Published:Updated:

வைர மோதிரம், ஆதரவற்ற குழந்தைகளுடன் நடனம்... மும்பையில் நடந்த பிரியங்கா - நிக் நிச்சயதார்த்தம்! #PhotoStory

வைர மோதிரம், ஆதரவற்ற குழந்தைகளுடன் நடனம்... மும்பையில் நடந்த பிரியங்கா - நிக் நிச்சயதார்த்தம்! #PhotoStory
வைர மோதிரம், ஆதரவற்ற குழந்தைகளுடன் நடனம்... மும்பையில் நடந்த பிரியங்கா - நிக் நிச்சயதார்த்தம்! #PhotoStory

நிச்சயார்த்த விழாவில் பிரியங்கா சோப்ராவுக்கு, நிக் அணிவித்த வைர மோதிரம், பிரத்யேகமாக லண்டனில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு கிட்டதட்ட 2 கோடி.

பாலிவுட்டிலிருந்து ஹாலிவுட்டுக்குச் சென்று கலக்கிய நடிகை பிரியங்கா சோப்ரா, வெளிநாட்டு மருமகளாகவும் ஆகப்போகிறார். கடந்த சனிக்கிழமை, பிரியங்கா சோப்ராவுக்கும் அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனஸுக்கும் மும்பையில் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. தன் மற்றும் நிக்கின் குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் நிக்குடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஆகியவற்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பிரியங்கா.

முகேஷ் அம்பானி, நீடா அம்பானி மற்றும் மகள் இஷா அம்பானி, பாலிவுட் நடிகையும் பிரியங்கா சோப்ராவின் சகோதரியுமான பரிணிதி சோப்ரா, நடிகை ஆலியா பட், இயக்குநர் சஞ்ஜய் லீலா பான்சாலி, சல்மான் கானின் தங்கை அர்பிதா கான் எனப் பல பிரபலங்கள் இந்த நிச்சயதார்த்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர்.

2017-ம் ஆண்டு, நியூயார்க் நகரில் நடந்த ‘மெட் கலா’ (Met Gala) என்ற பிரபல ஃபேஷன் நிகழ்ச்சியில்தான், முதன்முறையாகப் பிரியங்கா சோப்ராவும் நிக் ஜோனஸும் சந்தித்தனர். அதன் பிறகு, பல பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாகக் கலந்துகொண்டனர். இரண்டு மாதங்களுக்கு முன்பு, நியூ ஜெர்ஸி நகரில் நடந்த நிக்கின் சகோதரர் ரசெல் டம்புரெல்லி (Rachel Tamburelli) திருமணத்தில், பிரியங்கா சோப்ரா கலந்துகொண்டது சமூக வலைதளங்களில் வைரலானது. தொடர்ந்து, பிரியங்காவுக்கும் நிக் ஜோனஸூக்கும் 11 வயது வித்தியாசம் என்ற செய்தியும் பரவியது. இவர்களின் காதலை சமூக வலைதளங்களில் மீம்களாகவும் விவாதமாகவும் மாற்றினர்.

இந்த ட்ரோல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, “என் முழு வாழ்க்கையும் குறிப்பாக, என் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பொதுவெளியில் கூறிவிட முடியாது. என் வாழ்க்கையில் 90 சதவிகிதம் பொதுவெளியில் இயங்குகின்றது. மீதமுள்ள 10 சதவிகிதம் என் தனிப்பட்ட வாழ்க்கை. நான் ஒரு பெண். என் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசாமல் இருப்பதற்கு எனக்கு உரிமை உண்டு” என்று தெளிவாகத் தெரிவித்திருந்தார்.

நிச்சயார்த்த விழாவில் பிரியங்கா சோப்ராவுக்கு, நிக் அணிவித்த வைர மோதிரம், பிரத்யேகமாக லண்டனில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு கிட்டதட்ட 2 கோடி. இருவரின் நிச்சயார்த்த ஆடைகளைப் பிரபல திருமண உடை வடிவமைப்பாளர்கள் அபு ஜானி - சந்தீப் கோஸ்லா (Abu Jani - Sandeep Khosla) வடிவமைத்துள்ளனர். மஞ்சள் நிற சுடிதாரில் கண்ணாடி மற்றும் எம்ப்ராய்டரி வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்ட ஆடையைப் பிரியங்கா சோப்ரா அணிந்திருந்தார். குர்தா, பைஜமாவில் அசத்தினார் நிக். மும்பையின் பிரபல கேக் தயாரிக்கும் நிறுவனமான டையர் நோம் (Tier Nom), நிச்சயதார்த்த கேக்கை உருவாக்கியிருந்தது. 15 கிலோ எடையுள்ள இந்த கேக்கில், 24 கேரட் தங்க இலைகள், அழகான பிங்க் நிற ஆர்சிட்ஸ் (Orchids) மற்றும் பெர்ரிஸ் (Berries) ஆகியவை அலங்கரிக்கப்பட்டிருந்தன. மூன்று பேர் சேர்ந்து இந்தக் கேக்கைத் தூக்கிவந்தனர். 

காலையில் நிச்சயார்த்தம் முடிந்ததும், மாலையில் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நெருங்கிய உறவினர்களுக்கும் திரைப்பட நண்பர்களுக்கும் பார்ட்டி வைக்கப்பட்டது. மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை), பிரியங்காவும் நிக்கும் மும்பையில் உள்ள செயின்ட் கேதரின் ஆதரவற்ற குழந்தைகள் இல்லந்துக்குச் சென்று சில மணி நேரம் குழந்தைகளுடன் செலவழித்துள்ளனர். அங்கே ஒரு பெண் குழந்தையுடன் பிரியங்கா நடனமாடி மகிழ்ந்த வீடியோ, இன்ஸ்டாகிராமில் அழகாக உலா வருகிறது.

செப்டம்பர் 16-ம் தேதி, நிக்கின் 26 வது பிறந்தநாள். அதே நாளில், இருவரும் திருமணம் செய்துகொள்ளப்போவதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வாழ்த்துகள் பிரியங்கா!

அடுத்த கட்டுரைக்கு