Published:Updated:

உடனே ஒரு தற்காப்புக் கலை கத்துக்கணும் பாஸ்! ஏன்னு கேளுங்களேன்..!? 'களரி' விமர்சனம்

விகடன் விமர்சனக்குழு
உடனே ஒரு தற்காப்புக் கலை கத்துக்கணும் பாஸ்! ஏன்னு கேளுங்களேன்..!? 'களரி' விமர்சனம்
உடனே ஒரு தற்காப்புக் கலை கத்துக்கணும் பாஸ்! ஏன்னு கேளுங்களேன்..!? 'களரி' விமர்சனம்

பயந்த சுபாவம் கொண்ட ஒருவன் தன் தங்கச்சிக்கு நேர்ந்த கொடுமையால் வில்லனைப் பழிவாங்கும் மாடர்ன் பாசமலர் கதைதான் களரியின் ஒன்லைன்.

த்தம், வெடி சத்தம் என்று எதற்கெடுத்தாலும் பயந்து மயங்கும் அப்பாவி மளிகைக் கடை ஓனராக முருகேசன் (கிருஷ்ணா). முருகேசனின் தங்கை தேன்மொழி (சம்யுக்தா மேனன்) அப்படியே அண்ணனுக்கு நேரெதிர். ரவுடிகளை செருப்பால் அடிக்கவும், தவறு செய்தவர்களை எதிர்த்துப்பேசவும் துளியும் தயங்கமாட்டார். குடிகார அப்பா மாரி (எம்.எஸ். பாஸ்கர்) வீட்டைக் கவனிக்காமல் வீட்டிலிருக்கும் பொருள்களையே விற்று குடிக்கும் அளவுக்குப் பொறுப்பில்லாமல் இருப்பதால், முருகேசனுக்கு குடும்பத்தில் டபுள் பொறுப்பு. தங்கையை நல்ல இடத்தில் கட்டிக்கொடுக்க வேண்டும் என்ற லட்சியத்தைக் கொண்டிருக்கும் முருகேசன், தன் தங்கச்சிக்கு நேரும் கொடுமை தாங்காமல், தன் சுயரூபத்தில் இருந்து விலகி எப்படி வில்லனை பழி தீர்த்தார் என்பதே களரியின் கதை.

பெரிய ஹீரோக்களைப் போல் மாஸ் பாடலுடன் என்ட்ரியாகும் கிருஷ்ணா, முதல் பாதியில் கோழையாகவும், இரண்டாம் பாதியில் ரவுடிகளை விரட்டி விரட்டி வெளுக்கும் சூப்பர் ஹீரோவாகவும் வெரைட்டி காட்டியிருக்கிறார். பார்லரில் வேலை பார்க்கும் மாடர்ன் பெண்ணாக 'நாயகி' வித்யா பிரதீப். கமர்ஷியல் படங்களில் ஹீரோயின்களுக்கு கொடுக்கப்படும் மிகப்பெரிய வேலைதான் வித்யாவுக்கும். அதாங்க, பாட்டுக்கும் ரொமான்ஸுக்கும் வந்துபோற ரோல்! கிருஷ்ணாவின் தங்கையாக சம்யுக்தா மேனன். மலையாளத்தில் விரைவில் வெளியாகவிருக்கும் 'தீ வண்டி' படத்தின் மூலம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இவர், இப்படத்திலும் தனது நடிப்பை கச்சிதமாக வெளிப்படுத்தியிருக்கிறார். தனது அண்ணனுக்கு ஏதாவது ஒன்று என்றால் நரம்பு புடைக்கும் அளவுக்கு வீர வசனம் பேசுவது, மற்ற நேரங்களில் இருக்கிற இடம் தெரியாத அளவுக்கு சாந்தமாக இருப்பது எனப் பக்கா குடும்பத்துப் பெண்ணாக வலம் வந்திருக்கிறார். கண்டிப்பாக சினிமாவில் பெரிய எதிர்காலம் சம்யுக்தாவுக்கு உண்டு. வெல்கம் டு கோலிவுட்!  

கேரளா கொச்சினுக்கு அருகேயுள்ள தமிழர்கள் வாழும் பகுதியான 'வாதுருத்தி' என்ற இடத்தில் படம் தொடங்குகிறது. படம் தொடங்கியதில் இருந்து புதிதாக எதாவது ஒரு காட்சி வந்துவிடாதா என்கிற நம் ஆர்வத்துக்கு கடைசி வரை இயக்குநர் கிரண் தீனி போடவில்லை. பல தமிழ்ப்படங்களில் பார்த்த ட்விஸ்டுகள், மிரட்டல் காட்சிகள் என முதல் பாதி முழுக்க இப்படியே நகர்கிறது. அப்போ இரண்டாவது பாதி ஓகேவானு கேட்காதீங்க; அதுவும் அதே மாதிரிதான் இருக்கிறது. 

ஒருசில படங்களில் கன்ட்டென்ட் சொதப்பலாக இருந்தாலும், மேக்கிங் அண்ட் டெக்னிக்கல் விஷயங்களில் பார்வையாளர்களைத் திருப்திப்படுத்திவிடுவார்கள். ஆனால், களரியில் எல்லாமே கதம் கதம்தான். டீ டம்ளரை க்ளோஸப்பில் காட்டுவது, ஒரு காட்சியிலிருந்து அடுத்த காட்சிக்கு போகும்போது ஸூம்-அவுட் செய்வது எனக் காந்தி காலத்து கத்திரியை வைத்து படத்தை நறுக்கியிருக்கிறார் எடிட்டர். வித்தியாசமாக காட்ட வேண்டும் என்பதற்காக ஒரு காட்சியை இரண்டாக வெட்டி அங்கொன்றும் இங்கொன்றுமாக சொருகியிருக்கிறார்கள். சம்பந்தமே இல்லாத சண்டைக்காட்சிகள் நடுநடுவே வந்து இன்னும் கடுப்பேற்றுகின்றன. கொஞ்சம் அப்டேட் ஆகுங்க பாஸ்! 

’அண்ணன், அண்ணன் என்று சொல்லிக்கிட்டு இருந்த இவளை அன்வர், அன்வர்னு சொல்ல வெச்சிருக்கான் இந்தப் பாவி’ என வசனங்கள் பலவும் சிரிப்பூட்டும் சீரியல் டைப்பிலேயே இருக்கிறது. கிருஷ்ணாவுக்கு இருப்பது அகோரோபோஃபியா என்று பயத்துக்குப் புதிய பெயர் சொல்லும்போது வித்தியாசமாக இருந்தாலும், அதன்பிறகு எந்தக் காட்சியிலும் அதைப் பயன்படுத்தவில்லை; வித்தியாசமாகவும் இல்லை. இப்படி தேமே என்று நகரும் படத்தின் க்ளைமாக்ஸ், இந்திய சினிமா கண்டிடாத அப்படி ஒரு பழிவாங்கும் காட்சி.  

'களரி' என்பது ஒரு தற்காப்புக் கலை, பயமும் ஒரு தற்காப்புக் கலைதான் என்று, இதை டைட்டிலாக வைத்திருப்பார்கள் போல. இதுபோன்ற படங்களில் இருந்து தப்பிக்க, முதலில் நாம ஒரு தற்காப்புக் கலையை கத்துக்கணும்!

அப்படியே மேற்குத் தொடர்ச்சி மலை படத்தோட விமர்சனத்தையும் லக்ஷ்மி படத்தோட விமர்சனத்தையும் படிச்சிடுங்க பாஸ்..!

அடுத்த கட்டுரைக்கு