Published:Updated:

அஜித் பட டைட்டில் ஹன்சிகாவுக்குக் கிடைத்தது எப்படி..? #Hansika50

சனா
அஜித் பட டைட்டில் ஹன்சிகாவுக்குக் கிடைத்தது எப்படி..? #Hansika50
அஜித் பட டைட்டில் ஹன்சிகாவுக்குக் கிடைத்தது எப்படி..? #Hansika50

``நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் குவைத். சினிமா மேலே இருந்த காதல் காரணமா சென்னைக்கு வந்தேன். கிட்டத்தட்ட பத்து வருஷமா சினிமாவில இருக்கேன். என்னோட முதல் படம் பற்றிய அதிகாரபூர்வமான அறிவிப்பு தற்போது வெளிவந்திருக்கு. இது எனக்கு சந்தோஷமா இருக்கு...'' உற்சாகத்துடன் பேசுகிறார், ஹன்சிகா நடிக்கும் `மஹா’ படத்தின் இயக்குநர் ஜமீல். 

`மாப்பிள்ளை' படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்த ஹன்சிகா, தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வருகிறார். கமர்ஷியல் ஹீரோயினான இவர் முதல் முறையாக ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கேரக்டரை கையில் எடுத்திருக்கிறார். ஜமீல் இயக்கயிருக்கும் இந்தப் படத்துக்கு 'மஹா' என்று பெயரிடப்பட்டுள்ளது. இது, ஹன்சிகாவின் ஐம்பதாவது படம் என்பது கூடுதல் தகவல். படம் குறித்த அப்டேஸ்காக படத்தோட இயக்குநர் ஜமீலிடம் பேசினேன். 

``இயக்குநர்  லட்சுமணனிடம் உதவி மற்றும் இணை இயக்குநராக இருந்தேன். அவர் இயக்கிய `ரோமியோ ஜூலியட்', `போகன்' படங்களில்  வேலை பார்த்ததால், ஹன்சிகாவுடன் நல்ல அறிமுகம் உண்டு. நல்லா நடிக்கத் தெரிந்த நடிகை. ஆனா, இவரது நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கிற மாதிரியான கதாபாத்திரம் இதுவரை அவருக்கு அமையவில்லை. பலரும் ஹன்சிகா பப்ளியான நடிகை. நல்லா டான்ஸ் ஆடுவார் என்கிற எண்ணத்தில்தான் இருக்காங்க. ஆனா, உண்மையா சொல்லணும்னா.. அழகான நடிப்பை ஹன்சிகா வெளிப்படுத்துவாங்க. திறமைவாய்ந்த நடிகை. 

அவருடைய படங்களில் வேலை பார்த்ததால் பக்கத்திலிருந்து அவரின் நடிப்பைப் பார்த்து ரசித்திருக்கிறேன். அதனால், ஹன்சிகாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற மாதிரியான ஸ்க்ரிப்ட் ரெடி பண்ண ஆசைப்பட்டு `மஹா' படத்தின் கதையை ரெடி பண்ணினேன். இந்தக் கதையில் நடிப்பு, க்ளாமர், கோபம், ஃபைட் என எல்லாமே இருக்கு. பத்துப் படங்களில் ஹன்சிகா செய்ய வேண்டிய கதாபாத்திரங்களை இந்த ஒரு படத்தில் செய்யவிருக்கிறார். இந்த ஒரு படம் ஹன்சிகாவின் பத்துப் படத்துக்குச் சமம். கதையை முழுசா ரெடி பண்ணிட்டு ஹன்சிகாவிடம் சொல்ல முயற்சி செய்தேன். 

