ஒரு சில குட்டி எறும்புகள் ஒன்றுசேர்ந்து பெரும் யானைக் கூட்டத்தைக் காப்பாற்றியதுபோல், மிகக் குறைவானவர்கள் ஒன்றிணைந்து லட்சக்கணக்கானோரை மீட்டெடுத்ததுதான் `டன்கிர்க்' திரைப்படத்தின் ஒற்றைவரிக் கதை. உண்மையில், 1940-ம் ஆண்டில் டன்கிர்க்கில் நடந்ததும்கூட இதுதான்.

இரண்டாம் உலகப் போர் என்பது ஒரு யானை என்றால், அதில் `டன்கிர்க் சம்பவம்’ என்பது ஒரு சிற்றெறும்பைக் காட்டிலும் நூறு மடங்கு சிறியது. இருந்தாலும், உலகத் திரைச்சுற்றமே இன்று `டன்கிர்க்’ பற்றித்தான் வாய் ஓயாமல் பேசிக்கொண்டிருக்கிறது. `உலகத் திரைப்பட வரலாற்றில், குறிப்பாகப் போர்த் திரைப்படங்களின் வரலாற்றில் இது ஒரு மைல்கல்’ என்று அலுப்பூட்டும் அளவுக்குத் திரும்பத் திரும்பச் சொல்லிப் பலரும் அங்கலாய்த்துக்கொண்டிருக்கிறார்கள். `டன்கிர்க்’ என்னும் சொல்லையே முன்பின் கேட்டிராத எளிய ரசிகர்கள் தொடங்கி, டன்கிர்க்கில் வாழ்ந்து, தோய்ந்து, ஓய்ந்த வரலாற்று ஆய்வாளர்கள் வரை அனைவரையும் ஒருங்கே கவர்ந்திழுத்திருக்கிறது இத்திரைப்படம்.

ஒரே காரணம், கிறிஸ்டோஃபர் நோலன். முதன்முறையாக வரலாற்றை மையமாக வைத்து அவர் எடுத்துள்ள இந்தத் திரைப்படம், அதற்குள் வரலாற் றில் இடம்பிடித்துவிட்டது நிச்சயம் அபூர்வமானதுதான். ஸ்டான்லி குப்ரிக் தொடங்கி ஸ்பீல்பெர்க் வரை பலரும் பல வெற்றிகரமான, உணர்ச்சிபூர்வமான போர்ப் படங்களை எடுத்து முடித்து விட்டநிலையில் கிறிஸ்டோஃபர் நோலனின் `டன்கிர்க்’ எந்த வகையில் அவற்றிலிருந்து மாறுபட்டிருக்கிறது? இந்தக் கேள்விக்கு விடை தெரியவேண்டு மானால் டன்கிர்க்கின் சுருக்கமான வரலாற்றுப் பின்னணி அவசியமாகிறது.
கொஞ்சம் படம், கொஞ்சம் வரலாறு!

இரண்டாம் உலகப் போர் வரலாற்றில் எந்த வகையில் பார்த்தாலும் டன்கிர்க் சம்பவத்தைத் `திருப்புமுனை’ என்று அழைக்க முடியாது. மொத்தம் 3,38,226 பேர் மரணத்தின் பிடியிலிருந்து மீட்கப் பட்டிருக்கிறார்கள் என்றாலும், இதை ஒரு வீர சாகசம் என்று அழைக்க முடியாது. காரணம் மீட்கப்பட்டவர்கள் சாமானியர்கள் அல்லர், போர் வீரர்கள். அவர்களை மீட்டவர்களோ எளிய சிவிலியன்கள். ஒரு சாகசம் என்பது இதற்கு நேர் மாறானது. உயிரைப் பணயம் வைத்துப் போராடி, வீரர்கள் குடிமக்களையும் தாய் நாட்டையும் காப்பது தானே போர்க் காவியமாக இருக்க முடியும்?

