Published:Updated:

`எதைப் பேசணுமோ, அதை அப்படிக் காட்டியிருக்கணுமா பா.விஜய்?’ - `ஆருத்ரா’ விமர்சனம்

விகடன் விமர்சனக்குழு
`எதைப் பேசணுமோ, அதை அப்படிக் காட்டியிருக்கணுமா பா.விஜய்?’ - `ஆருத்ரா’ விமர்சனம்
`எதைப் பேசணுமோ, அதை அப்படிக் காட்டியிருக்கணுமா பா.விஜய்?’ - `ஆருத்ரா’ விமர்சனம்

பா.விஜய் இயக்கி நடித்திருக்கும் 'ஆருத்ரா' படம் பற்றிய விமர்சனம்.

மிழ் சினிமாவில் இது த்ரில்லர் சீசன் போல! 'எப்பய்யா சஸ்பென்ஸை உடைப்பீங்க?' என நகம் கடிக்க வைக்கும் த்ரில்லர்கள் ஒரு ரகம். 'எப்பய்யா எண்ட் கார்ட் போடுவீங்க?' எனச் சலிக்கவைக்கும் த்ரில்லர்கள் இன்னொரு ரகம். பா.விஜய் எழுதி இயக்கி நடித்திருக்கும் ஆருத்ரா இந்த இரண்டாவது ரகம்.

தமிழக அமைச்சரின் தம்பி ஒருவர் கொடூரமான முறையில் கொல்லப்படுகிறார். அவர் நெஞ்சில் தூய தமிழில் ஒரு பட்டயம் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது. அதைப் போலீஸார் விசாரிக்கும்போதே அடுத்தடுத்து கடத்தல்களும் கொலைகளும் நடக்கின்றன. நகரமே நடுங்கும் இந்த சீரியல் கில்லர் வழக்கில் தனியார் துப்பறிவாளரான பாக்யராஜின் உதவியை நாடுகிறது காவல்துறை. இந்த பரபரப்புகள் எதுவுமே பாதிக்காத வகையில் குடும்பத்தோடு பாக்யராஜின் மேல்வீட்டில் வசித்து வருகிறார் பா.விஜய். இருவரின் பாதைகளும் எங்கே குறுக்கிடுகின்றன? கொலைகளைச் செய்வது யார் என்பதுதான் ஆருத்ரா.

பா.விஜய் இயக்கி நடிக்கும் இரண்டாவது படம் இது. முந்தைய படத்தைவிட இதில் நடிப்பில் தேறியிருந்தாலும் சென்டிமென்ட் காட்சிகளில் இன்னும் தடுமாறவே செய்கிறார். தக்சிதா, மெகாலி என இரண்டு ஹீரோயின்கள். நடிப்பதற்குக் கதையில் எதுவுமில்லை. ஆங்காங்கே வந்து பொருத்தமில்லாத உதட்டசைவில் பேசிச் செல்கிறார்கள். விக்னேஷ், ஜோ மல்லூரி, ஞான சம்பந்தம், பாக்யராஜ்.. ஏன் ஒரே ஒரு காட்சியில் வரும் அஜய்ரத்னம் கூட மிகைப்படுத்தப்பட்ட நடிப்பையே வழங்குகிறார்கள். படத்தில் கொஞ்சம் இயல்பாய் இருப்பது எஸ்.ஏ.சந்திரசேகர் ஒருவர்தான்.

தமிழ் சினிமாவின் காமெடி காட்சிகளில் (இல்லை அப்படி இயக்குநர்கள் நினைக்கும் காட்சிகளில்) இனி மொட்டை ராஜேந்திரன் வரக்கூடாது என வேண்டிக்கொண்டுதான் தியேட்டர் செல்லவேண்டும் போல. ஒரே மேனரிசம், ஒரே மாதிரியான டயலாக்குகள் என ரொம்பவே போரடிக்கிறார். குழந்தை நட்சத்திரம் யுவாவின் ஒருசில காட்சிகள் ஆறுதல்.

வித்யாசாகர் என்ற பெயரை டைட்டில்கார்டில் பார்த்தாலே உற்சாகம் தொற்றிக்கொள்ளும். ஏனோ இந்தப் படத்தில் வித்யாசாகருக்கே பெரிய உற்சாகமில்லை போல! பாட்டும் பின்னணி இசையும் சுத்தமாக ஒட்டவில்லை. இங்கே அங்கே என அலைபாயும் திரைக்கதையை இருப்பதை வைத்து ஒட்டியிருக்கிறார் எடிட்டர் ஷான் லோகேஷ். 90களின் கலர் பேக்ட்ராப்பை கையாண்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர் சஞ்சய்லோக்நாத்.

சிவபக்தனான சீரியல் கில்லர் ஒவ்வொரு கொலையையும் ஒவ்வொரு பஞ்ச பூதத்திற்குக் காணிக்கையாக்குகிறான் என்ற ஒன்லைன் கொஞ்சம் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், படமாக்கியவிதத்தில் அநியாய நாடகத்தன்மை. அதுவும் 90 சதவீத காட்சிகளில் க்ரீன் மேட் பயன்படுத்தியிருப்பதால் ஒருகாட்சி கூட இயல்பாகவே இல்லை. இதுபோக எக்ஸ்ட்ரா பேப்பர் வாங்கி லிஸ்ட் போடுமளவிற்கு லாஜிக் ஓட்டைகள் வேறு.

சமூகப் பிரச்னைகளைப் பற்றி தன் படங்களில் பேச நினைக்கும் பா.விஜய் இதில் சிறார் பாலியல் வன்கொடுமை பற்றி பேச முயன்றிருக்கிறார். ஆனால், அதைப் படமாக்கிய விதம் முகம் சுளிக்கவைக்கிறது. அவ்வளவு டீட்டெயிலாக காண்பித்தே ஆகவேண்டுமா என்ன? போக, பெண்களுக்கு நிகழும் பாலியல் கொடுமை பற்றி மெசேஜ் சொல்லும் அதே வேளையில் இன்னொருபக்கம் போலீஸ் அதிகாரி, அப்பார்ட்மென்ட் மாமி, அவரின் தங்கை என எல்லாரையும் உடல்சார்ந்து அணுகும் காட்சிகள் எக்கச்....சக்கம். ஏன் சாரே இப்படி? அதிலும் 'பின்னழகுப் பித்தர்' எனப் பெருமையாக அடைமொழி வேறு கொடுத்துக்கொள்கிறார்கள். கஷ்டம்!

தமிழ் சினிமாவில் தன் பிரதான அடையாளம் தவிர்த்து பல அவதாரங்களில் செமத்தியாக ஸ்கோர் செய்திருக்கிறார்கள் பலர். ஆனால், கவிஞர் பா.விஜய்யிடம் மிகப் பரிதாபமாக தோற்றுப் போகிறார் இயக்குநர் பா.விஜய்! 

மெசேஜ் சொல்ல நினைத்து கதையை கோட்டைவிட்டு இஷ்டத்துக்கு பயணித்து தடுமாறி நிற்கும் தமிழ்ப்படங்களின் எண்ணிக்கையில் ஒன்று அதிகரித்திருக்கிறது.    

அடுத்த கட்டுரைக்கு