Published:Updated:

நயன்தாரா, அனுராக், விஜய் சேதுபதி... வித்தியாச காம்போ படம்..? - `இமைக்கா நொடிகள்’ விமர்சனம்

விகடன் விமர்சனக்குழு
நயன்தாரா, அனுராக், விஜய் சேதுபதி... வித்தியாச காம்போ படம்..? - `இமைக்கா நொடிகள்’ விமர்சனம்
நயன்தாரா, அனுராக், விஜய் சேதுபதி... வித்தியாச காம்போ படம்..? - `இமைக்கா நொடிகள்’ விமர்சனம்

ஒரு சிங்கம் பல நொடிகள் கண் இமைக்காமல் காத்திருந்து, கண்காணித்து, பதுங்கி, பாய்ந்து இரையை வேட்டையாடுகிறது. அதைக் கழுதைப்புலி ஒன்று குறுக்குவழியில் பறித்துச் சென்றால், அந்தச் சிங்கம் என்ன செய்யும்? கான்கிரீட் காட்டை களமாகக் கொண்டு இதைக் கதையாகச் சொல்லியிருக்கிறது `இமைக்கா நொடிகள்.'

ஐந்து வருடங்களுக்கு முன், பெங்களூருவில் ருத்ரா எனும் சீரியல் கில்லர், சி.பி.ஐ அதிகாரி நயன்தாராவால் கொல்லப்படுகிறான். ஐந்து வருடங்களுக்குப் பிறகு, நகருக்குள் அதே பெயரில் அதே பாணியில் மீண்டும் கொடூர கொலைகள் அரங்கேறுகின்றன. சி.பி.ஐ எனும் கழுகை காக்கையாக்கி கரையவிடும் அந்த சூப்பர் ஸ்மார்ட் சீரியல் கொலைகாரன் யார், சி.பி.ஐ-யின் கைகளில் சிக்கினானா, கொலைகளுக்கான காரணம் என்ன என்பதை சீட்டின் நுனியில் உட்காரவைத்து சொல்லியிருக்கிறது படம். இதுதான் மொத்தப் படத்தின் கதையா எனும் கேள்விக்குறிக்கு இல்லை எனும் பதில்தான் ஆச்சர்யக்குறி! `மொத்தக் கோட்டையும் அழிங்க, நான் மொத இருந்தே சாப்பிடுறேன்' என திரைக்கதையில் அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் அஜய் ஞானமுத்து.

சி.பி.ஐ அதிகாரி அஞ்சலியாக நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டாரேதான்! நவரசத்தில் பல ரசங்களைக் காட்ட வேண்டிய கதாபாத்திரம். மாஸும் க்ளாஸுமாய் நடித்துக்கொடுத்திருக்கிறார். அஞ்சலியின் தம்பி அர்ஜுனாக அதர்வா. ரொமான்ஸ், ஆக்‌ஷன் என இரண்டுமுகம் காட்ட வேண்டிய கதாபாத்திரம். இரண்டுக்கு ஒன்றரை மதிப்பெண்கள் வாங்கியிருக்கிறார். சண்டைக் காட்சிகளில் தரம். அனுராக் காஷ்யப்தான் கதையின் சிங்கம். நடிப்பில்  பங்கம் பண்ணியிருக்கிறார். தமிழ் சினிமா ரசிகர்களுக்கு புதியவரான அனுராக்கை, பார்க்கப் பார்க்க பிடித்துப்போகிறது தமிழ் ரசிகர்களுக்கு. என்ன, சிங்கத்துக்கு லிப் சின்க்தான் பெரும் பிரச்னை. கௌரவ கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி. அவருக்கு படத்தில் என்ன கதாபாத்திரம் என்பதை, வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் பார்ப்பவர்கள் எல்லோருக்குமே தெரிந்திருக்கும். குட்டியான அதேநேரம் கெட்டியான கதாபாத்திரம், ரசிக்கும்படி நடித்திருக்கிறார். ராஷி கண்ணா, ரமேஷ் திலக், அபிஷேக் ராஜா, நயன்தாராவின் மகளாக நடித்திருக்கும் குழந்தையென மற்ற நடிகர்களும் நல்ல தேர்வு. நல்ல நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். 

படத்தின் ஓரிடத்தில் `சின்னச் சின்ன சந்தேகங்கள்தான் பெரிய பிரச்னைகளை உண்டாக்கும்' எனப் பேசும் ஒற்றை வசனம்தான் மையக்கதைக்கும் கிளைக்கதைகளுக்குமான வேர் என்பதை தெளிவாக நியாயப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் அஜய் ஞானமுத்து. ஆனால், உற்றுநோக்கினால் மையக்கதையும் கிளைக்கதைகளும் தாமரை இலையிலுள்ள நீர் துளிபோல் ஒட்டியும் ஒட்டாதமாதிரியே இருப்பது கொஞ்சம் உறுத்தல். படம் தேவைக்கு மேல் நீளம். இடைவேளையிலேயே முழுப்படம் பார்த்த உணர்வு வந்துவிடுகிறது. மொத்தப் படமும் பார்த்து வெளியே வரும்போது மூன்று சினிமாக்கள் பார்த்த ஃபீல். அதர்வா-ராஷிக்கண்ணா காதல் காட்சிகள் நன்றாகவே இருந்தாலும், கதைக்குத் தேவையில்லாத ஆணி. அனுராக் பேசும் நக்கல் வசனங்கள் ஷார்ப். அரங்கில் அப்ளாஸ் அள்ளுகிறது. ஒருவேளை, கமர்ஷியல் சமாச்சாரங்களை தீண்டாமல் எடுத்திருந்தால், படம் இன்னமும் சிறப்பாக இருந்திருக்குமோ என்ற ஐயமும் எழுகிறது. குடித்துவிட்டு கார் ஓட்டியதற்காகத் தன் தம்பியை பொது இடத்தில் அறையும் நயன்தாரா, நயன்தாராவுக்கும் ஒரு காவல் அதிகாரிக்குமான மோதல் எனச் சில சின்னச் சின்ன விஷயங்களையும் கதையின் மைய ஓட்டத்தோடு சம்பந்தப்படுத்தியிருப்பது சிறப்பு! ஆனால், அதே அளவு கவனத்தை மையக்கதையிலும் காட்டியிருக்கலாம் எனத் தோன்றுகிறது. மருத்துவமனையில் காவலுக்கு நிற்கும் போலீஸ் அநியாயத்துக்கு அசட்டையாக இருப்பது, மருத்துவமனையிலிருந்து தப்பிக்கும் அதர்வாவோ குற்றவாளியைக் கண்டுபிடித்து மீண்டும் சைக்கிளிலேயே அதே மருத்துவமனைக்கு வந்து மீண்டும் தப்பித்து... மறுபடி அதே மருத்துவமனைக்கு வந்து ஆம்புலன்ஸ் ஓட்டுவது, வீட்டுக்காவலில் இருக்கும் நயன் நினைத்த நேரமெல்லாம் யாருக்கு வேண்டுமானாலும் போன்போட்டு பேசுவதென படத்திலிருக்கும் சில லாஜிக் மீறல்களையும் குறைத்திருக்கலாம். 

ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவில் அனுபவம் பளிச்சென தெரிகிறது. ஆக்‌ஷன் சேஸிங், ரேஸிங் காட்சிகளின் பரபரப்பை பிசிறில்லாமல் கடத்தியிருக்கிறது. புவன் ஸ்ரீனிவாசனின் படத்தொகுப்பில் சில காட்சிகள் சடாரென முடிந்துவிடுவது, கதையோட்டத்தில் ஏற்பட்ட தடங்கல் போலாகிறது. பாடல்கள் அனைத்தும் வழக்கமான ஹிப் ஹாப் தமிழா பாணியிலேயே இருக்கிறது. பின்னணி இசையில் நிறையவே ஏமாற்றிவிட்டார். 

சில லாஜிக் மீறல்களும் படத்தின் நீளமும் அவ்வப்போது கண்ணை செருகவைத்தாலும், திடுக் திருப்பங்கள் நிறைந்த திரைக்கதை  படத்தை கண் இமைக்காமல் பார்க்க வைக்கிறது!

திடுக் த்ரில்லர் முயற்சிக்கு வாழ்த்துகள் அஜய்!