Published:Updated:

ஹீரோயின் நயன்தாராவாம்... ஆனா, ஹீரோ யோகி பாபு ப்ரோ! - கோலமாவு கோகிலா விமர்சனம்

ஹீரோயின் நயன்தாராவாம்... ஆனா, ஹீரோ யோகி பாபு ப்ரோ! - கோலமாவு கோகிலா விமர்சனம்

ஹீரோயின் நயன்தாராவாம்... ஆனா, ஹீரோ யோகி பாபு ப்ரோ! - கோலமாவு கோகிலா விமர்சனம்

ஹீரோயின் நயன்தாராவாம்... ஆனா, ஹீரோ யோகி பாபு ப்ரோ! - கோலமாவு கோகிலா விமர்சனம்

ஹீரோயின் நயன்தாராவாம்... ஆனா, ஹீரோ யோகி பாபு ப்ரோ! - கோலமாவு கோகிலா விமர்சனம்

Published:Updated:
ஹீரோயின் நயன்தாராவாம்... ஆனா, ஹீரோ யோகி பாபு ப்ரோ! - கோலமாவு கோகிலா விமர்சனம்

ம்மாவுக்கு வந்த புற்றுநோயால் அலங்கோலமாகிப்போகும் வாழ்க்கையை மீண்டும் ரங்கோலி கோலமாக மாற்றப் போராடும் மகளின் கதையே `கோலமாவு கோகிலா.' 

மானம்தான் பாவாடை சட்டை, மத்ததெல்லாம் வாழை மட்டையென வாழும் கோகிலா. க்யூவில் குறுக்கே வந்தவனிடம் சண்டைபோட்டு சட்டையைக் கிழித்துக்கொள்ளும் ஏ.டி.எம் செக்யூரிட்டி அப்பா. கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் தங்கை. இவர்களைக் கட்டிமேய்க்கும் அம்மா. காசு பணம் பெரிதாய் இல்லையென்றாலும் நீதி, நேர்மையென வாழும் குடும்பம். திடீரென ஒருநாள் அம்மாவுக்குப் புற்றுநோய் இருக்கும் தகவல் அணுகுண்டாய் வெடிக்கிறது. 3 மாத இடைவெளிக்குள் 15 லட்சம் பணம் திரட்டினால், நோயைக் குணமாக்கிவிடும் மெல்லிய வாய்ப்பு. எங்கெங்கோ அலைந்தும் பணத்தைத் திரட்ட முடியாமல் தவித்து நிற்கையில், டிரக் ஸ்மக்லர்களின் உலகத்துக்குள் சென்றுவரும் அரியச் சந்தர்ப்பம் கிடைக்கிறது. அதைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்பவர் பணம் கோடிகளில் புரளும் அந்த உலகத்திலிருந்து தனக்குத் தேவையான லட்சங்களை ஈட்ட நினைக்கிறார். அதற்காக அவர் ஆங்காங்கே செக் புள்ளிகளை வைத்து, அவற்றைச் சரியாக இணைத்து கோலம் போட்டாரா என்பதே மீதிக்கதை.

கோலமாவு கோகிலாவாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா! முகத்தில் அப்பாவித்தனம் உச்சகட்டம். சாந்தமே சொரூபமாக முகத்தை வைத்துக்கொண்டு கிடைக்கும் கேப்பில் எல்லாம் வில்லன்களுக்கு ஆப்பு வைக்கையில் அப்ளாஸை அள்ளுகிறார். படம் முழுக்க அவர் முகத்திலிருக்கும் ஒருவித இறுக்கம்தான் கொஞ்சம் சறுக்குகிறது. மற்றபடி, நயன்தாரா ரசிகர்கள் அவர் கண்ணால சொக்குவதும், தன்னால சிக்குவதும் உறுதியோ உறுதி. 'கோகில'மே நீ குரல் கொடுத்தால் உன்னைக் கும்பிட்டு கண் அடிப்பேன்' எனக் கோகிலாவை ஒருதலையாய் காதலித்துத் திரியும் சேகராகப் யோகிபாபு. கூட்டிக் கழித்துப் பார்த்தால் படத்துக்கு ஹீரோவே அவர்தான் ப்ரோ. `ஷாட்புட் மண்டையன், ஷிரஞ்ச் மூஞ்சி, மொட்டையடிச்ச காட்டுக்குரங்கு' என விதவிதமான உருவகேலி பந்துகளை சுவரைப் பார்த்து எரிந்து சிரிக்கவைக்கிறார். கோகிலாவின் அப்பாவாக ஆர்.எஸ்.சிவாஜி, அம்மாவாக சரண்யா, தங்கையாக ஜாக்குலின், ஜாக்குலினை காதலிக்கும் அன்புதாசன், போதை மாஃபியாக்கள் ஹரீஷ் பேரடி, நான் கடவுள் ராஜேந்திரன், சார்லஸ் வினோத் என நடிகர்களின் பெயரை எழுதவே அடிஷனல் ஷீட் வாங்க வேண்டும். அனைத்து நடிகர்களுமே அந்தந்த கதாபாத்திரங்களுக்கு கச்சிதமான தேர்வு. அதிலும், டோனி எனும் கதாபாத்திரத்தை இனி மீம்களில் பார்க்கலாம். செம ரகளை மாமே!

`ப்ளாக் காமெடி' எனும் ஜானருக்கு நிறைவான நியாயம் செய்திருக்கிறார் இயக்குநர் நெல்சன். துப்பாக்கி, போதைமருந்து, மாஃபியா, போலீஸ், அடி, உதை, குத்து எனப் படத்தில் பரவிக் கிடக்கும் ரத்த வாடையை, காமெடி ரூம் ஸ்ப்ரே அடித்து காலி செய்திருக்கிறார். வசனங்கள் பல இடங்களில் தாறுமாறு, மீத இடங்களில் `கலக்கப்போவது யாரு'! நிறைய விஜய் டிவி முகங்கள், அதன் பாணி வசனங்களை மட்டும்  தவிர்த்திருக்கலாம். அது வெள்ளித்திரையில் விஜய் டிவி பார்ப்பதுபோன்ற உணர்வையே தருகிறது. நேர்ப்புள்ளி கோலம்போல் கொஞ்சம் சாதாரணமாகவே இருக்கும் திரைக்கதையில் ஊடுபுள்ளிகள் வைத்திணைத்து இன்னும் சுவாரஸ்யம் சேர்த்திருக்கலாம். இரண்டாம் பாதியில், கும்மிடிப்பூண்டி டு செங்குன்றம் டெம்போ பயணக் காட்சிகள் மற்றும் ஒரு சொம்பு தண்ணீர் கேட்டு ஒட்டுமொத்த கேங்கையும் போட்டுத்தள்ளும் காட்சிகள் ரிப்பீட் மோடில் போட்டவாறு மீண்டும் மீண்டும் நடப்பது, அயர்ச்சியை உண்டுபண்ணுகிறது. அந்த நேரங்களில் அன்புதாசன் - யோகிபாபு காமெடி மட்டும்தான் ஒரே ஆறுதல். டன் கணக்கில் இருக்க வேண்டிய அம்மா சென்டிமென்ட்டும் 90 கிலோதான் இருக்கிறது. முக்கியமாக, லாஜிக் எனும் ஏரியாவையும் கவனித்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். 

`கல்யாண வயசு’ பாடல் இணையத்தில் பயங்கர ஹிட். அரங்கில் விசில் சத்தம் பாடல் சத்தத்தை ஓவர்டேக் செய்கிறது. வாழ்த்துகள் அனிருத்! ஆனால், படத்தில் பின்னணி இசை வசனங்களை ஓவர்டேக் செய்கிறது. குறைத்திருக்கலாம் அனிருத். வித்தியாசமான விஷுவல் ட்ரீட் தந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சிவகுமார் விஜயன். ப்ளாக் காமெடி படங்களுக்கான விஷுவல் என்பதில் கச்சிதமான உழைப்பு.  நிர்மல் எடிட்டிங்கில் நிதானம் தெரிகிறது.

கதை, திரைக்கதையெல்லாம் தூக்கி ஓரம் வைத்துவிட்டு சீனுக்கு சீன் காமெடியை மட்டுமே குறிவைத்து கலகலப்பான கோலத்தைத்தான் போட்டு முடித்திருக்கிறாள் இந்த `கோலமாவு கோகிலா.'