எங்களுக்குள் நல்ல அறிமுகம் இருந்ததால், ஹன்சிகா கதை கேட்க சம்மதம் சொன்னாங்க. உடனே, மும்பைக்குச் சென்று ஹன்சிகாவிடம் கதை சொன்னேன். மூணு மணிநேரம் விடாமல் கதையைச் சொல்லி முடித்தேன். கதை சொல்லும் போது ஹன்சிகா ரொம்ப ஆர்வமா கேட்டாங்க. `இதுக்குப் பிறகு இதுதானே நடக்கும்'னு கெஸ் பண்ணாங்க. ஆனா, அவங்க கெஸ் பண்ணாத மாதிரி என்னோட திரைக்கதை இருந்தது. `ஸ்டோரி ரொம்பப் பிடிச்சிருக்கு. கண்டிப்பா நான் பண்றேன்'னு சொல்லிட்டாங்க. ஆனா, அவங்க கால்ஷீட் கிடைக்க எட்டு மாசம் வரைக்கும் நான் வெயிட் பண்ணினேன். நான் காத்திருந்த நாள்களில் ஹன்சிகா தவிர வேற யாராவது நடிகைகளிடம் கதை சொல்லியிருக்கலாம். ஆனா, ஹன்சிகா நடித்தால் மட்டுமே இந்தப் படத்தை எடுக்க வேண்டும் என்பதில் உறுதியா இருந்தேன். படத்துக்குத் தயாரிப்பாளர் கிடைப்பதில்தான் கொஞ்சம் சிரமம் இருந்தது. ஆனா, கடைசியாக நல்ல தயாரிப்பாளர் கிடைத்துவிட்டார். தயாரிப்பாளர் மதியழகன் சாரிடம் கதை சொன்னவுடனே படம் பண்ண சம்மதம் தெரிவித்து விட்டார். 

சினிமா துறையில் இருக்கிற பலரும், `முதல் படமே ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற படம் ஏன்'னு கேட்குறாங்க. இதுக்கு பெரிய காரணம்லாம் எதுவும் இல்லை. தமிழ் சினிமாவைப் பொறுத்தவரைக்கும் ஏழு, எட்டு ஹீரோக்கள் மட்டுமே டாப் நிலையில் இருக்காங்க. அவங்க, எல்லாருடைய  கையிலும் தலா பத்துப் படங்களாவது இருக்கு. அதனால்தான் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற மாதிரியான கதையை ரெடி பண்ணினேன். தவிர, படத்தில் பெரிய ஹீரோ ஒருவரையும் எதிர்பார்க்கலாம். அவருக்கும் படத்தில் முக்கியத்துவம் இருக்கும். அந்த அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளிவரும். 

`மஹா’னு இந்தப் படத்தோட டைட்டில் அறிவிச்சதிலிருந்து நிறைய பேர் வாழ்த்து சொன்னாங்க. `மஹா'ங்கிற டைட்டில் அஜித் சார் படத்தோட டைட்டில்.  பத்து வருஷத்துக்கு முன்னாடியே இந்த டைட்டிலில் அஜித் சாரோட படம் ஒண்ணு ரெடியாகி ட்ராப் ஆயிருச்சு. என் படத்தோட டைட்டிலும் `மஹா'. ஆனா, இந்த டைட்டில் சம்பந்தமா எந்தவோர் உரிமை பிரச்னையும் வரலை. அதுக்குக் காரணம் என்னோட புரொடியூசர். அவர் ஏற்கெனவே `மஹா'ங்கிற டைட்டிலை பதிவு பண்ணியிருந்தார். கடவுள் கிருபையில் எல்லாமே நல்லபடியா நடந்திருச்சு. 

படத்துக்கான வசனத்தை மதன் கார்க்கி எழுதுகிறார். பாடல்களை மதன் கார்க்கியுடன் தாமரையும் சேர்ந்து எழுதுறாங்க. த்ரில்லர் ஜானரான இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்தால் நல்லாயிருக்கும்னு ஃபீல் பண்ணினேன். ஜிப்ரான் என்னோட நெருங்கிய நண்பர். படத்துக்கான கதையை அவரிடம் சொன்னவுடனே ஓகே சொல்லிட்டார். முதல் படம் பெரிய கூட்டணியுடன் உருவாவது மகிழ்ச்சியா இருக்கு. சென்னை மற்றும் துபாயில் படப்பிடிப்பு நடத்த முடிவு செய்திருக்கிறேன். செப்டம்பரில் படத்துக்கான ஷூட்டிங் ஆரம்பமாகும்’’ என்று மகிழ்ச்சியுடன் சொல்லி முடித்தார் ஜமீல்.