Published:Updated:

மகளிர் மட்டும் - இந்தியப் பெண்களின் ரத்தமும் வலியுமான கதை

மகளிர் மட்டும் - இந்தியப் பெண்களின் ரத்தமும் வலியுமான கதை
பிரீமியம் ஸ்டோரி
மகளிர் மட்டும் - இந்தியப் பெண்களின் ரத்தமும் வலியுமான கதை

அவள் சினிமா சுகுணா திவாகர்

மகளிர் மட்டும் - இந்தியப் பெண்களின் ரத்தமும் வலியுமான கதை

அவள் சினிமா சுகுணா திவாகர்

Published:Updated:
மகளிர் மட்டும் - இந்தியப் பெண்களின் ரத்தமும் வலியுமான கதை
பிரீமியம் ஸ்டோரி
மகளிர் மட்டும் - இந்தியப் பெண்களின் ரத்தமும் வலியுமான கதை

மிழ் சினிமா என்பது எப்போதும் ஆண்களால் உருவாக்கப்படும் ஆண்கள் சினிமாவாகவே இருந்திருக்கிறது. தனக்கு நேரும் அநீதியைத் தைரியமாக எதிர்கொள்ளும் பெண்களைத் தமிழ் சினிமாவில் பார்ப்பது அரிது. சமீபகால சினிமாக்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன என்றாலும் பெண்ணுக்கான சுயத்தை உறுதி செய்யும்வகையில் வலுவான மாற்றங்களாக அவை இல்லை. ‘பெண்கள் காதலித்து ஆண்களைக் கழட்டிவிட்டுவிடுவார்கள்’ என்கிற ரீதியில் ஒரு பிம்பத்தை உருவாக்கி, அதற்காகக் குடித்துவிட்டுக் குத்துப்பாட்டு ஆடுவதும் ஆணாதிக்க நஞ்சு நிறைந்த வசனங்களை நாயகர்கள் பார்வையாளர்கள் மீது வீசுவதும், அதற்குத் திரையரங்குகளில் கைதட்டல்கள் எழுவதுமான காட்சிகளையும் பார்க்கிறோம். பெண்ணியப் படங்கள் என்று குறிப்பிடப்பட்ட ‘இறைவி’, ‘தரமணி’ போன்ற படங்களும் ஆண்களின் கதையைச் சொல்பவையாகவே இருக்கின்றன என்ற விமர்சனங்களிலும் நியாயம் இல்லாமல் இல்லை. இந்த நிலையில் பெண்களின் உணர்வுகளையும் பிரச்னைகளையும் பெண்களை மையப்படுத்தியே சொல்லும் படமாக வெளிவந்திருக்கிறது ‘மகளிர் மட்டும்’.

ஊர்வசி, சரண்யா பொன்வண்ணன், பானுப்ரியா மூவரும் கல்லூரிக்கால விடுதித் தோழிகள். 1978-ல் தீபாவளி அன்று ரிலீஸ் ஆன ‘அவள் அப்படித்தான்’ படத்தைப் பார்ப்பதற்காக சுவரேறிக் குதித்துப்போகிறார்கள். அதனால் பள்ளி நிர்வாகத்தால் வீட்டுக்கு அனுப்பப்படும் அவர்கள் அதற்குப்பிறகு சந்தித்துக்கொள்ளவில்லை. ஊர்வசி மகனின் காதலி ஜோதிகா ஓர் ஆவணப்பட இயக்குநர். பெரியாரிஸ்ட்டும்கூட. காலம் வெவ்வேறு திசைகளில் விசிறியடித்த மூன்று தோழிகளையும் சந்திக்க வைப்பதோடு, அவர்களுக்காக ஒரு பயணத்தையும் ஏற்பாடு செய்கிறார் ஜோதிகா. இதுதான் ‘மகளிர் மட்டும்’ கதை. இது வெறுமனே மூன்று பெண்களின் கதையாக இல்லாமல் இந்தியாவில் வாழும் பெரும்பாலான பெண்களின் ரத்தமும் வலியுமான கதையாக இருக்கிறது.

மகளிர் மட்டும் - இந்தியப் பெண்களின் ரத்தமும் வலியுமான கதை

ராணி அமிர்தகுமாரி (பானுப்ரியா) திருமணமாகி ஆக்ராவில் வசிக்கிறார். கணவரும் மகனும் ஓர் அரசியல் கட்சியின் தீவிர உறுப்பினர்கள். அவர்கள் வார்டு, மகளிர் வார்டாக அறிவிக்கப்படுகிறது. “உன் பெண்டாட்டியை நிறுத்து. ஜெயிச்சிடலாம்” என்கிறான் மகன். “பொம்பளைங்களை எல்லாம் வைக்கவேண்டிய இடத்தில வைக்கணும். இல்லைனா அவளுக பின்னால நாம போக வேண்டியிருக்கும்” என்கிறார் அப்பா. “என்ன பெரிய கவுன்சிலர், வீட்டு வேலை எல்லாம் பாத்துக்கிட்டு, அவங்க நீட்டுற இடத்தில கவுன்சிலர்னு கையெழுத்துப் போடணும், அவ்வளவுதான்” என்கிறார் ராணி அமிர்தகுமாரி. இது நவீன இந்தியாவின் சின்னதொரு குறுக்குவெட்டுத்தோற்றம். கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் அரசியலிலும் பெண்களுக்கு அளிக்கப்படுகிற வாய்ப்பும்கூட எப்படி ஆண்களால் சாமர்த்தியமாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதற்கான உதாரணம்.

சுப்புலட்சுமியின் (சரண்யா பொன்வண்ணன்) கணவர் (லிவிங்ஸ்டன்) தினமும் குடித்துவிட்டு வந்தாலும் அடித்து உதைப்பதில்லை. மாறாக சுய இரக்கமும் போதையும் மீதூர சினிமா பாடல்களைப் பாடி, அழுகிறார். படுத்தப் படுக்கையாக இருக்கும் மாமியாரோ, மருமகளைக் கரித்துக்கொட்டியபடியிருக்கிறார். வன்முறை என்பது நேரடியாக வெளிப்படுவதில்லை, மாறாக இருக்கும் அமைப்பே வன்முறையாகத்தான் இருக்கிறது என்பதைச் சொல்கிறது லிவிங்ஸ்டன் - சரண்யாவின் வாழ்க்கை. பயணத்துக்காக வீட்டை விட்டுக் கிளம்பும்போது, உறக்கத்தில் இருக்கும் தன் மாமியாரின் தலையை அன்போடு சரண்யா தடவிக்கொடுக்கும் காட்சி கவிதை. தன்னைக் கரித்துக்கொட்டினாலும்கூட தன் மாமியார், தன்னைப் போலவே இந்த அமைப்புக்குப் பலியாகிப்போன இன்னொரு அடிமை என்பதை உணர்ந்துகொண்டதன் வெளிப்பாடு அது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மகளிர் மட்டும் - இந்தியப் பெண்களின் ரத்தமும் வலியுமான கதை

பயணத்தின்போது மூன்று தோழிகளும் தங்கள் முதல் காதல் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் காட்சி உண்மையில் தமிழ் சினிமாவுக்கான சவால்தான். நீண்ட நாள்களுக்குப் பிறகு சந்திக்கும் தன் தோழியிடம் “கல்யாணம்கிறது மாயாஜால ஜெயில்” என்று வர்ணிக்கிறார் பானுப்ரியா. பிறிதொரு இடத்தில் அதைச் சுட்டிக்காட்டும் ஜோதிகா, “அதை எட்டி உதைக்கணும். உதைக்கற உதைல ஒண்ணு திறக்கணும், இல்ல ஜெயில் கதவு உடையணும்” என்கிறார். இன்னொரு காட்சியில் பெண்களின் பிரசவ வலி குறித்து உரையாடல் வருகிறது. “ஏன் பொண்ணுங்க மட்டும் கஷ்டப்பட்டுப் புள்ளை பெத்துக்கணும்? கோம்ஸ், நான் புள்ளை பெத்துக்க மாட்டேன்” என்கிறார் ஜோதிகா. குடும்பம் என்னும் அமைப்புக்கும் ஆணாதிக்கத்துக்குமான தொடர்பு குறித்து மார்க்ஸியம் விரிவாக விளக்கியிருக்கிறது. அதையும் தாண்டிச்சென்ற பெரியார், `பெண்கள் பிள்ளை பெறும் இயந்திரமல்ல. குழந்தை பெறுவதா வேண்டாமா என்பதைப் பெண்கள்தான் முடிவு செய்ய வேண்டும்' என்றார். இத்தகைய தீவிரமான அரசியல் கருத்துகளை, பார்வையாளர்களுக்கு அதிர்ச்சியளிக்காமல் போகிறபோக்கில் பதிவு செய்திருப்பது பாராட்டத்தக்கது.