ஆனால், போர்க்களம் என்பது வரையறைகளுக்கும் தர்க்கங்களுக்கும் அப்பாற்பட்டது. ஃபிரான்ஸின் வடக்குப் பகுதியில் அட்லாண்டிக் கரையோரம் அமைந்திருக்கும் ஒரு துறைமுக நகரம், டன்கிர்க். 1939-ம் ஆண்டு போலந்தின்மீது ஹிட்லரின் ஜெர்மனி போர் தொடுத்து இரண்டாம் உலகப் போரைத் தொடங்கி வைத்தது. (உண்மையில் நடைபெற்றது ஒரே உலகப் போர்தான். 1914-ம் ஆண்டில் தொடங்கி ஓர் இடை வெளிக்குப் பிறகு, அது 1945-ம் ஆண்டில் முடிவுற்றது என்று சொல்பவர்களும் உள்ளனர்). போலந்தைத் தொடர்ந்து நெதர்லாந்து, பெல்ஜியம் என்று ஜெர்மனி கட்டுக்கடங்காமல் பாய்ந்துகொண்டிருந்தது. ஃபிரான்ஸை நாஜிகளிடமிருந்து பாதுகாக்க வேண்டிய அவசியத்தை பிரிட்டன் உணர்ந்துகொண்டது. பிரிட்டிஷ் வீரர்களைப் பெருமளவு கொண்டிருந்த நேச நாட்டுப் படை ஃபிரான்ஸுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

ஃபிரான்ஸுக்கும் ஜெர்மனிக்குமான எல்லையில் ‘மாகினோட் லைன்’ எனப்படும் பாதுகாப்பு அரண்கள் கட்டமைக்கப்பட்டிருந்தன. ஆனால், வடக்குப் பகுதி மட்டும் பெருமளவில் கண்டுகொள்ளாமல் விடப்பட்டிருந்தது. அடர்ந்த கானகங்கள் இருப்பதால் அங்கே ஊடுருவல் சாத்தியமில்லை என்று ஃபிரான்ஸ் நம்பியது. ஆனால், ஜெர்மனி மிகச் சரியாக இந்த வடக்குப் பகுதியில்தான் உள்நுழைந்தது. இதனை எதிர்பார்க்காத நேச நாட்டுப் படையினர் ஜெர்மனியை எதிர்கொள்ள இயலாமல் பெல்ஜியத்தை நோக்கி விரைந்தனர். ஆனால், அங்கும் ஜெர்மானியப் படைகள் சூழ்ந்துவிட்டன. ஜெர்மனியை மோதி வீழ்த்த முடியாது; தப்பிச்செல்வதே உசிதமானது என்பதை ஃபிரான்ஸும் நேச நாட்டுப் படைகளும் உணர்ந்துகொண்டன. ஆனால், தப்பிக்க இப்போது ஒரே ஒரு வழிதான் இருந்தது. டன்கிர்க். எப்படியாவது பின்வாங்கி, டன்கிர்க் வந்தடைந்துவிட்டால், அங்கிருந்து தப்பி கடல் மார்க்கமாக பிரிட்டன் சென்றடைந்துவிடலாம். இதுதான் திட்டம்.

ஆனால், எதிர்பார்த்ததைப்போல் எளிதாக இத்திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை. கடல், ஆகாயம், நிலம் என்று மூன்று மார்க்கங் களிலும் ஜெர்மனி தாக்குதல் தொடுத்துக் கொண்டே இருந்தது. மரண பயத்துடன் லட்சக்கணக்கான வீரர்கள் உயிரைக் கையில் பிடித்தபடி, கடலை வெறித்துப் பார்த்தபடி பிரிட்டனின் கப்பல்களுக்காகக் காத்திருக்கத் தொடங்கினர். மரணத்தைவிடவும் தோல்வி அவர்களை அதிகம் அச்சுறுத்தியிருக்க வேண்டும். தோல்வியைக் காட்டிலும், அது ஏற்படுத்தும் அவமானம் அவர்களைப் பிய்த்துத் தின்றிருக்க வேண்டும். பெரும் போராட்டத்துக்குப் பிறகு பிரிட்டன் பல சிறிய கப்பல்களை அனுப்பி மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்களை மீட்டெடுத்துக்கொண்டது. இது நடந்தது மே 26 தொடங்கி ஜூன் 4, 1940 வரை. கிட்டத்தட்ட ஒரு வாரக் கதை.

உண்மையில், டன்கிர்க் ஒரு போர்க்களமே அல்ல. அது ஓர் உறுத்தல் மட்டுமே. அச்சம், அவமானம், பயம், தோல்வி அனைத்தையும் நேச நாட்டுப் படைகள் ஒன்றாகத் தரிசித்த ஓரிடம் அது. ஹிட்லரையும் அவரைப் போலவே மூர்க்கத்துடன் ஆர்ப்பரிக்கும் கடலலைகளையும் கண்டு அவர்கள் திகைத்து நின்ற இடமும்கூட. போர், ராணுவச் சீருடை, ஆயுதம் அனைத்தையும் வீரர்கள் மறந்துபோனார்கள். எப்படியாவது வீடு திரும்ப வேண்டும். தேசம், எல்லை எதுவும் முக்கியமில்லை. ஹிட்லர் முக்கியமில்லை. பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் முக்கியமில்லை. `தோற்றுப்போய் திரும்பும் வீரர்கள்’ என்று உலகமே பரிகசிக்கும். `கோழை களே, உங்களுக்கெல்லாம் துப்பாக்கி எதற்கு?’ என்று குடிமக்கள் பழிப்பார்கள். வீரன் என்னும் அடையாளமேகூட கேள்விக்கும் கேலிக்கும் உட்படுத்தப்படலாம். ஆனால், பரவாயில்லை; வீடு திரும்பினால் போதும்.

நோலனின் திரைமொழி

இந்த முரண்பட்ட உணர்வுகளை கிறிஸ் டோஃபர் நோலனின் `டன்கிர்க்’ நமக்கு அப்படியே கடத்திவிடுவதுதான் படத்தின் வெற்றிக்கு முதன்மையான காரணம். ஐரோப்பாவின் புவியியல் குறித்தோ, அப்போதைய அரசியல் வரலாறு குறித்தோ, இரண்டாம் உலகப் போரின் பின்னணி குறித்தோ எதுவும் தெரியாவிட்டாலும் உணர்வுபூர்வமாக நம்மால் வீரர்களோடு ஒன்றிப்போக முடிகிறது. அந்த வீரன் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவனா அல்லது பெல்ஜியத்தைச் சேர்ந்தவனா என்பதுகூட நமக்குத் தெரியாது. ஆனால், அவனுடைய பரிதவிப்பு நம்மையும் பற்றிக்கொள்கிறது. `நீ யாராக வேண்டுமானாலும் இருந்துகொள்; உன் அரசியல் என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்; அந்தப் பொல்லாத ஹிட்லரிடம் சிக்காமல் வீடு போய்ச் சேர்ந்துவிடு’ என்று நாம் மனதுக்குள் அலற ஆரம்பித்துவிடுகிறோம். வரலாறு என்பது அடிப்படையில் மனிதர்களின் கதை. இந்த நம்பிக்கை கிறிஸ்டோஃபர் நோலனுக்கு இருந்த தால்தான் மக்களுக்குப் புரியுமா, புரியாதா என்றெல்லாம் சிந்திக்காமல் துணிந்து அவரால் `டன்கிர்க்’கை எடுக்க முடிந்தது.

