Published:Updated:

''தமிழக மாணவர்களுக்கு சல்யூட்!’’ ‘மாணவன்’ ஆதி

''தமிழக மாணவர்களுக்கு சல்யூட்!’’ ‘மாணவன்’ ஆதி
''தமிழக மாணவர்களுக்கு சல்யூட்!’’ ‘மாணவன்’ ஆதி

"இளைஞர்களால் உலகையே ஆளும் திறன் இந்திய தேசத்துக்கு உரித்தாகும்!" 'மாணவன்' ஆல்பம் வெளியீட்டு விழாவில் ஹிப்ஹாப் ஆதி பெருமிதம்!

`இளைஞர்கள் எப்பொழுது மண்ணுக்காகவும், சமூகத்துக்காகவும் போராட வீதிக்கு வந்தார்களோ, அப்பொழுதே சமூக மாற்றத்துக்கான விதை விழுந்துவிட்டது. உரிமையை மீட்கக் குரல் கொடுத்த போராளிகளே, அதிகாரிகளாக மாறினால் அதுதான் நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும். புரட்சி என்பது வீதியில் இல்லை மாணவர்கள், இளைஞர்களின் முனைப்பில் இருக்கிறது' என்ற பார்முலாவை வலியுறுத்துகிறது `மாணவன்' இண்டிபெண்டன்ட் ஆல்பம். `வாடி புள்ள வாடி', `டக்கரு டக்கரு' இவற்றின் வரிசையில் ஹிப்ஹாப் ஆதி இசையமைப்பில், ஆனந்த் ராம் இயக்கத்தில் உருவாகியிருக்கிறது `மாணவன்' . 

இதன் வெளியீட்டு விழா மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடைபெற்றது. யூ-டியூப் பிரபலங்களான மதன் கௌரி, `எருமசாணி’ விஜய், ஆர்.ஜே விக்னேஷ் மற்றும் பலர்  இந்த வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டனர். இளைஞர் பட்டாளத்தின் ஆரவாரத்துக்கு மத்தியில் மேடையில் தோன்றினார் ஹிப்ஹாப் தமிழா ஆதி.

இதில் கலந்துகொண்ட ஹிப் ஹாப் தமிழா ஆதி, ``தமிழகம் முழுவதும் உள்ள பல கல்லூரிகளிலிருந்து கிட்டத்தட்ட 90 மாணவர்களின் உழைப்பில் உருவானதுதான் இந்த `மாணவன்’. ரிசர்ச், டெக்னிக்கல் டீம், கோ-ஆர்டினேஷன் இப்படிப் பல வழிகளில் மாணவர்கள் வேலை செஞ்சு இந்த மாணவனை எடுத்து முடிச்சிருக்காங்க. ஆனந்த் ராம் இதை இயக்கியிருக்கிறார். 
நட்பையும் தாண்டி இந்தக் கருத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கணுங்கிற எண்ணத்தில் வருகை தந்திருக்கும் அன்பு நண்பன் விக்னேஷ், யூ-டியூப் பிரபலங்களான மதன் கௌரி, விஜய், `மீசைய முறுக்கு’ டீமுக்கு நன்றி. அத்தனைக்கும் மேல நான் இசையமைச்சாலும், நடிச்சாலும், இயக்கினாலும் ஆதரவு தரும் ரசிகர்களுக்கு நன்றி. உங்க புண்ணியத்தில்தான் படங்களில் பிஸியாக இருந்தாலும் ரெண்டு வருஷத்துக்கு ஒரு இண்டிபெண்டட் மியூசிக் ஆல்பம் பண்ணிடுவேன்.

2020 ம் ஆண்டில் இந்தியா, கிட்டத்தட்ட 64% இளைஞர்களைக் கொண்ட நாடாக மாறும். உலகிலேயே அதிக இளைஞர்களைக் கொண்ட நாடாக இந்தியா உருவெடுக்கும். இதனால் 2027 க்குள் இந்தியா வல்லரசாகும் வாய்ப்புள்ளது என்கிறது ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்ட அறிக்கை (UNDP). இந்த இளைஞர்களின் சக்தியை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தினால் உலகையே ஆளும் திறன் இந்திய தேசத்துக்கு உரித்தாகும். உலக நாடுகளுடைய கவனம் இப்போ இந்தியா மேல திரும்பியிருக்கு. இனி ஆக்கபூர்வமான சிந்தனையுடன் நீங்கள் காண விரும்பும் மாற்றத்துக்கான செயல்களை முன்னெடுங்கள். மாணவர்களின் சக்தி மிகப் பெரியது. மாற்றங்களைக் கொண்டு வரணும்னா முதலில் நாம மாறணும். மாற்றங்கள் மாணவர்களிடமிருந்து தொடங்கணும். ஓர் இளைஞனுக்குக் கல்விதான் சிறந்த ஆயுதம். `நம்மில் இருக்கட்டும் ஆயிரம் தடை ...நம்முடன் இருப்பது மாணவர் படை; இன்றைய மாணவன் நாளைய மன்னவன்' என்பதை மனதில் வைத்துச் செயல்படுங்கள்" என்றவர், ``மாணவன்னு என்னையும் சேர்த்துதான் சொல்றேன். இப்போ பி.ஹெச்.டி பண்ணிட்டு இருக்கேன். அதையும் பதிவு செஞ்சுடறேன்’’ என்றார். 

இயக்குநர் ஆனந்த் ராம்,``மாணவன் பற்றி பேச ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி இதற்கு இசை அமைத்து, தயாரித்து, கதைக்களத்தை அமைத்த ஹிப்ஹாப் ஆதி அண்ணாவுக்கும் எங்க டீமுக்கும் நன்றி சொல்லியே ஆகணும். அதற்கடுத்து இதில் உழைத்த மாணவர்களுக்கு நன்றி தெரிவிச்சுக்குறேன். தூத்துக்குடி, மதுரை, திருச்சி, சென்னை, பாண்டிச்சேரினு பல ஊர்களிலிருந்து இளைஞர்களும், மாணவர்களும் இதில் பங்களிச்சிருக்காங்க. எங்களுடைய முழு உழைப்பையும், முயற்சியையும் கொடுத்து `மாணவனை' உருவாக்கியிருக்கோம்.

சமூகத்துக்குத் தேவையான கருத்தை இளைஞர்கள் உங்களின் மத்தியில் வெச்சிருக்கோம். இத்தனை நாளாக ரசிகர்கள் எங்களுக்கு மிகப் பெரிய ஆதரவு கொடுத்து இருக்கீங்க. இப்போ எங்கள் கனவை உங்கள் மத்தியில் விதைச்சிருக்கோம். மாறுவோம். மாற்றுவோம். நம் அடையாளத்தை உணர்வோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு