Published:Updated:

"ஜோதிகாவுக்கு அண்ணனா நடிக்க சான்ஸ் கேட்ட காலமெல்லாம் இருக்கு!" - சந்தீப் கிஷன்

"ஜோதிகாவுக்கு அண்ணனா நடிக்க சான்ஸ் கேட்ட காலமெல்லாம் இருக்கு!" - சந்தீப் கிஷன்
"ஜோதிகாவுக்கு அண்ணனா நடிக்க சான்ஸ் கேட்ட காலமெல்லாம் இருக்கு!" - சந்தீப் கிஷன்

நடிகர் சந்தீப் கிஷன் பேட்டி.

2013-ம் ஆண்டு வெளிவந்த `யாருடா மகேஷ்' படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் சந்தீப் கிஷன். பிறகு மூன்று வருடங்கள் கழித்து `மாநகரம்' படம் மூலம் பிரபலமானார். மேலும், தான் நடிக்கும் படங்களைத் தயாரிக்கவும் ஆரம்பித்தார். தமிழ், தெலுங்கு இரண்டிலும் கலந்துகட்டி அடிக்கும் சந்தீப்பின் அடுத்த படம், `நரகாசூரன்'. அவருடன் பேசியதிலிருந்து...

``சினிமா ஆர்வம் எப்படி?" 

``நான் பொறந்து வளர்ந்தது எல்லாமே சென்னைதான். இப்போவும் வீடு கோடம்பாக்கம் ஏரியாவுலதான் இருக்கு. சின்ன வயசுல இருந்து வார இறுதியில குறைந்தபட்சம் நான்கு படங்கள் பார்க்கிறதை வழக்கமா வெச்சிருக்கேன். குறிப்பா ரஜினி சார் படம்னா ரொம்பப் பிடிக்கும். அவர் மாதிரி நானும் ஒரு நடிகர் ஆகணும்னு ஆசைப்பட்டேன். சின்ன வயசுல அவர் போடுற காஸ்டியூம்ஸ், ஸ்டைல் எல்லாத்தையும் அப்படியே பண்ணுவேன். ரஜினி சார் படங்கள்ல சொல்லப்படுற கருத்துகள் சரியா இருக்கணும்னு அவர் நினைப்பார். ஒரு ஹீரோ எப்படி இருக்கணும்னு ரஜினி சார் படங்களைப் பார்த்துதான் கத்துக்கிட்டேன். 

ஸ்கூல்ல நான் சுமாரா படிக்கிற பையன். ஆனா, டான்ஸ் ஆடுறதிலேயும், நாடகத்துல நடிக்கிறதுலேயும் தவறாம கலந்துக்குவேன். காலேஜ்லகூட கிளாஸுக்குப் போய் படிச்ச நாள்கள் ரொம்ப ரொம்பக் குறைவு. லயோலா கல்லூரியில விஸ்காமுக்கு சீட் கிடைச்சும், என் வீட்ல கட்டாயப்படுத்தியதுனால இன்ஜினீயரிங் படிச்சேன். முதல் வருடம் மட்டும்தான் காலேஜுக்குப் போனேன். இரண்டாவது வருடம் லயோலாவுல பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் படிச்சேன். காலேஜ் படிக்கும்போதே படங்கள்ல நடிக்கிறதுக்கான முயற்சிகளையும் பண்ணிக்கிட்டு இருந்தேன். என்னோட ஆசிரியர்களும் அதுக்கு ரொம்ப உதவிகரமா இருந்தாங்க."

``குடும்பம் பற்றி..."

``அப்பா, தனியார் கம்பெனியில ஹெச்.ஆர். இப்போ ஹைதராபாத்ல சொந்தமா ஒரு ரெஸ்டாரன்ட் ஆரம்பிச்சிருக்கோம். அதை அவர்தான் பார்த்துக்கிறார். அம்மா, அகில இந்திய வானொலி நிலையத்துல வேலை பார்த்துக்கிட்டு இருக்காங்க. என்னோட தங்கச்சி புரொடக்‌ஷன் சம்பந்தப்பட்ட படிப்பை முடிச்சு, மும்பை ஈராஸ் தயாரிப்பு நிறுவனத்துல வேலை பார்த்துக்கிட்டு இருக்காங்க. தெலுங்கு துறையில இருக்கிற பிரபல ஒளிப்பதிவாளர் சோட்டா கே.நாயுடு என் மாமா. இவர் சினிமா துறையில இருக்கிறதுனால நான் கஷ்டப்படாம சினிமாவுக்கு வந்துட்டதா சிலர் நினைச்சுக்கிட்டு இருக்காங்க. உண்மை அது இல்லை. நான் நிறைய ஆடிஷன்ஸ்ல கலந்துக்கிட்டு பல அவமானங்களைத் தாண்டிதான் சினிமாவுக்கு வந்திருக்கேன். ஜோதிகாவுக்கு அண்ணனா நடிக்க சிம்பு படத்துல சான்ஸ் கிடைக்குமானு கேட்ட காலமெல்லாம் உண்டு. என் குடும்பத்துல உள்ளவங்களுக்கு சினிமா துறை மீது ரொம்ப பயம். நான் நாலு படம் நடிச்சு, மார்க்கெட்ல எனக்குனு ஒரு பெயர் உருவானத்துக்குப் பிறகுதான் என் மாமா `பீருவா', `வெங்கடாத்ரி எக்ஸ்பிரஸ்', `டைகர்'னு மூன்று படங்கள் தொடர்ச்சியா காசு வாங்காம ஒளிப்பதிவு பண்ணிக் கொடுத்தார். சின்ன பட்ஜெட்டை வெச்சு பெரிய லெவல் படங்கள் பண்றது எப்படினு அவர்கிட்ட இருந்துதான் கத்துக்கிட்டேன்."

``கெளதம் மேனன்கிட்ட உதவி இயக்குநரா இருந்த அனுபவம்?" 

``உதவி இயக்குநர் ஆகணும்னு நினைச்சதில்லை, ஒருநாள் எதார்த்தமா கெளதம் சாரை பார்க்கிற வாய்ப்பு கிடைச்சது. பேச ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்திலேயே என்னை உதவியாளரா அவர்கிட்ட வந்து சேர்ந்துக்க சொன்னார். அப்போ, அவர் `சென்னையில் ஒரு மழைக்காலம்'னு புதுமுகங்களை வெச்சுப் படம் எடுத்துக்கிட்டு இருந்தார். அப்புறம் `வாரணம் ஆயிரம்' படத்துல உதவி இயக்குநரா சேர்ந்தேன். அப்போதான் எனக்குத் தெரிய வந்துச்சு, என்னோட சேர்ந்து மொத்தம் 12 உதவி இயக்குநர்கள் அந்தப் படத்துல இருக்காங்கனு. எனக்கு அந்த செட்ல ஒரு வேலையும் கொடுத்ததில்லை. இனியும் படம் எடுக்கணும்ங்கிற ஆசை எனக்கில்லை. படம் எடுக்கிறதுக்கு நிறைய வேலை பார்க்கணும், நிறைய தெரிஞ்சிருக்கணும், நாம நடிக்கிறதோட நிறுத்திக்கலாம்னு இருக்கேன்."

``படங்கள் தயாரித்த அனுபவம் எப்படி இருந்துச்சு?"

``தெலுங்குல `சிநேகிதம்', `பிரஸ்தானம்' ஆகிய படங்களுக்குப் பிறகு கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு எனக்கு பட வாய்ப்புகள் இல்லை. அதனால, நானே என் படத்தைத் தயாரிக்கலாம்ங்கிற முடிவுக்கு வந்தேன். அப்பா அந்தச் சமயத்துல வீட்டை விற்றார். அதுல 65 லட்சம் கிடைச்சது. அந்தப் பணத்தை எனக்குக் கடனா தரச் சொல்லி அவர்கிட்ட கேட்டேன். அந்தப் பணத்தை வெச்சு இயக்குநர் பிரவீனும் நானும் சேர்ந்து `ரொட்டின் லவ் ஸ்டோரி' படத்தைத் தயாரிச்சோம். பிரவீனும் படத்துக்குப் பணம் போட்டார். ரெஜினா இந்தப் படத்துலதான் அறிமுகம். நல்ல வேலை அந்தப் படம் ஹிட் ஆச்சு, போட்ட காசு திருப்பிக் கிடைச்சுச்சு. அதுக்கப்புறம்தான் `யாருடா மகேஷ்' படம் மூலமா தமிழுக்கு அறிமுகமானேன்."

``நடுவுல ஒரு இந்தி சினிமாவுல நடிச்சிருக்கீங்களே..." 

``எனக்கு நடிப்பு சொல்லிக்கொடுத்ததே பாலிவுட் சினிமாதான். எனக்கு இந்தி சுத்தமா தெரியாது. `ஷோர் இன் தி சிட்டி' படத்துல லைவ் ரெக்கார்டிங் மோட்ல ஷூட் பண்ணாங்க. அதாவது, படத்துக்கு டப்பிங் கிடையாது. ஸ்பாட்ல நாம பேசுறதை லைவ் ரெக்கார்டிங் பண்ணுவாங்க. இந்தப் படத்தோட இயக்குநர் ராஜ் நிதிமௌரு மற்றும் கிருஷ்ணா டிகே இப்போ அமேசான் பிரைம் வீடியோவுல ஒரு வெப் சீரீஸ் எடுத்துக்கிட்டு இருக்காங்க. அதுல கேமியோ ரோல் பண்றேன்."

``அடுத்தடுத்த படங்கள்..."

``இயக்குநர் கார்த்திக் நரேன் `நரகாசூரன்' படத்துல நடிக்கக் கூப்பிடப்போ சந்தோஷமா இருந்துச்சு. படத்துல அரவிந்த் சாமி சார் இருக்கார்னு தெரிஞ்சதும் டபுள் சந்தோஷம். கார்த்திக் தெளிவான சிந்தனை கொண்ட நபர். நிதானமாதான் படத்தை எடுப்பார். படத்துல நான் நல்லவனும் கிடையாது, கெட்டவனும் கிடையாது. இப்போவரை இந்தக் கதாபாத்திரம் எந்த மாதிரியான டிசைன்னே எனக்குப் புரியலை. அடுத்து, தமன்னாவோட ஒரு தெலுங்கு ரோம்-காம் படத்துல நடிக்கிறேன். இயக்குநர் அஸ்வின் ரவீந்திரன் படத்துல ஹீரோவா நடிக்கிறேன். தவிர, அடுத்த தமிழ்ப் படமான திருடன்-போலீஸ் கதைக்கு ரஜினி சாரோட பழைய பட டைட்டில் ஒண்ணைதான் பெயரா வெச்சிருக்கோம். அதிகாரபூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளிவரும்" என்று தம்ஸ் அப் காட்டுகிறார், சந்தீப். 

அடுத்த கட்டுரைக்கு