Published:Updated:

’’ ‘என்னய்யா, ரஜினி குழந்தை மாதிரி பண்றார்’ன்னார் கலைஞர்..!’’ - தாணு

’’ ‘என்னய்யா, ரஜினி குழந்தை மாதிரி பண்றார்’ன்னார் கலைஞர்..!’’ - தாணு
’’ ‘என்னய்யா, ரஜினி குழந்தை மாதிரி பண்றார்’ன்னார் கலைஞர்..!’’ - தாணு

தமிழ் சினிமாவின் பல்வேறு கூட்டமைப்புகளின் சார்பில் தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் கூட்டம் நேற்று சென்னை காமராஜர் அரங்கில் நடந்தது. இதில் ரஜினி, மு.க.ஸ்டாலின், நாசர், ராதாரவி, விஷால், கார்த்தி, பொன்வண்ணன், சரண்யா பொன்வண்ணன், பாக்யராஜ், பூர்ணிமா பாக்யராஜ், குஷ்பு, அம்பிகா, தலைவாசல் விஜய், நிழல்கள் ரவி, ரேவதி, தாணு, கே.டி.குஞ்சுமோன், சுஹாசினி, விஜயக்குமார் உள்ளிட்ட நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், சினிமா தொழிலாளர் சம்மேளனம், நடிகர் சங்கம் உள்ளிட்ட சங்கங்களிலிருந்து ஏராளமானோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். இதில் ரஜினிகாந்த் பேசியது நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

"என்னுடைய நண்பர் கருணாநிதியின் இறுதிச் சடங்குக்கு இந்தியாவே வந்தது. அதில் ஒரு குறை. ஆளுநரிலிருந்து எல்லாருமே வந்திருந்தும்  தமிழ்நாட்டின் முதலமைச்சர் அங்கு வரவில்லை. அங்கு அவர் இருந்திருக்க வேண்டாமா? நீங்கள் என்ன எம்.ஜி.ஆரா, ஜெயலலிதாவா ஏன் போகவில்லை..." என்று ரஜினி வினவியது பெரும் பரபரப்பாக இருந்தது. 

சினிமா சங்கங்களைச் சேர்ந்த பிரமுகர்கள் தி.மு.க தலைவரின் புகைப்படத்துக்கு அஞ்சலி செலுத்திவிட்டுப் பேசினர். ஏற்கெனவே, 'கட்சியின் நிர்வாகிகள் பலர் ரஜினிகாந்த்துடன் தொடர்பில் உள்ளனர்" என அழகிரி பேசியிருக்கும் தருணத்தில், ரஜினி - கருணாநிதி உறவைப் பற்றி தயாரிப்பாளர் தாணு  நினைவுகூர்ந்ததும் குறிப்பிடத்தக்கதாக இருந்தது.   

நடிகர் சங்கத் தலைவர் நாசர் பேசும்போது:

``ஒரு தனி மனிதனின் மறைவுக்காக நாம் இங்கு கூடவில்லை. ஒரு காலகட்டமே முடிந்துள்ளது, ஒரு தலைமுறை முடிவுக்கு வந்துள்ளது. 90 ஆண்டுகளிலேயே 200 ஆண்டுகள் வாழ்ந்ததுபோல் செயல்கள் செய்திருக்கிறார். பாடம் நடத்தியிருக்கிறார் என்பதைவிட, பாடமாக இருந்திருக்கிறார் என்பதே பொருந்தும். சினிமா இந்தளவுக்குத் தழைத்திருக்கிறது என்றால் அதற்குக் கலைஞர் அவர்கள்தான் காரணம்.’’

விஜயகுமார் :

"கலைஞர் அவர்கள் இலக்கியவாதி, அரசியல்வாதி, நல்ல மனிதர். 1965-ல் நான் அவரை முரசொலி அலுவலகத்தில் முதல்முறை சந்தித்தேன். நாவலர் நெடுஞ்செழியனோடு சென்று என்னை அறிமுகப் படுத்திக்கிட்டேன். 'தம்பி என்ன செய்ற'னு கேட்டார். 'சினிமாவுக்காக முயற்சி செஞ்சிட்டு இருக்கேன். இப்போகூட 'கந்தன் கருணை' படத்துக்காக டெஸ்ட் போட்டிருக்காங்க'னு சொன்னேன். உடனே படத்தோட இயக்குநர் ஏ.பி.நாகராஜனுக்கு போன் பண்ணி, 'நம்ம பையன்தான். வாய்ப்பு கொடுங்க'னு சொன்னார். என் வாழ்நாளிலேயே அந்தத் தருணத்தை மறக்க முடியாது. அந்தச் சம்பவத்துக்குப் பிறகு இன்று வரை அவர் குடும்பத்தில் ஒருத்தனாகத்தான் நான் அவருடன் இருந்திருக்கிறேன். அந்த மாமனிதன் இந்த உலகத்தில் இனி பிறக்கப்போவது இல்லை. அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்துள்ளோம் என்று பெருமைப்பட்டு அவரைப் பின்பற்றி நாம் செயல்பட வேண்டும்."

பொன்வண்ணன்:

``கருணாநிதியைக் கண்டு வியந்துள்ளேன். தி.மு.க அரசு கலைக்கப்பட்டபோதெல்லாம், அந்தத் தோல்விகளை மிகவும் இயல்பாக எதிர்கொண்டதைக் கண்டு ஆச்சர்யமடைந்துள்ளேன். பொன்னர்-சங்கரில் அவருடன் இணைந்து பணியாற்றியது எனக்குக் கிடைத்த பாக்கியம். அவர் தன்னை அப்டேட் செய்துகொண்டார். ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பயணித்தார். தன் மீதான விமர்சனங்களைத் தைரியமாக எதிர்கொண்டார். எதிர்காலத்துக்குத் தேவையானதை வடிவமைத்தவர் கருணாநிதி.’’

இயக்குநர் வாசு :

நடிகர் திலகத்தின் நடிப்பைப் பார்த்து நடிகர்கள் வந்ததைப்போல் கலைஞரின் எழுத்தைப் பார்த்து எல்லா எழுத்தாளர்களும் வந்திருக்கிறார்கள் என்றால் அது மிகையாகாது. அவருடைய வசனம், நகைச்சுவை தன்மை, சிரிப்பு, நண்பர்களுடன் இருப்பது என எல்லாத்தையும் பத்தி பேசிட்டே போகலாம். குறிப்பா, அவரோட சுறுசுறுப்பைப் பத்தி சொல்லியே ஆகணும். அதிகாலையில எழுந்து போலீஸ் பாதுகாப்போட போவார். அவர் எழுந்த பிறகுதான் கோபாலபுரமே எழுந்திருக்கும். அவர் என்னதான் போலீஸ் பாதுகாப்பில் போனாலும் அங்க இருக்கிற யாருக்கும் தொந்தரவா இருக்காது. தலைவரின் சிந்தனையை எல்லோரும் பின்பற்ற வேண்டும். இறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன் அவரை வீட்டில் சந்திப்பதற்கான சந்தர்ப்பம் கிடைச்சது. எத்தனை பேரை ஞாபகம் வெச்சிருந்தவரிடம், 'இவர் யாருனு தெரியுதா அப்பா பி.வாசு...'னு செல்வி அவர்கள் கலைஞரிடம் சொன்னவுடன் உதட்டோரம் ஒரு சிரிப்பு மட்டும்தான் வந்தது. அவருடைய மறைவு தமிழக மக்களுக்கும் குடும்பத்தாருக்கும் கலை உலகத்துக்கும் பெரிய இழப்பு. அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்

தாணு :

அவரோடு வாழ்ந்த காலம் எல்லாம் என்றும் நெஞ்சில் இருக்கும். கலை உலகம் சார்பாக எந்த உதவி கேட்டாலும் மறுக்காமல் செய்து கொடுப்பார். இன்று ஃபிலிம் சேம்பர் 500 கோடி அளவுக்கு உயர்ந்து இருக்கிறது என்றால் அதற்குக் கலைஞர்தான் காரணம். தமிழகத்துக்கு அவர் செய்ததை சொன்னால் அது ஏட்டில் அடங்காது, எழுத்திலடங்காது. அவருக்கு வள்ளுவர் கோட்டத்தில் 50 அடியில் கட் அவுட் வைத்து என் பாசத்தைக் கொட்டி ஆராதித்திருக்கிறேன். தனக்கு ஒருத்தரிடமிருந்து எதிர்ப்பலைகள் வந்தாலும் அவரை தாயன்போடு அரவணைப்பவர் கலைஞர். அவர் காலத்தால் அழிக்க முடியாத காவியம். என் படம் தேசிய விருது வாங்கியபோது என்னை வீட்டுக்குக் கூப்பிட்டு வாழ்த்தினார்.

ஒரு தடவை ரஜினிகாந்த் சார் வெள்ளை தாடியுடன் வெளியில் வருவதைப் பார்த்த கலைஞர் எனக்குப் போன் செய்து,  "என்னயா அவரு  வெள்ளை தாடி வச்சுட்டு இருக்காரு. எம்.ஜி.ஆர்.லாம் வெளியே வரும்போது எப்படி இருப்பாரு. அவர்கிட்ட  சொல்லுய்யா" என்றார். நான் இதை ரஜினி சாரிடம் சொன்னேன். மறுநாள் கலைஞர் சென்ற ஒரு பிரிவியூ ஷோவுக்கு ரஜினி சாரும் செல்ல அங்கே அவரிடம், "பார்த்தீங்களா சார் ஷேவ் பண்ணிட்டேன்" என்று காட்டியிருக்கிறார். இதைச் சொல்ல போன் போட்ட கலைஞர், "என்னயா அவர் குழந்தைமாதிரி ஷேவ் பண்ணுனதை காட்டுறாரு" என்றார். இப்படி கலைஞர் பல நேரங்களில சினிமாவை நேசிப்பவராகவே இருந்திருக்கிறார்.        

எனது ’வண்ண வண்ணப் பூக்கள்’ படத்தை பார்த்துவிட்டு, 'இளமை எழுதிய ஓவியம், கேமரா எழுதிய காவியம் - மு.க'னு எழுதிக் கொடுத்தார். அதையும் அந்தப் பேனாவையும் இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறேன். எப்போதும் அவர் நம்முடனே வாழ்ந்துகொண்டு இருக்கிறார். உலகளாவிய தமிழர்களின் கலங்கரை விளக்கம் கலைஞர் அவர்கள். 

கூட்டத்தின் நிறைவாக தி.மு.க-வின் செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் அவரின் மகன் உதயநிதி இருவரும் தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு ரஜினியுடன் இணைந்து மலரஞ்சலி செலுத்தினர். 

பின் செல்ல