Published:Updated:

மாணிக்கமாக இருக்கும் பிரபுதேவா பாட்ஷாவாக மாறினாலும்..? - 'லக்ஷ்மி' விமர்சனம்

மாணிக்கமாக இருக்கும் பிரபுதேவா பாட்ஷாவாக மாறினாலும்..? -  'லக்ஷ்மி' விமர்சனம்
News
மாணிக்கமாக இருக்கும் பிரபுதேவா பாட்ஷாவாக மாறினாலும்..? - 'லக்ஷ்மி' விமர்சனம்

மாணிக்கமாக இருக்கும் பிரபுதேவா பாட்ஷாவாக மாறினாலும்..? - 'லக்ஷ்மி' விமர்சனம்

`நடனம்' என்கிற வார்த்தைகூட பிடிக்காத அம்மாவுக்கு, எலும்பு நரம்பெல்லாம் நடனக் கனவுகளைச் சுமக்கிற மகள்... அம்மாவைச் சமாளித்து சமூகப் பிரச்னைகளை எதிர்கொண்டு தன் லட்சியத்தை அடைகிற போராட்டம்தான் 'லக்ஷ்மி'. 

பேங்க் ஆபீஸர் சிங்கிள் மதர் ஐஷ்வர்யா ராஜேஷ் (நந்தினி). மியூசிக்கை கேட்டால் தன்னை அறியாமல் ஆட்டம் போடும் துறுதுறு சுட்டி சிறுமி தித்யா (லக்ஷ்மி). டிவியில் தேசிய அளவிலான டான்ஸ் போட்டியின் விளம்பரத்தைப் பார்த்தவள் அம்மாவுக்குத் தெரியாமல் அதில் கலந்துகொள்ள முயல்கிறாள். காஃபி ஷாப் ஓனராக அறிமுகமாகும் பிரபுதேவா, லக்ஷ்மி டான்ஸ் க்ளாஸ் சேர ஃபீஸ் கட்டி, பிராக்டீஸ் செய்யத் தனது கடையில் இடம் தந்து உதவுகிறார். டியூசன் போவதாகச் சொல்லி டான்ஸ் அகாடமியில் சேரும் லக்ஷ்மி அங்கிருப்பவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினாலும், லக்ஷ்மியால் அவளுடைய அணியே ஆடிஷனில் தோல்வியடைகிறது. அதன் பின் என்ன நடக்கிறது, போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெறுகிற லக்ஷ்மியின் கனவு நனவானதா என்பதே மீதிக் கதை. 

லக்ஷ்மி கதாபாத்திரத்தில் சிறுமி தித்யா. கேரக்டரில் கனகச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். ஒட்டுமொத்த படத்தையும் சுமக்கிற பாத்திரத்தை நிறைவாகச் செய்திருக்கிறார். வெறும் டான்ஸ் மூவ்களில் மட்டுமல்லாது உணர்வுபூர்வமான காட்சிகளில் நடிப்பிலும் அசத்தியிருக்கிறார். வாவ் கேர்ள். ஆனால், இது டான்ஸ் படம் என்பதை உணர்த்துவதற்காக லக்ஷ்மி கதாபாத்திரத்தைக் காலை எழுந்ததும் டான்ஸ்... தெருவில் டான்ஸ்... ஓடும் பேருந்தில் டான்ஸ்... பள்ளியில் டான்ஸ் என ஒரேயடியாக எங்கெங்கும் ஆடவைத்திருப்பதை தவிர்த்திருக்கலாம். ஒரு கட்டத்துக்கு மேல் சலிப்படையச் செய்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஃப்ளாஷ்பேக்கில் `டான்' ஆக இருக்கும் பாட்ஷா, முதற்பாதியில் மாணிக்கமாக ஆட்டோ ஓட்டும் அதே டெம்ப்ளேட் கதாபாத்திரம் நாயகன் பிரபுதேவாவுக்கு. அவரை இன்னும்கூட நிறைய ஆடவைத்திருக்கலாம். நடனப்புயலுக்கு ஒரே ஒரு நடனம்தானா? அம்மா கதாபாத்திரத்தில் பாந்தமாக வந்து செல்லும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு மைக்ரோ ரோல்தான். போனில் பேசுகிறார்... போனில் கோபப்படுகிறார்... போனில் நடிக்கிறார்... ஆனால், தந்த வேலையைச் சரியாகச் செய்திருக்கிறார். பிரின்சிபலாக வரும் கோவை சரளா, வழக்கமான குறும்பு நடிப்பில் அசத்தினாலும், சில இடங்களில் ஓவர் ரியாக்‌ஷனாகத் தெரிகிறது. படம் முழுக்க வரும் பல மாநிலங்களிலிருந்து இம்போர்ட் செய்யப்பட்ட திறமையான நடனக் குழந்தைகள் அத்தனை பேரும் க்யூட். குறிப்பாக, 'பப்ளி' கேரக்டராக வரும் அஸ்வத் நடனத்திலும் நடிப்பிலும் 'ச்சோ சுவீட்!' படத்தில் முறைத்து முறைத்து சிரிக்க வைக்கும் கருணாகரனை இன்னும் கொஞ்சம் அதிகமாகப் பயன்படுத்தியிருக்கலாம் இயக்குநரே! தமிழ் சினிமாவுக்கு சிக்ஸ்-பேக் வைத்த, டான்ஸ் ஆடத்தெரிந்த வில்லனாகச் சல்மான் யூசுஃப் கான். அவருடைய அறிமுக காட்சிகள் வாவ் போட வைத்தாலும், பிற்பாதியில் சும்மா முறைத்துக்கொண்டு கைகளைப் பிசைந்துகொண்டும் அலைகிற அவரின் கதாபாத்திரம் வலுவிழந்து புஸ்ஸாகிவிடுகிறது.

டான்ஸ் சார்ந்த படம் என்பதால் வெஸ்டர்ன், ஃபோக் எனக் கலந்துகட்டி இசையமைக்கும் வேலையைச் சாம்.சி.எஸ் தன்னால் இயன்றவரை சிறப்பாகவே செய்திருக்கிறார். `மொர்ராக்கா மட்ராக்கா' பாடல் திரையரங்கை விட்டு வெளியே வந்தும் முணுமுணுக்க வைக்கிறது. ஆரம்ப காட்சியிலிருந்து இறுதிக்காட்சி வரை நீரவ்ஷாவின் ஒளிப்பதிவு படத்தின் மிகப்பெரிய ப்ளஸ். 'இதுவரை ஜெயிச்சதே இல்லாத மாதிரி பிராக்டீஸ் பண்ணு, இதுவரை தோத்ததே இல்லாத மாதிரி பெர்ஃபார்ம் பண்ணு', நம்ம யாருக்காகவும் ஆடலை. நம்ம சந்தோஷத்துக்காக ஆடுறோம்' மாதிரியான அஜயன் பாலாவின் வசனங்கள் எல்லோருக்குமான மோட்டிவேஷன் மொமன்ட். 

நடனம் சார்ந்த படம் என்பதால், நடனத்தை மட்டுமே ஃபோகஸ் செய்து மற்றவற்றைத் தவறவிட்டதாகவே தோன்றுகிறது. சில இடங்களில் 'கராத்தே கிட்', 'இறுதிச்சுற்று', 'ஏபிசிடி' ஆகிய படங்களின் சாயலை அவ்வப்போது கண் முன் வந்துபோக வைக்கும் திரைக்கதை படத்தின் சறுக்கல். எளிதில் தீர்மானிக்கக்கூடிய திரைக்கதை, பலவீனமான ஃப்ளாஷ்பேக் போர்ஷன், ஓவர்லோடட் டான்ஸ் எல்லாம் சேர்ந்து, இரண்டரை மணிநேரம் டான்ஸ் ரியாலிட்டி ஷோ பார்த்த உணர்வே ஏற்படுகிறது.  

டான்ஸுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை அழுத்தமான திரைக்கதை அமைக்கவும் கொடுத்திருந்தால் 'லக்ஷ்மி'யை நிச்சயம் கொண்டாடியிருக்கலாம்!

'மேற்குத் தொடர்ச்சி மலை' படத்தின் விமர்சனத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்..!