Published:Updated:

டியர் விஜயகாந்த்... உங்களை ஏன் எங்களுக்கு பிடிக்கும் தெரியுமா?! #HBDVijayakanth

தார்மிக் லீ
டியர் விஜயகாந்த்... உங்களை ஏன் எங்களுக்கு பிடிக்கும் தெரியுமா?! #HBDVijayakanth
டியர் விஜயகாந்த்... உங்களை ஏன் எங்களுக்கு பிடிக்கும் தெரியுமா?! #HBDVijayakanth

டியர் விஜயகாந்த்... உங்களை ஏன் எங்களுக்கு பிடிக்கும் தெரியுமா?! #HBDVijayakanth

அலட்டல் இல்லாத பிரசார பேச்சு, தன் நிஜ முகத்தை அப்படியே மக்களிடம் காட்டும் அரசியல்வாதி, 'தமிழ் மொழிப் படங்களைத் தவிர வேறு எந்த மொழிப் படங்களிலும் நடிக்க மாட்டேன்' என்ற சத்தியம் காத்த கலைஞன், சிரித்தால் குழந்தை முகம், கோபத்தில் கர்ஜிக்கும்போது சிங்கத்தின் சாயல்... இன்னும் பன்முகம் கொண்டவர், கேப்டன் விஜயகாந்த்

'எவ்வளவு நல்ல மனுஷன். அவரைப்போய் இப்படி அநியாயமா ட்ரோல் பண்றாங்களே..!' என்ற அனுதாப வார்த்தைகளுக்குச் சொந்தக்காரர் அவர். அந்த மீம்களையும், ட்ரோல் வீடியோக்களையும் எடுத்துப் பார்த்தால் புரியும், கேப்டனைக் கலாய்த்திருக்க மாட்டார்கள், கேப்டனை வைத்துத்தான் மற்றவர்களைக் கலாய்த்திருப்பார்கள் என்று. அவரில்லாமல் எந்தவொரு நாளையும் நாம் கடந்துவிட முடியாது. மீம் அப்டேட் ஆகி, வீடியோ மீம்களாக வலம் வந்த சமயம் அது. நாளுக்கு நாள் ஏற்படும் பிரச்னைகளில் தமிழ்நாடே அல்லோலப்பட்ட சமயம் அது. 'கம்முனு இருக்கமாட்டியா தூக்கி அடிச்சிருவேன் பாத்துக்க', 'இங்கே இருக்கிறவன்லாம் என்ன சொம்பையா' போன்ற இவரது கோப ரக வசனங்கள், பலரையும் வீடியோ மீம் வாயிலாக வசவு வாங்க வைத்தது. சமூகத்தைப் பார்த்தும், அரசியல்வாதிகளைப் பார்த்தும் கேள்வி கேட்க முடியாத சாமானியர்களை ஆசுவாசப்படுத்தியது. 

1979-ல் 'இனிக்கும் இளமை' படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமான அன்றைய இளைஞன், இன்றைய 'கேப்டன்' விஜயகாந்துக்கு பிறந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டு, கட்டுரைக்கு வருவோம்.

80-களில் ரஜினி - கமல் என்ற இரு கூர் வாள்கள் திரைத்துறையை ஆண்டுகொண்டிருந்த காலம் அது. பல இன்னல்களைச் சந்தித்த விஜயராஜ் என்பவர், இயக்குநர் எம்.ஏ.காஜா மூலம் விஜயகாந்தாக திரைத்துறைக்கு அறிமுகமானார். அந்தப் படத்தோடு சேர்த்து அடுத்து வெளியான படங்களும் படுதோல்வியைத் தழுவியது. துவண்டுகிடந்த விஜயகாந்தை, இளையராஜாவின் இசையும், யேசுதாஸின் குரலும் 'ஏதோ நினைவுகள்...' எனும் பாடல்தான் தூக்கிவிட்டது. ரஜினி - கமல் படங்களிலிருந்து விலகி வந்த கண்கள், விஜயகாந்த் நடித்த இந்தப் பாடலுக்கு செவி சாய்த்தது. 'இப்படி ஒரு நடிகர், தமிழ் சினிமாவில் இருக்கிறார்' என்பதை அடையாளம் காட்டியது, 'அகல் விளக்கு' படம்தான். பிறகு வெளியான 'சட்டம் ஒரு இருட்டறை' படம்தான் இவரை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது. 

