பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

தனுஷ் 25

தனுஷ்
பிரீமியம் ஸ்டோரி
News
தனுஷ்

பரிசல் கிருஷ்ணா, படம்: தீரன், ஓவியம்: பிரேம் டாவின்ஸி

இளமை துள்ளும் வயதிலேயே வெள்ளித்திரை நாயகன்.  இன்று கோலிவுட்டின் விஐபி. 

பிடிக்காமல் சினிமாவுக்குள் நுழைந்து, இன்று பார்க்கப் பார்க்கப் பிடிக்க வைக்கிற தனுஷின் டாப் 25 இங்கே!

1.  இயற்பெயர் வெங்கடேஷ் பிரபு. ஏற்கெனவே பிரபு, பிரபுதேவா என்ற பெயர்கள் இருந்ததால், சினிமாவுக்காக ஒரு பெயர் வைக்க நினைக்கிறார் அப்பா கஸ்தூரி ராஜா. அப்போது பார்த்துக்கொண்டிருந்த ‘ குருதிப்புனல்’ படத்தின் ‘ஆபரேஷன் தனுஷ்’ மனதில் பதிய, அந்தப் பெயரைத் தேர்ந்தெடுத்துக்கொண்டார் தனுஷ்.

2.  சைவப் பிரியர். அவ்வப்போது முட்டை மட்டும் சேர்த்துக்கொள்வார். தனது ஒல்லியான உடம்புக்கு சைவ உணவுப்பழக்கம்தான் காரணம் என்பார்.

தனுஷ் 25
தனுஷ் 25

3. விளையாட்டில் அதீத ஆர்வமுண்டு. இப்போது நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஸ்நூக்கரும், டேபிள் டென்னிஸும் விளையாடுகிறார். கால்பந்து போட்டிகளைப் பார்க்கப் பிடிக்கும். மெஸ்ஸி, இனியெஸ்ட்டா வீரர்கள் கொண்ட பார்சிலோனா அணிதான் தனுஷின் ஃபேவரிட்!

4. ஒரு படத்தில் கமிட் ஆகிவிட்டால், முழுக்க முழுக்க அந்தப் படத்தின் சிந்தனையிலேயே இருப்பார். அந்தக் கதாபாத்திரமாகவே தன்னைச் செதுக்கிக்கொள்வதால், டப்பிங்கின்போது செம ஸ்பீடு. சில படங்களின் டப்பிங்கெல்லாம் ஒரே நாளில் முடித்திருக்கிறார்.

5. ஒருவரின் திறமைமீது நம்பிக்கை வைத்தால் அவரை வெளிக்கொண்டு வருவதும், அவருக்காகக் காத்திருப்பதும் தனுஷுக்குப் பிடிக்கும். ‘பொல்லாதவன்’ ஸ்க்ரிப்ட்டை ஓகே செய்துவிட்டு, 10 தயாரிப்பாளர்களிடம் வெற்றிமாறன் கதை சொல்லிவிட்டார். ‘இயக்குநரை மாத்துங்க. அவர் ராசியில்லை’ எனப் பலர் சொன்னபோதும் அந்த அறிவுரைகளைக் காதில் ஏற்றிக்கொள்ளவேயில்லை.

6. இன்றைய தேதிக்கு உங்களுக்குப் பிடித்த இடம் எது என்று கேட்டால் தனுஷ் சொல்வது ‘வுண்டர்பார் அலுவலகம்’. தனுஷ் அப்போது பார்த்த `Inglourious Basterds’ என்னும் ஹாலிவுட் திரைப்படத்தில்  அடிக்கடி சொல்லப்படும் வார்த்தை ‘Wunderbar.’ ஜெர்மன் வார்த்தையான இதற்கு ‘Wonderful’ என்று அர்த்தம். தனுஷும் இந்த வார்த்தையை அடிக்கடி சொல்ல, தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்தபோது Wunderbar-ஐ மீறி எந்தப் பெயரும் அவரைக் கவரவில்லை.

7. பள்ளிக்காலங்களில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்து செஃப் ஆகவேண்டும் என்பதே லட்சியம். ‘ஒருத்தருக்கு சாப்பாடு செஞ்சு போட்டு, சாப்பிடறப்ப அவங்க கண்ல தெரியற மகிழ்ச்சிக்கு இணையே இல்லை’ என்றவரைத்தான் காலம் சினிமாவுக்குள் அழைத்து வந்திருக்கிறது!

8. யூட்யூபில் 10 கோடி ஹிட்ஸை முதலில் தொட்ட முதல் தமிழ்ப்பாடல் ‘வொய் திஸ் கொலவெறி’யை எழுத   தனுஷ் எடுத்துக்கொண்டது, வெறும் ஆறே நிமிடங்கள். இந்திய அளவில் மக்களிடையே யூட்யூபுக்கே பெரும் வெளிச்சம் கொடுத்தது அந்தப் பாடல்.

9.  சினிமாவுக்குள்ளே வந்தது தற்செயல்தான். ஆனால், தயாரிப்பாளரானது அப்படி இல்லை. `காதல் கொண்டேன்’ கதையைப் பலரிடம் சொல்லி, யாரும் ஓகே செய்யாதபோது செல்வராகவன் தனுஷிடம் சொன்ன விஷயம்: ``நாம முன்னேறினா புது ஆள்னெல்லாம் பாக்காம கதைக்காக ஓகே பண்ணணும்டா. அப்படி ஒரு தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிக்கணும்” என்பதுதான். அதற்காகவே திட்டமிட்டு உருவாக்கியதுதான் வுண்டர்பார்.

தனுஷ் 25
தனுஷ் 25

10. `பொயட் தனுஷ்’ என்கிற பட்டத்தை தனுஷுக்குக் கொடுத்தவர் ‘எதிர்நீச்சல்’ படத்தின் இயக்குநர் துரை செந்தில்குமார். ``செந்தில்குமார் அந்தப் படத்தை எனக்குப் போட்டுக் காட்டும்போது பார்த்துட்டு ‘என்ன சார் இப்படிப் போட்டுட்டீங்க’ன்னு கேட்டேன். ‘கொலவெறி பாட்டில் இருந்தே ரீச் ஆகிடுச்சு சார். அது அப்படியே இருக்கட்டும்’னு சொன்னார்.  பாடலாசிரியரா என்னை நானே கிண்டல் பண்ணிக்கிற  விஷயம்  அதுனு வெச்சுக்கோங்களேன்’’  என்பார் பாடலாசிரியர் தனுஷ்.

11. ‘என் வாழ்க்கையில் தியரியே இல்லை. எல்லாமே நானாகக் கற்றுக்கொண்ட ப்ராக்டிகல்தான்’ என்பது தனுஷின் வாழ்க்கைத் தத்துவம்.

12. ஹீரோயின்களில் குஷ்பு, சிம்ரன் பிடிக்கும். ‘யார் ரசிகர்?’ என்றால், `ஒரே ஒருத்தருக்குத்தான்’ என்பார். அவர், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.

13. தன்னைப் பற்றிய எதிர்மறை விமர்சனங்கள், கருத்துகள் எதிலும் கவனம் சிதறவிடாமல், சினிமா சினிமா என்றே இருப்பது தனுஷின் பலங்களில் ஒன்று.  ``ஒரு நகரத்தோட தலைநகரம் எதுனு கேட்டாக்கூட யோசிப்பேன். பொது அறிவு ஜீரோ. ஏன்னா என் கவனம் முழுக்க சினிமாதான்” என்பார்.

14.  முதல் ஐந்தாறு படங்களின்போது பேட்டியோ,  சந்திப்போ என்றால் ரொம்பவும் யோசிப்பார். ``ஆங்கிலம் தெரியாது. பார்க்கவும் சுமாரா சின்னப்பையனா இருப்பேன். ரொம்பத் தயங்குவேன்” என்பார். ஆனால், ஒரு கட்டத்துக்குமேல், திறமைக்கு அடுத்துதான் மற்றதெல்லாம் என்று உணர்ந்து முழுக் கவனமும் நடிப்பில் வெளிப்படுத்தி, தயக்கத்தை உடைத்தெறிந்தார்.

15. அண்ணன் செல்வராகவன்தான், தன்னைச் செதுக்கிய குரு என்று உறுதியாகச் சொல்வார். அதற்கடுத்து  தன் கரியரைச் செதுக்கியதில் பாலுமகேந்திராவுக்கும் பெரும் பங்குண்டு என்பார். ``அந்த டைரக்டர்னா  கதை சொல்லலைன்னாகூட ஓகே சொல்லிடுவேன்” என்று சொல்லும் இயக்குநர், வெற்றிமாறன்.

16. தனுஷ் பெருமைப்பட்டுக்கொள்கிற பாராட்டு, பாலுமகேந்திராவிடமிருந்து வந்தது. ‘அது ஒரு கனாக்காலம் படப்பிடிப்பில் ‘`ரொம்ப க்ளோஸப் வைக்கிறார்’’ என்று தனுஷ் தயங்கியபோது,  ``உன் ஸ்கின் டோன்,  எந்த ஒரு கேமராமேனும் ரசித்து லைட்டிங் வைக்கிற ஒன்று. இரண்டாவது, நீ ஒரு இத்தாலியன் மாடல் போல இருக்கிறாய்”  என்று சொன்னதுதான் அது.

17. ‘காதல் கொண்டேன்’ படத்தின் க்ளைமாக்ஸ் ‘திவ்யா.. திவ்யா’ காட்சிக்குத் திரையரங்கில் ரசிகர்களின் கைதட்டலின்போது அழுதிருக்கிறார். அடுத்ததாக அப்படி சீரியஸாக நெகிழ்ந்தது, `வேலையில்லா பட்டதாரி’ படத்தின் ரெஸ்பான்ஸைக் கண்டு மிரண்டு.

18. `வேலையில்லா பட்டதாரி’ 25 வது படம். அதற்கு முந்தைய படங்கள் தோல்வி. திட்டமிட்டு, சொல்லி அடித்த படம் அது. படம் வெளியானபோது அமிதாப்புடன் `ஷமிதாப்’ ஷூட்டிங்கில் இருந்திருக்கிறார். பிரேக்கின்போது, அந்தப் படத்திற்குப் போயிருக்கும் நண்பர்களின் போன்மூலம், அந்த முழுநீள வசனத்திற்கு ரசிகர்களின் கைதட்டலையும் கூச்சலையும் கேட்டுக் கண்ணீர் விட்டிருக்கிறார்.

19. இந்தியில் `ராஞ்சனா’ படத்தில் நடிக்க அழைத்தபோது, இந்தி தெரியாது என்பதால் தயங்கியிருக்கிறார். பிறகு முழு உழைப்பையும் கொட்டினார். முதல்நாளே வசனங்களை வாங்கிக்கொள்வார். இந்தியில் பேசவேண்டியவை ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும். அதன்மேல் தமிழ் அர்த்தத்தை எழுதிக்கொள்வார். இரவு முழுவதும் பயிற்சி செய்துவிட்டு செட்டுக்குப்போய்க் கைதட்டல் வாங்குவார்.

20. ``ஒரு விஷயத்தை முழுசா நம்பணும். நம்பி இறங்கினா, அதிர்ஷ்டம்லாம் தானா பின்னால வரும்” என்பது தனுஷ் பன்ச்!

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

21. ‘`என் பசங்கதான் என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ். 24 மணி நேரத்துல எனக்கு 23 மணி நேரம் வேலைதான். மீதி இருக்கிற ஒரு மணி நேரம் உலகமே என் பசங்கதான். மற்றபடி நான் ஒரு ஸ்பெஷலான அப்பான்னோ, அவங்க ஸ்பெஷலான பசங்கன்னோ சொல்ல மாட்டேன். எல்லாப் பசங்களுக்கும் அவங்க அப்பா எப்படியோ, அப்படித்தான் நானும். அவங்களுக்கு வளர்ந்ததும் என்ன விருப்பமோ அதைச் செய்யட்டும்’’ என்பார், பொறுப்பான தந்தையாக!

22. காரில் எப்போதும் இருப்பது இளையராஜாவின் பாடல்கள். ராஜாவின் மிகப்பெரிய ரசிகன்.

23. ‘நான் இன்று இயக்குநராகியிருப்பது பல இயக்குநர்களிடமிருந்து கற்றுக்கொண்டது. எதைச் செய்யவேண்டும், எதைச் செய்யக்கூடாது என்பதெல்லாம் பலர் எனக்குக் கற்றுக்கொடுத்தவைதான்” என்பார்.

24. தேதிகள் காரணமாக தனுஷ் மிஸ் செய்த கதைகளில் முக்கியமான படம்  ‘விண்ணைத்தாண்டி வருவாயா.’

25. ‘`பெரிய டிரான்ஸ்ஃபர்மேஷன் இருக்கிறதா என்று தெரியலை. `துள்ளுவதோ இளமை’ பண்ணப்ப பெரிய ஆர்வமோ, நம்பிக்கையோ இல்லை. `வடசென்னை’யில் என் வேலை பிடிச்சு நம்பிக்கையோடு பண்றேன். ஓரளவு விஷயம் தெரிஞ்சு, என் வேலையை ரசிச்சுப் பண்றேன். கொஞ்சம் இம்ப்ரூவ் ஆகியிருக்கேன்’’ என்று தன்னுடைய வளர்ச்சியைப் பற்றித் தன்னடக்கத்துடன் சொல்வார் தனுஷ்!