Published:Updated:

"ஆர்.எக்ஸ் 100, யூ டர்ன், அயோக்யா... கோலிவுட்டைப் படையெடுக்கும் ரீமேக் படங்கள்!"

"ஆர்.எக்ஸ் 100, யூ டர்ன், அயோக்யா... கோலிவுட்டைப் படையெடுக்கும் ரீமேக் படங்கள்!"
"ஆர்.எக்ஸ் 100, யூ டர்ன், அயோக்யா... கோலிவுட்டைப் படையெடுக்கும் ரீமேக் படங்கள்!"

தமிழ்சினிமாவில் தற்போது தயாராகிக்கொண்டிருக்கும் ரீமேக் படங்களின் பட்டியல் இது.

ரு மொழியில் ஒரு படம் பிளாக் பஸ்டர் வெற்றி பெற்றால், அதனை மற்ற மொழிகளில் ரீமேக் செய்வதும் டப்பிங் செய்து வெளியிடுவதும் வழக்கம். ஆனால், இப்போது நேரடியான மற்ற மொழி திரைப்படங்களுக்கு தமிழ்நாட்டில் தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இருந்தும், பிற மொழிப் படங்களை ரீமேக் செய்யும் கலாச்சாரம் கோலிவுட்டில் டிரெண்டாகி வருகிறது. அந்த வகையில், தற்போது தயாராகி வரும் ரீமேக் படங்களின் பட்டியலைப் பார்ப்போம்.

வர்மா:
 

தெலுங்கில் வைரல் ஹிட்டான படம், 'அர்ஜுன் ரெட்டி'. இதில், விஜய் தேவரக்கொண்டா - ஷாலினி பாண்டே ஜோடிக்கு இந்திய சினிமா மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. சந்தீப் வங்கா இயக்கிய இப்படத்தை, இயக்குநர் பாலா தமிழில் ரீமேக் செய்து வருகிறார். அதில், நடிகர் விக்ரம் மகன் துருவ் ஹீரோவாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக பெங்காலி பெண்ணான மேகா நடிக்கிறார். தவிர, 'பிக் பாஸ்' புகழ் ரைஸா முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாகியிருக்கும் இப்படம், நவம்பரில் திரைக்கு வரவிருக்கிறது.  

60 வயது மாநிறம்: 
 

ராதாமோகன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, பிரகாஷ்ராஜ், சமுத்திரக்கனி நடித்திருக்கும் படம் இது. இளையராஜா இசையில் உருவாகியிருக்கும் இப்படம் `கோதி பன்ன சாதாரண மைக்கட்டு' என்ற கன்னட படத்தின் ரீமேக். அல்சீமர் நோயால் பாதிக்கப்பட்டு தொலைந்துபோன அப்பாவுக்கும், அவரைத் தேடும் மகனுக்கும் இடையேயான கதை. கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருக்கும் இப்படத்தில், இந்துஜா கதாநாயகியாக நடித்திருக்கிறார். நாளை வெளியாகிறது இப்படம்.  

காற்றின் மொழி: 
 

பாலிவுட்டில் சுரேஷ் திரிவேனி இயக்கத்தில் வித்யா பாலன் நடித்து, கடந்த வருடம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படம், 'துமாரி சுலு'. இப்படத்தை தமிழில் ரீமேக் செய்துள்ளார், இயக்குநர் ராதாமோகன். இது '60 வயது மாநிறம்' படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ராதாமோகனின் இரண்டாவது ரீமேக்! நடிகர் விதார்த், ஜோதிகாவின் கணவர் கேரக்டரில் நடிக்கிறார். தனஞ்செயன் தயாரிக்கும் இப்படத்தில் சிம்பு சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். 'மொழி' படத்திற்குப் பிறகு ராதாமோகன் ஜோதிகாவை இயக்குகிறார். 

அயோக்யா: 
 

பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், காஜல் அகர்வால் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்ற படம், 'டெம்பர்'. இப்படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராக இருந்த வெங்கட் மோகன் இயக்கி வருகிறார். அதில், விஷால், ராஷி கண்ணா, பார்த்திபன் ஆகியோர் நடிக்கின்றனர். லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் மற்றும் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி இரு நிறுவனங்களும் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன. 

பாரிஸ் பாரிஸ்: 
 

கங்கனா ரணாவத் நடித்து பாலிவுட்டில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம், ‘குயின்’. சிறந்த படம் மற்றும் சிறந்த நடிகைக்கான தேசிய விருதுகளைப் பெற்ற இப்படத்தை, விகாஸ் பாஹல் இயக்கினார். நான்கு தென்னிந்திய மொழிகளிலும் ரீமேக்காகும் இப்படத்தின் தமிழ் வெர்ஷனான 'பாரிஸ் பாரிஸ்' படத்தில் காஜல் அகர்வால் ஹீரோயினாக நடிக்க, 'உத்தம வில்லன்' படத்திற்குப் பிறகு ரமேஷ் அரவிந்த் இயக்கியிருக்கிறார்.  

அத்தாரின்டிக்கி தாரேதி: 
 

தெலுங்கில் பவன் கல்யாண் நடித்து 2013-ல் வெளியான 'அத்தாரின்டிக்கி தாரேதி' படத்தின் ரீமேக்கில் சிம்பு ஹீரோவாக நடிக்கவிருக்கிறார். இயக்குநர் சுந்தர்.சி இயக்கவிருக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இசையமைப்பாளராக ஹிப் ஹாப் ஆதியும், கதாநாயகியாக மேகா ஆகாஷும் நடிக்கவிருக்கிறார்கள்.  

யூ டர்ன்: 
 

கன்னடத்தில் ஷ்ரதா ஶ்ரீநாத் நடித்து வெளியான 'யூ டர்ன்' படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு அதே பெயரில் வெளியாகவிருக்கிறது. சமந்தா ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தைக் கன்னட வெர்ஷனை இயக்கிய இயக்குநர் பவன் குமாரே இயக்கியுள்ளார். க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்தில், பத்திரிகையாளராக நடித்துள்ளார் சமந்தா. 

ஆர்.எக்ஸ் 100:
 

டோலிவுட்டில் கார்த்திகேய கம்மக்கொண்டாவும், பாயல் ராஜ்புத்தும் இணைந்து நடித்த 'ஆர்.எக்ஸ் 100'. படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், அதனை தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை ஆரா சினிமாஸ் நிறுவனம் பெற்றது. இதில் ஆதி ஹீரோவாக நடிக்கவிருக்கிறார். ஹீரோயினாக டாப்ஸியின் பெயர் பரிசீலனையில் உள்ளது. இயக்குநர், மற்ற நடிகர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும். 

அடுத்த கட்டுரைக்கு