Published:Updated:

``மாயாநதி... ஆஷிக் அபுவின் விஸ்வரூப எழுச்சி!" - மலையாள கிளாசிக் - 23

``மாயாநதி... ஆஷிக் அபுவின் விஸ்வரூப எழுச்சி!" - மலையாள கிளாசிக் - 23
``மாயாநதி... ஆஷிக் அபுவின் விஸ்வரூப எழுச்சி!" - மலையாள கிளாசிக் - 23

`மலையாள கிளாசிக்' தொடரின் 23-வது பகுதி. `மாயாநதி' திரைப்படம் குறித்த விரிவான அலசல்.

பெருமைப்பட்டுக் கொள்ளக்கூடிய இறந்த காலமோ, நிகழ் காலமோ இல்லாத மாத்தன் அழைக்கப்படுகிறான். தகிடுதித்த கூட்டத்தில் அவன் ஓர் அடியாள். தமிழ்நாட்டிலிருக்கிற ஓர் இடம்தான், அங்கே தனது சகாக்களுடன் நடக்கப்போகிற பிசினஸுக்காக ஒரு ஹோட்டல் அறையில் காத்திருக்கையில், போலீஸார் புகுகின்றனர். கைகலப்பு உண்டாகிவிட போலீஸார் சுட்டுத் தீர்க்கிறார்கள். நல்லவேளையாய் அந்த நேரம் பாத்ரூமில் உள்ள பாத்டப்பில் படுத்துக்கொண்டு அவன் அபர்ணாவின் போட்டோவைப் பார்த்துக்கொண்டிருந்தான். நழுவி, காரின் சாவியை எடுத்துக்கொண்டு காரை கிளப்பிக்கொண்டு வரும்போது, இடையில் வந்துவிட்ட ஒரு போலீஸ்காரன் செத்துப்போகிறான். அது கொலையல்ல; விபத்து. ஆனால், கொலையாகவே கருதப்படும். பதற்றம் தாங்காமல் காரை விரைவு கூட்டி ஓட்ட, கேரளத்தினுள் நுழைந்து பறக்கிறது கார். மொத்தப் பணமும் காரில்தான் இருக்கிறது. இது, `மாயாநதி' படத்தின் முதல் எபிசோடு.

இத்தொடரின் முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்!

இரண்டாவது எபிசோடு அபர்ணாவுடையது.

அவள் ஒரு படத்தின் ஆடிஷனில் இருக்கிறாள். கதாநாயகி தேர்வுக்கு முடிந்தவரை கேமராவுக்கு முகம் கொடுத்துவிட்டு, தனது தோழியின் ஃபிளாட்டுக்கு வருகிறாள். அவள் நடிகை. இவளைக் காட்டிலும் திறமை குறைந்தவளாயினும், இப்போது ஸ்டாராக இருக்கிறாள். அவளோடு பேசிக்கொண்டிருக்கையில் அம்மாவின் நெருக்குதலான அழைப்பு. அவளது சொல்லைத் தட்டமுடியாமல் அபர்ணா இப்போது ஒரு விழாவில் மேடை அறிவிப்பாளராய்ப் பணிபுரிவது தெரிகிறது. விழா முடிந்து, சாப்பாடு எதுவும் கிடைக்காமல், நடந்து தேடி ஒரு ஹோட்டலில் உணவு வாங்கித் திரும்பும்போது போன் அடிக்கிறது. 

மாத்தன்தான்.

நான் ஒரு வேலையாக கொச்சினுக்கு வந்திருக்கிறேன், உன்னைப் பார்க்க முடியுமா என்று கேட்கிறான்.

நோ. வாய்ப்பே இல்லை. அது எதற்கு. நான் உன்னை மறந்துவிட்டேன் மாத்தா.

அவள் போனை கட் செய்து திரும்ப அவன் எதிரே நிற்கிறான்.

அவள் அவனைப் பளாரென்று அறைகிறாள்.

சொன்னதைச் சொல்லிக்கொண்டு, செய்ததை திரும்பச் செய்துகொண்டிருக்கிற ஒருவிதமான கிளிப்பேச்சு சினிமாக்கள் முடிந்து கொண்டிருக்கின்றன. உலகம் முழுக்கக் கதை சொல்லும் பாணியில் உனக்கு எவ்வளவு தெரியுமோ, அதற்கு அப்புறம் சொல்கிறேன் என்கிற ஒன்றை நடைமுறைப்படுத்தி திரைக்கதையை நவீனமாக்கிக்கொண்டிருக்கிறார்கள். `மாயாநதி' முதலில் ஒரு திரைக்கதையின் சினிமா. முழுமையான பொருளில் திரைக்கதை. அதிரடியாகவும், தவளைப் பாய்ச்சல் என்போமில்லையா... அப்படியாகவும், தான் எடுத்துக்கொண்ட கதையைப் படம் முழுக்க தூவி அட அட என்று வியக்கும்படியாக தன்னை அலங்கரித்துக்கொண்டிருக்கிற திரைக்கதை. பழக்கம் இல்லாத பலரும் உள்ளே நுழைய முடியாமல் முறைப்பு கொள்ள வாய்ப்பிருக்கிறது. ஆனால், எவ்வளவு நாள்தான் கிண்டர் கார்டன் ஸ்பூன் பீடிங்கை தொடர்ந்து கொண்டிருக்க முடியும். படத்தின் குழுவினர் ஒரு பெரிய நிகழ்வுக்கு ஆசைப்பட்டிருக்கின்றனர். வெற்றி பெற்றிருக்கின்றனர்.

பளாரென்று அறைந்த அபர்ணா அப்படியே போய்விடுவதில்லை.

அவனோடு நின்று பேசுகிறாள். அறை வரை வந்து சேரும்போது கிளம்பு என்று துரத்துகிறாள். தோழியுடன் பேசிக்கொண்டிருக்கும்போது போன் வருகிறது. மாத்தன் கீழேதான் நின்று கொண்டிருக்கிறான். இருவரும் நள்ளிரவுக் கடையில் பூஸ்ட் குடிக்கிறார்கள். இருவரும் கல்லூரிக் காலத்தில் காதலர்களாக இருந்தவர்கள்தாம். மாத்தன் அவளிடம் கொஞ்சம் பணத்தை வாங்கி ஏமாற்ற வேண்டியதாகிவிட்டது. சூழ்நிலை. ஆனால், காதலில் நம்பிக்கை முக்கியம் என்கிறாள் அபர்ணா. அது உன்னிடம் எனக்கு வரவில்லை என்கிறாள். அப்படியாக வெறுத்தும் விரும்பியும் தாங்களே தங்களை வதை செய்துகொள்ளும் காதல் அவர்களுடையது இப்போது.

மாத்தன் தன்னால் ஒருவன் இறந்தான் என்பதை மறக்கமுடியாமல் தவிக்கும்போது, அவனைப் பிடிப்பதற்காக மூன்றுபேர் கொண்ட ஒரு போலீஸ் கோஷ்டி புறப்படுகிறது.

மாத்தன் அவளைக் கொஞ்சம் கொஞ்சம் நெருங்குகிறான். கல்யாணம் செய்து கொள்ளலாமா என்று கேட்கும்போது வெளியே தள்ளி கதவைப் பூட்டினாலும், அபர்ணா மீது மாத்தனுக்கு நம்பிக்கைதான். அதற்கு ஏற்றார்போல அவளுக்கு இரண்டு நாள் படப்பிடிப்புக்குப் போக வேண்டி வர, அவனையும் அவள் துணைக்கு அழைத்துக் கொள்கிறாள். இருவருக்குள்ளும் இருக்கிற சிநேகம் இவர்களையுமே அறியாமல் பேச வைக்கிறது. நெருங்கச் செய்கிறது. காதலின் சங்கீதம் சுற்றிலும் ஒலிப்பதை இருவரும் அறியவே செய்கிறார்கள். இந்த நேரத்தில் கொச்சினுக்கு மாத்தனை போலீஸார் தேடி வந்திருக்கிறார்கள். மாத்தனின் அபர்ணாவை, விளம்பர போர்டில் பார்க்கவும் செய்கிறார்கள். குழுவின் தலைவர் இளவரசு. இப்போதுதான் திருமணமான இளைஞன் ஹரிஷ், இந்த கேஸுக்காக திருமணமான மறுநாளே கிளம்பி வந்திருக்கிறான்.

மாத்தன் அபர்ணாவை மிகவும் நெருங்கி, அது உடலுறவு வரை போகிறது. அந்த உறவு தந்த துணிச்சலில் அவன் கல்யாணத்தைப் பற்றிப் பேசும்போது, துபாய்க்குச் சென்று விடலாம் என்று வற்புறுத்தும்போது, அவள் ஒரு பதில் சொல்கிறாள். அவன் அதற்கு ஒன்று சொல்லப்போக, அவள் மனம் அடிபடுகிறது. அவர்களுடைய நெருக்கத்தை அறிந்துகொண்டுவிட்ட அவளது அம்மா மேலும் காயப்படுத்துகிறாள். மாத்தன் மீது வெறுப்போடு அவள் விலகிச் செல்லும்போதுதான் அவனுக்கு போலீஸார் தன்னை முற்றுகையிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது. கிடைத்த சினிமா வாய்ப்பு பறிபோய், அந்த வாய்ப்பு தோழிக்குக் கிடைத்ததைச் சகிக்காமல் வாழ்வை வெறுக்கும்போது மாத்தன் தான் கிளம்புவதாகவும் ஒரே ஒருமுறை நாளை சந்திக்க வேண்டும் என்பதாகவும் கூறுகிறான். போலீஸ் அபர்ணாவை வளைக்கிறது. அவள் அவனைக் காட்டிக் கொடுக்கிறாள். அவர்கள் வந்து அவனை அழைத்துச் செல்கிறார்கள். அபர்ணா நின்று பார்த்திருக்கிறாள்.

மாத்தனை போலீஸ் என்கவுன்டர் பண்ணுகிறார்கள் என்பது மட்டுமல்ல கதை. அபர்ணா காலம் முழுக்க வற்புறுத்தின நம்பிக்கைக்குக் காதலில் என்ன இடம் என்று கேட்கிறார்கள். தனது வாழ்வில் அனுபவங்களின் மூலம் இளவரசு நினைப்பது ஒன்று. இப்போது தான் திருமணமான ஹரிஷ் நினைப்பது ஒன்று. அபர்ணாவின் தோழியான அந்த நடிகையின் பிட்டு தொப்புள் தெரிந்துவிட்டது என்று அவளை அறைந்து, தான் இருக்கிற அரபு தேசத்துக்கு இழுத்துச் செல்லும் அந்த ஆணின் நம்பிக்கை ஒன்று... என்று காதல் ஒரு மாயநதியாய் ஓடுகிறது. யாருமே காதலின் புதிர்களை விளங்கிக் கொண்டவர்களில்லை. ஆனால், உன் காதலி உன்னை வஞ்சித்தாள் என்பதைக் கேட்டபோதிலும், கண்களில் தனது காதலியைக் கண்டவாறு சடலமாய்க் கிடக்கிறான், மாத்தன்.

சொல்லி வந்த திரைக்கதையை எழுதியவர்கள், ஷ்யாம் புஷ்கரனும் திலீஷ் நாயரும் ஆவார்கள். கோடார்ட்டின் பிரத்லஸ் கொஞ்சம் இருக்கிறது என்பதை நண்பர் ஒருவர் கவனப்படுத்தியபோது, நான் மறுக்கவில்லை. எனினும் இது வேறு ஒரு படம்தான். வேறு ஒரு திரைக்கதைதான். அதிலும், படத்தில் வருகிற உரையாடல்களை ஆடாமல் அசையாமல் கவனித்து எவ்வளவு பொறாமைப்பட்டேன் என்பதற்கு எல்லையே இல்லை. எழுதினவர்கள் உண்டாக்கின உயிரை ஒவ்வொரு டெக்னீஷியனும் போஷித்திருக்கிறார்கள். ஊட்டம் கொடுத்திருக்கிறார்கள். ஒளிப்பதிவாளரின் இரவுகளை அப்படியே உச்சி முகரலாம். நான் பல இடங்களில் வெண்ணிற இரவுகளை நினைத்துக் கொண்டேன். எடிட்டரை ஒரு பேட்டியில் பார்த்தேன். பையன். வாடா போடா என்று கூப்பிட்டு விடலாம். சம்பவம் என்ன என்று கேட்டால், அவன் அதற்குப் பதில்கூட சொல்வதில்லை. மழுப்பலுடன் கேள்வியைத் தள்ளிவிட்டு விடுகிறான். ஆனால், செய்திருப்பது என்ன மாதிரி வேலை?

மாத்தனும், அபர்ணாவும் கலவி கொள்ளும்போது புகுந்து வருகிற பாடல் அற்புதம். மற்ற பாடல்களும்கூட மோசமில்லை. இந்தப் படத்தில் பாடல்களே இல்லாமல் இருந்தால் என்ன நிகழ்ந்திருக்கும். வேண்டாம், அந்த அளவுக்குப் போகத் தேவையில்லை. படம் முழுக்க விரவியிருந்த இசையும் நம்மை சோர்வுக்குள்ளாக்கவில்லை என்பது முக்கியம். சில இடங்களில் உச்சம் தொடவும் செய்தது.

நாயக நாயகியாய் வந்த இருவருமே ஜில்லென்றிருந்தனர்.

டோவினோ தாமஸ் இந்தப் படத்துக்காக மட்டுமே கட்டுமஸ்தாக தன்னை வைத்துக்கொண்டார் என்று நம்புகிறேன். தொடர்ந்தால், இந்த உடம்பின் விறைப்பு அவரைப் பிளாஸ்டிக்காக மாற்றிவிடும். முகம் மசியாது. மற்றபடி அவ்வளவு கம்பஃபர்டபிளான நடிகன், சந்தேகமில்லை. அதிலும் அவர் காட்டுகிற துக்கப் புன்னகைகள். அபர்ணாவாக வந்தவர் ஐஸ்வர்யா லட்சுமி. செம்மை. உண்மையில் அவர் ஏற்றிருந்த கதாபாத்திரம் நிறைய உள்ளடுக்குகள் கொண்டது. மாத்தன் சூழ்நிலையால் நம்பிக்கை கொள்ள முடியாதவனாய் இருந்தான், அபர்ணா சென்று சேருவதும் அந்த இடத்துக்குத்தான். அவளது வாழ்வு சிக்கல்கள் நிரம்பியது. எவ்வளவு முதிர்ச்சியோடிருந்தும், அலைபாய்கிறவள். கீழ்படியாமை, தனிமை, பிடிவாதம், பொறாமையேகூட... எல்லாமிருந்தும் அவள் எல்லோரையும் பொருட்படுத்துகிறாள். தனியான தேர்ச்சி இல்லாமல், புரிகிற இலகுத்தன்மை இல்லாமல் ஒரு நடிகை இதற்குள் வாழ்ந்திருக்கவே முடியாது. ஐஸ்வர்யா என்றில்லை, படத்தில் அத்தனைபேருக்கும் அசல் முகத்தைக் கொண்டு வருகிற யோக்கியதைகள் இருந்திருக்கின்றன. தனியாய் ஒருவரைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமென்றால், இளவரசு என்ன மாதிரி ஒரு நடிகர். எப்படி அவரை சில்லுச் சில்லாக சீரழித்துக்கொண்டிருக்கிறோம். என்கவுன்டருக்கு முன்னால் ரொம்பப் பேசுகிற ஹரிஷை அடக்கிவிட்டு அடிபட்ட மிருகம் போன்ற ஒரு முகத்துடன் பழியைத் தீர்த்துக்கொள்கிற அந்தத் தருணம் எவ்வளவு அரிதானது. நான் செய்வது சரிதானா என்கிற ஐயமும் சோர்வும்கூட அப்போது உள்ளூர இருப்பது தெரியவரும். அவரை நேரில் பாராட்டும்போதுகூட என்னை மறந்து பாராட்டினேன். இன்னொரு முறை பார்த்து... இப்போதும்கூட அப்படித்தான்.

இந்தத் தொடரில் மலையாள சினிமாக்களின் வேறுவிதமான முயற்சிகளை செய்து பார்த்துவிட்டவர்களில் முக்கியமானவராக ஆஷிக் அபுவைக் குறிப்பிட்டிருந்தேன். முதல் படமாகக்கூட `சால்ட் அண்டு பெப்பரை'த்தான் எழுதினேன். நடுவில் அவருக்கு ஒன்றிரண்டு படங்கள் நழுவின. இந்தப் படம் ஒரு விஸ்வரூப எழுச்சி. ஒரு செமியான டார்க் லவ் ஸ்டோரி என்று தொடங்கியதை பல்வேறு தடங்களிலும் நகர்த்தி வாழ்வையும் சொல்லிச் செல்கிறார். ஒரு கதையை இவர் அணுகும் தந்திரங்களைப் புரிந்துகொண்டால், படத்தின் உள்ளூர ஓடுகிற கவிதைகளைப் புரிந்துகொள்ளலாம். ஒரு முத்தம் தரவா என்று மாத்தன் கேட்பதும், அதுக்கு இன்னும் ஆவல என்று அவள் சொல்வதுமான காட்சிக்கு முறைப்படி எப்படி ஷாட் வைப்பார்கள். அபு அப்படியே நைசாக கடந்துபோகிற அந்த லாகவத்தைத்தான் ஸ்டைல் என்றெல்லாம் சொல்லிக்கொள்ள வேண்டும். டைரக்டர் டச்.

படம் முடியும் தருவாயில் மூன்று பெண்களுமாக குடித்து முடித்து கதை பேசி, அழுது, பாட்டெல்லாம் பாடினதற்கு அப்புறம் அபர்ணா மாத்தனின் பால்ய கதையைச் சொல்வாள். மாட்டக்கூடாத ஒரு பொறியில் முழுவதுமாய் சிக்கிக்கொண்டால்தான் உயிர்ப்பிழைப்பின் வாதை எவ்வளவு கொடுமையானது என்று தெரியும். சொல்லப்போனால் மாத்தனின் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை முழுவதுமாய்ப் புரிந்துகொண்டவள் அபர்ணா ஒருத்திதான். அவள் வேண்டுமென்றே வெறுக்கவில்லை. வேண்டுமென்றே காட்டிக் கொடுக்கவில்லை. என்ன அலையடித்து விலகினாலும், தாங்கள் இருவரும் சேர்ந்துகொள்ள வேண்டியவர்கள் என்று அவள் நம்புகிறாள்.

எப்போதும் போல, என்றாவது ஒருநாள் முதுகுக்குப் பின்னாலிருந்து அவன் அப்பு என்று கூப்பிட்டு விடுவான் என்று காத்திருக்கிறாள்.

அடுத்த கட்டுரைக்கு