இந்தப் படம் என்றில்லை, பொதுவாகவே கிறிஸ்டோஃபர் நோலன் தனது எந்தப் படம் குறித்தும் ‘இது மற்றவர்களுக்குப் புரியுமா’ என்று தனக்குள்ளேகூட கேட்டுக்கொண்டதாகத் தெரியவில்லை. அவருடைய `இன்டர்ஸ்டெல்லார்’ (Interstellar) எத்தனை பேருக்கு முழுக்கப் புரிந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள்? இயற்பியலில் ஆய்வுப் படிப்பு முடித்தவர்கள்கூட பிரமித்துத்தான் போனார்களே தவிர, `ஓ, இதுவா நன்றாகப் புரிகிறதே’ என்று சொல்லவில்லை. கிட்டத்தட்ட `மெமன்டோ’ (Memento) அனுபவ மும் இதேதான். `மிரட்டல்’ என்றார்கள். `புத்தி சாலித்தனமான படம்’ என்று மகிழ்ந்தார்கள். `அட்டகாசம், இன்னும் இருமுறை பார்த்தால் நிச்சயம் பிடிபட்டுவிடும்’ என்று நழுவினார்கள். `புரிந்தது’ என்று சொன்னவர்கள் சிலர். அவர்களிலும்கூட எத்தனை பேர் உண்மையைச் சொன்னார்கள் என்பது தெரியாது.

ஒரு வித்தியாசமான திரை அனுபவத்தை அளிக்க வேண்டும் என்பதல்ல நோலனின் நோக்கம். படம் பார்க்கும் ஒவ்வொருவரையும் ஆழ்நிலை மயக்கத்துக்கு அல்லது வேறொரு மாய உலகுக்கு அழைத்துச் சென்றுவிட வேண்டும் என்பதே அவருடைய இலக்குபோலும். 2006-ம் ஆண்டு வெளிவந்த `தி பிரெஸ்டீஜ்’ (The Prestige) அப்படியொரு மாய உலகம்தான். இரண்டு மேஜிக் நிபுணர்களைச் சுற்றி விரியும் இந்தக் கதையின் மாயக் கரங்களிலிருந்து இன்னமும் விடுபடாதவர்கள் அநேகம் பேர்.

அவ்வளவு தூரம்கூடப் போக வேண்டாம், `பேட்மேனை’ எடுத்துக்கொள்ளுங்கள். தன்னுடைய நகரத்தைக் காக்கப் பறந்து பறந்து சண்டையிடும் ஒரு சூப்பர் ஹீரோவின் கதை. பலமுறை படித்தும், பார்த்தும் கொட்டாவிவிட்ட இந்தப் புழுதி படர்ந்த கதையை கிறிஸ்டோஃபர் நோலன் எப்படி எடுத்திருந்தார் என்று நினைக்கிறீர்கள்? நோம் சாம்ஸ்கியே தோற்றுப்போகும் அளவுக்கான அரசியல் தத்துவார்த்த விவாதங்களையும் சிக்மண்ட் ஃபிராய்டால் மட்டுமே புரிந்துகொள்ளக்கூடிய உளவியல் சிக்கல்களையும் அநாயாசமாக அறிமுகப்படுத்தி முற்றிலும் வேறொரு தளத்துக்கு `பேட்மேனை’க் கொண்டு சென்றிருந்தார். ஆம், இந்த பேட்மேனும் (கிறிஸ்டியன் பேல்) பறந்துதான் சண்டையிட்டார் என்றாலும், தரையில் நின்று பேசும்போது பல இடங்களில் சாக்ரடீஸ் அல்லது நீட்ஷேவாக அவர் மாறியிருந்தார். எந்த பேட்மேனும் இந்த உயரத்தை இதுவரை தொட்டதில்லை. நோலனுக்கு நேர் வரிசை பிடிப்பதில்லை. பிறந்தான், படித்தான், வளர்ந்தான், காதலித்தான், இறந்தான் என்று அவர் ஒருபோதும் சொல்ல மாட்டார். முதலில் ஒரு குழந்தை கணிதத்திலும் மானுடவியலிலும் ஆய்வுகள் மேற்கொள்ளும். பிறகு, அந்தக் குழந்தைக்குத் தடுப்பூசி போடுவார்கள். அதற்குள் இளைஞனாகியிருக்கும் குழந்தை, காதலிக்கத் தொடங்கியிருக்கும். பிறகு மழலையர் பள்ளியில் சேர்ப்பார்கள். அடுத்து அடர்ந்த தாடியோடு இருக்கும். ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீசை அரும்பும். அடுத்து பணி ஓய்வு. பிறகு தவழ ஆரம்பிக்கும். இறுதியில், அந்தக் குழந்தையின் அப்பாவும் அம்மாவும் முதன்முறையாக செவ்வாய் கிரகத்துக்குப் போகும் வழியில் சந்தித்துக்கொள்வார்கள்.

