Published:Updated:

கனவு, காதல், முத்தம், களேபரம்.. `அர்ஜுன் ரெட்டி' ஹீரோவா இவர்! - `கீதா கோவிந்தம்'

கனவு, காதல், முத்தம், களேபரம்.. `அர்ஜுன் ரெட்டி' ஹீரோவா இவர்! - `கீதா கோவிந்தம்'
கனவு, காதல், முத்தம், களேபரம்.. `அர்ஜுன் ரெட்டி' ஹீரோவா இவர்! - `கீதா கோவிந்தம்'

`கீதா கோவிந்தம்' விமர்சனம்.

ருங்கால மனைவி குறித்து ஏகத்துக்கும் கனவு காணும் இளைஞன், கனவில் வரும் அதே பெண்ணை எப்படிச் சந்திக்கிறான். அவர்களின் காதல் எப்படிக் கரை சேர்கிறது என்பதைச் சொல்கிறது, `கீதா கோவிந்தம்'. 

கல்லூரி பேராசிரியராக இருக்கும் விஜய் கோவிந்த் (விஜய் தேவரக்கொண்டா), தன் கனவில் வரும் பெண்ணைக் காதலிக்க ஆரம்பித்து, அந்தப் பெண்ணைத் தேடி அலைகிறார். பார்க்கும் பெண்களையெல்லாம் தன் கனவில் வந்த பெண்ணாக இருக்குமோ... என சந்தேகப்படுகிறான். பிறகு, தன் தங்கை நிச்சயத்துக்காக சொந்த ஊருக்குச் செல்லும் பேருந்தில் கீதாவை (ராஷ்மிகா மந்தனா) முதல் முறையாகப் பார்க்கிறான். கனவில் வந்த பெண் இவள்தான் என நினைக்கிறான், கோவிந்த்.

அதிர்ஷ்டம் ஆஜரான மாதிரி அவன் அருகிலேயே கீதா அமர்கிறாள். இருவருக்கும் நட்பு மலர்கிறது. காதலை சொல்லத் துடிக்கும் கோவிந்துக்கு நண்பன் ராமகிருஷ்ணா அறிவுரை என்ற பெயரில், கீதா தூங்கும் சமயம் பேருந்திலேயே கீதாவுக்கு முத்தம் கொடுக்கச் சொல்கிறான். தன்னிலை உணர்ந்த விஜய், செல்ஃபி மட்டும் போதுமென முடிவு செய்கிறான். பிறகு நடக்கும் ஒரு விபரீதத்தின் விளைவாக, கீதா விழித்துக்கொள்கிறாள். நடந்த விபரீதத்தை கீதா தன் அண்ணன் ஃபணிந்திராவிடம் (சுப்புராஜு) சொல்கிறாள். இந்த விஷயம் அப்பாவுக்குத் தெரிந்தால் அவமானமாகிவிடும் எனக் கெஞ்சும் கோவிந்தை, கட்டிப் போடுகிறார் கீதா. எப்படியோ தப்பித்து வீட்டுக்குப் போனால், தங்கைக்குப் பார்த்திருக்கும் வரனே ஃபணிந்திராதான் என்பது தெரிய வருகிறது. அதற்கு பின் நடக்கும் காமெடி களேபரங்களுக்குப் பிறகு, கீதாவை கோவிந்த் கைப்பிடித்தாரா இல்லையே என்பதே, `கீதா கோவிந்தம்' சொல்லும் காதல் கீதம்.

சூழ்நிலைகளால் கீதாவின் கண்களுக்கு ஜொள்ளு பார்ட்டியாகவே காட்சியளிக்கிறார் கோவிந்த். விஜய் தேவரக்கொண்டா `மேடம் மேடம்' என உருகும் காட்சிகளில் `அர்ஜுன் ரெட்டி' ஹீரோவா இவர் எனக் கேட்கத் தோன்றுகிறது. தெலுங்கில் அறிமுகமாகும் ராஷ்மிகா மந்தனா, கண்களாலேயே அதட்டி, நடிப்பால் அரெஸ்ட் செய்கிறார். கெஞ்சினால் மிஞ்சுவது, மிஞ்சினால் கெஞ்சுவது... என இருவருக்குமான கெமிஸ்ட்ரி படத்தின் இறுதிவரை ரசிக்க வைக்கிறது. நித்யா மேனனின் கேமியோ ஃப்ரெஷாக இருக்கிறது.   

வழக்கமாக தமிழில் வரும் காதல் படங்களில் நாயகன் - நாயகி மட்டுமே காதல் செய்தால் போதுமானதாக இருக்குமென நினைப்பார்கள். ஃபேமிலி சென்டிமென்ட் அதிகமாக இருக்கும் தெலுங்கு படங்களில் நாயகன் குடும்பமும், நாயகி குடும்பமும் காதல் செய்யவேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. தேவரக்கொண்டாவின் நண்பர்களாக வரும் ராமகிருஷ்ணா, அபய் பெதிகன்டி காமெடிக்கு வலு சேர்த்துள்ளனர். இரண்டாம் பாதியில் லண்டன் மாப்பிள்ளையாக வரும் வெண்ணிலா கிஷோர் படத்துக்கு புது ட்விஸ்ட் கொடுத்தும், காமெடியைக் கூடுதலாக்கியும் செல்கிறார்.

ரொமான்ஸ் ஜானர் படங்களின் உயிரோட்டமே, இசைதான். கோபி சுந்தரின் இசையில் `இன்கேம் இன்கேம்' பாடல் கொக்கி போட்டதுபோல் மற்ற பாடல்கள் இல்லையென்றாலும், படத்துக்கு அவசியமான ஓட்டத்தைப் பாடல்களிலும், பின்னணி இசையிலும் கொடுத்திருக்கிறார். படத்தை எழுதி இயக்கியுள்ள பரசுராம், ஒரு சிறிய நிகழ்வைச் சுற்றி முழுப் படத்தையும் நகர்த்தியிருப்பது நேர்த்தி. தனது மாணவிக்கு தன்மேல் ஏற்பட்ட உணர்வை நாயகன் எடுத்துரைக்கும் இடங்களில் வசனங்களில் முதிர்ச்சியும், காதலர்களின் உணர்வுகளைக் காட்சிப்படுத்திய விதத்தில் இளமையையும் கலந்தளித்திருக்கிறார், இயக்குநர். 

பிக் பாஸ் வீடு போல் அதிக கேரக்டர்கள், இரண்டாம் பாதி நீளமென இருந்தாலும், காதல், காமெடி காட்சிகள் நம்மைப் படத்தோடு ஒன்றவைக்கின்றன. தெலுங்கு ஹீரோக்களின் ஆக்‌ஷன் படங்களை மட்டுமே ரீமேக் செய்யும் தமிழ் ஹீரோக்களே... இந்த மாதிரி ரொமான்டி காமெடி படங்களையும் கொஞ்சம் கவனிங்க பாஸ்!

அடுத்த கட்டுரைக்கு