Published:Updated:

``அழகான நேரம் அதை நீ தான் கொடுத்தாய்!” - என்றும் நன்றியுடன் ஒரு யுவன் ரசிகன் #HBDYuvan

கார்த்தி
``அழகான நேரம் அதை நீ தான் கொடுத்தாய்!” - என்றும் நன்றியுடன் ஒரு யுவன் ரசிகன் #HBDYuvan
``அழகான நேரம் அதை நீ தான் கொடுத்தாய்!” - என்றும் நன்றியுடன் ஒரு யுவன் ரசிகன் #HBDYuvan

பல நாள்கள்... இல்லை பல மாதங்களுக்குப் பிறகு, யுவனின் பாடல்கள் நிறைந்த ஓர் ஆல்பம், முழுவதுமாக ஹிட் அடித்திருக்கிறது. யுவனுக்கு பியார்கள்... பிரேமங்கள்... காதல்கள்... யுவன் ரசிகர்கள் யுவனுக்கு 20 வது கம்பேக் எனக் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். பால்யத்தில் பிடித்தமான எல்லா விஷயங்களும், அவ்வளவு சீக்கிரம் நம் மனதைவிட்டு விலகிச் செல்வதில்லை. மீண்டும் மீண்டும் சுழன்றுகொண்டே தானிருக்கும். அவர்களின் சறுக்கலை மனம் அவ்வளவு எளிதில் ஒப்புக்கொள்வதில்லை. அதனால்தான் யுவன் ஷங்கர் ராஜா, யுவராஜ் சிங் போன்றவர்கள் எல்லாம் 90 களில் பிறந்தவர்களுக்கும் எப்போதும் ஸ்பெஷல். 80 களுக்கு ரஹ்மான், மில்லியனியம் கிட்ஸுக்கு அனிருத் எனில், 90 களில் பிறந்தவர்களுக்கு யுவன் ஷங்கர் ராஜாதான். 

யுவனின் இசை வரலாறு என்பது பலருக்கும் தெரிந்த அதே ஒன் லைனரிலிருந்துதான் ஆரம்பிக்கிறது. அரவிந்தன் படத்துக்கு அவரை அறிமுகம் செய்த சிவாவிடம், இளையராஜா சொன்னதெல்லாம் ஒன்றுதான். பாடல்கள் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், யுவனை அறிமுகப்படுத்திய பெருமை உன்னோடதாகத்தான் இருக்கும். 17 வயதில் முதல் படம். இளைய நிலா எஸ்.பி.பி குரலில் ஈர நிலா பாடல் மட்டும் ஹிட். இளையராஜாவின் மகன் எனச் சொல்லும் அளவுக்கான மெலடி அப்பாடல். முதல் படம் என்றால் சினிமாத் துறையைப் பொறுத்தவரை எல்லாப் பாடல்களும் ஹிட் ஆக வேண்டும். ராஜா, ரஹ்மான், ஹாரிஸ், அனிருத் வரை இது கைகொடுக்க, யுவனுக்கு இது கூட அமையவில்லை. ஆனால், அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், அந்த சிறுவயதில் தொடர்ந்து இசையமைத்தார் யுவன். 

``அழகான நேரம் அதை நீ தான் கொடுத்தாய்!” - என்றும் நன்றியுடன் ஒரு யுவன் ரசிகன் #HBDYuvan

யுவன் பல சமயங்களில் Way Ahead எனத் தோன்ற வைத்ததுண்டு. படங்களுக்கு நடுவே, யுவன் திடீரென எடுத்த இன்னொரு டார்கெட்தான் ஆல்பம் ரிலீஸ். 99 ல் The Blast என்றொரு ஆல்பம். கமல் ஹாசன், நாகூர் ஹனிஃபா, யுவன், உன்னி கிருஷ்ணன், ஸ்ரீனிவாஸ் என அப்போதைய டாப் சிங்கர்கள் பலர் பாடிய பாடல்களை வைத்து ஓர் ஆல்பம். அதுவும் சுவடு தெரியாமல் போனது. யுவன் பித்துப் பிடித்துப்போய் சில ஆண்டுகளுக்கு முன், அந்த ஆல்பத்தை இணையத்தில் தேடிப்பிடித்தேன். நீதானே ... நீதானே என்றொரு பாடல். யுவனின் சிறு வயது குரலில். இப்போது இணையத்தில் 7Up பாடல் ஒன்று படு ஹிட். விவேக்- மெர்வின் இசையில் வரும் `ஒரசாத' பாடல். 24 லட்சம் ஹிட்ஸ். ஒரசாத பாடலைக் கேட்ட போது, யுவனின் நீதானே பாடல் தான் நினைவுக்கு வந்தது. யுவனுக்கு நீதானே ஹிட் அடிக்க சர்வம் வரை காத்திருக்க வேண்டியதிருந்தது.(ஆனால், அது வேற நீதானே) இந்த ஆல்பம் இணையத்தில் கிடைத்தால் நீதானே, பூவே புதிரே, அவள் தேவதை (கமல் ), சிப்பிக்குள்ளே முத்தை யார் வைத்தார் போன்ற பாடல்களை கேட்டுப்பாருங்கள். யுவன் இந்த ஆல்பத்தை அவரது யூடியூப் தளத்திலாவது அப்லோடு செய்யலாம்.
 


யுவனின் முதல் ஹிட் ஆல்பம் வர அவர் இரண்டு ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதிருந்தது. இளையராஜா, மரகத மணி, தேவா என வலம் கொண்டிருந்த வசந்த் யுவனுக்கு வாய்ப்புக் கொடுத்தார். அது 3 பேர் 3 காதல் வரை தொடர்கிறது. யுவனின் முதல் வின்டேஜ் ஹிட். இரவா பகலா, சுடிதார் அணிந்து, பூவே... பூவே என ஒவ்வொன்றிலும் இறங்கி அடித்தார் யுவன். ராஜாவுக்கு `செனோரீட்டா ஐ லவ் யூ' என்றால் யுவனுக்கு `ஓ... சென்யோரீட்டா' .

பெரிய பேனர், இயக்குநர் என்றெல்லாம் பார்க்காமல் ராஜாவுக்குப் பின், அதிக ஆல்பம் கம்போஸ் செய்தது யுவன்தான். 20 ஆண்டுகளில் நூறு சினிமாவை யுவன் ஸ்கோர் செய்ய இதுதான் காரணம். `பேசு' என்றொரு படம். எப்போது வந்தது என்றெல்லாம் யாருக்கும் தெரியாது. யுவனுக்கே சற்று சந்தேகம்தான். யுவனின் குரலில் வெண்ணிற இரவுகள் என்றொரு பாடல் பாடியிருப்பார். அல்ட்டி ரகம். யுவனின் குரலில் ஒரு மாடர்ன் வெஸ்டெர்ன் அப்பாடல். முடிந்தால் கேட்டுப் பாருங்கள். அதே போல் வெளிவராத படங்கள் பட்டியலில் இருக்கும் இரண்டு படங்கள். அகத்தியனின் காதல் சாம்ராஜ்யம், ஆர்யாவின் தம்பி அறிமுகமான காதல் டு கல்யாணம். இரண்டு காதல்களும் யுவனுக்குக் கைகூடவில்லை. `எனக்காக உனக்காக வெண்ணிலவின் சாரல்கள்', `தேடி வருவேன் ' போன்ற ஹிட் பாடல்கள் என்று திரைக்கு வரும் என்பதெல்லாம் யாருக்கு வெளிச்சமோ. 

நம்மை அழவைக்கும் இசைக்கருவிகளில் ஒன்று வயலின். யுவன் யோகி படத்தில் சாரங்கி என்னும் கருவியை வைத்து ஓர் இசைக்குறிப்பை உருவாக்கி இருப்பார். என்ன சொல்வது, நீங்களே கேளுங்கள்... யுவனின் குரலை, வெஸ்டர்ன் இசை ஈர்ப்பை ராஜா, கங்கை அமரன் எனப் பலரும் மேடைகளில் நக்கல் செய்ததுண்டு. `மாங்குயிலே பூங்குயிலே' பாடலை யுவன் இசை அமைத்திருந்தால் எப்படியிருக்கும் என ராஜா ஓட்டியதெல்லாம்... அய்யூ யுவன் பாவம் ரகம். யுவனுக்கு அதிகம் பிடித்த `ஓ' எழுத்தை பலரும் நக்கல் அடித்திருக்கிறார்கள். அவற்றுக்கெல்லாம் உச்சம் இசைப்புயல் செய்ததுதான். ம்ம்ம். கண்டுபிடித்துவிட்டீர்களா. மறைந்த திமுக தலைவர் கருணாநிதி எழுத்தில் ரஹ்மான் இசையமைத்த பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் பாடலில் யுவனும் பாடியிருப்பார். யுவன் மொத்தமாய் பாடுவது `ஹே' மட்டும்தான். (ரஹ்மானோடு ஒரு வார்த்தை பாடியிருப்பார். அதைச் சேர்க்காமல்). ஆனால், எல்லாவற்றுக்கும் சேர்த்து யுவனை மரியானில் கடல் ராசாவாக்கினார் ரஹ்மான்.

``அழகான நேரம் அதை நீ தான் கொடுத்தாய்!” - என்றும் நன்றியுடன் ஒரு யுவன் ரசிகன் #HBDYuvan

யுவன் பாடல்கள் கூட சோபிக்காமல் போனதுண்டு. ஆனால், பின்னணி இசை எப்போதும் பக்கா ரகம். ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில் மங்காத்தா படத்தை இசை நாமினேஷனில் வைக்கவில்லை. இயக்குநர் வெங்கட் பிரபு மங்காத்தா என்றதும், நேரு விளையாட்டு அரங்கம் அதிர்ந்தது. அஜித்துக்கு தீனாவில் ஆரம்பித்தது யுவனின் பின்னணி இசை. பில்லா படத்தின் `நான் மீண்டும் நானாக வேண்டும் ' பாடலில் வரும் ஓர் இசைக்குறிப்பு யுவனுக்கும் விஷ்ணுவர்தனுக்கும் பிடித்துப்போக, அதையே தீமாக வைத்துவிட்டார்கள். பில்லா தீம் அதிரடி ஹிட். அஜித் ரசிகர்கள் அல்லாத பலருக்கும் அது ஃபேவரைட். ஆனால், அதே அளவுக்கு ஹிட் அடித்தது பில்லா 2 தீம். முதல் பாகத்தின் தீம் போலவே ஆரம்பித்து, அதை இன்னும் மெருகேற்றி பில்லா 2 வில் தீமாக்கி இருப்பார். அதே போல் `நான் மகான் அல்ல' படத்தில்  இறுதி சண்டைக்காட்சியில் வரும் இசையும். 

மௌனம் பேசியதே படத்தில் த்ரிஷா 'கௌதம்' என  சொன்னதும், சூர்யா காட்டும் ரியாக்ஷனுக்கு வரும் பின்னணி இசையாகட்டும், 7G ரெயின்போ காலனி படத்தின் இறுதியில் கதிர் அமர்ந்திருக்க வரும் பின்னணி இசையாகட்டும், இப்போது கேட்டாலும் முதல் காதலியின் முகத்தை நினைவுபடுத்த மறுப்பதில்லை.    

 யுவனின் சில ஹிட் இசைத்துணுக்குகள் யாரும் கவனிக்காமல் வீணானதுண்டு. ஆரண்ய காண்டம் படத்தில் வரும் ஒரு இசை, கொஞ்சும் கிளியாக கேடி பில்லா கில்லாடி ராங்காவில் மாறியிருக்கும். பில்லா 2 வில் வரும் ஒரு பாடலை `உள்ளார பூந்து பார்த்தால் ' பானா காத்தாடி படத்தின் பாடல் இருக்கும் . (கண்டுபிடித்தால் கமென்ட்டில் பகிரவும் ).

2002 ல் இருந்து வருடத்துக்குக் குறைந்தது 5 படங்கள். அதில் பல பாடல்கள் ஹிட். நந்தா, மௌனம் பேசியதே, துள்ளுவதோ இளமை, ஏப்ரல் மாதத்தில் என எல்லாமே வேற லெவல் ஹிட். மீசை முளைக்கும் வயதில் இருந்த எல்லோருக்கும் யுவனின் குரலில் வரும் இது காதலா... முதல் காதலா வேறோர்உலகைக் காட்டியது.

``அழகான நேரம் அதை நீ தான் கொடுத்தாய்!” - என்றும் நன்றியுடன் ஒரு யுவன் ரசிகன் #HBDYuvan

புதுக்கோட்டையிலிருந்து சரவணன் படத்தில் தனுஷ் சொந்தக்குரலில் பாடிய நாட்டுச் சரக்குதான் எல்லா சேனல்களிலும் ஓடியது. ஆனால், அதில் பாம்பே ஜெயஸ்ரீ பாடிய மலர்களே மலர்களே மலர வேண்டாம் பாடல், யுவனின் டாப் டென் மெலடிகளில் ஒன்று. யுவனின் குரலில் வரும் ஆங்கில கலப்பான Where do we go, தனிப்பட்ட முறையில் என் ஆல்டைம் ஃபேவரைட். தமிழ் படத்தில் முதல் ஆங்கிலப் பாடல் ( My Life - சரோஜா ), முதல் இந்திப் பாடல் ( அகடம் பகடம் - ஆதிபகவன் ) எல்லாமே யுவன் வசம்தான்.

(2001-2010) காலகட்டத்தில் யுவன் அளவுக்குத் தமிழில் ஹிட் பாடல் கொடுத்தது யாரும் இல்லை. ராம், அறிந்தும் அறியாமலும், சண்டக்கோழி, கண்ட நாள் முதல், ஒரு கல்லூரியின் கதை, புதுப்பேட்டை என எல்லாம் ஒரே வருடத்தில் ரிலீஸ். ஒரு கல்லூரியின் கதை, சண்டக்கோழியாவது கேசட் எல்லாம் கிடைத்தது. புதுப்பேட்டை பட ஆடியோவுக்கு கேசட் கூட பெரும்பாலும் கிடைக்கவில்லை. மாலை நேரம் 5 மணிக்கு FMல் ஒரு நாளில் பாடலும், எங்க ஏரியாவும் ஓடும். அடித்துப் பிடித்து பள்ளியிலிருந்து வர வேண்டும்.

யுவன் காதல் பாடல்களைவிட, காதல் சோகப் பாடல்கள்தாம் பலரது ஃபேவரைட். அதிலும், அதை யுவனே பாடியிருந்தால் இன்னும் நோகடிக்கும். போகாதே பாடலில் வரும், `நீ இருந்தால் நான் இருப்பேன்' தொடர்ந்து பல வரிகள்.
 

  `அழகான நேரம் அதை நீதான் கொடுத்தாய்...
அழியாத சோகம் அதையும் நீதான் கொடுத்தாய்...
கண் தூங்கும் நேரம் பார்த்து
கடவுள் வந்து போனது போல்
என் வாழ்வில் வந்தே போனாய்...
ஏமாற்றம் தாங்கலையே...
பெண்ணே நீ இல்லாமல்
பூலோகம் இருட்டிடுதே ' 

 

``அழகான நேரம் அதை நீ தான் கொடுத்தாய்!” - என்றும் நன்றியுடன் ஒரு யுவன் ரசிகன் #HBDYuvan


 

இந்தப் பாடல் கேட்கும் போதெல்லாம் ஒரு மென்சோகம் உடலுக்குள் பரவும். இந்தப் பாடலின் பதிவின் போது யுவனுக்கும் அப்படித்தான் இருந்திருக்கும். யுவனின் வாழ்வில் மிகவும் முக்கியமான தருணத்தில் அமைந்த பாடல் இது. யுவன் காதலின், பிரிவின் வலி சொல்லும் பாடல்கள் அனைத்தும் ஹிட் அடித்தது. `ஒரு கல் ... ஒரு கண்ணாடி' பாடலின் அத்னன் சாமி வெர்சன் கேட்ட அனைவருக்கும் கேட்கும் யுவனின் குரலில் இருக்கும் மேஜிக். பையா படத்தின் ஆடியோ சிடியில் இல்லாத `ஏதோ ஒன்று' பாடலும் இதே ரகம்தான்.

மரகதமணி, சுபாஷ் சந்திர போஸ், கங்கை அமரன் பாடல்கள் எல்லாம் ராஜா பாடல் ஆகியது போல் குளிர் 100 டிகிரி (போபோ ஷாஷி ), தண்ணி கருத்திருச்சு ( அச்சு ராஜாமணி ), மாலைப் பொழுதின் மயக்கத்திலே (அச்சு ராஜாமணி ), பூவே பூவே பேசும் பூவே (தரண் குமார் ) எல்லாம் யுவன் பாடல்கள் ஆக்கப்பட்டன. யுவனின் பேட்டிகள் எப்போதும் சுவாரஸ்யமானவை. அதில் எந்தவோர் உணர்ச்சியும் இருக்காது. `ஓ அப்படியா' என்பது போல் ஒரு ரியாக்ஷன் கொடுப்பார். 

இப்போதிருக்கும் ஹிட் இயக்குநர் பலரது முதல் படம் யுவன்தான். அமீர், விஷ்ணுவர்தன், செல்வா வரிசையில் இறுதியாகவே வந்தார் ராம். ஆம்.யுவனின்  ஆல் டைம் பெஸ்ட்டான கற்றது தமிழை எழுதாமல் எப்படி... 

