Election bannerElection banner
Published:Updated:

"ஜெயலலிதா பரிமாறிய 50 வகை உணவு...மறக்க முடியாத அந்த க்ரூப் ஃபோட்டோ!’’ அஞ்சலி தேவி நினைவுகள்

"ஜெயலலிதா பரிமாறிய 50 வகை உணவு...மறக்க முடியாத அந்த க்ரூப் ஃபோட்டோ!’’ அஞ்சலி தேவி நினைவுகள்
"ஜெயலலிதா பரிமாறிய 50 வகை உணவு...மறக்க முடியாத அந்த க்ரூப் ஃபோட்டோ!’’ அஞ்சலி தேவி நினைவுகள்

"இன்னும்கூட ஆந்திர தேசத்தில் அவரை சீதா தேவியாகவே நினைத்து மக்கள் மரியாதை செலுத்துறாங்க. பெரிதாக விருது அங்கீகாரம் கிடைக்காட்டியும், அவருக்கு மக்கள் மனதில் எப்போதும் நீங்கா அங்கீகாரமும் மரியாதையும் உண்டு!"

தென்னிந்திய சினிமாவில் முத்திரைப் பதித்த நடிகைகளில் முக்கியமானவர், அஞ்சலி தேவி. 1950-களுக்குப் பிறகு சினிமாவில் அறிமுகமான நாயகிகளுக்கு ரோல் மாடல். நடிகையாகப் புகழின் உச்சிக்குச் சென்றவர். தயாரிப்பாளராகத் தோல்விகளையும் கண்டவர். இவரின் பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 24). அஞ்சலி தேவியுடன் நீண்ட கால நட்பில் பழகிய நினைவுகளைப் பகிர்கிறார் நடிகை செளகார் ஜானகி. 

``அந்தக் காலகட்ட தென்னிந்திய சினிமாவில், திருமணமாகி குழந்தை பெற்ற பிறகு சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி புகழ்பெற்ற முதல் நடிகை, அஞ்சலி தேவி. அவங்களுக்குப் பிறகு அந்த வரிசையில் நானும் இடம்பிடித்தேன். இந்த சிமிலாரிட்டியைப் பற்றி நாங்க பலமுறை பேசியிருக்கோம். அஞ்சலி தேவி, நாடகத்திலிருந்து சினிமாவுக்கு வந்தவங்க. அதனால், சினிமாவுக்கு வந்ததில் அவங்க குடும்பத்தில் எதிர்ப்பில்லை. `ஆதிநாராயண ராவ்' என்ற புகழ்பெற்ற இசையமைப்பாளரைத் திருமணம் செய்து நல்லா வாழ்ந்தாங்க. 1950-ம் ஆண்டுகளின் தொடக்கத்திலேயே, அஞ்சலி தேவி பெரிய புகழுடன் இருந்தாங்க. என் திருமணத்துக்குப் பிறகு, விஜயவாடா நகரில் குடியேறிட்டேன். அப்போ குடும்பத்துடன் பலமுறை அவங்க நடித்த படங்களைப் பார்த்து ரசித்திருக்கேன். பிற்காலத்தில், அவங்களோடு இணைந்து 10 படங்களுக்கும் மேலே நடிச்சேன்'' என நினைவுகளைத் தொடர்கிறார்.

``நாங்க இருவருமே சாய் பாபா பக்தர்கள். அடிக்கடி புட்டபர்த்தி போவோம். சினிமாவில் ஆக்டிவாக நடிச்சுட்டிருந்தபோது நாங்க பழகினதைவிட, புட்டபர்த்தியில்தான் எங்க நட்பும் அன்பும் அதிகமாச்சு. சாய் 