‘மகளிர் மட்டும்’ சாதியம் குறித்த விமர்சனத்தையும் கையிலெடுத்திருக்கிறது. உடுமலைப்பேட்டை சங்கர் படுகொலை என்ற சமகாலக் கொடூரத்தைக் காட்சியாக வைத்திருப்பதோடு, அந்தக் கொலை முயற்சியில் சங்கர் தப்பிவிடுவதாகவும், சங்கருக்கும் கௌசல்யாவுக்கும் ஜோதிகா திருமணம் செய்துவைப்பதாகவும் நீளும் காட்சிகள், நிறைவேற வேண்டிய கனவு, அல்லது நாம் தவறவிட்ட மனச்சாட்சி.

மகளிர் மட்டும் - இந்தியப் பெண்களின் ரத்தமும் வலியுமான கதை

‘சாதியமைப்பு காப்பாற்றப்பட வேண்டு மானால் சாதிமறுப்புத் திருமணங்களை அனுமதிக்க முடியாது, பெண்களுக்குத் தங்கள் வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் உரிமையை வழங்க முடியாது’ என்பதுதான் இந்திய சாதியமைப்பின் தந்திரம். எனவே, பெண் விடுதலை என்பது சாதியொழிப்புடன் தொடர்புடையது. இந்தப் புரிதலை அழகாகப் பதிவுசெய்திருக்கிறது ‘மகளிர் மட்டும்’. போகிறபோக்கில் வெறுமனே ஆவணப்பட இயக்குநராக மட்டுமல்லாமல், பெரியார், அம்பேத்கர் படங்களைத் தன் வீட்டில் மாட்டியிருப்பவராகவும் கறுப்புச்சட்டை அணிந்து சுயமரியாதைத் திருமணத்தில் உரையாற்றுபவராகவும் ஜோதிகா பாத்திரம் சித்திரிக்கப்பட்டிருப்பது சிறப்பு. பொதுவாகத் தமிழ் சினிமாக்களில் பெரியாரிஸ்ட்கள் காட்டப்படுவதே அபூர்வம். அப்படித் தப்பித்தவறி வந்த இரண்டொரு கறுப்புச்சட்டைகளையும் ஆண்களே அணிந்திருந்தார்கள். தமிழ் சினிமாவின் முதல் பெண் பெரியாரிஸ்ட்டாக பிரபா பாத்திரத்தைச் சொல்லலாம்.

‘தூய்மை இந்தியா’ சுவர் விளம்பரத்துக்குக் கீழே செப்டிக் டேங்கில் இறங்கிச் சுத்தம் செய்து கொண்டிருப்பார் ஒருவர். அதைத் தன் கேமரா வழியாக ஆவணப்படுத்துவார் ஜோதிகா. இப்படி அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகளை வைத்த இயக்குநர் பிரம்மாவுக்குப் பாராட்டுகள். படத்தில் பிரச்னைகளே இல்லையா என்றால் நிச்சயமாக இருக்கிறது. காட்சியமைப்புகளில் இருக்கும் மெல்லிய நாடகத்தன்மை இறுதிக்காட்சியில் உச்சத்தை அடைகிறது. பெண்களின் பிரச்னைக்குக் காரணமான ஆண்கள் சடாரென்று ‘திருந்தி’ விடுகிறார்கள். ஒரு வணிக சினிமாவின் எல்லை இது என்பதை நாம் புரிந்துகொள்வதைத் தவிர வேறுவழியில்லை.

குடும்ப அமைப்பும் சாதியமும் பெண்களுக்கு இழைத்திருக்கும் அநீதியைச் சொல்லும் இந்தப் படம் வெறுமனே ‘மகளிர் மட்டும்’ பார்க்க வேண்டிய சினிமா அல்ல!