Published:Updated:

``சுடானி ஃப்ரம் நைஜீரியா... குடல் அழைக்கும் பசியை மறக்க பந்தாட்டம் பழகினவன் கதை!" - மலையாள கிளாசிக் - 25

``சுடானி ஃப்ரம் நைஜீரியா... குடல் அழைக்கும் பசியை மறக்க பந்தாட்டம் பழகினவன் கதை!" - மலையாள கிளாசிக் - 25
``சுடானி ஃப்ரம் நைஜீரியா... குடல் அழைக்கும் பசியை மறக்க பந்தாட்டம் பழகினவன் கதை!" - மலையாள கிளாசிக் - 25

மலையாள கிளாசிக் தொடரின் 25-வது பகுதி. `சுடானி ஃப்ரம் நைஜீரியா' படம் குறித்த விரிவான அலசல்.

கேரளாவில் கால் பந்துக்கு ரசிகர்கள் அதிகம். ஒவ்வோர் ஊரிலும் ஒரு மைதானம் அமைந்து விடுவதும், பையன்கள் குழுக்கள் சேர்ந்து விடுவதும், போட்டிகள் நடத்தப்படுவதுமான சூழல் அங்கே தொடர்ந்து வருகிறது. 'சுடானி ஃப்ரம் நைஜீரியா' கால்பந்தாட்டத்தைப் பற்றி பேசுகிற படமில்லை என்றபோதிலும், கதை அங்கிருந்துதான் புறப்படுகிறது. மலப்புறம் ஜில்லாவில், உள்ளுர இருக்கிற கிராமம். அங்கே இருக்கிற ஒரு கால்பந்தாட்டக் குழு. மஜீத்தான் மேனேஜராய் இருந்து அக்குழுவைப் பார்த்துக் கொள்கிறான், போட்டிகளில் ஈடுபடுத்தி எல்லோருக்கும் ஓரளவு பணத்தைக் கொடுக்கிறான். வெளிநாடுகளில் இருந்தும்கூட அவன் நல்ல ஆட்டக்காரர்களைக் கொண்டு வருவதுண்டு. அப்படி நைஜீரியாவிலிருந்து விளையாட வந்த சாமுவேல் என்கிற கருப்பனுக்குக் காலில் அடிபட்டுவிட, அது ஒரு மாதம் ஓய்வு தேவைப்படுகிற சிகிச்சை என்பதால், மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்து மஜீத் தனது வீட்டில் வைத்துப் பார்க்கக் கொண்டு வருகிறான். படத்தின் உயிர் இதைச் சுற்றித்தான் சுழல்கிறது.

இந்தத் தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்!

மஜீத்துடன் அவளது உம்மா மட்டுமே இருக்கிறாள். நமது முதல் பார்வையில் அவர்களுடைய கனிவு நமக்குப் பிடிபட்டு விடும். அவர்களைக் கல்யாணம் செய்த இரண்டாம் கணவர் வந்துவிட்டுப் போவது மஜீத்துக்கு இஷ்டமில்லை. அம்மாவிடமேகூட முகம் பார்த்துப் பேசுவதில்லை. ஆனால், அம்மாவின் அன்பு சாமுவேல் என்கிற சுடானிக்குக் கிடைக்கத் தொடங்குகிறது. அம்மாவின் தோழி, அண்டை வீட்டுக்காரி, வேறு ஒரு முதியவளுமாகச் சுடானியைப் பொண்னுபோலப் பார்த்துக்கொள்கிறார்கள். அவனைப் போஷித்து, பசியில்லாமல் பார்த்துக்கொண்டு, பராமரிப்பதில் அவர்களுக்கு முழுமையான மன நிறைவு. அவனது மொழி அவர்களுக்கோ, அவர்களின் மொழி அவனுக்கோ கடுகளவில் சம்பந்தமில்லை. ஆனால், அன்புக்கு எதுதான் அடைக்கும் தாழ். அவனைப் பற்றிய சந்தேகங்களைத் தங்களுக்குள் பேசிக்கொள்ளும்போது, எது என்னவானாலும் அவன் சிரிப்பது மிகவும் அழகாய் இருக்கிறது என்று அவர்கள் மகிழ்ந்து கொள்கிறார்கள். பையன்கள் வந்து பார்த்துவிட்டுப் போகிறார்கள். புதுமணப் பெண் ஒருத்தி தனது புருஷனுடன் வந்து செல்ஃபி எடுத்துக்கொண்டு போகிறாள். தனது பசுவுடன் வருகிற நாயர் களரி டெமோ செய்து அவனுக்குப் பொழுதுபோக்கு காட்டிவிட்டுப் போகிறார். சுடானி தேறி வருகிறான்.

இதற்கிடையில் எதிர் குழுவினரிடம் சுடானி ஒரு தொகை வாங்கிவிட்டான் என்பது அறிந்து, மஜீத் வெறுப்படைகிறான். அவனைத் தனது வீட்டுக்குள் இனிமேல் வைத்துக்கொள்ள முடியாது என்று சாமியாடுகிறான். அவனிடமே உனக்குச் சோறு போட்டு, மலம் அள்ளி எறிந்து, தேவையானதை எல்லாம் செய்து கொடுத்தால், எதிரியிடம் காசு வாங்குவாயா.. நீ அவர்களிடமே போய் விடு என்றெல்லாம் முறுக்கிக் கொள்கிறான். ஆனால், கிழவிகள் இருவரும் சம்மதிக்கவில்லை. அவனை நாங்கள் பார்த்துக்கொள்வோம் என்று மஜீத்தை மீறுகிறார்கள். ஒரு கட்டத்தில் மஜீத்துக்குப் புரிகிறது. வருத்தப்படவும் செய்கிறான். அவனைத் தேற்றவும் முடிகிறது. பணப் பிரச்னைகள் எங்கேயும் உள்ளதுதானே. அது மனிதர்களைத் துண்டாடும். அவமானப்படுத்தும். என்ன வந்து என்ன போனாலும், இல்லாதவர்கள்தாம்  இல்லாதவர்களுக்கு ஆறுதலாய் இருக்க முடியும். நாம் நமது சங்கடங்களைப் பங்கு வைத்துக்கொள்ள முடியாதா. சுடானிக்குத் தங்கை ஒருத்தி இருக்கிறாள். 

அவளைப் பார்த்துக்கொள்ள வயதான ஒரு பாட்டி மட்டுமே உண்டு.

நாகரிகமடைந்ததாகக் கூறப்படும் இந்த மனித சமூகத்திலிருந்து தரித்திரமும் வறுமையும் விட்டுப்போகவில்லை. பசித்த குழந்தைகள் அண்ணாந்திருக்கிற வானில்தான், ஏவுகணைகளும் விஞ்ஞானமும் தனது பெருமைகளைப் பீத்திப் போகிறது. உள்நாட்டுப் போரும், பஞ்சமும் மனிதர்களைக் காவு கொண்டிருக்கிற ஒரு நிலப்பரப்பிலிருந்து கிளம்பி வந்தவன், சுடானி. அவன் விளையாடுவது ஹாபியல்ல, விளையாட்டின் மீதிருக்கிற வேட்கை அல்ல, குடல்களிலிருந்து அழைக்கிற பசியை மறக்க பந்தாட்டம் பழகினவன் இப்போது வெறும் காசு கிடைக்கும் என்பதற்காகவே விளையாட வந்திருக்கிறான். இப்படிப் படுத்துக் கிடக்க முடியாது. காசு வேண்டும். ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதையெல்லாம் பெரிய விவரிப்பெல்லாம் தேவைப்படாமல் மஜீத் புரிந்துகொள்கிறான். மற்றும் பலருமே கூட!.

அரசாங்க வழி சிக்கல்கள் வருகின்றன.

அதை பாடுபட்டுத் தீர்த்துக் கொண்டிருக்கும்போதே, சுடானியின் பாட்டி இறந்துவிட்டாள் என்கிற தகவல்.

சுடானி நான் கிளம்பியே ஆகவேண்டும் என்கிறான். தங்கையைப் பார்த்துக்கொள்ள வேண்டுமில்லையா.

இப்படியாக வரும் இடர்களையெல்லாம் தாண்டி மஜீத்தும் அவனது குழுவினரும் அவனை அவனது ஊருக்கு அனுப்பி வைப்பது க்ளைமாக்ஸ்.

மஜீத் ஒரு குழுவினரின் மேனேஜர்தான். அந்தத் தொழிலை சொன்னால் அவனுக்குப் பெண்கூட கொடுக்கமாட்டார்கள். ஒருமுறை சுடானி மஜித்தின் அப்பாவைப் பற்றிப் பேச முயற்சி செய்யும்போது, அம்மாவின் கல்யாணம் முடிந்தபோது தான் தனிமைப்பட்டதைச் சொல்வான் மஜீத். பலரும் கிண்டல் செய்து கூனிக்குறுகி நின்றதைச் சொல்வான். பன்னிரண்டாம் வகுப்புடன் பள்ளிப் படிப்பு முடிந்துபோனதற்கு அதுதான் காரணமாய் இருந்திருக்கும். ஃபெயிலாகித்தான் படிப்பை விட்டேன் என்று பார்க்கப்போன பெண்ணிடம் சொல்லும்போது, அவள் ஸாரி என்று அசால்டாக நிராகரிப்பது இன்றும் அந்த அவலம் அவனைத் தொடர்கிறது என்பதைக் குறிக்கிறது. அவனுக்குப் பெரிய வருமானமில்லை. சொல்லக்கூடிய நல்ல வாழ்க்கைகூட இன்னும் அமையவில்லை. ஆனால், எல்லாச் சுமைகளையும் தாங்கிக்கொண்டு அவன் சுடானிக்குப் பயண ஏற்பாடுகள் செய்து அனுப்பி வைக்கிறான். இருவரும் கட்டியணைத்துக் கொள்கிறார்கள்.

அவன் பறந்துவிட்ட பிறகு திரும்புகிற மஜீத், ஒரு ATM முன்னால் செக்யூரிட்டியாய் அமர்ந்து பாதி உறக்கத்தில் இருக்கிற முதியவரிடம் சலாம் அலெக்கும் சொல்கிறான். அவர்தான். இவன் வந்ததுமே, இவனது கோபத்தை உணர்ந்து கொண்டதுமே வீட்டை விட்டுப் புறப்பட்டு விடக் கூடியவர்; தள்ளாத வயதில் இவனுக்காகத் தனிமையாய் இருப்பவர்; இவனால் ஏறிட்டுக்கூடப் பார்க்க முடியாத புறக்கணிப்பைச் சுமந்து கொண்டிருந்தவர்; இவனது இரண்டாம் தகப்பன். சுடானியின் பிரிவு அவனை என்னவோ சிந்திக்க வைத்திருக்கிறது. சுடானியின் பிரிவுக்குக் கலங்கிய உம்மாக்களின் பாசம் அவனது நெஞ்சினுள் குழைந்திருக்க வேண்டும். அவரை வண்டியில் ஏற்றிக்கொள்கிறான். அவரைத் தனது அம்மாவிடம் கொண்டு வந்து ஒப்படைக்கிறான். என்ன வேண்டும் என்று கேட்டு சாப்பிட வையுங்கள் என்று கூறிவிட்டு, ஆசுவாசமாக ஹாலில் அமர்கிறான். படம் முடிகிறது.

இந்தப் படத்தில் சுடானி ஜெயித்துவிடவில்லை, மஜீத் ஜெயித்து விடவில்லை. மனித சிநேகம் பொருள் பெற்றிருக்கிறது. எங்கேயுமே உணர்ச்சிவசப்பட்டு விடாமல் மனிதனின் இயல்பான நெகிழ்வை மிகவும் பெருமிதத்துடன் சொல்லி ஒதுங்கி நிற்கிற படம். ஒரு பெரிய அதிசயம் என்னவென்றால், படத்தில் காதல் இல்லை. இளம்பெண்கள் கூட இல்லை. முன்னமே சொன்னதுதான், ஹீரோவுக்கு ஒரு கல்யாணம்கூட இல்லை. அன்றாடம் நம்முடன் புழங்கக்கூடிய எளிய மனிதர்கள் படமெங்கிலும் இருக்கிறார்கள். உம்மாக்கள். அதைப் பற்றி நான் எவ்வளவு எழுதினாலும் அது அவர்களை சரியாகச் சொன்னதாய் இருக்காது. புன்னகை அரசிகள். நெஞ்சு முழுக்க சிநேகம் கொண்டு நடக்கிற வெறும் அம்மாக்கள். கண்களில் மகனை அள்ளுகிற அதே பெண்மணி, சுடானியையும் அப்படியே எடுத்துக்கொள்கிறாள். சொல்லப்போனால், படம் பார்த்தவர்கள் எல்லோருமே ஒன்றைக் கவனித்திருப்பார்கள். சுடானியின் புன்னகையையும் அவனது மனதையும் அறிந்துகொண்டு, நாமே அவனை அவ்வளவு விரும்புவோம். அப்படி ஒரு தேர்வு. அப்படி ஒரு நடிப்பு. கறுப்பன், பின்னியிருக்கிறான்.

பெங்குயின் நடை. தொண்டையை விட்டு வெளியே வரத் தயங்கும் வார்த்தைகள். ஒடுங்கிய கண்களில் சிறிய பயம். மஜித்தின் அப்பாவாக வருகிற அவரது சிறிய சிரிப்பைக் காலமெல்லாம் மறக்க முடியாது. அபாரமான நடிகர். பெரிய இலக்கியவாதிகள் இயக்குநர்களுடன் இருந்திருக்கிறார். பேட்டிகளில் அறிவுப்பூர்வமாகப் பேசுகிறார். வெள்ளந்தியாய் வந்து இருந்து நம்மைக் கசக்கியவர் என்பதை நம்ப முடியவில்லை. நாடக அனுபவங்கள் உள்ளவர். நடிப்பைப் பற்றிய தீர்மானங்கள் உள்ளவர் என்பது வியப்பாகவே உள்ளது. என்ன மாதிரியான கதாபாத்திரம் என்று அவரால் மட்டுமே திரைக்கதையைக் கொண்டாட முடியும்.

சௌபின் ஷாகிர்தான், மஜீத். ஒரு பாத்திரத்தைக் கடந்து அவர் அதிகப் பிரசங்கித்தனம் செய்ததே இல்லை. இன்னும் நோக்கினால், அவர் என்ன தேவையோ அதைச் சொல்லியிருப்பார். ஆனால், அது நகைச்சுவையாக வெடித்து அத்தனைபேரையும் சிரிக்க வைக்கிற அதிசயம் நிகழும். அவருக்கு இணையாக எவரும் இல்லை. ராஜீவ் ரவியின் படத்தில் சட்டென ஓர் அடியாளாய் வந்து காலை உயர்த்தி வீசும்போது, அவரது முகம் அடியாள் தெறிப்புதான். இப்படத்தில் ஓர் அல்ப சொல்ப பந்தாட்டக் குழு மேனேஜர். அதில்தான் எவ்வளவு சரளம். பிடிக்காத தந்தை வீட்டில் இருப்பதைப் பார்த்து பேச்சுலர்ஸ் அறைக்குச் சென்று படுக்கும்போதும் சரி, மறுநாள் வீட்டுக்குள் போக வந்து, அப்படியே பக்கத்து வீட்டுப் பக்கம் சென்று கட்டன் சாயா வாங்கிக் குடிக்கும்போதும் சரி... அந்த சகஜத்தில் அவருக்குள் இருக்கிற நெருடலை எப்படி அறிகிறோம் என்பதைக் கவனிக்க வேண்டும். உனக்குப் புரியாது என்பதால்தான் சொன்னேன், எனது திருப்திக்காக என்று சுடானியிடம் சிரித்துவிட்டுப் போகிற காட்சி ஒன்றிருக்கிறது, போதும். ஒரு நடிகனுக்கு அதிகம்.

ஷைஜு கலீத் படத்தின் ஒளிப்பதிவாளர். படத்தின் உள்ளடக்கமான நேர்மையைப் புரிந்துகொண்ட வேலை. எங்கேயும் தனது திறமையை வெளிக்காட்ட மும்முரம் கொள்ளவில்லை. ஜனங்கள் கூடியிருக்கிற கால்பந்தாட்ட மைதானங்களில்கூட படத்தின் பங்கையே முன்வைக்கிறார். பாடல்களும் படத்துடன் பொருந்தியவை. பின்னணி இசை கண்ணியத்துடன் அடங்கியிருந்தது. ஒரு நல்ல படத்தில் எல்லாத் தொழில்நுட்பங்களும் படிந்து அது நல்ல படமாகவே நீடிப்பதற்கு முதலில் இயக்குநரைத்தான் சுட்ட முடியும். வரும் காலத்தில் முக்கியமான ஒரு படைப்பாளியாக இருக்கப்போகிறவர் அவர். சில விஷயங்களைச் சொல்லவேண்டும்.

சுரண்டித் தின்பவர்களும், அதிகாரத்துக்கு அலைபவர்களும் மக்களைப் பிளவுபடுத்தும் காலம் இது. மக்கள் தங்களுடைய அடையாளத்துக்காக, ஒருவேளை பாதுகாப்புக்காகவும் குழுக்களாக ஒதுங்கிக்கொள்கின்றனர். எப்போதும் இல்லாத அளவுக்கு துண்டுபட்டுவிட்ட கண்டங்கள் போலான மக்களை விரட்டி வீழ்த்தி, ஜனநாயகத்தைத் தள்ளி நிறுத்துவதன் மூலம் வருகிற விளைச்சலை அறுவடை செய்கிற கூட்டம்தான் மக்களுக்கான நீதிகளைத் தீர்மானிக்கிறது. அப்படிப்பட்ட இந்தக் கொடிய காலத்தில் மனிதனுக்கு மனிதன் ஊரும், உறவும், குடும்பமுமாய் பின்னிப் பிணைந்து வாழ்கிற வாழ்க்கையை எடுத்துச் சொல்லி, தங்களை ஊன்றிக் கொள்கிற பொறுப்பு மக்களுக்குத்தான் உண்டு. இந்தப் படம் அதுதான். இனம், மொழி, மாநிலம், தேசம் என்பதெல்லாம் கற்பிதங்கள் மட்டுமே. யாருமே யாரையும் அன்பு கொள்ள முடியும். அவன் நைஜீரியாவிலிருந்து வந்தவனாய் இருந்தால் என்ன... அவன் கறுப்பனாக இருந்தாலுமென்ன... மலப்புறத்தில் இருக்கக்கூடிய அந்தச் சிறிய முஸ்லிம் கிராமத்து மக்கள் காலம் முழுவதும் மறக்க முடியாத அன்பை ஏந்தியபடி சூடானியைத் தனது நாட்டுக்கு அனுப்பி வைத்தனர். இப்படி ஒரு படத்தை, நம்மை சூழ்கிற பிரிவினைக்கு எதிரான கலகம் நிரம்பிய படமாகத்தான் நான் கருதுகிறேன்.

தனது முதல் படமாக இதை எழுதி இயக்கி, நமக்கு வழங்கிய சக்கரியா முஹமதுக்கு நமது அன்பு.
 

அடுத்த கட்டுரைக்கு