`உனக்காகத்தானே', `பறவையே எங்கு இருக்கிறாய், `இன்னும் ஓர் இரவு' என ஹிட் பல இருந்தாலும் வரிகளுக்காகவும், இசைக்காகவும் பலமுறை கேட்டு ரசித்த பாடல் `பற பற பற பட்டாம்பூச்சி ' தான். படத்தில் முழுக்க முழுக்க பாசிட்டிவ் எனர்ஜியைத் தரும் பாடல். தன் குடும்பம் முழுவதையும் ஒரு விபத்தில் இழந்துவிட்டு நிற்கும் பிரபாகருக்கு, தமிழ் அய்யாவாக வரும் அழகம் பெருமாள் மூலம் புதுப்பிடிப்பு ஒன்று கிடைக்கும். 

``கண்ணீரை துடைக்கும் விரலுக்கே மனம் ஏங்கிக் கிடக்குதே

தண்ணீரில் மிதக்கும் எறும்புக்கே இலை படகு ஆனதே

ஏதோ ஏதோர் உணர்ச்சி எரி தழலில் மழையின் குளிர்ச்சி

கடல் அலைகள் மோதி மோதி மணல் சிற்பமாகுதே " 

என இசையும் வரியும் போட்டி போட்டுக்கொண்டு செல்லும். 

``அழகான நேரம் அதை நீ தான் கொடுத்தாய்!” - என்றும் நன்றியுடன் ஒரு யுவன் ரசிகன் #HBDYuvan

எப்படியும் எல்லோரும் கேட்டு இருக்கும் பாடல்தான், பறவையே எங்கு இருக்கிறாய். மகன் யுவன் இசையில் ராஜா பாடிய டாப்-3 பாடல்களில் கண்டிப்பாக `பறவையே எங்கு இருக்கிறாய்' இடம்பெறும். மெமரி கார்டுடன் மொபைல் வாங்கியவுடன் செய்த முதல் வேலை, `பறவையே எங்கு இருக்கிறாய்' பாடலை ஹெட்செட்டில் கேட்டதுதான். காரணம், `நீ என்ன தேடி இருப்பேன்னு எனக்குத் தெரியும். நானும் அம்மாவும் இங்க மஹாராஷ்ட்ரால தூரத்து மாமா வீட்டுல இருக்கோம்' என ஆரம்பிக்கும் பாடலில் இருவரது குரலும் வரும்.ஹெட்செட்டை ஒரு காதில் மட்டும் வைத்துக் கேட்டால், பிரபாகர் குரல் மட்டும்தான் கேட்கும். பின் மீண்டும் prev பட்டனை அழுத்தி, மீண்டும் வலதுபுற ஹெட்செட்டை வைத்தால், அப்போது ஆனந்தியின் குரல் ஒலிக்கும். படத்தில் ஆனந்தி தனக்கு வைக்கத் தெரிந்தது சுடுதண்ணி மட்டும்தான் எனச் சொல்லி ஒரு டம்ளர் சுடு தண்ணீரை பிரபாகருக்குக் கொடுப்பாள். அது நாக்கைப் பதம் பார்த்தாலும், பிரபாகரின் பிடித்ததாக அது மாறிவிடும். அதே அளவுக்கான சுவையைத்தான் அந்த ஒற்றை ஹெட்செட்டு கொடுக்கும். காதலியுடன் அமைதியான ஒரு தருணத்தில் ஆண் குரல் ஹெட்செட்டை அவளிடம் கொடுத்துவிட்டு, பெண் குரல் ஹெட்செட்டை நீங்கள் வாங்கிக் கேட்டுப் பாருங்கள். இளையராஜாவின் குரலுக்கு முன்வரும் வெர்ஷனை மட்டும் பலமுறை கேட்பீர்கள். 

தனியார் நிகழ்ச்சி ஒன்றுக்கு யுவன் இசையமைத்த பாடலில் வரும் `I Will be There For You' போலத்தான் யுவன் எப்போதும் தன் ரசிகனுக்கு இருந்து இருக்கிறார். `போய்ப் பார்க்க யாரும் இல்லை, வந்து பார்க்கவும் யாரும் இல்லை... வழிப்போக்கன் வருவான் போவான் வழிகள் எங்கும் போகாது ' என்பது போலத்தான் யுவன் எப்போதும். அந்த யுவன் இப்போது மிஸ்ஸிங் என்றாலும், இசையமைப்பாளர்கள் வருவார்கள் போவார்கள். யுவனின் இசை அங்கேயேதானிருக்கும்.