Published:Updated:

`மட்ட' சேகர் என்ன சொல்ல வர்றார்னா..? - `அண்ணனுக்கு ஜே' விமர்சனம்

விகடன் விமர்சனக்குழு
`மட்ட' சேகர் என்ன சொல்ல வர்றார்னா..? - `அண்ணனுக்கு ஜே' விமர்சனம்
`மட்ட' சேகர் என்ன சொல்ல வர்றார்னா..? - `அண்ணனுக்கு ஜே' விமர்சனம்

`மட்ட' சேகர் என்ன சொல்ல வர்றார்னா..? - `அண்ணனுக்கு ஜே' விமர்சனம்

ரசியலில் இருந்தால்தான் நமக்குக் கெத்து என முடிவு எடுக்கும் ஹீரோ, அதற்கேற்ப காய் நகர்த்துகிறார். அந்த ஆட்டத்தில் எதிரிகளை வெட்டினாரா இல்லை வெட்டுப்பட்டுச் சாகிறாரா என்பதை `அண்ணனுக்கு ஜே’வில் ஜாலியாகச் சொல்லியிருக்கிறார்கள்.

மட்ட சேகராக தினேஷ். இவர் எதிரிகளை மட்ட பண்ற சேகர் இல்லை; கட்டிங் அடித்தாலே மட்டையாகும் சேகர். தனது அப்பா முருகேசனுடன் (மயில்சாமி) சேர்ந்து கள்ளு இறக்கும் வேலை பார்க்கிறார். அதே ஊரில் பழைய பார் ஒன்றை லீசுக்கு எடுக்கும் ஓர் அரசியல் பிரமுகர் (ஸ்டன்ட் தீனா), கள்ளுக் கடையால் பாருக்குக் கூட்டம் வரவில்லை என்று தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி முருகேசனை போலீஸில் மாட்டி விடுகிறார். அந்த அரசியல் பிரமுகரைப் பழிதீர்க்க வேண்டும் என அரசியலில் நுழையும் மட்டை சேகர், மட்ட சேகரானாரா இல்லை சேகர் மட்டையானாரா என்பதே படத்தின் கதை.

தினேஷுக்கு இந்தப் படம் `அட்டகத்தி’ 2.0 என்றே சொல்லலாம். அவர் சீரியஸாகச் செய்வதெல்லாம் காமெடியாகவே இருக்கிறது. முதல் பாதி முழுக்கக் குடித்துவிட்டு மட்டையாவது, காதலி பின்னால் சுத்துவது எனப் பொழுதைக் கழிக்கும் இளைஞராகவும் இரண்டாம் பாதியில் எதிரிகளுக்கு ஆட்டம் காமிக்கும் அரசியல்வாதியாகவும் நடிப்பில் வித்தியாசம் காட்டியிருக்கிறார்.

இந்த அரசியல் படத்தில் ஹீரோயினுக்கு சின்ன கேரக்டர்தான். இருந்தாலும், மனதில் பதிகிறார் மகிமா. `ஜானி’ ஹரி, மயில்சாமி, ராதாரவி, ஸ்டன்ட் தீனா, பழைய ஜோக் தங்கதுரை என முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிலர் தங்களுக்குக் கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார்கள். 

டாஸ்மாக்குக்கு மாற்று கள்ளு என்பதைப் பிற படங்களைப் போல் வசனங்களால் கடக்காமல் காட்சிகளாக வைத்தும் கமர்ஷியல் கதையில் அரசியல் வசனங்களைப் புகுத்தும் சினிமாக்களுக்கு மத்தியில், அடிமட்ட அரசியலை கமர்ஷியல் சினிமாவாகக் கொடுக்க முயற்சி செய்ததற்கும் முதலில் இயக்குநர் ராஜ்குமாருக்குப் பாராட்டுகள். ஆனால், நிகழ்காலத்தில் நடக்கும் அடிமட்ட லெவல் அரசியலை நையாண்டி செய்யும் முயற்சி, அரைக்கம்பத்தில்தான் பறக்கிறது. இன்னும் அவற்றில் கள உண்மைகளை நிறையச் சேர்த்து, அதைப் பகடி செய்திருந்தால் செமையான சம்பவமாக இருந்திருக்கும். வசனங்களில் நக்கலும் நையாண்டியுமோடு யதார்த்தமும் தூக்கல். ஜாலியான படம்தான் என்றாலும் முழுக்க முழுக்க பாசிட்டிவாக செல்லும் திரைக்கதை, அடுத்தடுத்து இதுதான் நடக்கப்போகிறது என்பதை எளிதாகக் கணிக்க வைத்துவிடுகிறது. இசையமைப்பாளர் அரோல் கொரேலி, கேமரா மேன் விஷ்ணு ரங்கசாமி, எடிட்டர் ஜி.பி.வெங்கடேஷ் என டெக்னிக்கல் டீமிடம் நன்றாக வேலை வாங்கியிருக்கும் இயக்குநர், கன்ட்டென்ட்டில் அதிகம் கவனம் செலுத்தியிருக்கலாம் எனத் தோன்ற வைக்கிறது படத்தின் திரைக்கதை. 

படம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில் இது சீரியஸ் அரசியல் படமா, அரசியல் நையாண்டி படமா என்கிற குழப்பம் வருகிறது. படம் முழுக்கவே சுத்திச் சுத்தி நாலு தெருவுக்குள்ளும் சில கதாபாத்திரங்களை மட்டுமே வைத்து கதை சொல்லியிருப்பதும் அலுப்பு. இதில் புதுப்பேட்டை, மெட்ராஸ், ஆடுகளம் எனச் சில படங்களின் சாயல் வேறு.

மாபெரும் இணைப்பு விழா, மாநிலம் தழுவிய போராட்டம் எனப் படத்தில் எந்தப் பெரிய நிகழ்வு நடந்தாலும் மிகக் குறைவான ஆள்கள் மட்டுமே அந்தக் கூட்டத்தில் இருக்கிறார்கள். ஒரு கட்சியின் மாவட்டச் செயலாளர் வீட்டில் நான்கு பேர்கூட இல்லாமல் இருப்பது போன்ற சில காட்சிகள் ரியாலிட்டிக்கு அப்பால் இருக்கிறது. அதேபோல் படம் எந்தக் காலகட்டத்தில் நடக்கிறது என்ற எந்த அறிவிப்பும் இல்லாமல் இருக்கிறது. சுவரில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்களில் 2015 என்று போட்டிருப்பதைப் பார்த்து ஆடியன்ஸே புரிந்துகொள்ளட்டும் என இயக்குநர் நினைத்திருப்பார் போல. 2015 என போஸ்டர்கள் இருந்தாலும் படம் முழுக்க ஏனோ பீரியட் படச் சாயலில் இருக்கிறது. 

இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு இந்த அண்ணனை மெருகேற்றி இருந்தால், நாங்களும் ‘ஜே’ போட்டிருப்போம்.

அடுத்த கட்டுரைக்கு