமதி கேட்டார். சந்தியாவுக்கு உள்ளூரப் பெரும் மகிழ்ச்சிதான். ஆனால், ஆதுர்த்தி சுப்பாராவ் தந்த கசப்பான அனுபவத்தால், ‘மகளை சினிமாவில் நடிக்கவைப்பதில்லை’ என்ற முடிவை எடுத்திருந்தது நினைவுக்கு வந்தது. ஆனால், தமிழிலும் கன்னடத்திலும் புகழ்பெற்ற இயக்குநர் ஒருவர் வலியவந்து வாய்ப்புத் தரும்போது அதைத் தட்டிக்கழிப்பது முட்டாள்தனமாகத் தோன்றியது. கரும்பு தின்னக் கூலி தருவதாகச் சொல்லும்போது மறுப்பவர்கள் யார் இருக்கிறார்கள்?

 பந்துலுவும் சந்தியாவும் அம்முவின் முகத்தையே உற்றுநோக்கினர். அம்முவின் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை. வீடு வந்தபின்தான் அம்முவின் அமைதிக்குக் காரணம் தெரிந்தது. ``மம்மி... இவரும் என்னை மூவி டெஸ்ட்டுக்குப்பிறகு ஏதாவது காரணம் சொல்லி நிராகரிச்சா அதை என்னால் தாங்கிக்க முடியாது. எனக்கு இனி சினிமாவே வேணாம்...'' என்று தெளிவாகச் சொன்னார் அம்மு.

இரு தினங்களுக்குப்பின் பந்துலு போன் செய்தார். அம்முவின் எண்ணத்தை அவரிடம் சொன்னபோது, பந்துலு பதறினார். ``லட்சுமிகரமா இருக்கிற குழந்தையை யாராவது நிராகரிப்பாங்களா? குழந்தைக்கு எந்த டெஸ்ட்டும் நான் எடுக்கப்போறதில்லை. நான் சொல்ற நாள்ல நேரடியா மைசூர்லே ஷூட்டிங்குக்கு வந்திடுங்க'’ என்று கூறி சந்தியாவைச் சம்மதிக்க வைத்தார்.

‘சின்னத கொம்பே’ படத்தின் கதாநாயகன் கல்யாண்குமார். கன்னட சினிமாவில் வளர்ந்துவந்த நடிகரான அவர், ஏற்கெனவே சந்தியா குடும்பத்துக்கு அறிமுகமானவர். சந்தியா சென்னைக்கு வந்த புதிதில், தங்கை வித்யாவதியுடன் அடையாறு வீட்டில் வசித்தபோது, அவர்களுடன் கல்யாண்குமார் வசித்திருக்கிறார். அம்மு அவரை, ‘சொக்கண்ணா’ என்று அழைப்பார். குழந்தையாக இருந்த அம்முவைத் தூக்கிக் கொஞ்சிய அவருடன் இப்போது அம்மு டூயட் பாட வேண்டும்.

ஏற்கெனவே குடும்ப நண்பராக இருந்தவர் தான், தன் படத்தின் கதாநாயகன் என்றதும் அம்மு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனார். ‘சின்னத கொம்பே’ கன்னடத்தில் மெகா ஹிட்.

தொடர்ந்து  தமிழின் முக்கிய இயக்குநரான ஸ்ரீதரின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு அம்முவைத் தேடி வந்தது. இப்படி ஜெயலலிதாவின் சினிமா கிராப் அடுத்தடுத்து கிடுகிடு உயரத்துக்குச் செல்ல தொடங்கியது.

தமிழில் ஜெயலலிதாவின் முதற்படமான `வெண்ணிற ஆடை' வாய்ப்பு வந்ததுகூட ஒரு சுவாரஸ்யம் நிறைந்ததுதான்!

(அம்முவின் கதை அறிவோம்!)