
ப.சூரியராஜ் - ஓவியங்கள்: பிரேம் டாவின்ஸி
பார்த்துப் பல வருடங்களான, நமது ஃபேவரைட் கதாபாத்திரங்கள் இப்போ என்ன பண்ணிட்டிருக்காங்கன்னு தெரியுமா? வாங்க தெரிஞ்சுக்குவோம்...

`பிதாமகன்’ சித்தன்
கஞ்சாத்தோட்டத்தை எரித்துவிட்டு, கழுத்தையும் கடித்துவிட்டு எஸ்கேப் ஆன சித்தன், இப்போது காரைக்குடி அருகிலுள்ள கானாடுகாத்தானில் வசித்துவருகிறார். கையிலேயே பலாப்பழம் உரிக்கும் திறமை, அவரை ஒரு ஃப்ரெஷ் ஜூஸ் கடையில் பணியமர்த்தியிருக்கிறது. பலாப்பழம் உரித்த கையில் இன்று பப்பாளிப் பழமும், பட்டர் ஃப்ரூட்டும் நறுக்கிக்கொண்டிருக்கிறார். பார்ட் டைமாக ஒவ்வோர் இரவும் தன் நண்பன் சக்தியை நினைத்து சோகத்தில் ஊளையிட்டு ஊர் மக்களை உறங்கவிடாமல் செய்துவருகிறார். ஏற்கெனவே தமிழகத்தில் தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடும் இந்நேரத்தில், தண்ணீர்த் தொட்டியில் அப்படியே வாய் வைத்துக் குடித்துவிட்டு, வீட்டுப் பெண்களிடம் பிளாஸ்டிக் குடங்களில் அடி வாங்கிக்கொண்டிருக்கிறார்.

`கஜினி’ சஞ்சய் ராமசாமி
அந்த ரெட்டை மொட்டைகளையும் போட்டுத்தள்ளிவிட்டு டாடா சுமோவில் கிளம்பிய சஞ்சய் ராமசாமிக்குப் பழசெல்லாமே ஞாபகம் வந்துவிட்டன. தனது உடல் முழுக்க ரெக்கார்டு நோட்டின் கடைசிப் பக்கம்போல் குறுக்க மறுக்கக் கிறுக்கி வைத்திருப்பதைக் கண்டு அதிர்ந்துபோனார். கல்பனா இறந்துபோனதைவிட, இதுதான் அவர் மனதை உலுக்கியது. பட்ட மண்டையிலேயே படும் என்பதுபோல, அவர் நடத்திவந்த ஏர்வாய்ஸ் கம்பெனியும் ஜியோ சிம்மின் அதிரடி ஆஃபர்களால் அவிஞ்சுபோனது. ஆனாலும், நம்பிக்கையைக் கைவிடாமல், உலுக்கல்களை உதறிவிட்டு, புதுத்தொழில் ஒன்று தொடங்கியிருக்கிறார் சஞ்சய் ராமசாமி. தனது சோப்பு டப்பா இன்ஸ்டன்ட் கேமராவை வைத்து உளுந்தூர்பேட்டை அருகே, உடனடி பாஸ்போர்ட் போட்டோ ஸ்டுடியோ ஒன்று திறந்திருக்கிறார். பக்கத்துக் கடையிலிருந்து திருட்டு கரன்ட் எடுத்தும், ஓசி வைஃபை உபயோகித்துக்கொண்டும் சந்தோஷமாக வாழ்ந்துவருகிறார்.

`இந்தியன்’ சேனாபதி
`பச்சைக்கிளிகள் தோளோடு...’ எனப் பாசமழை எல்லாம் பொழிந்துவிட்டு, சந்து கேப்பில் தன் மகன் சந்துருவையே போட்டுத்தள்ளிய சேனாபதி, அதன் பிறகு உலகம் சுற்றும் வயோதிகர் ஆகிவிட்டார். கடைசியாக, அவர் ஆதார் கார்டு எடுக்க இந்தியா வந்ததாக உளவுத்துறையிலிருந்து தகவல். சில மாதங்களுக்கு முன்னர், கோடி கோடியாய் வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு கல்தா கொடுத்த விஜய் மல்லையா லண்டனில் ஒளிந்திருக்கிறார் என்ற செய்தி கேட்டு, லண்டன் புறப்பட்டார் இந்தியன் தாத்தா. பிறகு அவரை எப்படியோ தேடிக்கண்டுபிடித்து, மூன்று வாரங்கள் ஃபாலோ செய்து, இரண்டு வாரம் ஸ்கெட்ச் போட்டுத் தூக்கிய பிறகுதான் தெரிந்திருக்கிறது... அது விஜய் மல்லையாவே இல்லை, பிரபுவின் அண்ணன் ராம்குமார் என்று. அதில் கடுப்பானவர் கஜகிஸ்தானுக்குக் கப்பல் ஏறிவிட்டார். தனது காக்கி ட்ரவுசரையும் அந்த பெல்ட்டையும் கடலில் வீசப் போனவரை ஆன்திவேயில் பார்த்த ஷங்கர் `பார்ட்-2 இருக்கு’ என்று அள்ளிப்போட்டுக்கொண்டு போயிருக்கிறார்!

`பாட்ஷா’ மாணிக் பாட்ஷா
பாம்பேயில் இருக்கும்போது வயதானவர் போன்றும், சென்னை வந்ததும் கொஞ்சம் இளமையாகவும் தோன்றிய மாணிக்கம், இப்போது 20 வயது இளைஞரின் தோற்றத்தில் இருக்கிறார். வயது ரிவர்ஸில் செல்லும் இந்த விசித்திரமான நோயைவைத்து `க்யூரியஸ் கேஸ் ஆஃப் பாட்ஷா பாய்’ என்று ஒரு திரைப்படமே தமிழில் தயாராகிக்கொண்டிருக்கிறது. அன்று ஆட்டோ ஓட்டிக் கொண்டிருந்த மாணிக்கம், இன்று ஓ.எம்.ஆர் ரூட்டில் ஷேர் ஆட்டோ ஓட்டிக் கொண்டிருக்கிறார்.

`கில்லி’ சரவணவேலு-தனலெட்சுமி
சரவணவேலுக்கும் தனலெட்சுமிக்கும் திருமணமாகி, பத்து வயதில் ஒரு பையன் இருக்கிறான். `இந்தியன் எக்கானமி இஸ் ஆல்வேஸ் அவர் எக்கானமி’ என லுங்கிக்குப் பதில் பாவாடையைக் கட்டிக்கொண்டு படித்த வேலு, இப்போது வங்கியில் மேனேஜர். காதலிக்கும்போது அமெரிக்கப் பயணத்தையே கேன்சல் செய்துவிட்டு, கண்ணீர் மல்க காதலனின் கபடி மேட்சைப் பார்த்த தனலெட்சுமி, இப்போது ஆளே மாறிவிட்டார். வேலுவின் வாயிலிருந்து `கபடி’ என்ற வார்த்தை வந்தாலே, பொடனியில் அடிவிழுகிறது. முன்னொரு காலத்தில் வேலுவின் கை கால் நரம்புகளை முத்துப்பாண்டி திருகிவிட்டாரே, அது இப்போதும் அடிக்கடி வேலையைக் காட்டி வேலுவை நோகடிக்கிறது. ஒரு காலத்தில் கட்டடத்துக்குக் கட்டடம் பறந்து கொண்டிருந்த வேலு, இப்போது பாவமாக இருக்கிறார். மதுரைக்குப் போக வேலு வெள்ளிக்குடத்தை அடகுவைத்ததுபோல், இப்போது அவரின் மகன் வேலுவின் வெண்கலக் கோப்பைகளை எல்லாம் அடகுவைத்து, ஓட்டேரி நரி மகனுடன் சேர்ந்து கின்டர் ஜாய் வாங்கித் தீர்த்துவிட்டான். கர்மா இஸ் எ பூமராங்.

`அந்நியன்’ அம்பி
சிகிச்சையை முடித்துவிட்டு, ‘ஃபேன் சுத்தலைனா விரலைவிட்டு ஆட்டுவேன்’ எனத் திருந்தியதுபோல் பாசாங்கு செய்துவிட்டு ரயிலில் ஏறினார் அம்பி. அதன் பின்னர், ரயிலில் ஒருவரைப் பாலத்திலிருந்து பல்டி அடிக்கவிட்டுப் பல்லாங்குழி ஆடியது நாம் அனைவரும் அறிந்ததே. இப்போது அம்பி ‘தப்பு பண்ணினால் தண்டிக்க அந்நியனை அழையுங்கள்’ என்ற பெயரில் ஃபேஸ்புக் பக்கம் ஒன்று ஆரம்பித்து, அதில் தினமும் `கருட புராணம்’ பற்றிய மீம்ஸ், அறிவுரை போஸ்ட் என பிஸியாக இருக்கிறார். நெட்டிசன்களோ, ‘நமக்கு ஒரு என்டர்டெயின்மென்ட் சிக்கிருச்சு’ என பதில் மீம்ஸ்களால் வறுத்தெடுத்து, `அம்பி 65’ போட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அம்பியோ, போன வாரம்கூட பக்தவத்சலம் பார்க்கில் பிரீத்திங் பிராணாயாமா பண்ணிக்கொண்டிருந்தவரை, தூங்கிக்கொண்டிருக்கிறார் எனத் தவறாக நினைத்துப் போட்டுத்தள்ளியிருக்கிறார். ஏற்கெனவே இருக்கும் அந்நியன், ரெமோவோடு ஆன்டி இந்தியன், ஹரஹர மஹாதேவகி போன்ற புது கேரக்டர்களும் மூளைக்குள் உதயமாகியிருக்கின்றன. ஆத்தி...

`சந்தோஷ் சுப்ரமணியம்’ சந்தோஷ் - ஹாசினி
சந்தோஷுக்கும் ஹாஹா... ஹாசினிக்கும் இடையே திருமணம் நடந்த சில நாள்களிலேயே ஹாசினிக்கு ஒரு பிரச்னை வந்தது. அதாவது, அவர் திடீரென எந்தக் குரங்குக் சேட்டையும், எறும்புக் கதைகளும் இல்லாமல் தெளிவாகப் பேச ஆரம்பித்துவிட்டார். என்னவோ ஏதோ என பயந்துபோன மாமனார் சுப்ரமணியம் மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்ல, மருத்துவரோ, ‘அவங்க தலையில் பலத்த அடிபட்டு மெடுலா ஆப்லங்கேட்டா நெளிஞ்சுபோச்சு’ எனக் கண்ணாடியைக் கழற்றிக் கையைப் பிசைய... சுப்ரமணியம் அரண்டே போனார். ஒருநாள் சந்தோஷைத் தெரியாமல் முட்டியிருக்கிறார் ஹாசினி. அதற்கு ‘மறுபடியும் முட்டாவிட்டால் கொம்பு முளைக்கும்’ எனக் கூறிய சந்தோஷ், எகிறி நடுமண்டையிலேயே `நங்’கென முட்டியிருக்கிறார். அந்த முரட்டு முட்டுதான் ஹாசினியின் மெடுலா ஆப்லங்கேட்டாவை நெளியவைத்த காரணம். பின்னர், மருத்துவ சிகிச்சை மூலம் மெடுலா ஆப்லங்கேட்டாவைச் சரிசெய்து, மறுபடியும் ஹாசினியை லூஸாக்கிய பின்புதான் நிம்மதிப் பெருமூச்சு விட்டது சுப்ரமணியத்தின் குடும்பம். இப்போது இரண்டு குழந்தைகளோடு சந்தோஷ் - ஹாசினி ஜோடி சந்தோஷமாக வாழ்ந்துவருகிறார்கள்.

`விண்ணைத்தாண்டி வருவாயா’ கார்த்திக்
‘ஜெஸ்ஸி’ திரைப்படத்தை இயக்கிய கார்த்திக், அடுத்ததாக ‘நாட்டு மாடு’ என்ற திரைப்படத்தை இயக்கினார். அது அச்சு அசல் அப்படியே ‘மக்கானோ சோளம்மா’ எனும் கொரியப் படத்தின் காப்பி என நெட்டிசன்கள் கார்த்தியைக் கலாய்த்துக் கதற விட்டார்கள். அதன் பின்னர், தான் அஜித்துக்கு முன்பு எழுதிவைத்திருந்த கதையை அஜித் மச்சான் ரிச்சர்டை ஹீரோவாகப் போட்டு எடுத்தார். அந்தப் படமும் பப்படம் ஆனது. கார்த்திக் ஜெஸ்ஸியைக் காதலித்தபோது ‘இங்கே ஒரே பிரச்னையா போயிட்டிருக்கு கார்த்திக். நமக்குள்ள இனி எதுவும் கிடையாது’ என ஜெஸ்ஸி மூச்சுக்கு முந்நூறு தடவை மூக்கை உறிஞ்சிக்கொண்டே சொல்வார். ஆனால், அது என்ன பிரச்னை என இதுவரையிலும் தெரியவில்லை. அதை எப்படியாவது தெரிந்துகொண்டு அதையே ‘ஜெஸ்ஸி - 2’ என்ற பெயரில் படமாக்கலாம் என்ற முயற்சியில் தற்போது இறங்கியிருக்கிறார் கார்த்திக்.