Published:Updated:

``கடைசிக்கட்டத்தில் கணவரைக் குழந்தையாப் பார்த்துக்கிட்டது என் பாக்கியம்!" - நடிகை சீமா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
``கடைசிக்கட்டத்தில் கணவரைக் குழந்தையாப் பார்த்துக்கிட்டது என் பாக்கியம்!" - நடிகை சீமா
``கடைசிக்கட்டத்தில் கணவரைக் குழந்தையாப் பார்த்துக்கிட்டது என் பாக்கியம்!" - நடிகை சீமா

``ஒருகட்டத்தில் அவர் என்னை விட்டுப்போகப்போறார்னு தெரிஞ்சுபோச்சு. ரொம்ப வலி நிறைந்த நாள்கள். கொஞ்சம் கொஞ்சமா என்னை அடுத்தகட்டத்துக்குத் தயார்படுத்திகிட்டேன். ஏன்னா, என்னை நம்பி அம்மா, பையன், பொண்ணு இருக்காங்க. இவங்களுக்காக நான் வாழ்ந்தாகணும்."

லையாள சினிமாவில் புகழ்பெற்ற நடிகைகளில் ஒருவர், சீமா. தமிழ்ப் படங்கள் சிலவற்றில் நடித்திருந்தாலும், தமிழ் சீரியல் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பித்தவர். கணவரும் புகழ்பெற்ற இயக்குநருமான ஐ.வி.சசி மறைவை அடுத்து, பல மாதங்களாக நடிக்காமல் இருந்தார். தற்போது, நடிக்க ஆயத்தமாகியிருக்கும் அவரிடம் உரையாடினேன். கணவரின் நினைவுகள் மற்றும் கேரளா வெள்ள பாதிப்புகள் குறித்து நெகிழ்வுடன் பகிர்ந்தார்.

``பூர்வீகம் கேரளவா இருந்தாலும், பிறந்து வளர்ந்து சென்னைதான். கமல்ஹாசனும் நானும் சிறுவயது நண்பர்கள். அவர்தான் எனக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்தார். சோப்ரா மாஸ்டரிடம் அசிஸ்டென்ட்டா வொர்க் பண்ணினேன். 13 வயசுல, `பூக்காரி' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானேன். அப்போகூட சினிமா பற்றி எனக்குத் தெளிவு இல்லை. தன் படங்களில் என்னை ஹீரோயினா நடிக்க வெச்சார், என் கணவர். சினிமா பற்றி உணரவெச்சார். 1980-ம் ஆண்டு, நாங்க கல்யாணம் செய்துகிட்டோம். என் விருப்பப்படி தொடர்ந்து நடிக்க அனுமதிச்சார். 200 படங்களுக்கும் மேலே ஹீரோயினா நடிச்சேன். ரஜினிகாந்த், கமல்ஹாசன், மது, பிரேம் நசீர், மம்முட்டி, மோகன்லால், ஷீலா, ஶ்ரீதேவி, ஜெயபாரதி எனப் பலரும் என் கணவர் இயக்கத்தில் நடிச்சாங்க. அவர்களின் ஆரம்ப கால சினிமா பயணத்தில் என் கணவரின் பங்கு பெரிசு. வீட்டுல இருவரும் சினிமாவைப் பற்றிப் பேசிக்கவே மாட்டோம். நான் நல்லா வாயாடுவேன். அது அவருக்கு ரொம்பப் பிடிக்கும். என்னைப் பேசச் சொல்லி ரசிச்சுக் கேட்பார். என் வாழ்க்கையில அவர்தான் முதன்மையானவர்.

அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதும் ஒரு குழந்தைபோலவே பார்த்துகிட்டேன். அது என் வாழ்நாள் பாக்கியம். ஒருகட்டத்தில் அவர் என்னை விட்டுப்போகப்போறார்னு தெரிஞ்சுபோச்சு. ரொம்ப வலி நிறைந்த நாள்கள். கொஞ்சம் கொஞ்சமா என்னை அடுத்தகட்டத்துக்கு தயார்படுத்திக்கிட்டேன். ஏன்னா, என்னை நம்பி அம்மா, பையன், பொண்ணு இருக்காங்க. இவங்களுக்காக நான் வாழ்ந்தாகணும். கடந்த அக்டோபர் மாதம் அவர் காலமானார். அவரின் இழப்பிலிருந்து இன்னும் மீண்டு வரலை. என் வாழ்நாள் வரைக்குமே மீண்டுவர முடியாது என்பது எதார்த்தம். ஆனால், அதை என் முகத்தில் காட்டிக்கிட்டா, வேலையில் கவனம் செலுத்த முடியாது. அவர் டைரக்டரா ஆக்டிவா இருந்தப்போ, ஷூட்டிங்குக்காக வெளியூரில் மாதக் கணக்கில் இருப்பார். இப்பவும் அப்படி வெளியூர் போயிருக்கிறதாவே நினைக்கிறேன். என் வாழ்நாள் முழுக்க அவர் என்னுடன்தான் இருப்பார். அவர் இழப்பினால் கொஞ்சம் அமைதி தேவைப்பட்டுச்சு. அதனால், நடிக்காம இருந்தேன். இனி நடிப்பேன்" என்கிறார் சீமா.

கேரள வெள்ள பாதிப்புகள் குறித்துப் பேச்சு மாறுகிறது. ``கேரளாவில் எனக்கு நிறைய நண்பர்களும் நலம்விரும்பிகளும் இருக்காங்க. என் தோழியின் அம்மா, மாவேலிக்கரை பகுதியில் வசிக்கிறாங்க. அவங்க வெள்ளத்தில் ரொம்ப பாதிக்கப்பட்டு எப்படியோ பத்திரமா மீட்கப்பட்டிருக்காங்க. அந்தத் தருணம் பற்றித் தெரிஞ்சதும் நெகிழ்ந்துபோனேன். கேரளாவுக்கு நேரில் போகணும். பாதிக்கப்பட்டவங்களுக்கு ஆறுதல் சொல்லி, என்னால் இயன்ற உதவிகளைச் செய்யணும்னு ஆசைப்படறேன். இன்னும் அதற்கான சூழல் அமையலை. தற்சமயம், வீட்டிலிருந்தபடியே அவங்களுக்காகக் கடவுளிடம் வழிபட்டுக்கொண்டிருக்கேன்.

பலரும் தங்கள் வெள்ள பாதிப்பு அனுபவங்களை என்னிடம் தெரிவிக்கிறாங்க. அதில் ஒருத்தரின் அனுபவம், இந்த நிமிஷமும் என் மனதை நெகிழவெச்சிருக்கு. `நான் கோடீஸ்வரி. செல்வச் செழிப்புடன் பெரிதா எந்த இடர்பாடுகளும் இல்லாம வாழ்ந்துட்டிருந்தேன். அடித்தட்டு மக்களின் பொருளாதாரப் பிரச்னைகள், அன்றாட வாழ்க்கை தேவைகள் பற்றி பெரிசாத் தெரியாது. ஆனால், வெள்ளத்தால் நிலைகுலைந்து நான்கு நாள்கள் பட்டினி, கண் முன்னாடி சொத்துகள் வெள்ளத்தில் அடித்துச்சுட்டுப் போறது எல்லாம் பார்த்தேன். அப்போ, சில ஏழைகள்தாம் எனக்கு அதிகம் உதவினாங்க. பணம், சொத்தெல்லாம் வாழ்க்கையில ஓர் அங்கமே தவிர, நிரந்தரம் கிடையாதுனு உணர்ந்தேன். சோகத்திலும் மிகப்பெரிய பாடத்தை இயற்கை கொடுத்திருக்கு'னு உருக்கமாச் சொன்னாங்க. அதைக் கேட்டு கண் கலங்கிட்டேன். 

மனிதர்களுக்கு மட்டுமல்ல; மலை, தாவரம், கடல்னு இயற்கையின் எல்லாப் படைப்புகளுக்கும் உயிர் உண்டு. அதை அவற்றுடன் உணர்வுபூர்வமாகப் பேசினால்தான் உணர முடியும். நான் உணர்ந்திருக்கேன். தினமும் என் வீட்டுத் தோட்டத்தில் உள்ள செடி கொடிகளுடன் பேசுவேன். அதைப் பார்த்து என்னைப் பைத்தியம்னு சிலர் நினைப்பாங்க. அப்படிச் சொன்னவங்க பலரும் இப்போ கேரளா வெள்ளப் பெருக்குப் பிறகு, இயற்கைக்கு உயிர் உண்டுன்னு சொல்றாங்க. இயற்கையை மதிக்கணும்; அதன் இயல்பை உணரணும்" என்கிறார் சீமா. 


 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு