Published:Updated:

``புற்றுநோய் சிகிச்சையின்போது உண்மையானவர்களை அடையாளம் கண்டேன்!''- மனம் திறந்த மனிஷா கொய்ராலா

``புற்றுநோய் சிகிச்சையின்போது உண்மையானவர்களை அடையாளம் கண்டேன்!''- மனம் திறந்த மனிஷா கொய்ராலா
News
``புற்றுநோய் சிகிச்சையின்போது உண்மையானவர்களை அடையாளம் கண்டேன்!''- மனம் திறந்த மனிஷா கொய்ராலா

அமைதியான வாழ்க்கையை வாழ விரும்பும் மனிஷாவிற்கு இரண்டு நாள்களுக்கு முன் (16 ஆகஸ்ட்) 48-வது பிறந்த நாள். மும்பை ஹோட்டலில் நடந்த விழாவில் ஷாருக் கான், ரேகா, சஞ்சய் லீலா பன்சாலி எனப் பல பாலிவுட் பிரபலங்கள் திரண்டு நின்று வாழ்த்தினர்.

னிஷா கொய்ராலா 1990-களில் தமிழ், இந்தித் திரையுலகை கலக்கியவர். 1970- ம் ஆண்டு நேபாள அரசக் குடும்பத்தில் பிறந்த அவருக்கு அரசியலில் ஈடுபட எல்லாம் விருப்பமில்லை. வாரணாசியில் பாட்டியுடன் வசித்து வந்த அவருக்கு மாடலில் ஈடுபட வேண்டுமென்பதே ஆசை. மும்பை நகரில் மாடலிங்கில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்படியே, இந்தி சினிமாவுக்குள் கால் பதித்த மனிஷாவுக்கு வினு வினோத் சோப்ரா இயக்கத்தில் வெளியான `1942 லவ் ஸ்டோரி' இந்திப் படம் அடையாளம் கொடுத்தது. மணிரத்னத்தின் `பம்பாய்’, சங்கரின் `இந்தியன்’ படங்கள் மனிஷாவுக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தன. நிறைய இந்திப் படங்களில் நடித்தார். 

பாலிவுட்டின் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த மனிஷா 2010-ம் ஆண்டு நேபாள பிசினஸ்மேன் சாம்ராட் தாகலை மணந்தார். இந்தத் திருமணம் நீடிக்கவில்லை. இரு ஆண்டுகளில் முறிந்து போனது. `முதல் திருமண வாழ்க்கை தோல்விக்கு நானே முழுப் பொறுப்பு. இதற்காக யாரையும் நான் குற்றம் சொல்ல விரும்பவில்லை' என்றார் மனிஷா. திருமண வாழ்க்கை முறிந்த சோகத்திலிருந்து மீள்வதற்குள் அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. கர்ப்பப்பை புற்று நோயால் அவர் பாதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. நொந்து போனார். சுற்றி உறவுகள் இல்லாமல் தனிமையை உணர்ந்தார். எப்படியும் புற்று நோயை வென்று விட முடியுமென நம்பிக்கை மட்டும் அவருக்குள் இருந்தது.

இந்த நேரத்தில் மனிஷா கொய்ராலாவுக்கு நைஜீரியாவைச் சேர்ந்த லண்டன் பிசினஸ்மேன் செஸில் ஆன்டனியின் (Cecil Anthony) அறிமுகம் கிடைத்தது. புற்று நோயிலிருந்து மீள மனிஷாவுக்கு இந்த செஸில் பல வகைகளில் உதவியாக இருந்தார். இந்திய மருத்துவமனைகளிலும் அதைத் தொடர்ந்து அமெரிக்க மருத்துவமனைகளிலும் புற்று நோய்க்குச் சிகிச்சை எடுத்தார். அமெரிக்காவுக்குப் புற்றுநோய் சிகிச்சைக்காக மனிஷா செல்லும் போதெல்லாம் செஸில் ஆன்டனி பக்கபலமாக இருந்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

``புற்றுநோய்தான் எனக்கு உண்மையான நண்பர்களை அடையாளம் காட்டியது. பல்வேறு இன்னல்களைச் சந்தித்தேன். என்னையே மறு ஆய்வு செய்துகொண்டேன். யார் நல்லவர்கள் கெட்டவர்கள் என்று புரிந்துகொண்டேன். இந்த 5 ஆண்டுகளில் நான் சந்தித்த இன்னல்கள் அதிகம். பல சமயங்களில் இதயம் நொறுங்கிப் போனேன். அப்போதுதான் பெற்றோரின் அருமையை நான் உணர்ந்தேன். அந்தச் சமயத்தில் என் குடும்பத்தினர் என்னை ஒரு குழந்தைபோல பார்த்துக்கொண்டனர்'' என்று வேதனையான காலகட்டம் குறித்து மனிஷா பகிர்ந்திருந்தார்.

புற்றுநோய் குணமான பிறகு மனிஷா மீண்டும் பாலிவுட்டுக்குள் கால் பதித்தார். ராம்கோபால் வர்மாவின் `பூத்' த்ரில்லர் படம்தான் புற்றுநோயிலிருந்து மீண்ட பிறகு அவர் நடித்த முதல் படம். தற்போது சினிமாக்களில் நடிக்க மனிஷா அதிக ஆர்வம் காட்டுவதில்லை. நல்ல கதைகளை கேட்டால் நடிக்க சம்மதிக்கிறார். சமீபத்தில் வெளியான 'சஞ்சு' படத்தில் கௌரவ வேடத்தில் மட்டும் தலை காட்டினார். மற்றபடி, அமைதியான வாழ்க்கையை வாழ விரும்பும் அவருக்கு இரண்டு நாள்களுக்கு முன் (16 ஆகஸ்ட்) 48-வது பிறந்த நாள். மும்பை ஹோட்டலில் நடந்த விழாவில் ஷாருக் கான், ரேகா, சஞ்சய் லீலா பன்சாலி எனப் பல பாலிவுட் பிரபலங்கள் திரண்டு நின்று வாழ்த்தினர். நடிகை ரேகா, மனிஷா தலையில் மலர்கள் தூவி வாழ்த்தினார். நடிகர் ஷாருக் கான் கேக் ஊட்டி மகிழ்ந்தார். ஷாருக்கானின் `தில்சே' பட நாயகி மனிஷா என்பது குறிப்பிடத்தக்கது.

பிறந்தநாள் விழா முடிந்த பிறகு, `நேற்றைய இரவை என் வாழ்க்கையில் மறக்கவே முடியாது..#friendship4ever”, `Lovely night..celebration of life.. thank you’ என்று மகிழ்வுடன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ``புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தபோது ஒரு நடிகையாக நான் பல்வேறு இழப்புகளைச் சந்தித்தேன். தலைமுடியை இழந்தேன். கீமோதெரபி போன்ற சிகிச்சைகள் எடுக்கும் போது நம் உடலிலும் பல மாற்றங்கள் ஏற்படும். அதையெல்லாம் எதிர்கொள்ள நான் மனதளவில் தயாராகவே இருந்தேன். சிகிச்சை முடிந்தபிறகு என்னைப் பார்த்தால் ஒரு ஏலியன் போலவே தெரிந்தேன். கண் புருவம் கூட கிடையாது. இதையெல்லாம் கடந்து இன்று நான் மீண்டும் நடிக்கத் தொடங்கியிருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் குடும்பத்தினர்தான்!'' என்று மனிஷா மனம் திறந்து பதிவிட்டிருந்தார்.

மீண்டு வந்த தேவதைக்கு வாழ்த்துகள்!