பாபாவின் 14-ம் ஆண்டு வரையிலான வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுக்க, அஞ்சலி தேவிக்கு சத்ய சாய் பாபா அனுமதி கொடுத்திருந்தார். அதன்படி ``ஷிரடி சாய் பக்தி சாய் திவ்ய கதா (Shirdi Sai Parthi Sai Divya Katha)'ங்கிற படத்தில் பாபாவின் தாயாக அஞ்சலி தேவி நடிச்சிருந்தாங்க. என்னை வாத்தியாரம்மா ரோலில் நடிக்கவைக்கச் சொல்லியிருக்கார் சத்ய சாய் பாபா. அதன்படி நானும் நடிச்சேன். அதுக்காக, அவங்களுக்கு எப்போதும் நன்றிக் கடன் பட்டிருக்கேன். அஞ்சலி தேவி ரொம்ப எளிமையா இருப்பாங்க. என்னைவிட ஐந்து வருடம் மூத்தவங்க. என் மீது ரொம்ப அன்போடு பழகுவாங்க. அவங்க கணவரின் முதல் தாரத்து குழந்தைகளையும் சொந்தக் குழந்தைகளாக வளர்த்தாங்க.

1950-களில் நடிப்புடன் தயாரிப்பாளராகவும் மாறி, பல நடிகர்களை அறிமுகப்படுத்தினாங்க. நடிகையாக உயர்ந்தபோதும் தயாரிப்பாளராகச் சறுக்கல்களையும் சந்திச்சாங்க. சொத்துகள் ஜப்தி ஆகும் நிலைக்குத் தள்ளப்பட்டாங்க. பிறகு, சத்ய சாய் பாபா மற்றும் சில நல் உள்ளங்களின் உதவியால் மீண்டுவந்தாங்க. சினிமா, ஆன்மிகம் என அவங்க வாழ்க்கை நிறைவாக இருந்தது. புட்டபர்த்தியில் நடந்த குரு பவுர்ணமி நிகழ்ச்சியில்தான் அவரை கடைசியாப் பார்த்தேன். ஒருகட்டத்தில் அவங்க ஆரோக்கியம் குறைந்தது. அமைதியாக தன் ஓய்வுக்காலத்தை கழிச்சாங்க. ஒரு பெண்ணாக, நிறைவான வாழ்க்கையை வாழ்ந்துட்டு 2014-ம் ஆண்டு காலமானாங்க. சினிமாவில் அவங்க செய்த சாதனைகள், எல்லாக் காலத்து நடிகைகளுக்குமான பாடம். அவங்களுக்கு மத்திய அரசு பத்ம விருதுகள் கொடுத்திருக்கணும். கிடைக்காதது ஏனோ. 1963-ம் ஆண்டு வெளியான `லவகுசா' திரைப்படத்தில் சீதையாக நடித்து பெரும் புகழைப் பெற்றவர், அஞ்சலி தேவி. இன்னும்கூட ஆந்திர தேசத்தில் அவரை சீதா தேவியாகவே நினைத்து மக்கள் மரியாதை செலுத்துறாங்க. பெரிதாக விருது அங்கீகாரம் கிடைக்காட்டியும், அவருக்கு மக்கள் மனதில் எப்போதும் நீங்கா அங்கீகாரமும் மரியாதையும் உண்டு" என நெகிழ்ச்சியாகக் கூறுகிறார் செளகார் ஜானகி. 

நகைச்சுவை நடிகையாக தமிழ் சினிமாவில் கோலோச்சிய நடிகை சச்சு, அஞ்சலி தேவி குறித்த தன் நினைவுகளைப் பகிர்கிறார். ``நான் குழந்தை நட்சத்திரமாக இருந்த 1950-களில் அஞ்சலி தேவி அம்மா புகழின் உச்சியில் இருந்தாங்க. இதிகாசம் மற்றும் குடும்பப் பாங்கான படங்களில் புகழ்பெற்றாங்க. அவங்க கரங்களில் குழந்தையா தவழ்ந்து, பிற்காலத்தில் அவங்க தயாரிப்பிலும் நடிச்சேன். சினிமா மற்றும் குடும்ப வாழ்க்கையில் பல விஷயங்களைச் சொல்லிக்கொடுத்தாங்க. சிவாஜி கணேசன் அண்ணன் முதன்முதலில் அஞ்சலி அம்மாவின் தயாரிப்பில்தான் நடிக்கவிருந்தார். அஞ்சலி அம்மாவிடம் அட்வான்ஸும் வாங்கிட்டார். ஆனால், அந்தப் படத்துக்குப் பிறகு கமிட்டான `பராசக்தி' முதலில் ரிலீஸ் ஆச்சு. சிவாஜி அண்ணன் தன் வாழ்நாள் வரை அஞ்சலி அம்மா கொடுத்த அட்வான்ஸ் பணத்தைப் பத்திரமா வெச்சிருந்தார். அஞ்சலி தேவி அம்மாவை முதலாளி என்றே கூப்பிடுவார்.

இயல் இசை நாடக மன்றத்தில் நான் உறுப்பினர் செயலாளராக இருந்தபோது, முதல்வராக இருந்த ஜெயலலிதா அம்மா, தன் காலத்து நடிகைகளுக்கு வீட்டில் விருந்து கொடுக்க ஆசைப்பட்டாங்க. அந்த நிகழ்வுக்கான ஏற்பாட்டை என்னை செய்யச் சொன்னாங்க. `ஹோட்டலுக்கு என்னால் வரமுடியாது. பாதுகாப்புக் கெடுபிடிகள் இருக்கும். செலக்டிவா சில கலைஞர்களை மட்டும் அழைக்கிறேன். போயஸ் கார்டன் வீட்டுக்கு வரச்சொல்லுங்க. அந்த லிஸ்டில், அஞ்சலி தேவி அம்மா நிச்சயம் இருக்கணும்'னு ஜெயலலிதா அம்மா சொல்லிட்டாங்க. அஞ்சலி தேவி அம்மாவும் சந்தியா அம்மாவும் (ஜெயலலிதாவின் அம்மா) ஒன்றாகப் பணியாற்றியவங்க. 

அந்தச் சந்திப்புத் தகவலை அஞ்சலி அம்மாகிட்ட சொன்னேன். அப்போ அவங்களுக்கு ரொம்ப உடல்நிலை சரியில்லை. வெளிநிகழ்ச்சிகளுக்குப் போகாமல் இருந்தாங்க. ஆனாலும், `ஜெயலலிதா முதலமைச்சரா இருந்தாலும் எனக்குப் பொண்ணு மாதிரி. அவரை ஆசீர்வாதம் பண்ணவேண்டியது என் கடமை. இந்தச் சந்தர்ப்பம் இனி கிடைக்குமான்னு தெரியாது'னு சொல்லி, போயஸ் கார்டன் வீட்டுக்கு வந்தாங்க. ஜெயலலிதா அம்மாவை மனதார வாழ்த்தினாங்க. செளகார் ஜானகி, சரோஜா தேவி, ஜமுனா, சுகுமாரி, ராஜஶ்ரீ, பி.சுசீலா, சோ ஆகியோருடன் நானும் கலந்துக்கிட்டேன். என் வாழ்நாளில் மறக்கமுடியாத சந்திப்பு அது. ஜெயலலிதா அம்மா, முதலமைச்சர் பிம்பத்தை மறந்து எங்களை அன்போடு கவனிச்சுகிட்டாங்க. 50 வகையான உணவுகளைப் பரிமாறினாங்க. எல்லோரும் குரூப் போட்டோ எடுத்துக்கிட்டோம். ஜெயலலிதா அம்மாவின் கனிவான கவனிப்பு பற்றி எங்கிட்ட சொல்லி சந்தோஷப்பட்டாங்க அஞ்சலி அம்மா. சென்னை கிரீன்வேஸ் சாலையில் பெரிய பங்களா வீட்டில் வசிச்சாங்க. அந்த வீட்டை இடிச்சுட்டு, குடும்பத்தினர் எல்லோருக்காகவும் பிளாட் கட்டினாங்க. அதில் சிறிது காலம் வாழணும்னு ஆசைப்பட்டாங்க. ஆனால், அந்த பிளாட் கட்டிமுடிக்கும் முன்பே இறந்துட்டாங்க. அங்கே சில காலம் அவங்க வாழ்ந்திருந்தால் இன்னும் சந்தோஷப்பட்டிருப்பாங்க" என்கிறார் நடிகை சச்சு.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு