Published:Updated:

’மோக்லிக்கு சிறப்புக் கைத்தட்டல்!' சிறப்பு குழந்தைகளை குதூகலமாக்கிய ஜங்கிள் புக்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
’மோக்லிக்கு சிறப்புக் கைத்தட்டல்!' சிறப்பு குழந்தைகளை குதூகலமாக்கிய ஜங்கிள் புக்
’மோக்லிக்கு சிறப்புக் கைத்தட்டல்!' சிறப்பு குழந்தைகளை குதூகலமாக்கிய ஜங்கிள் புக்

’மோக்லிக்கு சிறப்புக் கைத்தட்டல்!' சிறப்பு குழந்தைகளை குதூகலமாக்கிய ஜங்கிள் புக்

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்காக, சென்னை சத்யம் திரையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்ட `ஜங்கிள் புக்' சிறப்புக் காட்சி, நெகிழ்வு மணித் துளிகளாக இருந்தன. 

படம் தொடங்கியதும் விளக்குகள் முழுமையாக அணைக்கப்படாமல், மென்மையான ஒளியில் கடைசி வரை திரையிடப்பட்டது. ஒலி அமைப்பும் எந்தத் திடுக்கிடலும் இல்லாமல், கச்சிதமாகக் குறைக்கப்பட்டிருந்தது. ஒரு திரைப்படத்தின் தனித்துவம் பற்றிப் பேசியிருப்போம்; திரையரங்குகளின் தனித்துவம் பற்றிப் பேசியிருப்போம். பார்வையாளர்களின் தனித்தன்மை பற்றிப் பேசியது நிகழ்ந்ததுண்டா, அன்று இருந்தது.

பெரும்பாலான பெற்றோர்கள், ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்களாக இருப்பது, படம் தொடங்கும் முன்பும், இடைவெளியின்போதும் தங்கள் இடத்தைவிட்டு எழுந்துவந்து நலம் விசாரித்துக்கொண்டதில் தெரிந்தது. அது ஒரு திரையரங்கு என்பது மறைந்து, உறவுகள் சங்கமிக்கும் விழா மண்டபம் போன்ற நெகிவைத் தந்தது. தாத்தா, பாட்டி, அத்தை, அப்பா, அம்மா, உடன் பிறந்தவர்கள் என ஒரு குழந்தைக்காகப் பெரிய குடும்பமே வந்திருந்ததைப் பார்க்கையில், நெகிழ்வுகொள்ளாமல் இருக்க முடியுமா?

`பால விஹார் சிறப்புப் பள்ளி'யிலிருந்து இருபதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் வந்திருந்தனர். இரண்டு ஆசிரியர்களின் சொல்லுக்கு மந்திரம்போல அந்தக் குழந்தைகள் கட்டுப்பட்டது ஆச்சர்யமாக இருந்தது. தங்கள் ஆசிரியர் அமர்ந்துவிட்டாரா என்று ஒரு குழந்தை பரிதவிப்புடனே கவனித்துக்கொண்டிருந்ததை அன்றைய நாளின் கவித்துவம். இதுபோன்ற குழந்தைகளை எப்படிக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதை அவர்களின் பெற்றோர் அறிவர். அவர்களை எப்படி நடத்த வேண்டும் என்பதைச் சமூகம் உணர்ந்திருக்கிறதா, இன்னமும் சந்தேகம்தான்.

அவர்களுக்குத் தேவை அனுதாபப் பார்வை அல்ல. நம் கண்களின் மொழி அவர்களுக்குப் புரியவும் போவதில்லை. அது, பெற்றோரை மனதளவில் பலவீனப்படுத்தும், சங்கடத்தில் ஆழ்த்தும். நம்மால் செய்யக்கூடிய சேவை, அவர்களிடம் இயல்பாக நடந்துகொள்வது/ நடத்துவதுதான். திரையரங்கில் அன்று அந்தச் சங்கடமே இல்லை. அங்கிருந்த ஒவ்வொரு பெற்றோரும் சிறப்புக் குழந்தைகளைக் கவனித்துக்கொள்வதின் சவால்களை அறிந்திருந்தனர்.

திரையில், மௌக்லி வரும்போதெல்லாம் சில குழந்தைகள் உற்சாகத்தில் கைதட்டி, சத்தம் எழுப்பினர். 17 வயது மதிக்கத்தக்கச் சிறுவன் ஒருவன், ஓயாமல் பேசிக்கொண்டிருந்தான். மற்றுமொரு குழந்தை, கடைசி வரை இருக்கையில் அமராமல் எழுந்து எழுந்து நின்றுகொண்டே இருந்தான். அவன் தந்தை பகீரதப் பிரயத்தனப்பட்டார். ஒரு நொடி திரையை மறைத்தாலோ, பலமாகத் தும்மிவிட்டாலோ, மிகப் பெரிய இடையூறாக நினைத்து முறைக்கும் சக மனிதர்களையே திரையரங்கில் பார்த்து பழக்கம் நமக்கு. ஆனால், இவை எதையும் சலிப்பின்றி, முகச்சுழிப்பின்றி ஏற்று அனைவரும் படத்தைத் தொடர்ந்து பார்த்தது நெகிழ்வின் உச்சம். 

படத்தைப் பற்றி...

2016-ம் ஆண்டு, வால்ட் டிஸ்னி தயாரிப்பில் வெளியானது, `ஜங்கிள் புக்'. 1894-ம் ஆண்டில் வெளியான `ஜங்கிள் புக்' நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம். நம்மில் பலருக்கும் `ஜங்கிள் புக்' பரிச்சயமானது தூர்தர்ஷனில். `வசனமாடா முக்கியம்‘ என இந்தியில் ஓடும் ஜங்கிள் புக்கை வாய் பிளந்து பார்த்திருப்போம்.

சிறுவயதிலிருந்தே ஓநாய்களோடு வளரும் குட்டிப் பையன் மௌக்லியை, ராக்‌ஷா என்ற பெண் ஓநாய், தன் மகனாகவே வளர்க்கிறாள். வறட்சி காலத்தில், அனைவருக்கும் பொதுவான குளத்தில் மௌக்லியும் தண்ணீர் அருந்த வருகிறான். பல விலங்குகள் முதன்முறையாக மௌக்லியைப் பார்க்கிறார்கள். ஷேர்கான் என்ற புலியோ, மௌக்லியைக் கொல்ல முடிவெடுக்கிறது. கருஞ்சிறுத்தை பகீரா உதவியுடன் மௌக்லியைத் தப்பிக்கவைக்கின்றன ஓநாய்கள்.

``எனக்கு நான் எப்படியோ, அதேமாதிரிதான் நீயும். திரும்பி வந்துடு” எனப் பாசமாகச் சொல்லும் ராக்‌ஷாவும், ``நீயும் நானும் நண்பர்கள் இல்லே. இங்கிருந்து கிளம்பு” எனப் போலியாகக் கோபித்துக்கொள்ளும் பலூ என்ற கரடியும் நம் கண்களை ஈரப்படுத்துகின்றன. இயக்குநர் ஜான் ஃபௌரு ( Jon Favreau), இசையமைப்பாளர் ஜான் டெப்னிக் மற்றும் CGI டீம் கடுமையாக உழைத்து இருக்கிறார்கள். இவர்கள் எல்லோரையும் தனது நடிப்பால் ஓவர் டேக் செய்துள்ளார், மௌக்லியாக நடித்திருக்கும் நீத் செத்.

`ஜங்கிள் புக்' புத்தகத்தைத் தன் மகள் ஜோஸ்பினுக்காக 1894-ம் ஆண்டு வெளியிட்டார் ரூட்யார்ட் கிப்ளிங். 1899-ம் ஆண்டு ரூட்யார்டின் மகள் ஜோஸ்பின் இறந்துபோனாள். மகளுக்காக எழுதிய இந்தக் கதை, அவர் மகளைத் தவிர உலகமே படித்துக்கொண்டிருக்கிறது. இன்னமும் பல ஆண்டுகளுக்கு நிலைக்கப்போகும் கதைகளை கிப்ளிங் எழுதத் தூண்டிய ஜோஸ்ஃபீனுக்கு நன்றி.

ஞாயிறு காலைக் காட்சி வியாபார ரீதியாக எத்தனை முக்கியமாக இருந்தாலும், சிறப்புக் காட்சிக்காக ஒதுக்கிய சத்யம் திரையரங்கையும், நேர்த்தியாக ஒருங்கிணைத்த சென்ஸ் குழுவினரையும், ஒரு குழந்தைக்காகக் குடும்பம் குடும்பமாக வந்த பெயர் தெரியாத மனிதர்களையும் பாராட்டாமல் இருக்க முடியாது. 

வெளியே வந்தால் ரெட்கார்பெட், ஃப்ளாஷ் லைட் மற்றும் மைக்குகள். குழந்தைகள் அதையும் ரசித்திருப்பார்கள் என நம்புகிறேன். மகிழ்ச்சியின் சாயலை மறைக்காத முகங்களுடன் விடைபெற்றுக்கொண்ட பெற்றோரைப் பார்க்கையில், ஒருவேளை காட்டைவிட்டு மொக்லி வந்தாலும், நேசிக்கக்கூடிய மனித உலகம் இருக்கிறது என்ற நம்பிக்கை உண்டானது.   

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு