Published:Updated:

'இன்று போய் நாளை வா!'.... கர்நாடகாவின் விசித்திர பேய் நம்பிக்கை...! #Stree படம் எப்படி?

'இன்று போய் நாளை வா!'....  கர்நாடகாவின் விசித்திர பேய் நம்பிக்கை...! #Stree படம் எப்படி?
'இன்று போய் நாளை வா!'.... கர்நாடகாவின் விசித்திர பேய் நம்பிக்கை...! #Stree படம் எப்படி?

'இன்று போய் நாளை வா!'.... கர்நாடகாவின் விசித்திர பேய் நம்பிக்கை...! #Stree படம் எப்படி?

ண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட படங்கள் எனும்போது அதன்மீது ஒரு தனி ஆர்வம் வந்துவிடும். அதிலும் 'Based on true events' என்று கார்டு போட்டு விளம்பரப்படுத்தப்படும் பேய் படங்கள் என்றால் சில்லறைகள் சிதறுவது உறுதி. இதிலிருந்து சற்றே வித்தியாசம் காட்டும் விதமாக 'மக்களின் கேலிக்குரிய நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது' என்ற கார்டுடன் வெளியாகியிருக்கும் ஹாரர் காமெடி படமான #Stree நம்மைப் பயமுறுத்துகிறதா?

சந்தேரியில் டெய்லரிங் கடை வைத்து நடத்துகிறார் விக்கி (ராஜ்குமார் ராவ்). ஊர் திருவிழா சமயத்தில் இரவில் வரும் ஸ்திரீ எனும் மணமகள் வடிவப் பேய் ஒன்று அப்போது வெளியே வரும் ஆண்களை மட்டும் கடத்திச் செல்கிறது. மக்கள் அனைவரும் ஸ்திரீக்குப் பயந்து தங்கள் வீட்டின் முகப்புகளில் 'ஓ! ஸ்திரீ கள் ஆனா'  என்று எழுதி வைக்கின்றனர். அந்த வரி உள்ள வீடுகளை மட்டும் ஸ்திரீ சீண்டாமல் நாளை வரலாம் என்று கிளம்பிவிடுகிறது. இந்நிலையில் ஊர், பெயர் தெரியாத பெண் ஒருத்தியின் (ஷ்ரதா கபூர்) நட்பு ராஜ்குமார் ராவிற்குக் கிடைக்கிறது. அது காதலாக துளிர்விடும் சமயத்தில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் தலைகாட்டிவிட்டு, பெயர்கூட சொல்லாமல் மறையும் ஷ்ரதா கபூர்தான் அந்த ஸ்திரீ என்று நண்பர்கள் ராஜ்குமார் ராவிடம் சந்தேகத்தை கிளப்புகிறார்கள். இதனிடையே ராஜ்குமார் ராவின் நண்பன் ஒருவனையே ஸ்திரீ தூக்கி சென்றுவிடுகிறது. தன் கிராமத்தின் வரலாற்றைத் தெரிந்துகொண்டு நண்பனை ஸ்திரீயிடம் இருந்து மீட்க நண்பர்கள் சகிதமாக ஒரு பாழடைந்த கோட்டைக்குச் செல்லும் ராஜ்குமார் ராவ், அந்த ஸ்திரீ பேயிடமே மாட்டிக்கொள்கிறார். யாரும் எதிர்பாராதவிதமாக அங்கே வரும் ஷ்ரதா கபூர் ராஜ்குமார் ராவின் உயிரைக் காப்பாற்றுகிறார்.

ராஜ்குமார் ராவின் நண்பனை மீட்டார்களா? குழப்பம் ஏற்படுத்தும் கதாபாத்திரமான ஷ்ரதா கபூர் யார்? அவருடைய நோக்கம் என்ன? இந்த ஸ்திரீ பேயை இவர்களால் வெல்ல முடிந்ததா? இப்படிப் பல கேள்விகளுக்குத் திகில் மற்றும் நகைச்சுவை என்று சரியான மிக்ஸிங்கில் பதில்களை ரெடி செய்து மிரட்டியிருக்கிறார்கள்.

1990-களில் கர்நாடகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள வட மாநிலங்களில் பரவலாக இருந்த மணமகள் வடிவில் உலாவும் பேய் குறித்த நம்பிக்கைதான் 'நாளே பா!' (நாளை வா!) அல்லது 'ஓ! ஸ்திரீ கள் ஆனா' (ஏ பெண்ணே! நாளை வா!). அதை அப்படியே மத்திய பிரதேச மாநிலத்தின் வடக்கில் இருக்கும் சந்தேரி எனும் கிராமத்தில் வைத்து அதைச் சுற்றி கதையை நகர்த்தியிருக்கிறார்கள். முதலில் பாராட்டப்பட வேண்டியவர் படத்தின் கலை இயக்குநர்தான். பாதி கட்டப்பட்ட வீடுகள், மோசமான நிலையில் இருக்கும் கல் வீடுகள், நெருக்கிக்கொண்டு நிற்கும் ஓட்டு வீடுகள் என ஓர் அசல் பின்தங்கிய கிராமத்தை அப்படியே கண்முன் நிறுத்தியிருக்கிறார். படத்தின் முக்கியமான கதாபாத்திரங்கள் என்றால் ராஜ்குமார் ராவ், அவரின் இரண்டு நண்பர்கள், ஷ்ரதா கபூர் மற்றும் ஸ்திரீ பேயின் வரலாறு சொல்லும் பங்கஜ் திருப்பதி என்று விரல்விட்டு எண்ணும் அளவில் மட்டுமே இருந்தாலும், ஒரு சில காட்சிகளில் மட்டும் தலைகாட்டும் மொத்த கிராம மக்களும் அவர்களின் வாழ்வியலைத் திரையில் தெளிவாகப் பிரதிபலிக்கின்றனர். ஸ்திரீ பேய்க்காக பயந்து வீட்டின் முன் சிவப்பு பெயின்ட்டில் எழுதுவது, திடீரென நிறைய ஆண்கள் காணாமல்போனதும் கணவர்கள் அனைவரும் பெண்களைப் போல வேடமிட்டுக் கொள்வது எனப் பல காட்சிகளில் ஈர்க்கிறார்கள். அதிலும் கிராமத்தின் வரலாற்றைப் புத்தகமாக எழுதிவிட்டு இன்னும் எமர்ஜென்சி காலத்திலேயே வாழும் அந்தப் பெரியவர் ரோஃபில் ரகம்!

இறங்கிய மேட்சில் எல்லாம் நூறு அடிக்கும் பேட்ஸ்மேன் போல ராஜ்குமார் ராவ் தான் தோன்றும் அனைத்துப் படங்களிலும் தன் நூறு சதவீத பெர்ஃபார்மான்சை வெளிப்படுத்துகிறார். அந்த வகையில் ‘ஸ்திரீ’ அவருடைய தரமான நடிப்பை வெளிக்கொணரும் மற்றுமொரு கமர்ஷியல் விருந்து. ஷ்ரதா கபூரிடம் திக்கித் திணறி அசடு வழிவது, ஸ்திரீ பேயிடம் மாட்டிக்கொள்ளும் போதெல்லாம் ஒரு நிமிடத்தில் ஒன்பது வித முகப்பாவனைகளை வெளிப்படுத்திப் பம்முவது, நண்பர்களுடன் “விக்கி... ப்ளீஸ்!” என வராத ரொமேன்சை வாலண்டியராக வம்புக்கு இழுப்பது, இறுதியில் “நீ பேய்தான்...அதுக்காக கத்திட்டே இருப்பியா?” எனப் பேயிடமே எகிறுவது என அதகளம் செய்கிறார். பேய் படமாக இருந்தால் நாயகன் ஸ்கோர் செய்யக் கூடாதா? நான் செய்வேன் எனக் கோடிட்டு காட்டுகிறார். ஷ்ரதா கபூருக்கு வித்தியாசமான கதாபாத்திரம். ஆரம்பம் முதல் இப்படியும் யாரேனும் இருப்பார்களா, ஒருவேளை இவர்தான் ஸ்திரீயோ... என்றெல்லாம் நம்மை குழப்பியடித்துவிட்டு, யாரும் எதிர்பார்க்காத ஒரு பதிலை படத்தின் கடைசி காட்சியில் வைத்து ட்விஸ்டியிருக்கிறார்கள். அதுதான் ஸ்திரீயை ‘இது மற்ற பேய் படங்கள் போல இல்லை’ எனச் சொல்ல வைத்திருக்கிறது. இருந்தும் அதை இன்னமும் கொஞ்சம் விளக்கியிருக்கலாமே பாஸ்? இரண்டாம் பாகம் தயாராகிறதோ?

ராஜ்குமார் ராவின் நண்பர்களாக வரும் அபர்ஷக்தி குரானா (‘தங்கல்’ புகழ்), அபிஷேக் பேனர்ஜி மற்றும் ஸ்திரீயின் வரலாறு தெரிந்த பங்கஜ் திருப்பதி படத்திற்குத் தேவையான நகைச்சுவைக்குப் பக்கபலமாக நிற்கிறார்கள். அதிலும் இரவில் நடுரோட்டில் பீர் பாட்டில்களுடன் நிற்கும் நண்பர்கள் இருவரிடமும் பங்கஜ் திருப்பதி ஸ்திரீ பற்றி விவரிக்கும் காட்சி கலக்கல். ஊர் திருவிழாவின் முதல் நாளில் ஒதுக்குப்புற பங்களாவில் நண்பர்கள் பார்ட்டி செய்கையில் நிகழும் அந்தத் திகில் காட்சிகள், நண்பனைத் தேடி சலித்துவிட்டு இரவில் வீடு திரும்பும் இரண்டு நண்பர்களில் அபிஷேக் பேனர்ஜியை ஸ்திரீ கடத்தும் சீக்குவன்ஸ், நண்பனைத் தேடி பாழடைந்த கோட்டையில் நடக்கும் தேடுதல் வேட்டை, கிளைமேக்ஸில் அரங்கேறும் முதல் ராத்திரி ட்ராமா எனத் திக்திக் எபிசோடுகள் நிறையவே இருக்கின்றன. இந்தக் காரசாரத்தை நகைச்சுவைக்கு இடையே வைத்துக் கலக்கல் சான்ட்விச்சாக பரிமாறியிருக்கிறார்கள்.

என்ன ஒரே குறை, இந்த நகைச்சுவைக் காட்சிகளையும், திகில் காட்சிகளையும் இணைக்க வருகிறேன் என்ற பெயரில் இடையில் வரும் காதல் எபிசோடுக்கு இன்னமும் கொஞ்சம் மெனக்கெட்டு, அதிலிருந்து நீளும் தேவையற்ற காட்சிகளுக்குக் கத்திரியும் போட்டிருந்தால் ஸ்திரீ இன்னமும் மிரட்டியிருப்பாள். இருந்தும் சிரிப்பதா, பயப்படுவதா எனக் குழம்ப செய்து, இரண்டும் கலந்தாற்போல் கண்களில் நீர் வர ரசிக்க வைக்கிறாள் இந்த ஸ்திரீ!

அடுத்த கட்டுரைக்கு