தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

நம்பிக்கையே பெரிய விருது!

நம்பிக்கையே பெரிய விருது!
பிரீமியம் ஸ்டோரி
News
நம்பிக்கையே பெரிய விருது!

அவள் சினிமாபா.ஜான்ஸன்

“தரமணி’, ‘மகளிர் மட்டும்’ எனப் பெண்ணியக் கருத்துகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்கள் அடுத்தடுத்து வெளியாகி, தொடர் விவாதங்களை ஏற்படுத்திவரும் காலகட்டத்தில், இப்படியான பெண்ணியக் கருத்துகளை மையமாக வைத்து மற்ற மொழி சினிமாக்களில் என்னென்ன படங்கள் வந்துள்ளன? அவை பேசும் விஷயங்கள் என்ன?

நம்பிக்கையே பெரிய விருது!
நம்பிக்கையே பெரிய விருது!

`டியர் மாயா’ படத்தில் மனீஷா கொய்ராலாவின் மாயாதேவி கதாபாத்திரம்தான் மையம். கூண்டில் அடைத்து வைக்கப்பட்ட பறவைகள், இரண்டு நாய்களுடன் நிறைய தனிமை சூழ வாழும் நடுத்தர வயது பெண் மாயா. அவரின் எதிர் வீட்டிலிருக்கும் அனா மற்றும் அவளது தோழி இராவுக்கு மாயாவைப் பற்றித் தெரிந்துகொள்ள மிகுந்த ஆர்வம். மாயா பற்றி அனாவின் அம்மா சொன்ன கதையைத் தவிர, அவர்களுக்கு வேறு எந்தத் தகவலும் கிடையாது. எப்படியாவது அவளின் வாழ்வில் சிறிய நம்பிக்கை ஒளி தர நினைக்கிறாள் அனா. தான் படித்த காதல் கதைகளை வைத்து மாயாவுக்குக் கடிதங்கள் எழுதி அனுப்புகிறாள். அதுவரை இருள் சூழ்ந்திருந்த வீட்டுக்குள் ஜன்னலைத் திறந்து ஒளி பரவவிடுகிறாள் மாயா. எப்போதுமே சிரிக்காதவள்... சிரிக்கிறாள், சிலிர்க்கிறாள். தனக்கும் யாரோ ஒருவர் இருக்கிறார் என்கிற நம்பிக்கை அவளுக்குள் இருக்கும் துயரங்களிலிருந்து மீட்பைத் தருகிறது. தன் உலகத்துக்குள் வர அனாவை அனுமதிக்கிறாள். ஒருகட்டத்தில் மாயாவுக்குக் கிடைக்கும் கடிதத்தில் முகவரி இருக்க, அந்த மர்ம நபரைத் தேடி புறப்படுகிறாள் மாயா. அதன்பின் மாயாவைத் தேடி அனா செல்வதாகப் படம் நகரும். நிஜ உலகில் நிறைய பெண்கள் சிரிப்பதை நாம் பார்த்தே இருக்க மாட்டோம். அவர்களின் பின்கதை நமக்கு அவசியப்பட்டே இருக்காது. அப்படி ஒரே ஒருவரின் வாழ்வின் மிக முக்கியமான புன்னகைக்குக் காரணமாக இருக்கும் அனா போன்றவர்கள்தான் தேடினாலும் கிடைக்காதவர்களே.

நம்பிக்கையே பெரிய விருது!

`கோதா’ படத்தின் கதை, மல்யுத்தம் பற்றியது. தனக்குப் பிடித்த மல்யுத்தத்தைத் தேர்ந்தெடுக்கிறாள் அதிதி சிங். மல்யுத்தப் பயில்வான்களையே தூக்கிச் சுழற்றி எரியும் வலிமைமிக்கவள் அவள். ஆனால், அவளின் விருப்பத்துக்குத் தடையாக இருக்கும் அண்ணனை எதிர்த்து நிற்க தைரியம் இல்லாமல், `சில நேரம் தற்கொலை பண்ணிக்கலாம் போல இருக்கு’  என்று அழுவாள்.

நம்பிக்கையே பெரிய விருது!

”ஒரு பொண்ணு கனவு காணவே கூடாதா... அவளுக்குன்னு எந்த லட்சியமும் இருக்கக் கூடாதா... எப்பவும் கல்யாணம், குழந்தை வளர்ப்பு... இதுதான் அவளுடைய வாழ்க்கையா இருக்கணுமா?' என்கிற அவளின் கேள்வி இந்தப் படத்தைப் பெண் சார்ந்த படமாகவும் கவனிக்கவைக்கிறது. இறுதிப் போட்டியில் அவள் வெற்றியைப் பார்த்துச் சந்தோஷப்படும் அண்ணனைப் பார்க்கும்போது, அவளுக்குள் துளிர்க்கும் சிறு நம்பிக்கை எந்த விருதையும் விட பெரியதாக இருக்கும்.

நம்பிக்கையே பெரிய விருது!
நம்பிக்கையே பெரிய விருது!

“ஃபிதா படத்தின் ஹைப்ரிட் பெண் பானுமதி. `இந்த உலகத்தில் என்னை மாதிரி ஒரே ஒருத்திதான்' எனத் தன்னைப் பற்றி அறிமுகம் கொடுப்பவள். எல்லா பெண்களும் ஒரு ராஜகுமாரன் பறக்கும் குதிரையில் வந்து தன்னை அழைத்துச் செல்வான் எனக் காத்திருந்தால், இவளோ, `என் ராஜகுமாரன் பறந்துவந்து குதிரையை லாயத்தில் கட்டிவிட்டு, என்னுடன் என் ஊரில் என் வீட்டிலேயே தங்கிவிடுவான்' என்று உறுதியாகச் சொல்வாள். அந்த அளவுக்கு அவள் மீதான சுயமதிப்பு அதிகம். அவள் விருப்பங்களின் மீதும், அவளுக்கு என்ன தேவை என்பதின் மீதும் தெளிவு அதிகம். அவளுக்குக் காதல் வருவதே குழப்பம் என்றாலும், அவளின் வழக்கத்துக்கு மாறான குணாதிசயங்கள் நம்மைக் கவரும்.

நம்பிக்கையே பெரிய விருது!

`டேக் ஆஃப்' படத்தின் கதை, ஈராக்கில் போர் காலகட்டத்தில் சிக்கிக்கொள்ளும் சில இந்திய நர்ஸ்களை மீட்டு இந்தியாவுக்கு அழைத்துவருவதுதான். இதில் தூதரகத்தின் வழிகாட்டுதலின்படி மற்றவர்களை வழிநடத்துவது சமீரா (பார்வதி). சமீராவின் பின்னணியாகக் காட்டப்படும் முதல் பாதி கதைதான், ஒரு பெண்ணின் முக்கியத்துவத்தைச் சொல்லும். சமீரா ஏற்கெனவே திருமணமானவர். ஒரு மகன். திருமணத்துக்குப் பிறகு தன் வீட்டினரின் கடனை அடைப்பதற்காக நர்ஸாக வேலை செய்வார். கணவர் வீட்டில் இவர் வேலைக்குச் செல்வதை ஆட்சேபித்ததால், விவாகரத்து பெற்றுப் பிரிந்துவிடுவார்.

நம்பிக்கையே பெரிய விருது!

மீராவை இரண்டாவது திருமணம் செய்து கொள்வார் ஷஹீத். மறுமணம் புரிந்த கையோடு ஈராக் செல்லும் சமீராவுக்குக் காத்திருக்கும் இன்னோர் அதிர்ச்சி. முதல் கணவர், மகனை சமீராவிடமே விட்டுவிட்டு முழுமையாகப் பிரிந்துவிடலாம் எனச் சொல்லிச் சென்றுவிடுவார். அதேவேளையில் சமீரா இரண்டாவது கணவரால் கருவுற்றிருப்பார். இரண்டாவது கணவரை எப்படி மகனுக்கு அறிமுகப்படுத்துவது, கணவருடன் வரும் கருத்துவேறுபாடுகள் எனப் பல சங்கடங்களையும் கையாள வேண்டிய நேரத்தில்தான் போர் பற்றிய அறிவிப்பு வரும். இப்படி, ஒரு பெண் அக மற்றும் புறச்சூழல்களால் வரும் சவால்களை எப்படிக் கையாள்கிறாள் என்பதை அழகாகக் காட்டியிருக்கும் படம் இது.

நம்பிக்கையே பெரிய விருது!
நம்பிக்கையே பெரிய விருது!

`லிப்ஸ்டிக் அன்டர் மை புர்கா' படத்தில் நான்கு பெண்களின் விருப்பங்களும், அவற்றுக்கு எதிரான மனோபாவங்களும்  நமக்கு அறிமுகமாகின்றன. போபாலில் ஒரே குடியிருப்புக்குள் இருக்கிறார்கள் உஷா, ரெஹானா, ஷிரீன், லீலா ஆகிய நால்வர். ரெஹானாவுக்கு ஜீன்ஸ் அணிந்து ஸ்டைலாக மிலி சைரஸ் போல ஒரு பாடகியாக உலகுக்குத் தன் திறமையைக் காட்ட விருப்பம், அப்பாவோ ‘புர்கா அணிந்து யார் கண்ணிலும்படாமல் இரு’ என்கிறார். ஷிரீன் வேலைக்குச் செல்லாமல் இருக்கும் தன் கணவனையும் சேர்த்துக் குடும்பத்தைக் கவனித்துக்கொள்ள வேண்டி, வேலைக்குச் செல்கிறாள். கணவனோ, ‘இனி நீ வேலைக்குப்போகக் கூடாது’ என்று அடித்து உதைக்கிறான். லீலாவுக்கும் அவளின் நண்பனுக்குமான உறவு பற்றித் தெரிந்துகொள்ளும் மணமகன் திருமணத்துக்கு மறுப்பு சொல்லிக் கிளம்புகிறான். பேரன்-பேத்தி எடுத்த உஷா, போர்னோ கதைகள் படிப்பதும் ஓர் இளைஞனுடன் சாட் செய்வதும் வெளியில் தெரிகிறபோது என்ன நடக்கிறது...  இப்படி நான்கு பேரின் கதைகள் முடியுமிடம் ஒரு சிறிய அறை. பெண்களுக்கான சுதந்திரமும் தேவைகளும், உங்கள் சட்டதிட்டங்களுக்கும் ஒழுக்க வரம்புகளுக்கும் அப்பாற்பட்ட ஒன்று என்கிற விவாதத்தைப் பற்றவைத்த விதத்தில் இந்தப் படமும் இதன் நான்கு கதாபாத்திரங்களும் மிக
முக்கியமானவை.