Published:Updated:

"'நிலம் நீர் காற்று' படம் நிச்சயம் வெளியாகும்.. நிலம் நீர் காற்றாய் அய்யப்பன் வாழ்வான்!" - இயக்குநர் தாமிரா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
"'நிலம் நீர் காற்று' படம் நிச்சயம் வெளியாகும்.. நிலம் நீர் காற்றாய் அய்யப்பன் வாழ்வான்!" - இயக்குநர் தாமிரா
"'நிலம் நீர் காற்று' படம் நிச்சயம் வெளியாகும்.. நிலம் நீர் காற்றாய் அய்யப்பன் வாழ்வான்!" - இயக்குநர் தாமிரா

`மதுபானக்கடை' வசனகர்த்தா அய்யப்பன் மறைவு பற்றி இயக்குநர் தாமிரா நம்மிடம் பகிர்ந்துகொண்டதன் தொகுப்பு

காற்றானவன்...

படைப்பாளி சாகமாட்டான்.

அவன் உடல் மட்டும்தான் சாகும்!

                                                - அய்யப்பன்

இன்னும் சில தூரங்களைக் கடந்திருக்க வேண்டியவர், இன்னும் சில உயரங்களைத் தொட்டிருக்க வேண்டியவர். `மதுபானக் கடை' வசனகர்த்தா மதுப் பழக்கத்தால் மாய்ந்து போனார் என்கிற அவச் சொல்லோடு தன் கதையை முடித்துக்கொண்டார்.

அவரை எரியூட்டும் மயானத்தில் ஒரு நூறு நூற்றைம்பது பேர் நின்று அவருக்கான கண்ணீர் அஞ்சலியைச் செலுத்தினார்கள். சென்னை போன்ற பொருளைத் துரத்தும் பெருநகரத்தில்... இத்தனை மனிதர்களைச் சம்பாதிப்பது அத்தனை எளிதான காரியமில்லை. இத்தனை மனிதர்களைக் கொண்ட ஒரு படைப்பாளியின் மரணம் ஒரு ரகசிய துயராக ஒருநாள் முழுக்க அறியப்படாமல் இருந்திருக்கிறது.

அய்யப்பன், எளிமையான கொண்டாட்டமான மனிதன். ருசியாக சமைக்கக் கூடியவன். நம் குடும்பத்தோடு குழந்தைகளோடு உறவாடக்கூடியவன். வீட்டில் அய்யப்பன் இறந்துவிட்டான் என்று சொன்னபோது அவர்தாம் மச்சான் எனக்கு நெத்திலி அவியல் பண்ணச் சொல்லிக் கொடுத்தாரு என்கிறாள், மனைவி. என் குழந்தைகளுக்கும் அவர் சார்ந்த நினைவுகள் இருக்கின்றன. இப்படி நண்பர்களின் குடும்பத்தில் தன்னை ஒருவனாகப் பொருத்தி வைத்துக்கொள்ளக் கூடியவர்தான், அய்யப்பன். இருந்தும் அவர் ஏன் மதுவுக்கும் தனிமைக்கும் தன்னை ஒப்புக்கொடுக்க வேண்டும். காத்திரமான படைப்பாற்றலும் சமூகக் கோபமும் நுண்ணுணர்வும் கொண்ட படைப்பாளி ஏன் உள்ளொடுங்க வேண்டும். இது ஒரு நுட்பமான மனச்சிக்கல்.

அய்யப்பனின் மரணத்துக்கு மதுப் பழக்கம்தான் காரணம் என முற்றுப்புள்ளி வைத்துவிட இயலாது. அய்யப்பனின் மரணத்தை அய்யப்பனின் மரணமாக மட்டும் பார்க்கவும் கூடாது. அய்யப்பனைப் போல தனிமையின் வெக்கையில் உழலும் இன்னும் பல படைப்பாளிகள் இருக்கிறார்கள். அவர்களின் மீதான கவனமாகவும் இதைப் பார்க்க வேண்டியதிருக்கிறது.

பொதுவாகக் கலை மூர்க்கம் கொண்ட படைப்பாளிகள் தங்களை ஒரு தொடர் குடிகாரர்களாக உருவாக்கி வைத்திருக்கிறார்கள். குடி அவர்கள் தங்களுக்கு அணிந்து கொள்ளும் கவசமாக இருக்கிறது. தனிமை, வெறுமை, இயலாமை, தாழ்வு மனப்பான்மை, உறவுகளோடு பொருந்திப் போகாத மனநிலை, இவையாவும் அவர்களைக் குடியை நோக்கித் தள்ளுகிறது. குடியை ஓர் ஆயுதமாகவும், கேடயமாகவும் பயன்படுத்திக்கொள்கிறார்கள். 

இந்தச் சமூகம் நல்ல படைப்பாளிக்கான சமூகமில்லை என்கிற கருத்துகளை சமூக வலைதளங்கள் முன்வைக்கின்றன. வியாபார சினிமா நல்ல படைப்பாளிகளை காவு வாங்குகிறது என்கிறார்கள். இந்தக் குற்றச்சாட்டு முழுமையாக ஏற்றுக்கொள்ள இயலாத குற்றச்சாட்டு.

தமிழ்த் திரையுலகம் காலகாலமாக வணிக சினிமாவாக மட்டுமே இருந்து வருகிறது. இதற்குள் தங்களை அடையாளப்படுத்துகிற நல்ல படைப்புகளைப் படைப்பாளிகள் தருகிறார்கள். ஆவணப்படத்துக்கான, கலைப்படத்துக்கான தனித் தளங்கள் இங்கு உருவாக்கப்படவில்லை. நீங்கள் எவ்வளவு உன்னதமான படைப்பாளியாக இருந்தாலும், இந்த வணிக சந்தைக்குள்தான் வளைய வரவேண்டும். இந்த எதார்த்தம் மிக எளிய உண்மை. 

இதே வணிக சந்தைதான் அய்யப்பனை ஒரு சிறந்த வசனகர்த்தாவாக அடையாளம் காட்டியது. அதன் தொடர்ச்சியாக அவர் விரும்பிய விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலைப் படமெடுக்கும் வாய்ப்பினையும் கொடுத்தது. `நிலம் நீர் காற்று' என்கிற அவரது திரைப்பட உருவாக்கத்தில் அவருக்குக் கருத்தியலாகவோ, காட்சிப்படுத்தும் விதத்திலோ எந்த இடையூறும் இல்லை. இன்னும் சில காட்சிகள் எடுக்கப்பட வேண்டிய சூழலில், படம் நின்று போயிருக்கிறது. இது கனவுகளின் வர்த்தகச் சந்தை. இதில் இதுபோன்ற சிக்கல்கள் இயல்பு. அதை இயல்பாக எதிர்கொண்டவர்தான், அய்யப்பன். அய்யப்பனின் மன வலிமையிலோ, போர்க்குணத்திலோ எந்தப் பலவீனங்களும் இல்லை. அவர் யாவற்றையும் கடந்து, வேறொரு திரைக்கதை பணியில் இருந்தார்.

அய்யப்பன் என்றில்லை. அய்யப்பனைப் போன்ற படைப்பாளிகள் பலரும் தங்களை ஒரு கலகக்காரர்களாக அடையாளப் படுத்திக்கொள்பவர்களாக, மதுவின் மூர்க்கம் காட்டுபவர்களாக, அதன் பொருட்டு பல உண்மையான அன்பையும், நட்பையும் தங்களை விட்டு விலக்கி வைப்பவர்களாக இருக்கிறார்கள்.

தமிழில் ஆகச் சிறந்த நாவல் எழுதக்கூடிய ஒரு மாபெரும் படைப்பாளி, தெருவில் வீழ்ந்து கிடக்கிறான். சந்தத்துக்கான கவிதைகளை அருவி போலக் கொட்டுகிறவன். ஒரு மதுபானக் கூடத்தில் அடி வாங்கி, ரத்தம் சிந்தி காயங்களோடு வருகிறான். தான் எதன் பொருட்டு அடிபட்டோம் தன்னை யார் அடித்தார்கள் என்பதுகூட தெரியாதவனாக இருக்கிறான். இந்த மனச் சிக்கல்கள் எங்கிருந்து தொடங்குகின்றன, என்ற கேள்விக்கு எவரிடமும் விடையில்லை. அதீத போதைக்கான நியாயங்களாக இவர்கள் தங்கள் படைப்புகளை முன்னிறுத்துகிறார்கள். வாழும் வாழ்வை இழந்து இவர்கள் என்ன கலையைக் காப்பாற்றப் போகிறார்கள்?!

மயானத்தில் அய்யப்பன் எரியூட்டப்படுகின்ற தருணத்தில் ``ஏ...தம்பி..“ ஓர் ஒற்றைக் குரல் உறவின் குரல் ஒலிக்கிறது. அய்யப்பனின் சகோதரி வெடித்து அழுகிறார். எல்லோர் கண்களிலும் அந்தச் சகோதரியின் துயர்  கண்ணீராய்ப் பெருகுகிறது.

`நிலம் நீர் காற்று' திரைப்படம் ஒரு நாள் வெளியாகும்.. நிலம் நீர் காற்றாய் அய்யப்பன் வாழ்வான்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு