
மிஸ்டர் மியாவ்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் `தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. வெளிநாடுகளில் இப்போது படமாக்கப்பட்டுவரும் ஒரு பாடல் காட்சியோடு மொத்த படப்பிடிப்பும் முடிகிறது.


ஹாலிவுட்டில் வசூலை அள்ளும் `ஸ்பேஸ் மூவீஸ்’ ரகங்கள், இந்தியாவில் குறைவு. சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் `டிக் டிக் டிக்’தான் இந்தியாவின் முதல் விண்வெளிப் படம். இந்த வரிசையில் இணைய இருக்கிறது `சந்தமாமா டோர் கே’ என்ற பாலிவுட் படம். சுஷாந்த் சிங் ராஜ்புத், மாதவன், ஸ்ரத்தா கபூர், நவாஸுதீன் சித்திக் ஆகியோர் நடிக்க இருக்கின்றனர். இந்தப் படத்தில் விண்வெளி வீரராக நடிக்கும் மாதவன், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா சென்று பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கிறார்.


`மொட்ட சிவா கெட்ட சிவா’, `சிவலிங்கா’ படங்களுக்குப் பிறகு மீண்டும் தனது ஆல் ரவுண்ட் ஏரியாவான பேய்க் கதைக்குத் திரும்புகிறார் ராகவா லாரன்ஸ். வேறென்ன? `காஞ்சனா’ படத்தின் மூன்றாம் பாகம்தான் அது. பி.வாசு இயக்கத்தில் ஒரு படம், எஸ்.எஸ்.ராஜமெளலியின் உதவியாளர் இயக்கும் படம் எனத் தொடர்ந்து பிஸியாக இருக்கும் லாரன்ஸ், இந்தப் படங்களுக்குப் பிறகே `காஞ்சனா-3’ வேலைகளைத் தொடங்கவிருக்கிறார்.

முதன்முறையாக கன்னடப் படம் ஒன்றில் நடிக்கிறார் ஆர்யா. பல விருதுகளையும் பாராட்டுகளையும் குவித்த `ரங்கி தரங்கா’ படத்தை இயக்கிய அனூப் பண்டாரிதான் இந்தப் படத்தின் இயக்குநர். நிரூப் பண்டாரி ஹீரோவாகவும், அவந்திகா ஷெட்டி ஹீரோயினாகவும் நடிக்க, `ரஜரதா’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் ஆர்யாவுக்கு முக்கியமான கேரக்டராம்!


`ஜோக்கர்’ படத்துக்குப் பிறகு த்ரில்லர் படம் ஒன்றில் ஹீரோவாக நடித்துக்கொண்டிருக்கிறார் குருசோமசுந்தரம். அறிமுக இயக்குநர் மனோஜ் இயக்கும் இந்தப் படத்தில், குருசோமசுந்தரம் ஜோடியாக
சாந்தினி நடிக்கிறார்.

மியாவ் பதில்
வடிவேலு மீண்டும் ஹீரோ ஆகிவிட்டார் போலிருக்கிறதே?
வடிவேலுவுக்கு `இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படத்தின் மூலம் ஹீரோ புரொமோஷன் கொடுத்தவர் இயக்குநர் சிம்புதேவன். அதன்பின் ஹீரோவாக நடித்த எந்தப் படங்களும் கைகொடுக்கவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஷால் நடித்த `கத்திச்சண்டை’ மூலம் மீண்டும் காமெடியன் ரூட்டுக்குத் திரும்ப, அதுவும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. இந்நிலையில், `இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ மூலம் மீண்டும் ஹீரோவாகக் களமிறங்கியிருக்கிறார் வடிவேலு. சிம்புதேவன் இயக்கும் இந்தப் படத்தில், 23-ம் புலிகேசியின் வாரிசாக வருகிறார் இந்த `24-ம் புலிகேசி’!