Published:Updated:

`` `பராசக்தி’யை ரீமேக் பண்ண வேணாம்னு கலைஞர் சொன்ன காரணம்..?’’ - பா.விஜய்

பாடலாசிரியர் பா.விஜய், கருணாநிதியுடனான அவருடைய பயணம் குறித்தும் தனது சினிமா பயணம் குறித்தும் பேசியிருக்கிறார்.

`` `பராசக்தி’யை ரீமேக் பண்ண வேணாம்னு கலைஞர் சொன்ன காரணம்..?’’ - பா.விஜய்
`` `பராசக்தி’யை ரீமேக் பண்ண வேணாம்னு கலைஞர் சொன்ன காரணம்..?’’ - பா.விஜய்

``அவருடன் சேர்ந்து பழகிய நாள்களுக்கு என்றே ஒரு புத்தகம் எழுதணும். அந்தளவுக்குப் பொக்கிஷமான பல நினைவுகள் என்னுடன் பயணித்துக்கொண்டே இருக்கிறது!'' - மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியுடனான தன் நினைவுகளுடன் உரையாடலைத் தொடங்குகிறார் கவிஞர் பா.விஜய்.  

`` `பராசக்தி’யை ரீமேக் பண்ண வேணாம்னு கலைஞர் சொன்ன காரணம்..?’’ - பா.விஜய்

``ப்ளஸ் டூ முடிச்சவுடனே,  கலைஞரைப் பார்த்தே ஆகணும்னு அறிவாலயத்துல வந்து உட்கார்ந்துட்டேன். என் கவிதைத் தொகுப்புக்குக் கலைஞர் கையால் அணிந்துரை வாங்கணும், அவரை சந்திச்சே ஆகணும்னு அடம்பிடிச்சேன். அறிவாலயத்துக்கு வர்றவங்க போறவங்க எல்லோரும் என்னைப் பார்த்துட்டுப் போயிட்டு இருந்தாங்க. அப்போ, அங்கே இருந்த ஒரு பெரியவர் என்னைக் கலைஞரிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினார். ரொம்ப அன்பா கலைஞர் என்கிட்ட பேசினார். 'அணிந்துரை எழுத எனக்கு நேரமில்லை தம்பி. ஆனா, உன் புத்தகத்தைக் கண்டிப்பா படிக்கிறேன்'னு சொல்லி அனுப்பி வெச்சார் கலைஞர். பிறகு, 10 வருடங்கள் கழித்து கலைஞரை மீண்டும் சந்திச்சேன். அவருடைய மகள் கனிமொழி என்னை அறிமுகப்படுத்தி வைத்தார். பின்னர், நான் எழுதிய இருபத்து இரண்டு புத்தங்களை கலைஞர் வெளியிட்டிருக்கிறார். காமராஜர் அரங்கத்தில் என் புத்தகம் ஒன்றை வெளியிட்டு, 'வித்தகக் கவிஞர்'னு பட்டமும் கொடுத்தார். அப்போது அவர், 'எனக்குக் கைராசி இருக்கானு தெரியாது. ஆனா, வாய்ராசி இருக்கு. அதனால், நிறைய விருதுகள் வாங்குவ தம்பி'னு வாழ்த்து சொன்னார். அவர் வாழ்த்து சொன்ன சில மாதங்களில் எனக்குத் தேசியவிருது கிடைத்தது. அந்த மகிழ்ச்சியை அவருடன் பகிர்ந்துகொண்டேன். 

ஒருமுறை கலைஞர் ஐயாவிடம் பேசிக்கிட்டு இருந்தப்போ, 'பராசக்தி' படத்தை ரீமேக் பண்ணலாமானு அவர்கிட்ட கேட்டேன். '' 'பராசக்தி' சினிமாவில் அழியாத இடத்தைப் பிடிச்ச படம். திரும்ப எடுத்தா, முந்தைய புதுசையும் பழசையும் ஒப்பிட்டுப் பார்ப்பாங்க, வேண்டாம்"னு சொல்லிட்டார். அதனால்தான், அவருடைய 'தாய்' காவியத்தைப் படமா எடுக்கலாம்னு முடிவு பண்ணி, 'இளைஞன்' எடுத்தோம். என் கலை உலகப் பயணத்தில் இதைப் பெரிய மைல் கல்லாகப் பார்க்கிறேன். கலைஞர் என்மீது செலுத்திய அன்புக்கு இந்தப் படம் பெரிய உதாரணம். 

`` `பராசக்தி’யை ரீமேக் பண்ண வேணாம்னு கலைஞர் சொன்ன காரணம்..?’’ - பா.விஜய்

'இளைஞன்' பட ஷூட்டிங் டைம்ல காலையிலே நாலரை மணிக்கு கலைஞர் எனக்குப் போன் பண்ணுவார். 'தூங்கிட்டு இருக்கீயா... கிளம்பி வீட்டுக்கு வா'னு சொல்வார். ரெடியாகி ஓடுவேன். அவர் எழுதியிருக்கிற கதை, வசனத்தைக் கொடுத்து படிக்கச் சொல்வார்; நடிச்சுக் காட்டச் சொல்வார். நடிப்புல ஏதும் பிழை இருந்தா, திருத்துவார். ரொம்ப சுறுசுறுப்பான மனிதர். அப்போ, அவர் முதலமைச்சரா இருந்தார். திடீர்னு ஒருநாள், மதிய சாப்பாட்டுக்கு `இளைஞன்' ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துட்டார். நடிகர்கள், டெக்னீஷியன்ஸ் கூட உட்கார்ந்து சாப்பிட்டார். என் வாழ்க்கையில் கலைஞருடனான நாள்களையும் அவருடனான அனுபவத்தையும் மறக்கவே முடியாது" என்ற பா.விஜய்யிடம் சில கேள்விகளைக் கேட்டோம். 

``இயக்குநர் சேரன் படங்களுக்கு உங்க பாடல்கள் ஸ்பெஷலா இருக்கும். இப்போ, சேரன் இயக்கிக்கொண்டிருக்கும் படத்தில் உங்க பாடல் இருக்கா?" 

``சேரன் சார் தனித்துவமான இயக்குநர். அமீர், பாலா, வசந்தபாலன், வெற்றிமாறன் வரிசையில் சேரனும் ஒருவர். இந்த மாதிரியான இயக்குநர்கள்தான் தமிழ் சினிமாவின் பொக்கிஷங்கள். தமிழ் சினிமாவுடைய தரத்தைக் கட்டிக்காக்கும் இயக்குநர்கள். கொஞ்சம் இடைவெளிக்குப் பிறகு சேரன் சார் மீண்டும் படம் இயக்குவது எனக்கு சந்தோஷமான விஷயம். அவர் படத்தில் பாடல்களுக்கும் தனி கான்செப்ட் இருக்கும். அவர் கூப்பிட்டா, கண்டிப்பா இந்தப் படத்துக்கும் பாடல் எழுதித் தருவேன்." 

`` `பராசக்தி’யை ரீமேக் பண்ண வேணாம்னு கலைஞர் சொன்ன காரணம்..?’’ - பா.விஜய்

``இன்றைய சினிமாவின் பாடல்களைக் கேட்குறீங்களா... எப்படி இருக்குனு நினைக்கிறீங்க?" 

``நான் பாடல் எழுத வந்த காலகட்டத்துல ஒரு பாட்டு எழுத வாய்ப்பு கிடைப்பதே அரிதான ஒன்றா இருந்தது. என் முதல் பாடல் சினிமாவுல இடம்பெற ஆறு வருடங்கள் ஆச்சு. நீண்ட போராட்டம், அவமானம் இதையெல்லாம் தாண்டிதான் வந்தேன். ஆனா, இன்னைக்கு இருக்கிற சூழல் அப்படியில்லை. கவிதையோ, பாடல் வரிகளோ... எழுதியதும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர்னு சமூக வலைதளங்கள்ல பதிவு பண்ணிட முடியுது. ஆனா, நான் பாட்டு எழுதுன காலத்திலேயும் நிறைய விமர்சனங்கள் இருந்தது. 'இன்னைக்கு இருக்கிற பாடலாசிரியர்களுக்கு இலக்கிய அறிவு இல்ல; ஆங்கில வார்த்தைகள் கலந்து எழுதுறாங்க'னு சொன்னாங்க.  பாடலாசிரியர்களில் நா.முத்துக்குமார், தாமரை, யுகபாரதி, விவேகா, சினேகன்னு எல்லோரும் இந்த விமர்சனங்களைத் தாண்டிதான் முன்னேறி வந்தாங்க. நான் சீனியரா இருக்கிறதுனால, இப்போ பாடல் எழுதுறவங்களைக் குறை சொல்ல மாட்டேன். அவர்களை நாங்கள் எல்லோரும் வரவேற்கிறோம்." 

''நீங்களே இயக்கி நடிக்கிறீங்க... மற்ற ஹீரோக்களை இயக்குற ஐடியா இல்லையா?" 

``இனிவரும் காலங்களில் நான் இயக்குற படங்களில் நானே நடிப்பதில்லை; நடிக்கிற படங்களை இயக்குவதில்லைனு முடிவெடுத்திருக்கேன். 'ஆருத்ரா'வுக்குப் பிறகு, இயக்கப்போகும் படம் பிரமாண்டமான சரித்திரப் படம். அதில், ஜெயம் ரவி, விஷால், கார்த்தி மாதிரி டாப் நடிகர்கள் நடிச்சா நல்லா இருக்கும். பார்ப்போம்!"