நான்லீனியர்கூட நோலனுக்குப் போரடித்து விட்டது. அதிலும் ஓர் ஒழுங்கு இருப்பதுபோல் தோன்றியது. அந்த ஒழுங்கைக் கலைத்தால் மட்டும் போதாது, அதற்குள் ஒரு கலகத்தை ஏற்படுத்த வேண்டும். புயலில் சிக்கிய காகிதம் போல் கதை அலைக்கழிக்கப்பட வேண்டும். ஒரு குடிகாரனின் நடைப்பயணம்போல் ஊகிக்க முடியாத தடுமாற்றங்களும் திடுக்கிடல்களும் வேண்டும். `இன்டர்ஸ்டெல்லார்’, `இன்செப்ஷன்’ தொடங்கி `டன்கிர்க்’ வரை அவர் செய்திருப்பது இதைத்தான். `டன்கிர்க்’கில் நிலம், கடல், ஆகாயம் மூன்றிலும் கதை நிகழ்கிறது. மூன்று மார்க்கங்களிலும் ஜெர்மனி தாக்குதல் தொடுக்கிறது. நிலத்தில் விரியும் சம்பவங்கள் ஒரு வாரம் நீள்கின்றன. கடலில் ஒரே நாள். ஆகாயத்திலோ ஒரு மணி நேரம் மட்டுமே. இந்த மூன்றையும் இணைத்து மாய முடிச்சொன்றைப் போடுகிறார் நோலன். அப்படிச் செய்யும்
போது காலம், வெளி இரண்டையும் தன் விருப்பத்துக்கு ஏற்றாற்போல் வளைத்துக்கொள்கிறார். நிலத்தில் போர்க்களம் உயிர்ப்புடன் எழுந்து வரும்போதே இடையில் நிறுத்திவிட்டு கடலுக்குப் பாய்கிறது கேமரா. கடல் சாகசங்கள் தொடங்கும்போது நிறுத்தப்பட்டு, நாம் ஆகாயத்துக்குச் செல்கிறோம். ஒரு மணி நேரத்தில் நடந்து முடிந்திருக்கவேண்டிய விமானிகளின் போராட்டம் படம் முழுக்க நீள்கிறது. ஒரு நாளில் தொடங்கி முடிந்த கடல் யுத்தம் ஒரு வாரம் நீண்டு செல்லும் காலாட் படைப் போரோடு இணைந்துகொள்கிறது. இது வெறுமனே கலைத்துப் போடுதலோ, நான் லீனியர் வடிவமோ அல்ல. நோலன் நிகழ்த்தி யிருப்பது தனித்துவமான ஒரு ரசவாதம். இந்த ரசவாதத்துக்கு ஆட்படுபவர்கள் இயற்பியல் அடிப்படையே தெரியாமல் `இன்டர் ஸ்டெல்லாரை’யும் `இன்செப்ஷனை’யும் ரசிக்க முடியும். வரலாறு தெரியாமலேயே `டன்கிர்க்’கை உள்வாங்கிக்கொள்ளவும் முடியும்.

`டன்கிர்க்’கில் கதாநாயகன் என்று தனியே ஒருவரும் இல்லை. ஆனால், அப்படியொரு அங்கீகாரத்தை அளித்தே தீரவேண்டுமானால் இசைக்கு அளிக்கலாம். காட்சிகளோடு அநாயாச மாகப் போட்டியிட்டு வெல்கிறது ஹான்ஸ் ஜிம்ம ரின் இசை. `இன்செப்ஷன்’, `இன்டர்ஸ்டெல்லார்’ இரண்டையும் வேறோரு தளத்துக்குக் கொண்டு சென்றதில் ஹான்ஸ் ஜிம்மருக்கு முக்கியப் பங்குண்டு. `டன்கிர்க்’கில் ஜிம்மரின் பங்களிப்பு அபாரமானது மட்டுமல்ல, அசாதாரணமானதும்கூட. அச்சம், குழப்பம், போர், பதற்றம், பரிதவிப்பு, திகில், அவமானம், நம்பிக்கை, தோல்வி என்று படம் நெடுகிலும் நம்மை நீங்கா கொந்தளிப்பில் அழுத்தி வைத்திருக்கிறது அவருடைய இசை. படத்தில் எங்குமே கோரமான காட்சிகள் இல்லை. ஒரு துளி ரத்தம்கூட திரையில் சிந்தப்படவில்லை. வீரர்கள் சத்தமின்றி இறக்கிறார்கள். மிகையில்லை. உணர்ச்சிகள் அதிகமில்லை. எல்லா இடைவெளிகளையும் இசை இட்டு நிரப்பிவிடுகிறது.

சர்ச்சைகளும் விவாதங்களும்...

சர்ச்சைகளும் இல்லாமலில்லை. `டன்கிர்க்’கில் ஏன் பிரிட்டிஷ் போர் வீரர்கள் மட்டுமே காட்டப்படுகிறார்கள்? போரில் பங்கேற்றது இன்றைய பிரிட்டன் அல்ல, அன்றைய பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியம். இதன் பொருள், காலனி நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் பிரிட்டனின் சார்பாகப் போர்முனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். குறிப்பாக, இந்திய வீரர்களும் ஆப்பிரிக்க வீரர்களும் டன்கிர்க் போர்க்களத்தில் பிரிட்டிஷ் வீரர்களோடு தோளுக்குத் தோள் நின்று போராடியிருக் கிறார்கள். அவர்கள் ஏன் நோலனின் படத்தில் இடம்பெறவில்லை?

பிரிட்டிஷ் வீரர்களைக் கொண்டாடிக்கொள்ளுங்கள், பிரச்னையில்லை. ஆனால், அதற்காக இந்தியர்களை ஏன் மறைக்க வேண்டும்? அவர்களுடைய பங்களிப்பை ஏன் மறக்க வேண்டும்? ஆப்பிரிக்கர்களின் நிலை இதைவிடவும் பரிதாபம். பிரிட்டிஷ் சார்பாக மட்டுமல்ல, ஃபிரான்ஸ் சார்பாகவும் பல ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் டன்கிர்க் உள்ளிட்ட போர்களில் பங்கேற்று உயிர்த் தியாகம் செய்திருக்கிறார்கள். ஆனால், திரையிலோ வெள்ளையல்லாத ஒரே ஓர் உருவம்கூட காட்டப்படவில்லை. இதற்கு நோலனின் ஆதரவாளர்கள் அளிக்கும் ஒற்றைவரி விளக்கம் இதுதான்... ‘நோலன் அவருடைய படத்தை எடுத்திருக்கிறார். உங்களுக்கான படத்தை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்!’ இந்த விளக்கம் ஏற்கப்படவில்லை என்பது மட்டுமல்ல, அதில் தொனித்த ஆணவம் மேலதிக விவாதங்களையே கிளப்பியிருக்கிறது. படத்தின் பலம் மட்டுமல்ல, மேலே குறிப்பிட்டதைப் போன்ற பலவீனங்களும்கூட ஒருவகையில் ஆரோக்கியமான விளைவுகளையே ஏற்படுத்தியிருக்கின்றன. `டன்கிர்க்’கை முன்வைத்து ஆயிரக்கணக்கான கட்டுரைகளும் வரலாற்று விளக்கக் குறிப்புகளும் விவாதங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஒரு திரைப்படத்தின் வெற்றி என்பது அது தோற்றுவிக்கும் இத்தகைய பரவலான விவாதங்களில்தான் அடங்கியிருக்கிறது, இல்லையா?

திரைக்கு வெளியே...

இறுதியாக, `டன்கிர்க்’கில் காட்டப்படாத இரண்டு முக்கியமான உண்மைகள்... டன்கிர்க்கிலிருந்து தப்பிய லட்சக்கணக்கான வீரர்கள் என்ன ஆனார்கள்? அப்போதைக்குப் பிரிட்டனுக்குத் தப்பி வந்துவிட்டார்களே தவிர, அவர்கள் அத்தனை பேரும் மீண்டும் வெவ்வேறு போர்க்களங்களுக்குத்தான் அனுப்பிவைக்கப்பட்டனர். மீண்டும் அவர்கள் சீருடை அணிந்து, ஆயுதம் தரித்து போரில்தான் ஈடுபட்டார்கள். அநேகமாக எல்லோருமே வெவ்வேறு இடங்களில் போரில் கொல்லப்பட்டனர். அந்த வகையில் டன்கிர்க் அவர்களை விட்டுப் பிடித்திருக்கிறது, அவ்வளவுதான். இறுதியில் வென்றது என்னவோ டன்கிர்க்தான்.

சரி, இந்தத் தற்காலிக வெற்றியால் என்ன பலன்... வரலாற்றில் டன்கிர்க் வகித்த பாத்திரம்தான் என்ன? பிரிட்டிஷ் மக்களின் மனசாட்சியை டன்கிர்க் உலுக்கியெடுத்தது. `நம் மகன்கள் எங்கோ தொலைவில் மாட்டிக்கொண்டிருக்கிறார்கள், அவர்கள் மீட்கப்பட்டாக வேண்டும்’ என்று பிரிட்டன் குடிமக்கள் திரண்டுவந்தனர். இந்தத் திரட்சி அவர்களுக்கு முக்கியமானது. மக்களிடையே தேசியவாதத்தை அது கிளர்தெழச் செய்தது. வின்ஸ்டன் சர்ச்சில் அரசாங்கத்தால் அவர்களை மீட்க முடியவில்லை. இறுதியில் சாமானியர்கள்தான் சிறிய கப்பல்களை டன்கிர்க்குக்கு அனுப்பி வீரர்களைத் திரும்பப் பெற்றுக்கொண்டனர்.

அந்த வகையில் டன்கிர்க் சாமானியர்களின் வெற்றி. ஆனால், சாமானிய வெற்றி அல்ல. இரண்டாம் உலகப் போரின் போக்கில் திருப்புமுனை எதையும் ஏற்படுத்த முடியாமல் போனாலும் பிரிட்டனின் வரலாற்றில் அது ஒரு முக்கியமான நிகழ்வு என்பதில் சந்தேகமில்லை. `வெற்றியோ, தோல்வியோ எங்கள் வீரர்களை நாங்கள் உயிருடன் திரும்பப் பெற்றுக்கொண்டுவிட்டோம், அது போதும் எங்களுக்கு...’ என்று பிரிட்டிஷ் மக்களால் கண நேரமாவது மகிழ்ந்திருக்க முடிந்தது. அந்த மகிழ்ச்சியை பிரிட்டன் பத்திரப்படுத்திக்கொண்டது. டன்கிர்க் ஒரு வெற்றிக்கதையாக உருமாற்றம் அடைந்தது அப்போதுதான். இப்போது கிறிஸ்டோபர் நோலன் ஒருபடி மேலே சென்று டன்கிர்க்கை ஒரு காவியமாக மாற்றிக் காட்டியிருக்கிறார்.