ரஜினி, கமல் போன்ற ஆளுமைகள் திரைத்துறையை ஆண்டுகொண்டிருந்த காலகட்டத்தில், ஆரவாரமின்றி படப்பிடிப்புத் தளத்தில் காலடி எடுத்து வைக்கத் தொடங்கினார், விஜயகாந்த். எம்.ஜி.ஆர் நடித்த 'எங்க வீட்டு பிள்ளை' படத்தை 70 தடவைக்கும் மேல் பார்த்ததுதான், இவரை சினிமாவில் நுழைய வைத்தது. அந்தப் படம் வெளியான சமயத்தில் வெடித்த இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டதுதான், பின்னாள்களில் இவரை அரசியலிலும் நுழையச் செய்திருக்க வேண்டும். சிறு வயதிலிருந்தே அதிகம் சினிமா பார்த்து வளர்ந்தவன் நான். திரையரங்கில் பறக்கும் விசில் சத்தத்தோடும், கொண்டாட்ட மனநிலையோடும் படங்கள் பார்த்த காரணத்தினாலோ என்னவோ, ரஜினியை நடிகன் என்பதைத் தாண்டி, நாயகனாக பார்க்க வைத்தது. அதேபோல், விஜயகாந்தின் படங்களைப் பார்த்த பிறகு, 'நடிகன்' என்ற பிம்பம் உடைந்து, 'நாட்டைக் காப்பாற்றும் அதிகாரி'யாகவே பார்க்க வைத்து. 

இவரது படங்கள் வெற்றியை ருசிக்கிறதோ, தோல்வியைத் தழுவுகிறதோ... 'படைப்பாளியின் வேலை படைப்புகளைக் கொடுப்பதே!' என்பதை ஆத்மார்த்தமாக உணர்ந்து குறைந்த இடைவேளையில் பல படங்களில் நடித்து வந்தார். தேர்வு செய்து நடிக்கும் கதாபாத்திரங்களிலும் பல வித்தியாசங்களைக் காட்டினார். ரஜினி - கமலிடம் கால்ஷீட் கிடைக்காத இயக்குநர்களின் இரண்டாவது தேர்வு இவர்தான். அப்படி வந்தவர்கள் அனைவரையும் வரவேற்று, ஒரே ஆண்டில் 18 படங்களில் நடித்து சாதனை படைத்தவர், நம் விஜயகாந்தே! ஆண்டிற்கு ஒரு படம் நடிக்கவே தத்தளித்து பல்வேறு நாட்டிற்குப் பயணப்படும் தற்போதைய ஹீரோக்களுக்கு மத்தியில், விஜயகாந்த் எப்போதுமே ஸ்பெஷல்தான். இப்படியாக 1980-களில் பயணப்பட்டுக்கொண்டிருந்த கேப்டன், 1990-களில் தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத உச்ச நாயகனாக ஜொலித்தார்! 

தொடர்ந்து ரஜினி, கமலுடனே விஜயகாந்தை ஒப்பிட்டுப் பேசுவதாக நினைக்க வேண்டாம். தற்போதுதான் இந்த இருவரும் தமிழ்நாட்டில் தங்களுடைய அரசியல் கொடியைப் பறக்கவிட நினைக்கிறார்கள். ஆனால், நான் சொல்லும் காலத்திலும், விஜயகாந்த் சினிமாவிற்குள் நுழைந்த காலகட்டத்திலும் இந்த இருவருமே சினிமா தமிழ் சினிமா எனும் கம்பத்தில் அன்னாந்து பார்க்கும் வெற்றிக் கொடியாகப் பறந்துகொண்டிருந்தார்கள். அந்த சமயத்தில் விஜயகாந்த் வந்ததும், நின்றதும், வென்றதும்தான் நான் இக்கட்டுரையில் கடத்த நினைப்பது. இந்தத் தலைப்பு விவாதத்திற்கு உரியதாக இருந்தாலும், விஜயகாந்தின் பெருமைகளைப் பேச, ரஜினி - கமல் ஒப்பீடு தேவைப்படுகிறது. காரணம், திரையில் இவர் நடித்தது மட்டுமல்ல, இவரது திரைப் பிரவேசத்தை வைத்து மற்றவர்களுக்கு இவர் ஆற்றிய உதவியும்!  

கேப்டனுக்கு சாதிக்கவும் பிடித்தது, சாதிக்க வைக்கவும் பிடித்தது. தமிழ் சினிமாவில் ஒரு நிலைக்கு வந்த கேப்டன், நடிகர் சங்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்று இவர் ஆற்றிய உதவிகள் நம் அனைவரும் அறிந்த ஒன்று. படப்பிடிப்பு தளத்தில் சாப்பாடு போடும் பழக்கத்தைக் கொண்டுவந்தது, நட்சத்திரக் கலைவிழா நடத்தி அதில் வந்த பணத்தை வைத்து சங்கக் கடனை அடைத்தது, அருண் பாண்டியன், ஆனந்த ராஜ், மன்சூர் அலிகான் போன்ற நடிகர்களை அறிமுகம் செய்து வைத்தது என ஓயாமல் உதவிக்கொண்டேதான் இருந்தார். 

'பெரிய ஹீரோக்களின் 100-வது படம் கண்டிப்பாக தோல்வியடையும்' என்ற மூடநம்பிக்கை தமிழ் சினிமாவுக்கு உண்டு. காரணம், ரஜினி கமலில் தொடங்கி, பிரபு, கார்த்திக், சத்யராஜ் போன்ற முன்னணி நடிகர்கள் வரை பலரது 100-வது படமும் தோல்வியையே இறுகப் பற்றியது. இப்படி தமிழ் சினிமா மீது உள்ள கலங்கத்தை, 'மூடநம்பிக்கை' என்று ஜோடனை செய்து வைத்திருந்தார்கள். அந்த மூடநம்பிக்கையைத் தகர்த்தெறிந்தது, விஜயகாந்தின் 100-வது படம். படத்தின் பெயர் 'கேப்டன் பிரபாகரன்'. படத்தின் இயக்குநர், ஆர்.கே.செல்வமணி. போலீஸ் உடை, மிடுக்கான நடை எனப் போலீஸாகவே வாழ்ந்து நடிப்பை வெளிக்கொண்டு வந்து மக்களிடம் கடத்தினார். இவரது இந்த 100-வது படம் மட்டுமில்லை, அதற்கு முன் வெளியான, சத்ரியன் படமும் சரி, பின் வந்த வெளிவந்த மாநகரக் காவல் படமும் சரி இவர் திரைத்துறை பயணத்தில் ஓர் முக்கியமான படைப்பாக அமைந்தது. 

அதன் பிறகு பல்வேறு போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து, போலீஸ் என்றால் விஜயகாந்த்தான் என்ற பிம்பத்தை உருவாக்கினார். பாகிஸ்தான் என்று ஆரம்பிக்கும் டாப்பிக், விஜயகாந்த் என்ற வார்த்தை இல்லாமல் முற்று பெறாது. இந்த பயணத்தில், 'சத்ரியன்', 'ஹானஸ்ட் ராஜ்', 'சேதுபதி ஐ.பி.எஸ்' போன்ற படங்கள்தாம் உச்சம் தொட்டவை. இவரது சில படங்கள், அதன் பிறகு வெளிவந்த பல படங்களின் கதைக்கு வழிகாட்டியாக இருந்தது. நடிச்சா ஹீரோதான் என்ற ஹீரோக்களுக்கு மத்தியில் பல புது முக நடிகர்களின் படங்களிலும் விஜயகாந்த் நடிக்க மறுப்பு தெரிவிக்கவில்லை. அப்போது ஒரு நடிகர் தமிழ் சினிமாவிற்கு புதிதாக வந்திருந்தார். அவர் நடித்த முதல் படமான நாளைய தீர்ப்பு படம் படுதோல்வியடைந்தது. அதன் பின்னர் அவருடன் இணைந்து, 'செந்தூர பாண்டியன்' படத்தில் நடித்து விஜய் எனும் புது முக நடிகருக்கு உதவ முயன்றார். வெற்றியெல்லாம் கணக்குக் கிடையாது உதவும் மனப்பான்மைதான் இவரின் குணாதிசியம். இப்படி இவரது 90-களின் சினிமாப் பயணம் முடிவடைந்தது. 

அடுத்த நூற்றாண்டை, 'வானத்தைப் போல' படத்தின் மூலம் ஆரம்பித்து வைத்தார். இந்தப் படத்தை டி.வியில் போட்டால், குடும்பத்தோடு உட்கார்ந்து பார்க்கும் பல குடும்பங்கள் இன்னும் என் கிராமத்தில் உண்டு. அதன் பின்னர், 'வல்லரசு', 'வாஞ்சிநாதன்' என்று மீண்டும் போலீஸ் கதாபாத்திரங்களிலும் நடித்தார். பின்னர், 'தவசி', 'சொக்கத் தங்கம்', 'எங்கள் அண்ணா' போன்ற குடும்பப் படங்களிலும் நடித்தார். இப்படி ஆசுவாசப்படுத்தும்படியான படங்களை நடித்துக்கொண்டிருந்த சமயத்தில்தான், 'ரமணா' படம் வெளியானது. மருத்துவத்துறையில் மறைமுகமாக நடந்து வந்த அக்கிரமங்களை அரங்கேற்றியது. 'கல்லூரி மாணவர்கள் என்றாலே இப்படித்தான்' என்ற விமர்சனம் அப்போதிருந்த இளைஞர்களுக்கு அதிகப்படியாக இருந்தது. 'காலேஜ் பசங்கன்னா பொண்ணுங்க பின்னாடி சுத்துறவங்கனுதான் நினைச்சிட்டிருக்காங்க. ஆனா, இந்த நாட்டுடைய தலையெழுத்த மாத்துற சக்தி, ஸ்டூடன்ஸ்கிட்டதான் இருக்கு' என்ற ஒற்றை வசனம்தான் பல பெற்றோர்களின் கண்களில் கண்ணீர்விட வைத்தது. 

இப்படி பல சாதனைகளையும், உதவிகளையும் நிகழ்த்திக்காட்டியதாலோ என்னவோ, எந்தவொரு விமர்சனங்களும் அஞ்சாதவர். ஊரே 'அம்மா' என்றழைத்து முதுகெலும்பு தெரிய கும்பிடுபோடுபவர்களுக்கு மத்தியில், எந்த பத்திரிகையாக இருந்தாலும் தைரியமாக 'ஜெயலலிதா' எனப் பெயரைச் சொல்லி அழைப்பவர், விஜயகாந்தே! இவரது அரசியலின் மீது பழக்கவழங்களின் மீதும் ஆயிரம் விமர்சனங்கள் வைத்தாலும், ஒரு மனிதனாகவும், கலைஞனாகவும் விஜயகாந்த் எப்பொழுதோ வென்றுவிட்டார். பிறந்தநாள் வாழ்த்துகள் கேப்டன்!

அடுத்த கட்டுரைக்கு